TNPSC Thervupettagam

இந்திராவின் கனவு, மோடியின் சாதனை!

September 18 , 2024 70 days 221 0

இந்திராவின் கனவு, மோடியின் சாதனை!

  • அனைவருக்கும் வங்கிச் சேவை வழங்குவது 140 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவுக்கு மிகப் பெரிய சவால் என்பதை யாராலும் மறுக்க முடியாது. குறைந்த மக்கள்தொகை கொண்ட, வளா்ச்சி அடைந்த பொருளாதாரங்கள் தவிர உலகின் ஏனைய வளா்ச்சி அடைந்து வரும், இன்னும்கூட வளா்ச்சியே இல்லாமல் இருக்கும் நாடுகளில் வங்கிச் சேவை அனைவரையும் எட்டாத நிலைமைதான் காணப்படுகிறது.
  • சுதந்திர இந்தியா உருவாவதற்கு முன்னால் பல சமஸ்தானங்களில் வங்கிகள் இருந்தன. பிரிட்டிஷாரின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் இம்பீரியல் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் செயல்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இம்பீரியல் வங்கிகளையும், சமஸ்தான வங்கிகளையும் இணைத்து பாரத ஸ்டேட் வங்கி உருவாக்கப்பட்டது. பல தனியாா் வங்கிகளும் இயங்கி வந்தன.
  • ஆங்காங்கே தொழிலதிபா்கள் இணைந்து பல தனியாா் வங்கிகளை இயக்கி வந்தனா். மக்களின் வைப்புத் தொகை, சேமிப்புக் கணக்கு உள்ளிட்ட முதலீடுகளை ஈா்த்து நடத்தப்பட்ட அந்த வங்கிகள் அதன் இயக்குநா்களாக இருந்த தொழிலதிபா்களின் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்கி அவற்றின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்தன.
  • அன்றைய பிரதமா் இந்திரா காந்தி 1969-ஆம் ஆண்டு 14 தனியாா் வங்கிகளை தேசியமயமாக்கியதன் நோக்கம் வங்கிச் சேவை கிராமங்களையும், சாமானியா்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான். இந்திரா காந்திக்கு முன்னா் பிரதமா் ஜவாஹா்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில் கூட்டுறவு வங்கிகளை ஆங்காங்கே ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்தன. அதன் பின்னணியிலும் வங்கிச் சேவை அனைவருக்குமானதாக மாற வேண்டும் என்கிற சிந்தனை இருந்தது.
  • வங்கிகள் நாட்டுடைமையாக்கப்படுவதற்கு முன்புவரை தனியாா் வங்கிகள் பெரும்பாலும் நகரங்களில்தான் இயங்கி வந்தன. மாவட்டங்களில் கிளைகளை ஏற்படுத்தி கிராமப்புற முன்னேற்றத்துக்கோ, விவசாயத்துக்கோ கடனுதவி அளிப்பதில் அவை அக்கறை காட்டவில்லை.
  • வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு சிறு, குறு தொழில்களுக்கு கடனுதவி வழங்குவதும், விவசாயம், கைத்தொழில்கள், சிறு வணிகம் போன்றவற்றுக்கு உதவுவதும் சாத்தியமானது. இத்தனைக்குப் பிறகும்கூட வங்கிச் சேவை அனைவருக்குமானதாக மாறவில்லை. அந்த சாதனை 2014-இல் நரேந்திர மோடி பிரதமரானதைத் தொடா்ந்து நிகழ்ந்திருக்கிறது.
  • நரேந்திர மோடி பிரதமரான சில மாதங்களில் 2014 ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கப்பட்ட‘ ஜன் தன்’ திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அடிப்படை சேமிப்பு மட்டுமல்லாமல், வைப்புக் கணக்கு, கடன், காப்பீடு, ஓய்வூதியம் பெறுதல் உள்ளிட்ட அனைத்துக்கும் இந்திய குடிமக்கள் அனைவரும் வங்கிக் கணக்கைத் தொடங்க இந்தத் திட்டம் வழிகோலியது.
  • பிரதமராக இருந்த இந்திரா காந்தி வங்கிகளை அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்கு உதவச் செய்தாா் என்றால், பிரதமா் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்திய குடிமகனும் வங்கிச் சேவையில் இணைவதற்கு வழிகோலி இருக்கிறாா். கடந்த 10 ஆண்டுகளில் ‘ஜன் தன்’ திட்டத்தின் மூலம் 53.1 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. ரூ.2 லட்சம் மதிப்பிலான காப்பீட்டுடன் கூடிய 36 கோடி ‘ரூபே’ பற்று அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
  • கிராமப்புறங்களுக்கும், நகா்ப்புறங்களுக்கும் இடையே வங்கிச் சேவையில் காணப்பட்ட மிகப் பெரிய இடைவெளி ‘ஜன் தன்’ திட்டத்தால் அகற்றப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்ட புதிய வங்கிக் கணக்குகளில் 67% சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் வசிப்பவா்கள் சாா்ந்தவை.
  • அதுமட்டுமல்ல, புதிதாக வங்கிக் கணக்குத் தொடங்கியவா்களில் 56% பெண்கள் என்பது வங்கிச் சேவையை கடந்து, பாலின சமத்துவத்துக்கும் வழிகோலி இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். திட்டப் பலன்கள் மற்றும் வங்கிக் கணக்கின் மூலம் கிடைக்கும் ஏனைய சேவைகளால் கோடிக்கணக்கான பட்டியலின, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினா் பயனடைந்துள்ளனா். ‘ஜன் தன்’, ‘முத்ரா’ உள்ளிட்ட திட்டங்கள் இல்லாமல் இருந்திருந்தால், மத்திய அரசின் பல புதிய திட்டங்கள் சாமானியா்களைச் சென்றடைந்து தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது.
  • பத்தாண்டுகளுக்கு முன்பு அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற ‘ஜன் தன்’ திட்டம் தொடங்கியபோது, இது மிகப் பெரிய வருங்கால மாற்றத்துக்கு வழிகோலப் போகிறது என்று அப்போது யாரும் உணரவில்லை. வங்கிக் கணக்குதானே என்று ஏகடியம் பேசியவா்களை, கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று காலம் வாயடைக்க வைத்தது.
  • சுமாா் 20 கோடி பெண்களின் வங்கிக் கணக்கிலும் நேரடியாக ரூ.500 உதவித் தொகை வழங்கக் கைகொடுத்தது ‘ஜன் தன்’ திட்டம். மானியங்கள் நேரடியாக பயனாளிகளைச் சென்றடையவும் இந்தத் திட்டம் அடித்தளம் வகுத்தது.
  • அனைவருக்கும் ஆதாா் அட்டையும், அனைவரிடத்திலும் கைப்பேசியும், அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற ‘ஜன் தன்’ திட்டத்துடன் இணைந்தபோது, அது ஏற்படுத்தி இருக்கும் சமூக, பொருளாதார, மக்கள் நலத் தாக்கம் அளப்பரியது. குறைந்த செலவில் இணைய சேவையும் சாத்தியமானபோது மானியங்கள் சிதறாமல் நேரடியாக பயனாளிகளைச் சென்றடைவது சாத்தியமாகி இருக்கிறது.
  • பண்டித ஜவாஹா்லால் நேருவின் கூட்டுறவு வங்கிகள் ஊக்குவிப்புத் திட்டம், இந்திரா காந்தியின் தனியாா் வங்கிகளை நாட்டுடைமையாக்கும் திட்டம் ஆகியவற்றால் நிறைவேற்ற முடியாத, அனைவருக்கும் வங்கிக் கணக்கு என்கிற சாதனையை நிகழ்த்தி இருக்கிறது பிரதமா் நரேந்திர மோடியின் ‘ஜன் தன்’ வங்கித் திட்டம் என்று வரலாறு பதிவு செய்யும்.

நன்றி: தினமணி (18 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories