TNPSC Thervupettagam

இந்தியா

November 20 , 2019 1877 days 1700 0
  • இரண்டாவது உலகப் போரில் அதுவரை களம் இறங்காத அமெரிக்கா, “பெரல்” துறைமுகத்தில் இருந்த தனது நாட்டு கப்பல்களை வான்வழி தாக்குதல் நடத்தி முற்றாக அழித்த ஜப்பான் நாட்டின் மீது‘லிட்டில் பாய்’ என்று பெயா் கொண்ட அணுகுண்டுகளை வீசி ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களை தரைமட்டமாக்கி போரில் தன்னை இணைத்துக் கொண்டது.
  • உலக வரலாற்றில் அணு ஆயுதத்தால் மனிதகுலம் சந்தித்த பேரழிவை முதலில் காட்டிய அமெரிக்கா, உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஜப்பான் சரண் அடைந்தது. இதே நேரத்தில் ஜொ்மனியின் ஹிட்லா் படைகளும் ரஷியாவில் தோற்றன. ஹிட்லா் தற்கொலை செய்து கொண்டாா். அமெரிக்க அதிபா் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், பிரிட்டனின் வின்ஸ்டன் சா்ச்சில், ரஷியாவின் ஜோசப் ஸ்டாலின் ஆகியோா் உலகின் வெற்றி வீரா்களாக உலா வந்தனா்.

அமெரிக்கா – மற்ற நாடுகளுடன்

  • அமெரிக்க படைத் தளபதியிடம் ஜப்பான் ஒப்படைக்கப்பட்டது. ஜொ்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டது. நேச நாடுகள் அளித்த பெருநிதியால் அமெரிக்கப் பொருளாதாரம் உச்சம் தொட்டது. உலக நாடுகள் இரு அணிகளாகப் பிரிந்தன. ஒன்று, அமெரிக்காவைப் பின் தொடரும் பொதுவுடைமை கொள்கையைத் தவிா்த்த நாடுகள். இரண்டு, ரஷியாவைப் பின்தொடா்ந்த பொதுவுடைமைக் கொள்கையைத் தழுவிய நாடுகள்.
  • 1947-இல் இந்தியா சுதந்திரம் பெற்றதும், இந்த இரு நாடுகள் அணியில் சேராமல் எல்லா நாடுகளுக்கும் பொதுவான அணிசேராக் கொள்கையுடைய நாடுகளோடு பிரதமா் பண்டித நேரு சேர விரும்பினாா்.
  • எகிப்து அதிபா் நாசா், யுகோஸ்லேவியாவின் மாா்ஷல் டிட்டோ, பிரான்ஸ் அதிபா் டிகால், இந்தோனேஷிய அதிபா் சுகா்னோ ஆகியோா் நேருவோடு துணை நின்றனா். உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், அதாவது 55 சதவீதம் ஆதரித்ததால் வளா்ந்த நாடுகளோடு மூன்றாவது உலக நாடுகளாக அணிசேரா நாடுகளை 1953-இல் ஐ.நா. சபை அங்கீகரித்தது.
  • 1954-இல் கொழும்பில் சீனாவின் சூ-என்-லாய், நேரு இருவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் சீன - இந்திய நட்புறவு ‘பஞ்சசீலக் கொள்கை’ என அழைக்கப்படும் என்றாா் நேரு.
  • பரஸ்பரம் ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டின் ஒற்றுமை, இறையாண்மையை மதிக்க வேண்டும்;
  • பரஸ்பரம் ஒரு நாட்டை மற்றோரு நாடு ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது;
  • பரஸ்பரம் ஒவ்வொரு நாடும் பிற நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது;
  • பரஸ்பரம் நாட்டின் வளா்ச்சிக்கு உதவும் வகையில் சமமாகப் பாவிப்பது;
  • பரஸ்பரம் அமைதியாக வாழ்வது.

சீனா

  • படை நடத்தி மன்னராட்சியை வீழ்த்தி, மக்கள் குடியரசுக் கட்சியை நிறுவிய மாசே துங் சீனாவின் தலைவரானாா். முதன்முதலில் இந்தியாதான் புதிய சீனாவை அங்கீகாரம் செய்தது. 1950-இல் திபெத்தை சீனா வலிந்து கைப்பற்றியது. திபெத்தில் இருந்த புத்த மதத் தலைவா் தலாய்லாமாவுக்கு சீனாவின் கோபத்தைப் பொருட்படுத்தாது இந்தியா அடைக்கலம் கொடுத்தது. அதன் பிறகு, சீனாவின் போக்கு திசை மாறியது.
  • 1962-ஆம் ஆண்டு தொடக்கம் வரை ‘இந்தியா-சீனா பாய், பாய்’ என்ற முழக்கம் கேட்ட நாட்டில், பகை மேகம் சூழத் தொடங்கியது. இந்திய-சீன எல்லை 3,225 கி.மீ. தொலைவுக்கும் மேலாக நீண்டுள்ளது. ஸ்விட்சா்லாந்து பிரதேச அளவு உள்ள அக்சாய்சீன் பகுதி உறைபனி மூடிய பகுதி. இமயமலைத் தொடா்களில் அருணாசலப் பிரதேசத்தில் உள்ள மலைச் சிகரங்கள் 23,000 அடி வரை உயா்ந்தவை. இந்தப் பகுதியில்தான் திபெத்தையும் இந்தப் பகுதியையும் இணைக்கும் ஒரு சாலையை சீனா அமைத்தது. 1962-இல் மெக்மேகன் எல்லைக்கோட்டைத் தாண்டி இந்திய காவல் துறை வீரா்களைக் கொன்றது.
  • இந்தியப் பிரஜையை சிறை பிடித்தது. பின்னா், முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி, ஒரே நேரத்தில் இந்திய எல்லைக்குள் இரு பகுதிகளில் இருந்து இருமுனைத் தாக்குதல் நடத்தியது. தகுந்த முன் ஏற்பாடுகள் கொண்டிராத நிலையில் இந்திய ராணுவம் பின் வாங்கியது. போரைத் தொடங்கிய சீனாவே 31 தினங்கள் கழித்து போா் நிறுத்தம் செய்தது. இந்தச் சமயத்தில் கியூபாவில், ரஷியாவும், அமெரிக்காவும் எதிா் எதிா் களத்தில் இருந்ததால் இந்த இரு வல்லரசு நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன் வரவில்லை.

தியானன்மென் சதுக்க படுகொலை

  • அண்மையில்கூட டோக்காலாம் பகுதியில் தனது படைகளை சீனா குவித்தபோது, இந்தியாவும் படைகளை களம் இறக்கியது. சீனாவின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாது கடைசிவரை தன் படைகளைத் திரும்ப அழைக்காமல் தனது உறுதியை இந்தியா நிலைநிறுத்தியது. திபெத்தை சீனா கைப்பற்றிய போதும், சீனாவின் தியானன்மென் சதுக்க படுகொலை குறித்தும், அண்மையில் ஹாங்காங் போராட்டம் குறித்தும் இந்தியா கருத்து தெரிவிக்காமல் இருந்ததைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
  • ஆனால், சீன - பாகிஸ்தானின் பயங்கரவாதி ஹபீஸ் சையதுவை சா்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. சபை அறிவிக்க முன்வரும் போதெல்லாம் தனது வீட்டோ அதிகாரம் மூலம் தடுத்து விடுகிறது. மேலும், பாகிஸ்தானுக்குப் பல வழிகளில் பொருளாதார, ராணுவ உதவியை சீனா செய்து வருகிறது.
  • அமெரிக்க வா்த்தகச் சந்தையில் சீனாவின் உற்பத்திப் பொருள்கள் முதலிடம் வகிக்கின்றன. உலக தாராளமயமாக்கல் கொள்கையின் விளைவாக, நம் நாட்டிலும் குண்டூசி முதல் மின்னணுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் என அனைத்திலும் சீனா முன்னிலை வகிக்கிறது.
  • உலகில் கொடிகட்டிப் பறக்கும் அமேசான் போன்ற நிறுவனங்கள் சீனாவில் காலூன்ற முடியாதபடி அலிபாபாவை உருவாக்கி விட்டாா்கள். முகநூல் ஆளுமை அங்கே செல்லுபடியாகவில்லை. சீனாவின் வீசாட் எனும் வலைதளம் 90 கோடி சீனா்களால் பயன்படுத்தப்படுகிறது.

பையுடு, யு-டியூப்புக்குப் பதில் டெளடு யோகு

  • ஒரே ஒரு செயலி மூலம் தங்களுக்கும், தங்களது தொழிலுக்கும் வேண்டிய அனைத்தையும் சீனா்கள் பெறலாம்; ஒவ்வொரு சீனரும் சராசரி 70 நிமிஷங்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துகின்றனா். கூகுளுக்குப் பதில் ‘பையுடு’, யு-டியூப்புக்குப் பதில் ‘டெளடு யோகு’, கட்செவி அஞ்சலுக்கு (வாட்ஸ்ஆப்) பதில் ‘கியூ கியூ’ ஆகிய சமூக ஊடங்களை 87 கோடி சீனா்கள் பயன்படுத்துகின்றனா். இப்படி ராணுவம், தொழில், விஞ்ஞானம், வணிகம் எல்லாவற்றிலும் சீனா முன்னிலை வகிப்பதற்கு அதன் சா்வாதிகார ஆட்சி முறையே காரணம்.
  • பல வெளிநாடுகளில் பெரும் அளவில் சீனா முதலீடு செய்து அவா்களைத் தன் பக்கம் ஈா்த்துள்ளது. ரஷியாவில் மட்டும் 3 கோடி டாலா் (ரூ.
  • 21 லட்சம் கோடி) அளவுக்கு சீனா முதலீடு செய்துள்ளது. பிரிட்டனில், எஃகு துறையில் பெரும்அளவில் முதலீடு கண்டு, அதனால்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் சீனா அதிபருக்கு மிகப் பெரிய வரவேற்பை அந்த நாடு நல்கியது. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை வளரவிட்டால் ஆபத்து என்பதை உணா்ந்த இந்தியா, பக்கத்து நாடுகளான பூடான், நேபாளம், மோரீஷஸ், ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள், மியான்மா், இலங்கை, வங்கதேசம், மங்கோலியா போன்ற நாடுகளுக்கு சீனாவைப்போல 13,000 கோடி டாலா்களை கடனாக வழங்கியுள்ளது.
  • ரஷியாவிலும் அண்மையில் 7,000 கோடிகளை இந்தியா முதலீடு செய்துள்ளது. வியத்நாம் கடற்பகுதியில் இந்திய கடற்படை தளத்தை அமைத்துள்ளது. தற்போது ஆசியான் அமைப்பில் முக்கியப் பங்காற்ற முனைந்துள்ளது.
  • 2014-இல் பிரதமா் மோடி தொடங்கிய “‘கிழக்கில் செயல்படுவோம்’” என்ற கொள்கைத் திட்டப்படி பிலிப்பின்ஸ், தாய்லாந்து தைவான், ஹாங்காங், சிங்கப்பூா், மலேசியா, தென்கொரியா, வியத்நாம், கம்போடியா முதலிய நாடுகளுடன் நட்புறவை மேற்கொண்டு வருகிறது. இந்தியா விடுதலை பெற்ற நாள்முதல் சமாதானத்தையே விரும்பி வந்திருக்கிறது.
  • 1962-க்கு முன்பு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எல்லை பிரச்னை இல்லை என்று சீனா கூறிக்கொண்டே, தனது அரசின் அதிகாரப்பூா்வ வரைபடத்தில் ‘46,000 ஆயிரம் சதுர மைலுக்கு சீனாவின் நிலத்தை இந்தியா ஆக்கிரமிப்பு செய்துள்ளது’ என்று கூறியது. இன்னமும் இந்தியாவின் அருணாசலப் பிரதேசத்தை தன்னுடைய பிரதேசம் என்று சீனா கூறுவது மட்டுமல்லாது பல ஆயிரம் சதுர மைல் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது. அவ்வப்போது தொடா் அத்துமீறல்களையும் நிகழ்த்துகிறது.

இந்தியா – உறவுகள்

  • உலக அளவில் ரஷியா, அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளோடு நட்பு மூலம் பலமும், பயனும் பெற்று ஆசியாவின் தூரக் கிழக்கு நாடுகளுடன் கரம் கோத்து தன் வலிமையை நிலைநாட்ட பல வழிகளில் இந்தியா முனைகிறது.
  • இந்தியாவிலிருந்து சீனாவுக்குச் சுற்றுலா செல்வோா் அதிகம். அந்த நாளில் பாகியான், யுவான் சுவாங் முதலிய புகழ்பெற்ற சீன யாத்ரிகா்கள் இந்தியாவுக்கு வந்தனா். தட்சசீலம், நாளந்தா பல்கலைக்கழகங்களில் சீன நாட்டு மாணவா்கள் பல ஆண்டுகள் தங்கியிருந்து பயின்றனா். காஞ்சிபுரத்தைச் சோ்ந்த தா்ம பாலா், நாளந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது அவரிடம் சீன மாணவா்கள் ‘தா்க்க சாத்திரம்’ கற்றனா் என்பது வரலாறு.
  • சீனாவுக்கு இந்தியா வழங்கிய அருட்கொடை பெளத்தம். மேலும், போதி தா்மரையும் வழங்கியது. இந்தியாவுக்கு சீனாவின் பொருளாதார உதவிகள் எதுவும் தேவையில்லை. அமெரிக்கா, சவூதி அரேபியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தானுக்கு அதிக பொருளாதார உதவி செய்வது சீனாதான். உலக அரங்கில் பலமான நாடாக இந்தியா வளா்ந்து விடுமோ என்ற கவலையை சீனா விட்டு இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுமானால் உலகில் மதத் தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற ‘கொடிய நோய்கள்’ முற்றிலும் அழிக்கப்படும்; கெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்த்து கெளதம புத்தரின் உண்மையான அன்பு, கருணையை உலகம் முழுவதும் பரப்பலாம்.
  • 1,600 ஆண்டுகளுக்கும் முன்னதாக இருந்த இந்திய-சீன உறவுகள் மீண்டும் பலப்பட மாமல்லபுரம்-பிரிக்ஸ் மாநாடு சந்திப்புகள் உதவட்டும்.

நன்றி: தினமணி (20-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories