TNPSC Thervupettagam

இந்தியா 75: விடுதலைக்கு வித்திட்ட தமிழ்நாட்டு வீரர்கள்

August 15 , 2021 1173 days 1052 0
  • இன்றைக்கு 75-வது விடுதலை நாளைக் கொண்டாடுகிறது இந்தியா. இந்தப் பின்னணியில் நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட 10 தமிழர்களைக் குறித்த தொகுப்பு.

ம.சிங்காரவேலர்

  • தமிழ்நாட்டில் பொதுவுடமைச் சிந்தனைகளை முதலில் பரப்பிய ‘சிந்தனைச் சிற்பி’ ம.சிங்காரவேலர் (1860-1946), விடுதலைப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றவர்.
  • ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி அறிவித்த போது, வழக்கறிஞராக இருந்த சிங்காரவேலர் அதை ஏற்று இயக்கத்தில் பங்கேற்றார்.
  • தன்னுடைய கறுப்பு அங்கியை எரித்து ‘இனி வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட மாட்டேன்’ என்று அறிவித்தார்.
  • 1921-ல் வேல்ஸ் இளவரசரின் வருகையை எதிர்த்து நாடு முழுவதும் பல அகிம்சைப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாகத் தமிழ்நாட்டில் மாபெரும் கடையடைப்புப் போராட்டத்தை சிங்காரவேலர் ஒருங்கிணைத்தார்.
  • ஜவாஹர்லால் நேரு போன்ற தேசிய தலைவர்கள் சென்னைக்கு வந்தபோது, சிங்காரவேலர் வீட்டில் தங்கும் அளவுக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு முக்கியத்துவமும் மதிப்பும் இருந்தன.

வ.உ.சிதம்பரனார்

  • ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று அழைக்கப்படும் வ.உ.சி.யின் (1872-1936) இயற்பெயர் வ.உ.சிதம்பரம். வழக்கறிஞர், எழுத்தாளர். விடுதலைப் போராட்டத்தில் திலகரால் ஈர்க்கப்பட்டவர். கப்பல் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து இவர் தொடங்கியதுதான் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்’.
  • அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாகக் கப்பலும் வாங்கினார். தொழிற்போட்டி, சுதேசிப் பொருட்களையே வாங்க வலியுறுத்தியது, ‘தூத்துக்குடி கோரல் மில்’ வேலைநிறுத்தப் போராட்டம் உட்பட ஆங்கிலேயருக்கு எதிராகப் பல போராட்டங்களை முன்னெடுத்தது, ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து மக்களிடம் தொடர்ந்து உரையாற்றியது ஆகியவற்றின் காரணமாக 1908-ல் கைதுசெய்யப்பட்டார்.
  • 40 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு, அது படிப்படியாகக் குறைக்கப்பட்டு 1912-ல் வெளிவந்தார். சிறையில் இருந்த காலத்தில் எண்ணெய்ச் செக்கை இழுக்கும்படி நேர்ந்ததால் ‘செக்கிழுத்த செம்மல்’ என்ற பெயரும் ஏற்பட்டது.

ராஜாஜி

  • ராஜாஜியின் (1878-1972) இயற்பெயர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி. நண்பர்களால் சி.ஆர். என்று அழைக்கப்பட்ட அவர், மக்களால் ராஜாஜி என்று அழைக்கப்படுகிறார். வருமானம் கொழிக்கும் வழக்கறிஞர் தொழிலை விட்டு, காந்தியினால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ராஜாஜி ஈடுபட்டார்.
  • ‘காந்தியின் மனசாட்சி’ என்றே அவர் அழைக்கப்பட்டார். வ.உ.சி., பெரியார் போன்றவர்களின் நண்பராகவும் விளங்கினார். தன்னைப் பொதுவாழ்க்கைக்கு அழைத்து வந்தது ராஜாஜிதான் என்று பெரியாரால் குறிப்பிடப்பட்டவர் அவர்.
  • 1930-ல் காந்தி ‘உப்பு சத்தியாகிரகம்’ தொடங்கியபோது, தமிழகத்தில் அதற்கு ராஜாஜி தலைமையேற்றார். அதற்காக ஆறு மாதங்கள் கடுங்காவல் தண்டனை பெற்றார். தீண்டாமை ஒழிப்பு, இந்து-முஸ்லிம் ஒற்றுமை போன்றவற்றுக்கு காந்தி கொடுத்த முக்கியத்துவத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர் ராஜாஜிதான் என்கிறார் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா.

வ.வே.சு.

  • லண்டன் ‘இந்தியா ஹவுஸ்’ மாணவர் விடுதி உருவாக்கிய தீப்பொறிகளில் ஒன்று தமிழ்நாட்டில் பற்றிப் படர்ந்தது. அந்த நெருப்பலைக்கு வ.வே.சுப்பிரமணியம் (1881-1925) என்று பெயர், வ.வே.சு. என்று அவர் அறியப்பட்டார்.
  • விடுதலைப் போராட்டத்தில் சாவர்க்கரின் சீடராகச் செயலாற்றிய பின்பு, காந்தியின் அகிம்சை வழிக்கு மாறியவர் வ.வே.சுப்பிரமணியம். உலகம் சுற்றியவர், ஆறு மொழிகளில் புலமைபெற்றவர், தேசியக் கல்வித் திட்டத்தின் பிரச்சாரகர், தாய்மொழிக் கல்வித் திட்டத்தின் முன்னோடி, தமிழில் சிறுகதை இலக்கியத்தை அறிமுகப்படுத்தியவர் என்று ஏகப்பட்ட பெருமைகள் அவருக்கு உண்டு.
  • காந்தியின் கருத்துகளை ‘தேசபக்தன்’ ஏட்டின் வாயிலாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தவர். அரசுக்கு எதிராக பத்திரிகைத் தலையங்கம் எழுதியதற்காக ஒன்பது மாதங்கள் கடுங்காவல் தண்டனை பெற்றவர்.

பாரதியார்

  • பாரதியாரின் (1882-1921) இயற்பெயர் சுப்பிரமணியன். இவருடைய கவிதை எழுதும் ஆற்றல் காரணமாகச் சிறு வயதிலேயே சூட்டப்பட்ட பெயர்தான் பாரதி. பிற்காலத்தில் பாரதியார் என்று அறியப்படலானார். இளம் வயதிலேயே திலகரால் ஈர்க்கப்பட்டு, இந்திய விடுதலைப் போராட்டத்தில் பாரதியார் ஈடுபட்டார்.
  • அவர் நடத்திய ‘இந்தியா’ பத்திரிகையை ஆங்கிலேயே அரசு தடைசெய்ததோடு அவருக்குப் பிடியாணையும் பிறப்பித்தது. பிரெஞ்சுக்காரர்கள் ஆளுகைக்கு உட்பட்ட புதுச்சேரிக்குத் தப்பிச்சென்று, அங்கே ‘இந்தியா’ பத்திரிகையை அவர் நடத்தினார்.
  • அவரது தேசபக்திப் பாடல்கள் தமிழகத்தில் விடுதலைப் போராட்டத்துக்குப் பெரும் ஊக்கம் கொடுத்தன. காந்தியைப் பற்றி அநேகமாக முதலில் கவிதை எழுதியவர் பாரதியாராகத் தான் இருக்கும்.
  • பாரதியார் இறந்த பிறகும் அவரது கவிதை நூல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது, அவரது பாடல்களின் செல்வாக்கை உணர்த்தும்.

திரு.வி.க.

  • திருவாரூர் வி.கலியாணசுந்தரனார் (1883-1953) என்கிற இயற்பெயரைக் கொண்ட திரு.வி.க. பள்ளி ஆசிரியர் பணியைத் துறந்து, தேச விடுதலை உணர்வைப் பரப்பும் ‘தேசபக்தன்’ இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
  • திரு.வி.க.வின் அயல்மொழிச் சொற்களற்ற தமிழ்ப் பயன்பாடு ‘தேசபக்தன்’ இதழின் தனிச்சிறப்பாக மிளிர்ந்தது. உடனடிச் செய்திகளைத் தரும் அவருடைய தீவிரத்தால் ‘ஜாலியன் வாலாபாக்’ படுகொலை குறித்து, ‘தேசபக்தன்’ மூலமாகவே தமிழர்கள் முதலில் தெரிந்து கொண்டார்கள். அடுத்து, அவர் ஆசிரியர் பணியாற்றிய ‘நவசக்தி’ வார இதழும் விடுதலை பிரச்சாரப் பணியை மேற்கொண்டது.
  • திரு.வி.க.வின் தலையங்கங்கள் தமிழுணர்வையும் நாட்டுப்பற்றையும் ஊட்டின. 1926-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான அவர், கட்சியின் தூண்களில் ஒருவராகக் கருதப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று விடுதலைப் போராட்டக் கூட்டங்களில் உரையாற்றினார்.

சுப்பிரமணிய சிவா

  • வ.உ.சி., பாரதியார் ஆகியோரின் நெருங்கிய நண்பர் சுப்பிரமணிய சிவா (1884-1925). இவர்களால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சுப்பிரமணிய சிவா, ஆங்கிலேயர்களுக்கு எதிராகத் தீவிரமாக மக்களிடையே உரையாற்றினார்.
  • 1908-ல் வ.உ.சி. கைதுசெய்யப்பட்டபோது சிவாவும் கைதுசெய்யப்பட்டார். 1912-ல் விடுதலை செய்யப்பட்ட பிறகு, இதழியல் பணியிலும் ஆன்மிகப் பணியிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.
  • 1921-ல் இரண்டாவது முறையாக தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டாலும், தொழுநோயால் வாடியதால் 1922-ல் விடுதலை செய்யப்பட்டார். பாப்பாரப்பட்டியில் ‘பாரத மாதா’ கோயில் கட்டும் முயற்சியை மேற்கொண்டார்.
  • அதற்கு அடிக்கல் நாட்ட சித்தரஞ்சன் தாஸை அழைத்துவந்தார். அந்தக் கோயிலைக் கட்டுவதற்கு முன் நோய் தீவிரமடைந்து 41-வது வயதில் சிவா காலமானார்.

காமராஜர்

  • சட்ட மறுப்பு இயக்கக் காலத்தில் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு, அலிபூர் சிறையில் தண்டனை அனுபவித்தவர் காமராஜர் (1903-1975). விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்படா ததால் விடுதலையானவர்.
  • 1940-ல் மீண்டும் ஒரு முறை கைதாகி வேலூர் சிறைவாசம். சிறையில் இருந்தபோதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், விடுதலையானதும் பதவியிலிருந்து விலகினார்.
  • ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் தீவிரமாகப் பங்கெடுத்துக்கொண்டதற்காகக் கைது செய்யப்பட்ட அவர், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். போராட்டமும் சிறைவாசமுமாய் இந்திய சுதந்திரத்துக்குத் தனது இளமை வாழ்வைக் காணிக்கையாக்கியவர் காமராஜர்.

கேப்டன் லட்சுமி ஷாகல்

  • நேதாஜியின் தலைமையில் ‘இந்திய தேசிய ராணுவம்’ பிரிட்டிஷாரை எதிர்த்து, பர்மா போர்முனையில் களம் கண்டது. தேசிய ராணுவத்தில் 500 பெண் வீராங்கனைகளைக் கொண்ட படைப்பிரிவான ‘ஜான்ஸி ராணி ரெஜிமெண்ட்’டின் தலைவராக இருந்தவர் லட்சுமி (1914-2012).
  • மருத்துவராக சிங்கப்பூருக்குச் சென்ற அவர், தேசிய ராணுவத்தில் ஆயுதம்தாங்கினார். ‘இந்திய தேசிய ராணுவம்’ பிரகடனப்படுத்திய நேதாஜி தலைமையிலான அமைச்சரவையில் பெண்கள் நலனுக்கான அமைச்சராகவும் பொறுப்புவகித்தார்.
  • பர்மியப் போர்முனையில் பெண் வீரர்களின் மருத்துவமனை மீது வீசப்பட்ட வான்குண்டுத் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார் லட்சுமி. போர்க்கைதியாகப் பிடிபட்டு, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

என்.சங்கரய்யா/ஆர்.நல்லகண்ணு

  • விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற தலைவர்களில் இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் சிலரில் ஒருவர், நூறு வயதைத் தொட்ட கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா (1922-).
  • நேதாஜி மதுரைக்கு வந்தபோது மாணவர் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தவர். 1941-ல் கல்லூரி மாணவர் கைதுக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததற்காக சங்கரய்யா கைது செய்யப்பட்டதால், பட்டப் படிப்பை முடிக்க முடியாமல் போனது.
  • 1946-ல் மதுரையில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற கூட்டதை ஒருங்கிணைத்ததற்காக ‘மதுரை சதி வழக்கு’ என்னும் புனையப்பட்ட வழக்கில் பி.ராமமூர்த்தி, சங்கரய்யா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
  • 1947 ஆகஸ்ட் 14 மாலையில்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். வாழ்ந்துகொண்டிருக்கும் மற்றொரு கம்யூனிஸ்ட் தலைவரான ஆர்.நல்லகண்ணுவும் (1925-) விடுதலைப் போராட்ட வீரரே.
  • ஆங்கிலேயே ஆட்சிக்கு ஆதரவான பள்ளி நாடகத்தை எதிர்த்தார். பள்ளிப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினார். ‘வெள்ளையனே வெளியேறு இயக்க’த்தில் பங்கேற்றதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார், கல்லூரியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.

நன்றி: இந்து தமிழ் திசை (15 - 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories