- ‘‘ஒரு பரம ஏழையும் இது தன்னுடைய நாடு என உணரும் வகையில் இந்தியாவை உருவாக்க நான் விழைவேன். அப்போதுதான் அவர்களுடைய குரலும் இங்கே வலுத்து ஒலிக்கும்.’’ - மகாத்மா காந்தி
- உலகின் பாதிக்கும் மேற்பட்ட நாடுகளைப் போல் இந்தியாவும் இந்த ஆண்டில் தேர்தலைச் சந்திக்கிறது. ‘அரசியல் ஒரு சாக்கடை’, ‘அரசியல்வாதிகள் அனைவருமே மோசமானவர்கள்’ என்பன போன்ற கருத்துகளைக் கொண்டிருப்பவர்களும்கூட, தேர்தல் என்று வரும்போது தங்களுக்குப் பிடித்த ஒரு கட்சிக்கு வாக்களிக்கவே செய்கிறார்கள்.
- அரசியல், கட்சிகள், ஆட்சியாளர்கள் பற்றிப் பெரிய முடிவுகளோ, தீர்மானங்களோ இல்லாத சாதாரணர்களும் வாக்களிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் வாழும் மேல் நடுத்தர வர்க்கத்தினரும் மேல்தட்டு வர்க்கத்தினருமே வாக்களிப்பைப் பொதுவாகத் தவிர்க்கிறார்கள்.
- தங்களது பெரும்பாலான தேவைகளை ஏதோ ஒரு வகையில் அவர்கள் அடைந்துவிடுகிறார்கள். அவர்களிடையே நிலவும் அரசியல் விலக்கம் முறையான காரணங்கள் இல்லாத கற்பிதமாகவும் நிலைபெற்றிருக்கிறது. நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும், அந்த வாக்கின் அடிப்படையில் யாரைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும் எவ்வளவு மதிப்புடையவை என்பதை நாம் இன்னும் முழுமையாக உணர்ந்திருக்கவில்லை.
- இந்தச் சமூகத்தின் ஒரு பகுதியாகவும், இந்தச் சமூகம் தொடர்ந்து இயங்குவதற்கான அடிப்படைக் கூறாகவும் சாதாரண உழைக்கும் மக்களே இருக்கிறார்கள். காலம் முழுக்க உழைத்தாலும் அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதோ, நிம்மதியான ஒரு வாழ்க்கையோ அவர்களுக்குச் சாத்தியப்படுவதில்லை.
- எல்லாவற்றுக்கும் முட்டிமோத வேண்டியிருக்கிறது. அவர்கள் திரும்பத் திரும்ப விளிம்புக்குத் தள்ளப்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இதிலிருந்து விடிவு பெற வேண்டுமென நினைக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, தேர்தல் அரசியல் சார்ந்த கட்சிகளே தங்களுக்கான எதிர்காலத்தை ஓரளவுக்கு உறுதிப்படுத்தும் என்கிற நம்பிக்கை உழைப்பாளிகளுக்கு இருக்கிறது.
- தன் எதிர்காலத்துக்கும் தன் சந்ததிகளின் எதிர்காலத்துக்கும் குறைந்தபட்ச உத்தரவாதம் அளிக்கும் என்று நம்பப்படும் கட்சிகளுக்கே பொதுவாக வாக்குகள் இடப்படுகின்றன.
- ஈர்க்கும் புதிய வாக்காளர்கள்: இந்தியத் தேர்தல்களில் ஒரே கட்சி ஆதிக்கம் செலுத்திய தொடக்கக் காலத்தைத் தாண்டிப் பல்வேறு மாநிலக் கட்சிகள் தோன்றியதும் தேர்தல் அரசியலில் ஆதிக்கம் செலுத்தியதும் வரலாறு. மாநிலக் கட்சிகள் அந்தந்த மாநிலத்துக்கு உரிய வகையில் சமூக நீதி, மேம்பாடு சார்ந்த கொள்கைகளை முன்வைத்துக் களம் கண்டது, அவை பெற்ற வெற்றிக்கு முக்கியக் காரணம்.
- தேர்தல் வரலாற்றில் மக்கள் மாறி மாறியும் ஒரே கட்சியையும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அதற்கு அந்தந்தக் காலத்துக்குரிய நியாயங்களும் இருந்துவந்திருக்கின்றன. நமது வாக்காளர்கள் அரசியல் தெளிவு பெற்றவர்களாக (informed voters) வளர்த்தெடுக்கப்படாததும் தேர்தலில் ஏற்படும் சாய்வுகளுக்கு முக்கியக் காரணம்.
- இன்றைக்கு இளம் தலைமுறையினரின் வாக்குகளை அறுவடை செய்துவிடப் பல கட்சிகள் ஆர்வமாக இருக்கின்றன. பழைய வாக்காளர்கள் ஏற்கெனவே குறிப்பிட்ட கட்சி சார்ந்த சார்புகளை, ஏதோ ஒரு வகையில் பெற்றிருப்பார்கள் எனக் கருதப்படுவதுதான் புதிய வாக்காளர்களை நோக்கி கவனம் திரும்பியிருப்பதற்குக் காரணம்.
- சமூக-அரசியல் புரிதலில் தொடக்க நிலையில் இருக்கும் புதிய வாக்காளர்களை, தங்களை நோக்கி ஈர்ப்பது எளிது என நினைப்பதும், இன்னும் நெறிமுறைப்படுத்தப்படாத சமூக ஊடகப் பிரச்சாரம் அவர்களை எளிதில் சென்றடையும் எனக் கட்சிகள் கருதுவதும் மற்ற காரணங்கள்.
- அதே நேரம், நாடு விடுதலை பெற்று 77 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஒரு குடியரசாக இந்தியா எப்படி இருக்க வேண்டும் எனக் கனவு காணப்பட்டது என்பது குறித்து இன்றைய இளைஞர்கள் அறிந்திருப்பது மிக முக்கியம்.
- கூட்டுக் கனவுக்கு ஓர் உருவம்: இந்தியச் சமூகத்தைப் போலப் பன்முகத்தன்மை வாய்ந்த சாதியினர், மதத்தினர், மொழியினர், பண்பாட்டைக் கொண்டவர்கள் கலந்து வாழ்வது அரிது. வேற்றுமையில் ஒற்றுமை என்பது நம் சமூகத்தைப் பொறுத்தவரை ஏதோ அலங்கார வார்த்தையல்ல. காலம்காலமாக இந்தியா அப்படித்தான் வாழ்ந்துவந்திருக்கிறது, வாழ்ந்துகொண்டும் இருக்கிறது.
- இதில் அவ்வப்போது பிணக்குகள் எழுந்திருக்கலாம். ஆனால், அந்தப் பிணக்குகளைவிட இணைந்து ஒரு சமூகமாக வாழ்ந்ததும் அது சார்ந்து பெற்ற அடையாளமுமே நிலைத்துவந்திருக்கிறது. இந்த உள்ளார்ந்த தன்மைக்கு ஒரு சட்ட வடிவம் கொடுக்கும் வகையிலேயே அரசமைப்பு நிர்ணய அவை, விரிவான விவாதங்களுக்குப் பிறகு, இந்தியாவுக்கான அரசமைப்பை உருவாக்கியது.
- அதில் அனைத்துத் தரப்பினரின் பிரதிநிதித்துவமும் இடம்பெற்றிருந்தது. விடுதலை பெற்ற ஒரு நாடாக எப்படி நவீன காலத்தை நோக்கி நாம் நகர வேண்டும் என்கிற கூட்டுக் கனவின் அடிப்படையில் அரசமைப்பு உருவாக்கப்பட்டது. அன்றைக்கு இந்தியர்களில் படித்திருந்தவர்களின் எண்ணிக்கை 16% மட்டுமே. ஆனால், பெரும் லட்சியவாதத்துடன் கூடிய ஓர் அரசமைப்பு உருவாவதற்கு இது தடையாக இருக்கவில்லை.
- அரசமைப்பை உருவாக்கிய மாறுபட்ட அணுகுமுறைகளை / கொள்கைகளைக் கொண்டிருந்த பல்வேறு தலைவர்களும் இந்தியா ஒரு சமூகமாகவும், கூட்டாகவும் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி எப்படி நகர வேண்டும் என்பதையே இலக்காகக் கொண்டிருந்தனர்.
- அதற்கு உருவம் கொடுக்கும் வகையிலேயே அனைத்துத் தரப்பினரின் கருத்துகளுக்கும் இடமளித்து, அரசமைப்பை உருவாக்கினார்கள். இவர்களில் நேரு, வல்லபபாய் பட்டேல், அம்பேத்கர், ராஜேந்திர பிரசாத், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு, ஏன் பாரதிய ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியும் அடக்கம்.
- எங்கே தவறவிட்டோம்? - அரசமைப்பை ஏற்றுக்கொண்டு 75 ஆண்டுகளை நெருங்கிவருகிறோம். அரசமைப்பின் முக்கியத்துவத்தையும், அது முன்வைத்த கூட்டுக் கனவுகள் குறித்தும் அடுத்தடுத்து வந்த தலைமுறைகளுக்கு, நமது குழந்தைகளுக்குச் சரியாகக் கடத்தியிருக்கிறோமா என்கிற கேள்வி இன்றைக்கு வலுவாக எழுகிறது.
- எத்தனையோ துறைகளில் / வகைகளில் நாம் வளர்ந்திருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ஒவ்வொரு இந்தியருக்கும் தான் இந்தியர் என்கிற இயல்பான பெருமை மனதுக்குள் ததும்பிக்கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது.
- அதற்குக் காரணம், நாம் அனைவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்கிற உணர்வு மிக வலுவாக இருந்ததுதான். அனைவரிடமும் அந்த உணர்வு ஆழமாக இருந்தது என்று சொல்ல முடியாவிட்டாலும், ஒரு சமூகமாக மேலெழ வேண்டும் என்கிற உணர்வைத் தூண்டும் கிரியாஊக்கிகளாகச் சிலர் எப்போதுமே இயங்கிவந்திருக்கிறார்கள்.
- அவர்களுடைய பின்னணியை ஆராய்ந்தால் அரசமைப்பு முன்மொழிந்த மதிப்பீடுகள், அதற்குமறைமுகக் காரணமாக இருந்திருக்கும். அந்த உணர்வை அடுத்தடுத்த தலைமுறைக்கு அழுத்தமாகக் கடத்தி வந்திருக்கிறோமா?
- இன்றைக்கு அரசமைப்பு குறித்தும் அரசமைப்பின் முகப்புரை குறித்தும் மக்கள் இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் நிறைய பேசத் தொடங்கியிருக்கின்றன. அரசமைப்பு முன்மொழிந்த மதிப்பீடுகள் எளிதில் பதிலீடு செய்துவிட முடியாதவை. அவை காப்பாற்றப்பட வேண்டும் என்கிற கலந்துரையாடல் உருவாகியிருக்கிறது.
- அரசமைப்பின் முகப்புரையை அரசமைப்பின் சாரம் என்றும் சொல்லலாம். அது முன்மொழியும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் சார்ந்த மதிப்பீடுகளை நாம் ஒவ்வொருவரும் மனதில் ஏந்தியிருக்கிறோமா? நமது ஒவ்வொரு பொதுச் செயல்பாடும் இவற்றை உறுதிசெய்வதாகத்தானே இருக்க வேண்டும்.
- உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகின் சிறந்த அரசமைப்புகளில் ஒன்றை நம் தலைவர்கள் நமக்கு வழங்கிச் சென்றிருக்கிறார்கள். அது வெறுமனே அருங்காட்சியகங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டியது அல்ல.
- வாக்கு செலுத்துவதில் தொடங்கி, நம் சமூகத்தின் ஒவ்வொரு பொதுச் செயல்பாட்டிலும் எதிரொலிக்க வேண்டியதாகும். அரசமைப்பின் ஆன்மாவை நாம் ஒவ்வொருவரும் உள்வாங்கிக்கொண்டு, ஒவ்வொரு பொதுச் செயல்பாட்டிலும் அதைப் பின்பற்றுவதும் நடைமுறைப்படுத்துவதுமே அதன் மேன்மையைக் கடத்துவதற்கான ஒரே வழி.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 04 – 2024)