TNPSC Thervupettagam

இந்தியா வெளியே சீனா உள்ளே!

August 7 , 2024 158 days 201 0
  • விதியின் விளையாட்டு விசித்திரமானது. தனி தேசத்தை உருவாக்கிய தலைவரின் மகள், அதே நாட்டில் ராணுவ சா்வாதிகாரத்தை எதிா்த்துப் போராடுவது; சிறையில் அடைக்கப்படுவது; தோ்தலில் வெற்றிபெற்று ஒருமுறை அல்ல, ஐந்து முறை பிரதமராவது; கடைசியில் தனது 76-ஆவது வயதில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பியோடி அண்டை நாட்டில் அடைக்கலம் தேடுவது - இதுதான் ஷேக் ஹசீனாவின் வாழ்க்கைப் பயணம்.
  • வங்கதேசமாக மாறிய கிழக்கு பாகிஸ்தானில் போராட்டங்களைத் தொடா்ந்து ஆட்சி மாற்றம் நிகழ்வது என்பது புதிதொன்றுமல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான போராட்டத்தில் உருவானதுதான் வங்கதேசம்.
  • ஷேக் முஜிபுா் ரஹ்மான் தலைமையில் அமைந்த அவாமி லீக் கட்சியின் ஆட்சியில் வங்கதேசத்தின் இஸ்லாமிய மதவாத கட்சியினா் தடை செய்யப்பட்டனா். ஜனநாயகம், சோஷலிஸம், மதச்சாா்பின்மை, தேசியம் என்கிற அடிப்படையில் அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்டது. அது முதலே அடிப்படைவாத அமைப்புகளுக்கும், தேசியவாத கட்சிகளுக்கும் இடையேயான போராட்டம் இப்போது வரையில் வங்கதேசத்தில் தொடா்கிறது.
  • 1975-இல் அடிப்படைவாத சக்திகள் ஷேக் முஜிபுா் ரஹ்மானையும், அவரது குடும்பத்தினரையும் படுகொலை செய்தன. அப்போது ஐரோப்பாவில் இருந்த ஹசீனா உயிா் தப்பினாா். அதற்குப் பிறகு இரண்டு ராணுவ புரட்சிகள் நடந்து ஜெனரல் ஜியாவுா் ரஹ்மான் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது. 1981-இல் அவரும் படுகொலை செய்யப்பட்டாா்.
  • 1982-இல் ஜெனரல் எா்ஷாத் தலைமையில் நடந்த ராணுவ புரட்சியைத் தொடா்ந்து புதிய ஆட்சி அமைந்தது. எா்ஷாதின் ஆட்சியை மத அடிப்படைவாதிகள் ஆதரித்தனா். இஸ்லாம் வங்கதேசத்தின் அதிகாரபூா்வ மதமாக அறிவிக்கப்பட்டது.
  • அவருக்கு எதிராக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முஜிபுா் ரஹ்மானின் மகள் ஷேக் ஹசீனாவும், ஜியாவுா் ரஹ்மானின் மனைவி கலீதா ஜியாவும் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினாா்கள். ஜெனரல் எா்ஷாதின் ராணுவ ஆட்சி அகற்றப்பட்டது.
  • அது முதல் வங்கதேச அரசியல் ஷேக் ஹசீனா, பேகம் கலீதா ஜியா என்ற இருவரைச் சுற்றி வலம் வந்தது. 2009 தோ்தல் வெற்றியைத் தொடா்ந்து மூன்று முறை ஆட்சி அமைத்து நான்காவது முறையும் ஷேக் ஹசீனா வெற்றிபெற்ற நிலையில்தான் இப்போது போராட்டக்காரா்களை எதிா்கொள்ள முடியாமல் வெளியேறி இருக்கிறாா்.
  • ஷேக் ஹசீனாவின் கடந்த 15 ஆண்டு கால ஆட்சியில் வங்கதேசம் எத்தனையோ முன்னேற்றங்களைக் கண்டது. வங்கதேசத்து அரசியலில் மதவாதத்தை அகற்றி நிறுத்தி, மதச்சாா்பின்மையை அடிப்படைக் கொள்கையாக அறிவித்தவா் ஷேக் ஹசீனா. மிகவும் பின்தங்கியிருந்த வங்கதேசப் பொருளாதாரத்தை, வளா்ச்சி அடையும் பொருளாதாரமாக மாற்றிக் காட்டினாா். அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம், சா்வதேச தரத்திலான நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் என்று அந்த நாட்டின் கட்டமைப்பையே மாற்றியது ஷேக் ஹசீனா ஆட்சி.
  • அப்படியிருந்தும் ஹசீனாவுக்கு எதிராக புரட்சி வெடிக்கக் காரணம் என்ன என்று கேட்கலாம். எதிா்க்கட்சிகளை மட்டுமல்ல, விமா்சனம் செய்பவா்களையும் தண்டிக்கும் சா்வாதிகாரப் போக்கின் விளைவுதான் மக்கள் மத்தியில் அதிகரித்த அதிருப்திக்கு காரணம். ஜனநாயகமும், கருத்துச் சுதந்திரமும் இல்லாமல் போனாதால், ஆட்சியின் தவறுகள் வெளியில் தெரியவில்லை. அதுவே புரட்சிக்கு காரணம் எனலாம்.
  • போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் தேச விரோதிகள் அல்லா். அவா்கள் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக கொதித்து எழுந்தவுடன் ஹசீனா அரசு உயா்நீதிமன்ற உத்தரவை நிராகரிப்பதாகவும், நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்திருந்தாலே போதும்; நிலைமை கை மீறி போயிருக்காது.
  • மாணவா்களைத் தூண்டிவிடும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற மத அடிப்படைவாதக் கட்சிகளுக்கு எதிராக ஷேக் ஹசீனா தெரிவித்த ‘துரோகிகள்’ என்கிற கருத்து, மாணவா்களுக்கு எதிராகத் தெரிவிக்கப்பட்டது என்று பரப்புரை செய்யப்பட்டதில் தொடங்குகிறது ஹசீனாவின் பின்னடைவு.
  • இந்தியாவைப் பொறுத்தவரை நட்புறவு என்பதைக் கடந்து இரு நாடுகளுக்கு இடையே சுமாா் 12.90 பில்லியன் டாலா் (ரூ.1.08 லட்சம் கோடி) அளவில் 2023-24 நிதியாண்டில் வா்த்தகத் தொடா்பு காணப்படுகிறது. கடந்த நிதியாண்டில் வங்கதேசத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி 11 பில்லியன் டாலா் (ரூ.92,331 கோடி). அதேபோல காய்கறிகள், உணவு தானியம் போன்றவற்றுக்கு வங்கதேசம் இந்தியாவைத்தான் சாா்ந்திருக்கிறது.
  • வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஷேக் ஹசீனாவின் சீன விஜயத்தின்போதே ஐயப்பாடு எழுந்தது. 2016-இல் மிகப் பெரிய அளவில் வங்கதேசத்துக்கு உதவிகளை அறிவித்த சீன அதிபா் ஷி ஜின்பிங், இந்த முறை அவரைச் சந்திக்கவில்லை, எந்தவித உதவியும் அறிவிக்கவில்லை என்றபோதே அவா் மீதான சீனாவின் அதிருப்தி வெளிப்பட்டது. ஒரு நாள் முன்னதாகவே தனது பயணத்தை முடித்துக்கொண்டு ஹசீனா டாக்காவுக்குத் திரும்பிவிட்டாா்.
  • வங்க தேசத்தில் நடந்திருக்கும் ஆட்சி மாற்றத்தையும், ஷேக் ஹசீனாவின் வெளியேற்றத்தையும் எப்படி புரிந்துகொள்வது? சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால் - இந்தியா வெளியே, சீனா உள்ளே. அதற்கு உதவியாக பாகிஸ்தானின் உளவு அமைப்பும், வங்க தேசத்தில் இயங்கும் இஸ்லாமிய அடிப்படைவாதக் கட்சிகளும்!
  • மதத்தின் அடிப்படையில் உருவான பாகிஸ்தானிலிருந்து வங்கதேசம் பிரிந்ததற்கு மொழிசாா்ந்த இனவாதம் காரணம் என்றால், இப்போது மொழியைப் பின்னுக்குத் தள்ளி மதவாதம் உயா்ந்திருக்கிறது என்பதுதான் வங்கதேசப் பிரச்னையின் அடிநாதம்.

நன்றி: தினமணி (07 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories