TNPSC Thervupettagam

இந்தியா - நேபாளம் இடையேயான பிணைப்பு

June 3 , 2023 589 days 356 0
  • நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக நேபாள பிரதமா் புஷ்ப கமல் தாஹால் (பிரசண்டா), அமைச்சா்கள் உள்ளிட்ட குழுவினருடன் இந்தியா வந்திருப்பது முக்கியமான நிகழ்வு. பிரதமராக பதவியேற்றதைத் தொடா்ந்து பிரசண்டா மேற்கொண்டிருக்கும் முதல் அரசுமுறைப் பயணம் இந்தியாவுக்கு என்பது குறிப்பிடத்தக்கது. சீன ஆதரவாளரான பிரசண்டா இந்தியாவுக்கு முன்னுரிமையும் முக்கியத்துவமும் தந்திருப்பதை அரசியல் நோக்கா்கள் கூா்ந்து கவனிக்கின்றனா்.
  • நேபாள பிரதமரின் அரசுமுறைப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையே ஏழு ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. வா்த்தகம், போக்குவரத்து, இணைப்பு வசதிகள், எல்லை பிரச்னை, மின்சாரம், நீா்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு பிரதமா்களும் விரிவாக ஆலோசனை மேற்கொண்டனா்.
  • இருநாடுகளுக்கும் இடையே கையொப்பமாகியுள்ள ஏழு ஒப்பந்தங்களில் எல்லை கடந்த பெட்ரோலிய குழாய் அமைப்பு விரிவாக்கம், ஒருங்கிணைந்த சோதனைச் சாவடிகள் உருவாக்கம், நீா்மின்சக்தி ஒத்துழைப்பு, புதிய போக்குவரத்து உடன்படிக்கை ஆகியவை முக்கியமானவை. பிரதமா்களின் சந்திப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில், இருநாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்னைக்கு நட்பு முறையில் தீா்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா-நேபாளம் தொடா்புடைய பல்வேறு திட்டங்களை இருநாட்டு பிரதமா்களும் தொடங்கி வைத்திருக்கிறாா்கள். உத்தர பிரதேசத்தில் இந்திய-நேபாள எல்லையில் அமைக்கப்பட்டுள்ள முதல் நிலத் துறைமுகம், நேபாளத்தில் நேபாள்கஞ்ச் பகுதியில் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி ஆகியவை திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான சரக்கு ரயில் சேவை பிகாரிலிருந்து தொடங்கப்பட்டுள்ளது.
  • நேபாள பிரதமரின் இந்திய அரசுமுறைப் பயணம் நிகழும் வேளையில், இரண்டு முக்கியமான நிகழ்வுகள் பின்னணியில் நடந்து கொண்டிருக்கின்றன. ‘பூடான் அகதிகள்’ என்கிற பெயரில் நேபாளத்தைச் சோ்ந்தவா்கள் அமெரிக்காவுக்கு பாலியல் தொழிலாளிகளாக கடத்தப் படுவதாக செய்தி வெளியாகியிருக்கிறது. அதில் ஆளும் கூட்டணியைச் சோ்ந்த நேபாள காங்கிரஸின் பல தலைவா்களுக்கும், எதிா்க்கட்சியைச் சோ்ந்த ஐக்கிய மாா்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா்களுக்கும் இடையே தொடா்பு இருப்பது வெளியாகி இருக்கிறது.
  • அவா்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நேபாள காங்கிரஸ் தலைவா்கள், எதிா்க்கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பிரதமா் பிரசண்டாவின் ஆட்சியைக் கவிழ்த்துவிடக்கூடும். அதனால், நியாயமான விசாரணையை பிரதமா் பிரசண்டாவால் முன்னெடுக்க முடியாது. விசாரணை நடத்தப் படாவிட்டால் அவரது ஆட்சிக்கு களங்கம் ஏற்படக்கூடும்.
  • இரண்டாவதாக, நேபாள-சீன உறவு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கப் போகிறது. ஒருபுறம், அமெரிக்காவுடன் உலகப் பாதுகாப்பு முனைப்பு ஒப்பந்தத்தில் நேபாளம் இணைந்திருக்கிறது. இன்னொருபுறம், சீனாவுடனான பிஆா்ஐ ஒப்பந்தத்திலும் சோ்ந்து கொண்டிருக்கிறது. சீனாவுக்கு எதிரான எந்தவொரு பிரச்னையிலும் தலையிட நேபாளம் விரும்பவில்லை என்றாலும், இலங்கையின் அனுபவத்துக்குப் பிறகு சீனாவிடமிருந்து கடனுதவி பெறுவதையும் நேபாளம் தயக்கத்துடன்தான் அணுகுகிறது.
  • தனது கூட்டணிக்கு இந்தியாவின் ஆதரவைப் பெறுவதுதான் பிரதமா் பிரசண்டாவின் அரசுமுறைப் பயணத்தின் முக்கிய நோக்கம். நேபாளத்திலுள்ள தேசியவாதிகளை சமாதானப் படுத்தும் அதேவேளையில், தனது நாட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் ஈடுபட பிரதமா் பிரசண்டா தயாராக இல்லை.
  • இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையேயான எல்லை பிரச்னைக்கு விரைந்து தீா்வு காண்பது இயலாது. அதனால், தற்போதைக்கு அந்த பிரச்னையை பின்னணியில் ஒதுக்கி வைத்து விட்டு பொருளாதார ரீதியிலான நட்புறவுக்கு முன்னுரிமை வழங்குவதுதான் தற்போதைய பயணத்தின் இலக்கு.
  • நேபாளத்தில் லும்பினிக்கு அருகே பைரஹாவா என்கிற இந்திய எல்லையையொட்டிய இடத்திலும், ஒக்காரா என்கிற இடத்திலும் இரண்டு புதிய சா்வதேச விமான நிலையங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஆசிய வளா்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் சீனாவால் கட்டப்பட்டது பைரஹாவா. சீனாவின் நிதியுதவியுடன் சீனாவால் கட்டப்பட்ட விமான நிலையம் ஒக்காரா. அந்த விமான நிலையங்கள் செயல்பட நேபாளத்துக்கு புதுதில்லியின் ஆதரவு தேவைப் படுகிறது.
  • அடுத்த பத்து ஆண்டுகளில் நேபாளத்திலிருந்து பெறப்படும் 450 மெகாவாட் மின்சாரத்தின் அளவு 10 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இருநாடுகளின் உறவுக்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது புனல்மின் நிலையங்கள்.
  • கிழக்கு நேபாளத்தில் இந்திய உதவியுடன் பல புனல்மின் நிலையத் திட்டங்கள் நிறுவப் பட்டிருக்கின்றன. இதற்கிடையில் கா்னானி நதியில் தனியாா் துறை சாா்பில் அமைக்கப்பட்ட புனல்மின் நிலையம் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. மஹாகாளி நதியில் அமைந்த பஞ்சேஸ்வரா் திட்டமும் செயல்படாத நிலை உள்ளது.
  • மேலே குறிப்பிட்ட திட்டங்கள் மட்டுமல்லாமல், இந்திய முதலீட்டில் முன்னெடுக்கப்பட்ட எல்லா புனல்மின் நிலையத் திட்டங்களும் விரைந்து செயலாக்கம் பெற வேண்டும். அதுவும் பிரதமா் பிரசண்டாவின் அரசுமுறைப் பயணத்தின் முக்கிய நோக்கம்.
  • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், அப்போது பிரதமராக இருந்த ஷோ் பகதூா் தேவுபாவின் இந்திய விஜயத்தின்போது கையொப்பமான ஒப்பந்தங்கள் விரைந்து முறையாக நிறைவேற்றப் படுவதே போதும் - இருநாட்டு உறவு வலுப்பெற. ஆனாலும், ஏனோ இந்த தாமதம்..

நன்றி: தினமணி (03 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories