- நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இந்த ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 23 அன்று தொடங்கிய இப்போட்டிகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து 652 வீரர் வீராங்கனைகள் ஹாங்சோ சென்றுள்ளனர். இதில், 2018ஆம் ஆண்டு இந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீராங்கனைகளான ஹிமா தாஸ், டுட்டி சந்த் ஆகியோர் தகுதி பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
- நட்சத்திர வீராங்கனைகளான இவர்கள் ஊக்க மருந்து விவகாரத்தில் சிக்கியிருப்பதால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்திய வீரர் வீராங்கனைகள் மீது விழும் ஊக்க மருந்து குற்றச்சாட்டால் விளையாட்டின் அறம் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தொடரும் குற்றச்சாட்டுகள்
- விளையாட்டு உலகில் ஊக்க மருந்து சோதனை, மிகவும் இயல்பான ஒன்றுதான். உடல் திறன், ஆட்டத் திறனை ஊக்குவிக்கும் தடை செய்யப்பட்ட பொருள்களை விளையாட்டு வீரர்கள் எடுத்துக் கொண்டது கண்டறியப்பட்டால், ஊக்க மருந்து குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதியப் படும். உயர்நிலை விளையாட்டுப் போட்டிகளில் ஊக்க மருந்து விவகாரத்தைக் கண்காணிக்க சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு நிறுவனமும் (World Anti-Doping Agency), இந்திய அளவில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனமும் (National Anti-Doping Agency) இயங்கி வருகின்றன.
- சர்வதேச ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம், 2013இல் இருந்து ஆண்டுதோறும் ஊக்க மருந்து குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டுவருகிறது. ஊக்க மருந்து குற்றச்சாட்டுகள் அதிகம் பதிவாவதன் அடிப்படையில் வெளியிடப்படும் உலக நாடுகளின் பட்டியலில் அப்போதே ஏழாவது இடத்தில் இருந்த இந்தியா, 2014, 2015, 2019ஆம் ஆண்டுகளில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
- 2020ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய பட்டியல் சற்றுக் காலதாமதமாகி இந்த ஆண்டு சமீபத்தில் வெளியானது. இதில் வரலாற்றில் முதல் முறையாக 59 குற்றச்சாட்டுகளுடன் இந்தியா இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது. 135 குற்றச்சாட்டுகளுடன் ரஷ்யாவுக்கு முதலிடம்!
போக்க வேண்டிய அவப்பெயர்
- இந்தியாவின் வேகப்புயல், 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனையைத் தன் வசம் வைத்திருப்பவர் டுட்டி சந்த். சோதனையின்போது தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை இவர் எடுத்துக் கொண்டது உறுதிசெய்யப்பட்டதால், 2022 டிசம்பர் மாதம் முதல் இவருக்கு நான்கு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இது ஒருபுறம் இருக்க, ஊக்க மருந்து சோதனையில் பங்கேற்காமல் விலகியிருப்பதும் குற்றச்செயலாகவே பதிவு செய்யப்படும்.
- அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமா தாஸ், கடந்த 12 மாதங்களில் மூன்று முறை ஊக்க மருந்து சோதனைக்காக அழைக்கப்பட்டும் பதில் அளிக்காததால், விதிமுறையை மீறியதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு அவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் உயர்நிலைப் போட்டிகளுக்கு முன்னதாக மட்டுமின்றி, விளையாட்டு வீரர்களின் பயிற்சிக் காலங்களிலும் ஊக்க மருந்து சோதனையைத் தீவிரப்படுத்தி உள்ளது. எனவே, சோதனைகள் அதிகரிக்க அதிகரிக்க, குற்றச்சாட்டுகளும் நிறைய பதிவுசெய்யப்படுகின்றன.
- மேலும், ஆற்றலைக் கூட்டுவதற்காகவும் தசையை வலுப்படுத்தவும் இந்தியச் சந்தைகளில், இணையத்தில் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள்களை வீரர்/வீராங்கனைகள் வாங்கிப் பயன்படுத்துவது வழக்கமாகிவிட்டது. இதனால், தடை செய்யப்பட்ட பொருள்கள் எவை, பயன்படுத்தக்கூடிய பொருள்கள் எவை என்கிற பட்டியலை, புரிதலை வீரர்களுக்கு விளக்கிச் சொல்லும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் விளையாட்டுத் துறை சார்பில் நடத்தப்படுகின்றன. எனினும், தடை செய்யப்பட்ட பொருள்களை எடுத்துக்கொள்ள ஊக்குவிப்பதே பயிற்சியாளர்கள்தான் என்கிற குற்றச்சாட்டுகளையும் பார்க்க முடிகிறது.
- பிரபலமான மற்ற விளையாட்டுகளைப் போல தடகளம், தனிநபர் விளையாட்டுகளைச் சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கான போதுமான ‘ஸ்பான்சர்ஷிப்’, ஆதரவு இல்லாததும் அவர்கள் குறுக்கு வழிகளைத் தேடிச் செல்ல முக்கியக் காரணமாகிறது. எதுவாயினும், பல ஆண்டு காலக் கடின உழைப்பும், உண்மையான போட்டியும்தானே தோல்வியைக்கூட வெற்றிக்கான படிக்கட்டாக மாற்ற முடியும். சர்வதேச விளையாட்டுக் களத்தில் ஊக்க மருந்துச் சிக்கலால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அரசு என அனைத்துத் தரப்பும் இணைந்து களைந்தாக வேண்டியது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 10 – 2023)