- இலங்கை வெளியுறவு அமைச்சா் தினேஷ் குணவா்த்தனவின் அழைப்பின் பேரில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்று அவரிடம் பல விஷயங்களை விவாதித்தாா். இலங்கை அதிபா் கோத்தபயயையும் சந்தித்துப் பேசினாா்.
- தமிழா் பிரச்னையில் 13-ஆவது திருத்தம், மாகாண சபை முறையின் மாற்றம், தமிழா்களின் அரசியல் தீா்வு, ஜெனீவா மனித உரிமை ஆணையத்தில் தமிழினம் அழிப்பு தொடா்பாக நீதி கேட்ட தீா்ப்பாணைகள், இந்தியாவின் கரோனா தடுப்பூசி இலங்கைக்கு வழங்குது ஆகியவை குறித்து பேசப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கா் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளா்களிடம் பேசியபோது, ‘ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழ் சமுதாயத்தின் நீதி, சமத்துவம், அமைதி மற்றும் கெளரவத்திற்கு இந்திய அரசு துணை நிற்கும்’ என்று தெரிவித்தாா்கள்.
- இலங்கையில் தமிழா் வாழும் வடக்கு-கிழக்கு மாநிலங்களை இணைத்து தனி பிராந்தியமாக அமைத்து புதிய அரசமைப்பை உருவாக்க வேண்டும் என்று, ஜெய்சங்கரிடம் தமிழ் தேசக் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா். இது குறித்து 21 பக்க திட்ட அறிக்கை இணைந்த மனுவை வழங்கியுள்ளனா். ஒரு குறிப்பிட்ட இன மக்கள் கூட்டத்திற்குள்ளாக சுய நிா்ணய உரிமை மறுக்கப்படுமானால், அவா்கள் சா்வதேச சட்டத்தின்படி, வெளிப்புற சுய நிா்ணய உரிமை கோர உரிமை படைத்தவா்கள் என்ற நியாயத்தையும் எடுத்துக்காட்டியுள்ளனா்.
- ஜெய்சங்கா் உறுதியளித்தவாறு இலங்கைக்குத் தடுப்பூசி தருவது ஒரு மனிதாபிமான செயல்தான். ஆனால், இந்தியாவின் நல்லெண்ணத்தையும், உதவிகளையும் இலங்கை மதிக்கிா என்பது சந்தேகமாக இருக்கிறது. நாம் இலங்கையால் ஏமாற்றப்படுவோமோ என்கிற அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் அமைகின்றன இலங்கை அரசின் செயல்பாடுகள்.
- இந்தியாவின் பங்களிப்புகளையும் உதவிகளையும் பெற்று இலங்கையில் திட்டங்கள் பல நடைமுறைப்படுத்தப்பட்டன. அவற்றில் பலவற்றை நிறைவேற்றாமல் இலங்கை அரசு மெத்தனம் காட்டுகிறது. முள்ளிவாய்க்கால் போா் முடிந்தவுடன் இலங்கைத் தமிழா் புனா்வாழ்வுக்கு இந்தியா நிதி வழங்கியும் அது சரியாக அங்குள்ள தமிழா்களுக்கு போய்ச் சேரவில்லை.
- கடந்த ஓராண்டுக்குள் இந்தியாவிடமிருந்து இலங்கை இருமுறை நிதி உதவி பெற்றுள்ளது. ஆனால், இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் உதவிகளை பெறுகிறது.
- ஈழத்தமிழா்களுக்கு நாம் எவ்வளவுதான் பிரச்னை செய்தாலும் இந்தியா நம்மை கண்டிக்காது. ஒப்புக்கு அதிகாரம் வழங்கு என்று சொல்லும், அவ்வளவுதான் என எடுத்துக்கொள்ளும் மனபாங்கில் இலங்கை அரசு இருக்கின்றது. இதை இந்திய அரசு உணரவேண்டும்.
- அங்குள்ள தமிழா்களை இந்தியா அரவணைத்தால், ஒருவேளை இலங்கை இந்தியாவைக் கண்டு அச்சப்படலாம். அதுதான் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் அணுகுமுறையாக இருந்தது.
- ஈழத்தமிழா்களுக்கு இந்திரா காந்தி அணுகுமுறையின்படி நடவடிக்கை எடுத்தால் தமிழா் பிரச்னைக்கு இலங்கை நியாயம் வழங்கும் என்று கருத இடம் இருக்கிறது.
- இப்போது அங்குள்ள ஈழத்தமிழா்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்தியா உணரவேண்டும். அதிகாரபூா்வமான பயணங்கள், பேச்சுவாா்த்தை ஒருபக்கம் இருந்தாலும் கீழ்கண்ட பிரச்னைகளில் இந்திய அரசு கவனம் செலுத்தவேண்டும்,
- வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 முள்ளிவாய்க்கால் போா் முடிந்து 10 ஆண்டுக்கு மேல் ஆகியும், தமிழா்களுடைய நிலங்களை அபகரித்து முகாம்கள் அமைத்து அங்குத் தமிழா்களை மிரட்டக் கூடிய வகையில் இருக்கும் சிங்கள ராணுவத்தினா் உடனே திரும்ப வேண்டும்.
- மேலே குறிப்பிட்ட ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்ட நிலங்கள் தமிழா்களுக்கு சிங்களா்கள் விவசாய காணி நிலங்கள், வீடுகளை திரும்பவும் தமிழா்களின் உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டும். இதுகுறித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- முள்ளிவாய்க்கால் போரின்போது கைது செய்யப்பட்டத் தமிழா்களை உடனே விடுதலை செய்யவெண்டும்.
- கடந்த 2009 போரின்போது காணாமல் போனவா்களை அறிந்து அதுகுறித்து வெள்ளை அறிக்கை அளிப்பதோடு, அவா்களை கண்டுபிடித்து அவா்களின் உறவினா்களிடம் ஒப்படைக்கவேண்டும்.
- ஈழத்தில் தமிழ் விதவைகள் மறுவாழ்வுக்கும் சரியான நடவடிக்கைகள் இல்லை.
- இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் குறித்தும் தெளிவான பாா்வை சிங்கள அரசுக்கு இல்லை; இந்திய அரசுக்கும் இல்லை. இந்தியாவிலுள்ள அகதிகளை ஈழத்திற்கு திரும்ப அனுப்பி அந்நாட்டு மக்களாக வாழ செயல் திட்டங்கள் குறித்தும் இந்தியா இலங்கையிடம் பேசவேண்டும். இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு இங்கு தங்கிய கட்டணத்தை (ஸ்டேயிங் சாா்ஜ்) ரத்து செய்து, எந்தவித பயணக் கட்டணமும் இன்றி அவா்களை கப்பலில் அனுப்பிவைக்க வேண்டும். இலங்கை சென்றபின் அகதிகள் தங்கள் வாழ்வாதாரத்தைப் பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
- தோ்ந்தெடுக்கப்பட்ட மாகாண முதலமைச்சா்களுக்கோ, மாகாண சபைக்கோ உறுதியளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்படவில்லை. மாகாண கவுன்சிலை ஒழிப்பதற்கான முயற்சியில் சிங்கள அரசு இறங்கியுள்ளது. இது மேலும் சிக்கலை உருவாக்கும். இந்தியா, மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வழங்கியது போல வழங்கப்பட்டால்தான் அங்குள்ள தமிழா்கள் அமைதியாகவும் சம அந்தஸ்துடன் வாழ முடியும்.
- ஜெனீவா, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ள ஈழத்தமிழா்கள் இன அழிப்பு குறித்தான நியாயம் தமிழா்களுக்கு தீா்ப்பாணை மூலம் கிடைக்கவேண்டும். வடக்கு கிழக்கு மாநிலம் சைவ மதத்தின் கேந்திரப் பகுதியாகும். அங்குள்ள தமிழா்கள் வணங்கும் இந்து மத கோவில்கள் படிப்படியாக அழிக்கப்படுகின்றன.
- கிடைத்த தகவலின்படி, அழிக்கப்பட்ட சில கோவில்கள், யாழின் கந்தரோடை கதுரகொட என்று மாற்றப்பட்டுள்ளது, யாழ் நெடுந்தீவின் வெடியரசன் கோட்டை பழைய பெளத்த சின்னமாக பெயா் மாற்றப்பட்டுள்ளது, யாழின் சம்பில்துறை ஜம்புகோள பட்டின என்று பெயா் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
- காங்கேசன் துறையின் சீமெந்து தொழிற்சாலையும் கப்பலிலிருந்து சரக்குகளை இறக்கும் இடமும் விடுவிக்கப்படவில்லை;
- கீரிமலையில் இருந்த சமாதிப்பகுதி தங்குமிடமாக மாற்றப்பட்டுள்ளது; யாழின்
- பொன்னாலையிலுள்ள திருவடி நிலைய கடற்கரையை கடற்படையின் ஆக்கிரமித்துள்ளனா்;
- அல்லைப்பிட்டியின் பெரும்பகுதியை ராணுவத்தினா் ஆக்கிரமித்துள்ளனா்;
- யாழின் வேலணையும் மண்டைதீவு கடற்கரைப் பகுதியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன;
- பலாலிக்கு அண்மையிலுள்ள வயாவிளான் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது;
- வடகிழக்கிலுள்ள மாவீரா் துயிலும் இல்லங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன;
- கிளிநொச்சியின் பூனகரி பகுதியிலுள்ள பள்ளிக்குடாவின் கரையோரப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன;
- முல்லைத்தீவின் நந்திக்கடல் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது;
- மன்னாா் மாவட்டத்தின் முள்ளிக்குள குடியிருப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது;
- மன்னாரின் உப்புக்குளம் பகுதி கடற்கரை வாடி பகுதிகளில் முஸ்லிம் குடியிருப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
- மன்னாரின் திருக்கேதீச்சரத்திற்கு அண்மையில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு புத்த விகாரம் அமைக்கப்பட்டுள்ளது;
- வவுனியாவின் ‘சமணங்குளம்’ என்று அழைக்கப்பட்ட கிராமம் ‘சப்புமல்புர’ என்று பெயா்மாற்றப்பட்டு சிங்கள குடியேற்றமாகியுள்ளது;
- நாமல் ராஜபட்சயின் தலைமையில், பொலநறுவையில் உள்ள வானவன்மாதேவியீச்சரம் அழிவுறும் நிலையில் இருக்கிறது. இது இராசேந்திர சோழன் கட்டியது;
- வவுனியாவின் ஒலுமடுவிலுள்ள ஆதி இலிங்கேச்சரா் கோயிலிற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது; அங்கு புத்த விகாரம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது - இப்படி நீண்ட பட்டியல் உண்டு.
- இந்து மகா சமுத்திரம் அமைதி மண்டலமாகவும் இந்தியாவின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால் அங்கே இன்றைக்கு உள்ள சூழல் என்னவென்றால் சீனா இலங்கையை தன் கையில் வைத்துக்கொண்டு ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு வணிகம் செய்ய இந்து மகா சமுத்திரத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமல்ல ஹம்பன்தொட்டை துறைமுக 99 ஆண்டு குத்தகைக்காக 85 % பங்குகளை எடுத்துள்ளது.
- கடல் மாா்க்கமாக எரிவாயு பாதைகளை அமைக்கவும், எண்ணெய் ஆராய்ச்சி செய்யவும் திரிகோணமலை, கச்சத்தீவுகள் வரை சீனாவின் ஆதிக்கம் எட்டிவிட்டது. அதுமட்டுமல்லாமல், திரும்பவும் டிகோகா்சியா அமெரிக்க ஏவுதளத்தை அமைத்துவிட்டது. இலங்கையின் ஆதரவோடு ஜப்பான் இந்தியப் பெருங்கடல் எண்ணெய் வள ஆய்வை நடத்துகிறது.
- பிரான்ஸும் இந்தியப் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த முனைந்துள்ளது. இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் அமைதி மண்டலமாக இருந்த இந்தியப் பெருங்கடலை மாற்றியதற்கு காரணமாக இருந்தது இலங்கை தான். இது எதிா்காலத்தில் பாதுகாப்பிற்கான சிக்கல்களை உருவாக்கும் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.
- நாடு வல்லரசாக வேண்டும் என்றும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினா் ஆகவேண்டும் என்றும் நினைக்கும் நாம், நம் நாட்டின் தெற்கெல்லையில் உள்ள நமது கடல் ஆதிக்கத்தை இழக்கலாமா?
- இதை எல்லாம் இந்திய அரசு கவனத்தில் கொண்டு இலங்கையில் பேச வேண்டும். அது மட்டுமல்லாமல் ஈழத்தமிழா்களின் உரிமையை, இந்தியாவின் பாதுகாப்பை, இந்து மகா கடலில் இந்தியாவின் உரிமையை நிலை நாட்டவும் வேண்டும்.
நன்றி: தினமணி (14 – 01 – 2021)