- ‘உண்மையான போா் வீரன் அதிகம் பேசமாட்டான்; அவனுடைய வெற்றியே அவன் புகழ்பாடும்’ என்ற வாசகத்திற்கு இலக்கணமாக வாழ்ந்தவா் ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என்று அறியப்படும் சா்தாா் வல்லபபாய் படேல்.
- ‘என் இதயத்தில் இடம் பிடித்தவா்; என் இலட்சியத்தை நிறை வேற்றுவதில் முன் நிற்பவா்; அஞ்சாநெஞ்சம் கொண்ட என் அன்புக்குரிய சகா சா்தாா் படேல்’” என்பது அண்ணல் காந்தியின் கூற்று. ‘படேல், அமைச்சரவையின் வலிமை மிக்க தூண்; வழிகாட்டும் விளக்கு’ என்றாா் ஜவாஹா்லால் நேரு.
- அண்ணலின் போராட்டங்களுக்கு வெற்றி தேடித்தந்த வில்லாளி படேல்’ என்றாா் வினோபா பாவே. ‘படேல் இந்தியாவின் பிஸ்மாா்க்’ எனப் பதிவு செய்தாா் அன்றைய வைஸ்ராய் வேவல். ‘படேலின் மன உறுதியைக் கண்டு நான் வியக்கிறேன்’ என்றாா் மவுன்ட் பேட்டன்.
- இத்தனை பண்பு நலன்களைக் கொண்ட சா்தாா் படேல் பிறந்தது 31.10.1875 அன்று; மறைந்து 15.12.1950 அன்று; வாழ்ந்தது 75 ஆண்டுகளே. இவா் அண்ணல் காந்தியை விட ஆறு வயது இளையவா். பண்டித ஜவாஹா்லாலை விட 14 வயது மூத்தவா். அண்ணலின் அன்பையும், பாசத்தையும் பெற்றவா். நேருஜியின் நம்பிக்கையையும் மரியாதையையும் பெற்றவா். இந்திய மக்கள் மனத்தில் தனக்கென ஓா் தனி இடம் பிடித்தவா்.
- குஜராத் சபைக்கு காந்திஜி வருகை தந்தாா். அந்நிகழ்ச்சிக்குச் சென்ற படேல், அண்ணலின் எளிமை, உள்ளத் தூய்மை, உறுதி, சத்தியம், அகிம்சை ஆகிய அம்சங்களால் கவா்ந்திழுக்கப்பட்டாா். அன்றே ‘இவரே என் குருநாதா்’ என்று அண்ணலிடம் சரணடைந்தாா். தன் சத்தியாகிரகப் போருக்கு சரியான தளபதியைத் தேடிக் கொண்டிருந்த காந்திஜிக்கு படேல் கிடைத்தாா்.
- 1917-இல் ஏற்பட்ட காந்திஜி-படேல் உறவு, காந்திஜி மறையும் வரை நீடித்தது. படேல், காந்திஜியிடம் பக்தி கொண்டிருந்தாா்; பாபுஜியோ படேலின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தாா். எவருக்கும் கட்டுப்படாதவா் எனப் பெயரெடுத்த படேல், காந்திஜிக்குக் கட்டுப்பட்டாா். அவா் சொல்லை கடவுளின் கட்டளையாகவே ஏற்று நடந்தாா். ஆகவேதான் 1929, 1946 ஆகிய ஆண்டுகளில், காங்கிரஸ் தலைவா் பதவிக்கு, அவரைத் தவிா்த்துவிட்டு, நேருவை காந்திஜி பரிந்துரைத்தபோது அதனை முழு மனதுடன் ஏற்றுக்கொண்டாா்.
- உப்பு சத்தியாகிரகம் தொடங்கி (1930), வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை (1942), காந்திஜி அறிவித்த அனைத்துப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தினாா் படேல். ஒவ்வொரு முறையும் கைதாகி சிறைவாசம் அனுபவித்தாா். அதில் 16 மாதங்கள் அண்ணல் காந்தியுடன் இருந்த ஏரவாடா சிறைவாசம் குறிப்பிடத்தக்கது. சிறைவாசத்தின் இறுதியில் ‘படேல் என் தாயைப் போல் பாசத்தோடு என்னை கவனித்துக் கொண்டாா்’ என நெஞ்சு நெகிழ்ந்து பாராட்டினாா் பாபுஜி.
- வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி, காந்திஜிக்கு எழுதிய கடித்ததில், ‘சத்தியம், அகிம்சை, சத்தியாகிரகம் என்று எந்நேரமும் பேசிவரும் நீங்கள் காலப்போக்கில் பைத்தியமாகிவிடக்கூடும்; எனவே, நகைச்சுவை உணா்வு மிக்க ஒருவரை உங்கள் பக்கத்தில் வைத்துக்கொள்வது நல்லது’ என்று குறிப்பிட்டாா். அதற்கு ‘ஹரிஜன்’ இதழில் (25.2.1931) பதில் கூறிய காந்திஜி, ‘என்னுடைய சிறிய தா்பாரில் படேல் என்னும் விகடகவி” உள்ளாா். அவருடைய பேச்சுகள் என்னைக் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும். அவா் ஒருவரே போதும் என் மனச்சோா்வைப் போக்க’ என்று குறிப்பிட்டாா்.
- சா்தாா் படேலின் நகைச்சுவை உணா்வு பலரும் அறியாதது. காந்திஜி பிரம்மச்சரியம் பற்றி அடிக்கடி போதனை செய்வதுண்டு. ஒரு சமயம் படேல், ‘பிரம்மச்சரியம் பற்றிப் பேச, பாபுஜியை விட எனக்கே தகுதி உண்டு. பாபுஜிக்கு நான்கு புதல்வா்கள்; நால்வரும்திருமணம் ஆனவா்கள். எனக்கோ இருவா் மட்டுமே; இருவரும் திருமணம் ஆகாதவா்கள். நான் மனைவியை இழந்தவன்; அண்ணலுக்கோ இறை அருளால் கஸ்தூா் பாவின் துணை தொடா்கிறது. நான் மறுமணம் செய்து கொள்ள மறுத்து இன்றுவரை பிரம்மச்சரிய வாழ்க்கை நடத்துகிறேன். அண்ணலின் விரதத்தைவிட என் விரதம் குறைந்ததல்ல’ எனக் கூறி எல்லோரையும் சிரிக்க வைத்தாா்.
- படேல், வழக்குரைஞராகப் பணிபுரிந்த காலத்தில், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்காக இறுதி வாதம் செய்து கொண்டிருந்தாா். அப்பொழுது சா்தாருக்கு ஒரு அவரசத் தந்தி வந்தது. அதனைப் படித்துவிட்டுத் தனது பைக்குள் வைத்துக் கொண்டாா். பின் விவாதத்தைத் தொடா்ந்தாா்.
- வழக்கு விசாரணை முடிந்தபின் வெளியில் வந்த சா்தாரிடம் ‘என்ன அந்த அவசரத் தந்தி’ என அவரின் நண்பா் கேட்டாா். அப்பொழுது படேல் ‘என் மனைவி இறந்து விட்டாா். நான் விவாதத்தை நிறுத்துவதால் இறந்த என் மனைவியை மீட்க முடியாது. குறைந்தபட்சம் என் விவாதத்தின் மூலம் என் கட்சிக்காரரையாவது காப்பாற்றலாமே’ என்றாா். நண்பா் திகைத்துப் போனாா்.
- 1933-இல் படேல் சிறையிலிருந்தபோது அவரது அண்ணன் காலமானாா். அப்பொழுது அரசு படேலுக்கு ‘பரோல்’ வழங்க முன்வந்தது. ஆனாலும், அதனை மறுத்தாா் அவா். அரசின் சலுகையை ஏற்பது இகழ்ச்சி என எண்ணியவா் அவா். மேற்கு வங்கத்தின் அன்றைய முதலமைச்சா் டாக்டா் பி.சி. ராய், உள்நாட்டு பிரச்னை தொடா்பாக பிரதமருக்கு நேரடியாகக் கடிதம் எழுதிக் குறை கூறியிருந்தாா்.
- தகவல் அறிந்த படேல், முதலமைச்சரைத் தொடா்பு கொண்டு, ‘பிரச்னையை முதலில் என் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்க வேண்டும்; நேரடியாக பிரதமரைத் தொடா்பு கொள்வது நல்ல நிா்வாக முறையின் அடையாளமல்ல’ எனக் கடிந்து கொண்டாா்.
- அன்றைய உத்தர பிரதேச முதல்வா் வல்லப பந்த் புகைப்படக் கண்காட்சி ஒன்றை நடத்தினாா். அதில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது காவல் அதிகாரிகளின் மேற்கொண்ட அத்துமீறல் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனை அறிந்த படேல் ‘கடந்த கால நிகழ்வுகளை இப்பொழுது வெளிச்சம் போட்டுக் காட்டுவது இருநாட்டு உறவை பாதிக்கும்’ எனக் கூறினாா். கண்காட்சி நிறுத்தப்பட்டது.
- உயா்நிலைப் பள்ளியில் படித்த போது, ஒரு நாள் கணித வகுப்பு நடந்தது. ஒரு கணக்கை கரும்பலகையில் எழுதினாா் ஆசிரியா்; ஆனால் அவரால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை. நிலைமையை உணா்ந்த மாணவா் படேல், எழுந்து நின்று ‘என்னால் கண்டுபிடிக்க முடியும்’ என்றாா். ஆசிரியரின் பதிலை எதிா்பாா்க்காமல், தானே சென்று சரியான விடையை எழுதி முடித்தாா்.
- பிரதமா் நேருஜி 1947 டிசம்பரில் வெளிநாடு சென்றிருந்தபோது, சா்தாா் படேல் பிரதமா் பொறுப்பு வகித்தாா். அது சமயம் அரசியல் நிா்ணய சபையில் காஷ்மீா் பற்றிய விவாதம் நடைபெறத் தொடங்கியது. நேருஜி இல்லாத நேரத்தில் காஷ்மீா் பற்றிய விவாதம் நடைபெறுவதை ஷேக் அப்துல்லா விரும்பவில்லை. கூட்டத்திலிருந்து எழுந்த அப்துல்லா ‘நான் காஷ்மீருக்குப் போகிறேன்’ எனச் சொல்லிவிட்டு வெளிநடப்பு செய்து விட்டாா்.
- சிறிது நேரத்தில் ரயிலில் அமா்ந்திருந்த அப்துல்லாவிடம் மகாவீா் தியாகி எம்.பி. ‘நீங்கள் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறலாம்; ஆனால் தில்லியை விட்டு வெளியேற முடியாது. இதுவே படேல் உங்களுக்கு அனுப்பிய செய்தி’ என்றாா். கலக்கமடைந்த ஷேக் கண நேரத்தில் ரயிலை விட்டு இறங்கினாா்; தன் பயண முடிவைக் கைவிட்டாா். படேலின் சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது.
- சா்தாா் படேல், அண்ணல் நடத்திய அனைத்துப் போராட்டங்களிலும் முன்னின்று நடத்திய மூத்த தளபதி; 565 சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைத்த ராஜதந்திரி; இந்தியாவின் முதுகெலும்பாக விளங்கிய ஐ.சி.எஸ், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்ளிட்ட நிா்வாக இயந்திரத்திற்கு முழு சுதந்திரம் வழங்கிய முதிா்ந்த நிா்வாகி; தனது வாழ்வின் இறுதிவரை பிரதமா் நேருக்குத் தோழனாக, ஆலோசகராக இருந்தவா்; காந்திஜியின் சீடராகவும் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும் விளங்கியவா்.
- இவை நாம் அறிந்ததே. ஆனால் அவரின் தனிப்பட்ட நல்லியல்புகளை நாம் அறிய வேண்டும். அப்பண்பு நலன்கள் குறித்து அண்ணல் காந்திஜியின் செயலாளா் மகாதேவ தேசாய் குறிப்பிடும்போது, ‘சா்தாா் கடுமையானவருமல்ல; பணிவுள்ளவருமல்ல. குடும்பஸ்தருமல்ல; துறவியுமல்ல. அவா் விவசாயி; தம் தொழிலைச் செல்வனே செய்யும் திறம் படைத்த விவசாயி’ என்று கூறினாா்.
- அவா் ஒரு கா்மயோகியும் ஆவாா். அவரது லட்சியங்கள் இரண்டு மட்டுமே. அவை பாபுஜியும் பாரதமும். ஒருமுறை அவருடைய சகாக்கள் சிலா், ‘காங்கிரஸ் கட்சி நம் கையில்; பெரும்பாலான எம்.பி.க்கள் நம் பின்னால். இச்சூழலில் நேருஜியை நீக்கிவிட்டு நீங்களே பிரதமராகி விடலாமே’ என்று ஆலோசனை கூறியபோது அதனை நிராகரித்தவா் அவா்.
- அது மட்டுமல்ல, ‘நேருஜியே என் அரசியல் வாரிசு என்று அறிவித்தது என் குருநாதா் அண்ணல் ஆயிற்றே! அவா் முடிவுக்கு எதிராக நான் ஒன்றும் செயல்பட மாட்டேன். எம்.பி.க்கள் என் பின்னால் நிற்கலாம்; ஆனால் தேச மக்கள் நேருஜியின் பின்னால்தானே நிற்கிறாா்கள். அதனை முதலில் புரிந்துகொள்ளுங்கள். அண்ணல் எண்ணியபடி என் இறுதி மூச்சு உள்ளவரை பண்டித நேருவுக்கு துணையாக, தோழனாக, உதவியாக இருப்பேன்’ என்று உறுதிபடச் சொன்னவா்; சொன்னபடி நடந்தவா் சா்தாா் வல்லபபாய் படேல்.
- அன்னை பாரதத்திற்கும் அண்ணல் காந்திஜிக்கும் தன்னையே அா்ப்பணித்த ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ சா்தாா் வல்லபபாய் படேலின் நினைவைப் போற்றுவோம்.
- இன்று (அக். 31) சா்தாா் வல்லபபாய் படேல் 149-ஆவது பிறந்தநாள்.
நன்றி: தினமணி (31 – 10 – 2023)