TNPSC Thervupettagam

இந்திராதிகாரம் பிறந்த கதை - 17 : நிகழ்ந்ததும் முடிந்ததும்

June 27 , 2023 569 days 356 0
  • நெருக்கடி நிலை நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து புதிது புதிதாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. அரசியல் செயல்பாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டன.
  • இந்திய அரசியல் சட்டத்தின் 14, 21, 22-வது பிரிவுகளின் கீழ் அடிப்படை உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் வழக்குத் தொடுப்பதற்குள்ள உரிமைகள் நிறுத்திவைக்கப்பட்டன.
  • இதன் மூலம் நெருக்கடி நிலை காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டுச் சிறையில் வைக்கப் பட்டவர்கள் நீதிமன்றம் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
  • ஜூன் 29 ஆம் தேதியிட்டு, 30 ஆம் தேதி அதிகாலையில் வெளியிடப்பட்ட அவசரச் சட்டம், ஒருவரைக் கைது செய்து காவலில் வைக்கக் காரணம் எதுவும் தெரிவிக்க வேண்டியதில்லை என அறிவித்தது. 1971- ஆம் ஆண்டைய உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் (மிசா) கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு, கைதுக்கான காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை என்பதுடன் ஓராண்டு காலம் வரை இவ்வாறு காவலில் வைக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.
  • நக்சலைட்டுகள், ஆர்.எஸ்.எஸ்., மார்க்சிய கம்யூனிஸ்ட்கள் ஆகியவர்கள் ஆதரிக்கும் முழுப் புரட்சி இயக்கத்துக்கு வெளியார் ஊக்கம் கிடைப்பதாகத் தோன்றுகிறது என்றெல்லாமும் குற்றம் சாட்டத் தொடங்கினார் இந்திரா காந்தி.
  • தலைவர்களில் யார், யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம்கூட தெரியவில்லை. பத்திரிகைகளாலும் செய்தி வெளியிட முடியாது, கடுமையான சென்சார்.
  • சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அசோக் மேத்தா, சரண்சிங், மது லிமயே, ராஜ்நாராயண் உள்பட உயர் தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு, அறிவிக்கப்படாத இடங்களில் காவலில் வைக்கப்பட்டனர்.
  • ஏதோவொரு காரணத்தால், அனேகமாக தன்னைப் பிரதமராக்கியவர் என்ற இந்திரா காந்தியின் நன்றியுணர்வு அல்லது மரியாதை காரணமாக இருக்கலாம், காமராஜர் மட்டும் கைது செய்யப்படவில்லை.
  • சோசலிஸ்ட் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், ஜனசங்கத் தலைவர் நானாஜி தேஷ்முக் போன்ற சிலர் தலைமறைவாகிவிட்டனர்.

வெற்றிடம் விட்ட தினமணி!

  • பத்திரிகைகளின் செயல்பாடுகளை முற்றிலும் அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காக, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த ஐ.கே. குஜ்ரால் மாற்றப்பட்டு, அந்த இடத்தில் பிரதமர் இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்திக்கு மிக நெருக்கமானவரான, திட்டத் துறை துணை அமைச்சராக இருந்த வி.சி. சுக்ல கொண்டு வரப் பட்டார். ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டங்களிலும் பத்திரிகைத் தணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.
  • பத்திரிகைகளுக்கு சென்சார் முறை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஜூன் 27 ஆம் தேதியிட்ட தினமணியில் தலையங்கம் பிரசுரிக்கப் படும் இடம் காலியாக விடப்பட்டு சில காரணங்களால் இன்று தலையங்கம் இல்லை எனக் குறிப்பிடப்பட்டது. தொடர்ந்து, வெற்றிடங்கள் விடப்பட்டு வந்த நிலையில், ஜூலை 8 ஆம் நாள்தான் மீண்டும் முழுமையான தலையங்கம் எழுதப்பட்டது.
  • அடுத்தடுத்த காலகட்டத்தில் நெருக்கடி நிலையுடன் பத்திரிகைத் தணிக்கையும்  தீவிரமாக நடைமுறைப் படுத்தப்பட்டபோது, இந்தியன் எக்ஸ்பிரஸும் தினமணியும் சென்சார் குழுவினர் அகற்றச் சொல்லும் செய்திகளை அகற்றிவிட்டு அந்த இடங்களை அப்படியே காலியாக விட்டு - அந்த இடத்தில் என்ன விஷயங்கள் இருந்திருக்க முடியும் என்பதை வாசகர்களின் ஊகத்துக்கே விட்டு - நாளிதழ்களைப் பிரசுரித்து எதிர்ப்புத் தெரிவித்தன.
  • 39-வது அரசியல் சட்டத் திருத்தமாகக் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் பதவியில் இருக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோகூட வழக்கு எதுவும் தொடர முடியாது என்றாக்கப்பட்டது.

20 அம்சத் திட்டம்

  • மக்களிடம் அதிருப்தி தோன்றுவதைத் தடுப்பதற்காகவும் மக்களின் நலனுக்காகவே நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது என்ற தோற்றத்தைக் கட்டமைக்கவும் இருபது அம்சத் திட்டத்தை அறிவித்தார் பிரதமர் இந்திரா காந்தி.
  • ஏழைகளின் கடன் ரத்து, நிலமற்றவர்களுக்கு இடம், வீட்டுமனைப் பட்டாக்கள், கொத்தடிமை ஒழிப்பு, நாடு முழுவதும் செல்லும் வாகன அனுமதி (நேஷனல் பெர்மிட்) போன்றவையெல்லாம் இந்தத் திட்டத்தால் செயல்படுத்தப்பட்டன.
  • ஏழைகளின் கடன் ரத்து திட்டத்தின் கீழ், மாதம் ரூ. 200-க்குக் குறைவான வருவாயுள்ளவர்கள், அடகுக் கடையில் நகைகளை அடகு வைத்திருந்தால், அந்தக் கடனும் வட்டியும் ரத்து செய்யப்பட்டு, நகைகள் திருப்பியளிக்கப்பட வேண்டும்.

5 அம்சத் திட்டம்

  • இந்தக் காலகட்டத்தில் தன்னை முன்னிறுத்தும் விதத்தில் ஐந்து அம்சத் திட்டமொன்றை அறிவித்தார் சஞ்சய் காந்தி. உள்ளபடியே, ஐந்தும் நல்ல அம்சங்கள்தான் -  மக்கள்தொகை கட்டுப்பாடு, ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுதல், மரங்கள் வளர்ப்பு, முதியோர் கல்வி, சிறுசேமிப்பு - ஆனால்,  நடைமுறைப்படுத்தியதில் மிகமிக மோசமான விளைவுகளையே ஏற்படுத்தின.
  • சஞ்சய் காந்தியை திருப்திப்படுத்தும் நோக்கில் வட மாநிலங்களில் கண்மூடித்தனமாக, எண்ணிக்கையை உயர்த்திக் காட்ட வேண்டும் என்பதற்காக, போட்டிபோட்டுக் குடும்பக் கட்டுப்பாட்டுக் கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் செய்யப்பட்டன.
  • தில்லியில் துருக்மான் கேட்டில் மசூதியைச் சுற்றியிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட விதம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தி, வரலாற்றில் அழியா இடம் பெற்றுவிட்டது.
  • 'சொன்னபடி கேட்காத' தமிழ்நாடு அரசும் குஜராத் மாநில அரசும் அகற்றப்பட்டன. 1976 ஜனவரியில் தமிழகத்தில் முதல்வர் மு. கருணாநிதியின் தலைமையிலான திமுக அரசும் 1976 மார்ச்சில் குஜராத்தில் பாபுபாய் பட்டேல் தலைமையிலான ஜனதா முன்னணி அரசும் டிஸ்மிஸ் செய்யப்பட்டன. தமிழகத்தில் கருணாநிதியின் மகனும் இன்றைய முதல்வருமான மு.க. ஸ்டாலின் உள்பட ஏராளமான திமுக தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர்.

பல நல்ல விஷயங்களும் நடந்தன.

  • அரசின் முனைப்பான கட்டுப்பாடுகள் காரணமாக அத்தியாவசிய - தானிய, பலசரக்குப் பொருள்களின் விலைகள் குறைந்தன அல்லது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.
  • ரயில்கள், பேருந்துகள் எல்லாம் சரியான நேரத்துக்கு வந்தன. அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட வேலை நேரத்துக்கும் முன்னதாகவே அலுவலர்களும் ஊழியர்களும் வந்தனர். லஞ்ச ஊழல் நினைத்தும் பார்க்க முடியாதது என்றானது. திருமண வீடுகளில் வரதட்சிணை சோதனைகள்கூட நடைபெற்றன!
  • ஹோட்டல்களில் ஒரு ரூபாய்க்கு 'ஜனதா மீல்ஸ்' வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது, எவ்வளவு பெரிய ஹோட்டல்கள் என்றாலும் ஏழை எளிய  மக்களுக்காக அங்கேயும் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
  • நெருக்கடி நிலை காரணமாக வட மாநிலங்களில் நேர்ந்த அளவுக்குத் தென் மாநிலங்களில் பாதிப்புகள் இல்லை. எனவே, அரசியலைப் பற்றிக் கவலைப்படாத சாதாரண மக்கள் சற்று நிம்மதியாகவேகூட உணர்ந்தனர் என்றுகூட கூறலாம்.
  • உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயண் மட்டும் நவம்பர் 12 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
  • இப்படியாக ஓராண்டுக்கும் மேலாகக் கழிந்துகொண்டிருந்தது.
  • 1976 நவம்பரின் பிற்பகுதியில் அசாமில் ஜவாஹர்நகரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாடு நடைபெற்றது.
  • இந்த மாநாட்டின் நிறைவுரையில், வழக்கம்போல எதிர்க்கட்சிகளைத் தாக்கினாலும், எதிர்க்கட்சியினர் நாட்டின் நலனுக்காகப் பொறுப்புள்ளவர்களாக நடந்துகொள்கிறார்கள் என்று அரசு உணர்ந்தால் எதிர்க்கட்சியினருடன் பேச்சு நடத்தும் விஷயத்தைப் புதிதாகப் பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது என்று குறிப்பாகத் தெரிவித்தார் பிரதமர் இந்திரா காந்தி.

மனமாற்றம்

  • என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று யாருக்குமே தெரியாது.
  • அடுத்த இரு மாதங்களில் - 1977, ஜனவரி 18 - பிற்பகல் 1 மணிவாக்கிலும் இரவு 7 மணிக்கும் இரு முறை குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசினார் பிரதமர் இந்திரா காந்தி. மாலையில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி, தேர்தல் நடத்துவது பற்றிக் குறிப்பாகத் தெரிவித்தார்.
  • இரவு நாட்டு மக்களுக்காகத் திடீரென வானொலியில் உரை நிகழ்த்திய பிரதமர் இந்திரா காந்தி, நெருக்கடி நிலை தளர்த்தப்படும், தற்போதைய மக்களவை கலைக்கப்பட்டு மார்ச் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று அதிரடியாக அறிவித்தார்.
  • (பிரதமர் இந்திரா காந்திக்குள் இப்படியொரு மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது, என்ன காரணம், என்ன நினைத்து இந்த முடிவுக்கு வந்தார் என்பது பற்றியெல்லாம் யாருக்குமே தெரியாது என்பார்கள். நெருக்கடி நிலைக் காலத்தில் அவருக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக உடனிருந்த அதிகார மையமாக விளங்கிய மகன் சஞ்சய் காந்திக்கே வானொலியில் இப்படியோர் உரையை அவர் நிகழ்த்தப் போகிறார் என்பது தெரியாதாம்).
  • அன்றிரவே மொரார்ஜி தேசாய், அத்வானி போன்ற தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.
  • ஜன. 19 - எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
  • ஜன. 23 - ஜனதா கட்சி தொடங்கப்பட்டது.
  • பிப். 2 - காங்கிரஸிலிருந்து ஜெகஜீவன் ராம் ராஜிநாமா செய்து ஜனநாயகத்துக்கான காங்கிரஸ் தொடங்கி, ஜனதா அணியுடன் கூட்டணி அமைத்தார்.
  • மார்ச் 16, 18, 19 20 - மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
  • மார்ச் 20 - வாக்கு எண்ணிக்கை. ஆட்சியை இழந்தது காங்கிரஸ் (154  இடங்களில்தான் வெற்றி, நெருக்கடி நிலையால் பெரிதாகப் பாதிக்கப்படாத தென் மாநிலங்கள் கைகொடுத்தன). தன் சொந்தத் தொகுதியான ராய் பரேலியிலேயே அதே ராஜ்நாராயணால் தோற்கடிக்கப்பட்டார் பிரதமர் இந்திரா காந்தி. அமேட்டி தொகுதியில் சஞ்சய் காந்தியும் தோற்றுப் போனார்.
  • 19 மாத கால நெருக்கடி நிலை முடிவுக்கு வந்தது. ஏறத்தாழ 15 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
  • ஜனதா ஆட்சி அமைந்தது, மொரார்ஜி தேசாய் பிரதமரானார்.
  • ஏராளமான தலைவர்கள். எண்ணற்ற குழப்பங்கள், பூசல்கள்.
  • மொரார்ஜி அரசு கவிழ்ந்து காங்கிரஸ் ஆதரவுடன் சரண்சிங் பிரதமரானார். பின்னர், அவரும் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்காமலேயே பதவி விலக நேரிட்டது.
  • 1980 ஜனவரியில் மீண்டும் மக்களவைக்குத் தேர்தல்!
  • 1971 மக்களவைத் தேர்தலில் வென்ற 352 தொகுதிகளைவிடக் கூடுதலாக ஒரு தொகுதியில் (353) வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி (மூன்றிலிரு பங்கு பெரும்பான்மை!).
  • அதே இந்திரா காந்தியே மறுபடியும் பிரதமராகப் பதவியேற்றார் என்பதுதான் வரலாற்றின் நகைமுரண்!!

நன்றி: தினமணி (27  – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories