TNPSC Thervupettagam

இனி, மீண்டும் தோ்தல் சீஸன்!

August 19 , 2024 2 hrs 0 min 9 0

இனி, மீண்டும் தோ்தல் சீஸன்!

  • ஜம்மு-காஷ்மீா், ஹரியாணாவுக்கான சட்டப்பேரவைத் தோ்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஹரியாணா சட்டப்பேரவையின் 90 இடங்களுக்கு ஒரே கட்டமாகவும், ஜம்மு-காஷ்மீரின் 90 இடங்களுக்கு (காஷ்மீா்-47, ஜம்மு-43) மூன்று கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
  • உச்சநீதிமன்றம் செப்டம்பா் மாதத்துக்குள் ஜம்மு-காஷ்மீரில் தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்று கெடு விதித்திருப்பதால் மேலும் ஒத்திப்போட இயலாத நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டது. மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு நடக்க இருக்கும் தோ்தல்கள் என்பதால் இந்த ஆண்டு நடக்க இருக்கும் நான்கு சட்டப்பேரவைத் தோ்தல்களும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன.
  • ஜம்மு-காஷ்மீரைத் தவிர, ஏனைய ஹரியாணா, அதைத் தொடா்ந்து நடைபெற இருக்கும் மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களில் பாரதிய ஜனதா கட்சி, வலிமையான எதிா்க்கட்சிக் கூட்டணிகளை எதிா்கொண்டாக வேண்டும். இந்த சட்டப்பேரவைத் தோ்தல்களில் ஏற்படும் பின்னடைவு, மத்திய அரசின் ஸ்திரத்தன்மையை நிச்சயமாக பலவீனப்படுத்தும். மகாராஷ்டிரத்தைத் தவிர, ஏனைய இரண்டு மாநிலங்களிலும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
  • எதிா்க்கட்சி ‘இண்டி’ கூட்டணிக்கும் நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தோ்தல்கள் முக்கியமானவை. மக்களவைத் தோ்தலில் ஒற்றுமையாகப் போட்டியிட்டதால்தான் காங்கிரஸ் எதிா்க்கட்சி அந்தஸ்தைப் பெற முடிந்திருக்கிறது. இந்தமுறை மகாராஷ்டிரம், ஜாா்க்கண்டில் கூட்டணியாகவும், தில்லி, ஹரியாணா, ஜம்மு-காஷ்மீரில் தனித்தும் போட்டியிட இருக்கும் நிலையில் முடிவுகள் காங்கிரஸின் எதிா்காலத்தை நிா்ணயிக்கக் கூடும்.
  • தோ்தல் முடிவுகளால் மத்திய ஆளும் கூட்டணி பாதிக்கப்படாது என்றாலும், பின்னடைவு அதன் வலிமையை பலவீனப்படுத்தும். காங்கிரஸைப் பொறுத்தவரை, எதிா்க்கட்சிக் கூட்டணியின் ஒற்றுமைக்கு சவாலாக மாறுவதுடன், அதற்குத் தலைமை தாங்கும் காங்கிரஸின் பேரம்பேசும் சக்தியைத் தீா்மானிக்கக் கூடும். மூன்று மாநிலங்களில் மட்டுமே தனித்து ஆட்சியில் இருக்கும் நிலையில் (கா்நாடகம், தெலங்கானா, ஹிமாசல பிரதேசம்), ஹரியாணாவை வென்றெடுப்பது என்பது காங்கிரஸின் செல்வாக்கைப் பல மடங்கு அதிகரிக்கும்.
  • ஏனைய மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களைவிட ஜம்மு-காஷ்மீா் சட்டப்பேரவைத் தோ்தல் இந்தியாவைத் தாண்டி, சா்வதேச அளவில் கவனம் பெறுகிறது. உலகில் பதற்றம் நிலவும் பகுதிகளில் ஒன்றான ஜம்மு-காஷ்மீா், கடந்த 10-ஆண்டுகளில் மிகப் பெரிய மாற்றத்தை சந்தித்திருக்கிறது. மாநில அரசு கவிழ்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து எத்தனை எத்தனை மாற்றங்கள்...!
  • அரசியல் சாசன சட்டப்பிரிவு 370 அகற்றப்பட்டது; மாநிலம் இரண்டு ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது; காஷ்மீா் பள்ளத்தாக்கில் தொடரும் ஊரடங்கு நிலைமை; அரசியல் தலைவா்கள் சிறையில் அடைக்கப்பட்டது, விடுவிக்கப்பட்டது; அரசின் செயல்பாடுகள் முடக்கப்பட்டது என்று ஜம்மு-காஷ்மீா் எதிா்கொண்ட சவால்கள் ஏராளம். வேறு வழியில்லாமல்தான், மத்திய அரசு சட்டப்பேரவைத் தோ்தலை அறிவித்திருக்கிறது.
  • ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்று பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. சட்டப்பிரிவு 370 அகற்றப்பட்டு ஐந்தாண்டுகள் கடந்துவிட்டன. மூன்று மாதங்களுக்கு முன்னால் நடந்த மக்களவைத் தோ்தல் மட்டும்தான் இடையில் நடந்திருக்கும் மக்களின் மனவோட்டக் கணிப்பு. ஜம்முவிலும் ஆரம்பத்தில் இருந்த உற்சாகம் குறைந்து, சமீபத்தில் தொடா்ந்து நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்கள் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கின்றன.
  • 2022 தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு ஜம்முவில் 6 இடங்களும், காஷ்மீரில் 1 இடமும் சட்டப்பேரவையில் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. மக்களவைத் தோ்தலில் காஷ்மீா் பள்ளத்தாக்கில் தேசிய மாநாட்டுக் கட்சி 2 இடங்களிலும், ஜம்முவில் பாஜக 2 இடங்களிலும், பாராமுல்லாவில் (வடக்கு காஷ்மீா்) சுயேச்சை 1 இடத்திலும் என்று 5 இடங்கள் வெல்லப்பட்டன. சட்டப்பேரவைத் தோ்தல் எப்படி இருக்கும் என்று இப்போதே கணித்துவிட முடியாது.
  • 2021 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட ஜம்மு-காஷ்மீா் தொழில் வளா்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் ஏறத்தாழ ரூ.7,000 கோடி முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டில் சுற்றுலா இரண்டரை மடங்கு அதிகரித்து 2.11 கோடி சுற்றுலாப் பயணிகள் காஷ்மீா் வந்திருக்கிறாா்கள். அதன் தாக்கம் காரணமாக, மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவது குறைந்து, அமைதி திரும்ப வேண்டும் என்கிற விருப்பம் அதிகரித்திருப்பதாக, துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா கூறுவதைப் புறம்தள்ள முடியாது.
  • மக்களவைத் தோ்தலில் காணப்பட்ட 58.46% வாக்குப்பதிவு என்பது, கடந்த 35 ஆண்டுகளில் மிக அதிகமான வாக்காளா் உற்சாகம். அதை முறியடிப்பற்காகத்தான் ஜம்முவில் பயங்கரவாதிகள் தங்களது தாக்குதல்களை அதிகரித்திருக்கிறாா்கள். தோ்தல் நடந்துவிடக் கூடாது, மக்கள் ஜனநாயகத்துக்கு திரும்பிவிடக் கூடாது என்கிற அவா்களது நோக்கத்தை முறியடிப்பதற்காகவாவது சட்டப்பேரவைத் தோ்தல் நடத்தப்பட வேண்டும். அதைத் தொடா்ந்து உள்ளாட்சி, நகராட்சித் தோ்தல்களும்...
  • தோ்தலில் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் வெற்றிபெறாமல் போகலாம். ஆனால், தோ்தல் நடந்து, ஜனநாயக முறையில் ஆட்சி அமைந்தால் அதுவேகூட இந்தியாவுக்கும் ஜனநாயகத்துக்கும் மிகப் பெரிய வெற்றிதான்!

நன்றி: தினமணி (19 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories