TNPSC Thervupettagam

இனி என்னவாகும் இந்திய அறிவியல்

February 28 , 2024 146 days 1048 0
  • இருபதாம் நூற்றாண்டில் இந்திய அறிவியல் கொடிகட்டிப் பறந்தது. பிரிட்டிஷ் காலனியாதிக்கம் கொடுத்த பல சோதனைகளை மீறி சி.வி.ராமன், சத்யஜிந்திர நாத் போஸ், மேகநாத் சாகா, பி.சி.ராய் என இந்திய அறிவியலில் பல ஆளுமைகள் உருவாகினர்.
  • விடுதலைக்குப் பிறகு மத்திய அரசின் நிதிப் பங்கீட்டோடு இந்திய அறிவியல் எழுச்சியைச் சாதித்தனர் விக்ரம் சாராபாய், ஹோமி பாபா, சாந்திஸ்வரூப் பட்நாகர் தலைமுறையினர். உணவு உற்பத்தி முதல் கடல் ஆய்வு, தட்பவெப்பவியல், தடயவியல், தோல் பதனிடும் அறிவியல், மகா கணினியுகம் என அறிவியலின் அத்தனைப் பரிமாணங்களிலும் மிளிர்ந்தது இந்தியா.

பிரிக்ஸ் - ஜி20 நாடுகளில் அறிவியல்:

  •  சமூகத்தை அறிவியல் மயம் ஆக்குவதன் அவசியத்தை டெல்லி ஜி20 உச்சி மாநாட்டில் யுனெஸ்கோ பிரதிநிதி வலியுறுத்தியபோது, அது பெரியளவில் வரவேற்கப்பட்டது. தொலைத்தொடர்பு, விண்வெளி ஆய்வு ஆகியவற்றுக்கு மட்டுமே உள்ள அறிவியல் நிதி ஒதுக்குதலைப் பரந்துபட்டு சுகாதாரம், விவசாயம், வாழ்க்கைத்தர மேம்பாடு குறித்த அறிவியல் துறைகளுக்கு ஒதுக்கிட ஒரு தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஜி20 தலைமைப் பதவி என்று மார்தட்டிய இந்திய அரசு, அறிவியலுக்குச் செய்தது என்ன என்று பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சுகிறது.
  • ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு நம் ஒட்டுமொத்த உற்பத்தியில் (GDP) 0.64 சதவீதமாகச் சுருங்கிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய வேளாண் ஆய்வு மையம் (ICAR), இந்தியத் தொழில்-அறிவியல் ஆய்வு மையம் (CSIR), அறிவியல் தொழில்நுட்ப ஆய்வுத் துறை (DST), உயிரித் தொழில்நுட்ப ஆய்வகம் (Department of Bio Technology), இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ICMR) போன்ற அறிவியல் ஆய்வுத் துறைகளுக்கான நிதியுதவி பெரிய அளவில் குறைக்கப்பட்டுவிட்டது.
  • இதனால் அர்ப்பணிப்பு மிக்க தரமான அறிவியல் ஆய்வாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு 255 பேர் என்று குறைந்துவிட்டது (இது 2001இல் உச்சபட்சமாக 1,001 பேராக இருந்தது). ஜி20 நாடுகளில் சீனாவில் ஒரு லட்சம் பேருக்கு 10,000 விஞ்ஞானிகளாகவும் ஆஸ்திரேலியாவில் 2,000 பேராகவும் உள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.
  • பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பில் இஸ்ரேலில் ஒரு லட்சம் பேருக்கு 8,342 பேரும், ஸ்வீடனில் 7,597 பேரும், தென்கொரியாவில் 7,498 பேரும் ஆய்வாளராக இருப்பது எதைக் காட்டுகிறது? பிரிக்ஸ், ஜி20 போன்ற கூட்டமைப்புகளில் உள்ள நாடுகளிலேயே இந்தியாதான் அறிவியல் ஆய்வில் மோசமாகப் பின்தங்கி உள்ளது.

தேசிய ஆராய்ச்சி நிறுவனம் எங்கே?

  • புதிய கல்விக் கொள்கை (2020) முன்மொழியப்பட்டபோது, இந்தியப் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 752-லிருந்து 1,016 ஆக உயர்ந்ததையும் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் (ஐஐடி) 23ஆகத் தரம் உயர்த்தப்பட்டதையும் கூறி மார்தட்டும் நாம், அறிவியல் ஆராய்ச்சிக்கான தரப்பட்டியலில் உலக அளவில் இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்று கூட முதல் 300 இடங்களில் இடம்பெறவில்லை என்பதைக் கவனித்தோமா? ஏனெனில், ஆய்வு நிலையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்ட அளவுக்கு நிதி ஆதாரங்கள் உருவாக்கப்படவில்லை.
  • புதிய கல்விக் கொள்கை முன்வைத்த தேசிய ஆராய்ச்சி நிறுவனம் ‘அனுசந்தன் தேசிய ஆய்வு முன்னெடுப்பு’ (ANRF) என்று பெயர் மாற்றம் பெற்று பிப்ரவரி 5ஆம் நாள் தேசிய அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலரே அதற்குத் தலைமை நிர்வாகியாக (CEO) நியமிக்கப்பட்டார்.
  • தேசிய அறிவியல் ஆலோசகருக்குக் கீழே ஒரு கவுன்சிலிடம் அதன் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டது. புதிய கல்விக் கொள்கையை அறிவித்த தேசிய ஆராய்ச்சி நிறுவனம், அரசுக்குக் கட்டுப்படாத தன்னிச்சையான அதிகாரம் கொண்ட அறிவியல் கட்டமைப்பாகச் செயல்படும் என்ற உறுதிமொழி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.
  • இன்று ஆய்வுக்காக முன்வைக்கப்படும் 100 செயல்திட்ட முன்மாதிரிகளில் ஏழுகூட ஆண்டு ஒன்றுக்கு நிதி வழங்க ஏற்கப்படுவதில்லை. தாங்களாகவே செலவு செய்துகொண்டால் பின்னால் நிதி பெற வாய்ப்புள்ளது என்றுதான் சான்று பெற முடிகிறது.
  • இதற்கிடையே இந்த ஆண்டு அனுசந்தன் தேசிய ஆய்வு முன்னெடுப்பு கேட்ட ரூ.50,000 கோடியில், ரூ.2,000 கோடி ஒதுக்கி ரூ.36,000 கோடி தனியார் முதலீடாகப் பெறப்படும் என்று அதிர்ச்சி அறிவிப்பை நிதி அமைச்சர் வெளியிட்டார். மீதி ரூ.12,000 கோடியை அரசின் கடனாகப் பெற்றுக்கொண்டு, குறைந்த வட்டி விகிதத்தில் ஆய்வின் வெற்றிக்குப் பிறகு செலுத்தலாம். அதற்கு கார்ப்பரேட்-ஆய்வக ஒன்றிணைவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

அழிவின் விளிம்பில் இந்திய அறிவியல்:

  • பிரேசில், தென்னாப்ரிக்கா போன்ற நம்மைவிடப் பின்தங்கிய நாடுகள் தம் ஒட்டுமொத்த உற்பத்தியில் அறிவியல் ஆய்வுக்கு முறையே 1.2%, 1.1% ஒதுக்குகின்றன. 2019இல் நம் நாடு 46,582 புதிய கண்டுபிடிப்புகளுக்குச் சர்வதேச உரிமம் கோரியதில், அயல்நாடு வாழ் இந்தியர் எண்ணிக்கையை எடுத்துவிட்டால் மிஞ்சுவது 14,906 தான்.
  • அதே ஆண்டில், அமெரிக்கா 6 லட்சம், சீனா 4.58 லட்சம், சுவிட்சர்லாந்து 1.7 லட்சம், நெதர்லாந்து 1.38 லட்சம் கண்டுபிடிப்புகளுக்குச் சர்வதேச உரிமங்களைப் பதிவுசெய்துள்ளது வரலாறு. அறிவியல் ஆராய்ச்சி தனியார்மயமாகும் சூழலில் ஒருகாலத்தில் கொடிகட்டிப் பறந்த இந்திய அறிவியலின் இருண்டகாலம் தொடங்கிவிட்டதோ என்று அஞ்சத் தோன்றுகிறது.
  • ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்திய அறிவியல் மாநாட்டை முடக்கி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவன நிதியையும் நிறுத்தி அவற்றின் முக்கியப் பங்களிப்பாளரான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா வழங்குவது ஒரு நகைமுரண்.
  • இந்திய ஆய்வகம் ஒன்றில் நிகழ்த்தப்பட்ட திருப்புமுனை அறிவியல் கண்டுபிடிப்புக்காக இந்தியர் ஒருவர் நோபல் பரிசு பெறுவார் என்று இனி எதிர்பார்க்கவே முடியாது என்னும் அளவுக்கு அறிவியல் ஆராய்ச்சி அழிவின் விளிம்புக்குத் தள்ளப்பட்டுள்ளது. வருங்காலச் சந்ததிகளுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய வஞ்சனை இது!

நன்றி: இந்து தமிழ் திசை (28 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories