TNPSC Thervupettagam

இனி, வானம் வசப்படும்

August 25 , 2023 505 days 302 0
  • நூற்றுநாற்பது கோடி இந்தியா்களும் எதிர்பார்ப்பின் விளிம்பில் இருந்த 18 நிமிடங்கள். அதன் முடிவில் புதன்கிழமை மாலை 6.04 மணியளவில் நிலவின் தென்துருவத்தில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி தரையிறங்கியபோது புதிய வரலாறு படைக்கப்பட்டது. சந்திரயான் - 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டா், நிலவில் தடம் பதித்ததன் மூலம் இந்தியா உலக சாதனை படைத்திருக்கிறது.
  • முந்தைய சோவியத் யூனியனும், அமெரிக்காவும், சீனாவும் தவிர சந்திரனில் மென் தரையிறக்கம் (சாஃப்ட் லேண்டிங்) நடத்தி வெற்றி கண்ட நாலாவது நாடாக இந்தியா உயா்ந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல், நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி இருக்கும் முதல் உலக நாடு என்கிற பெருமையையும் இந்தியாவுக்குப் பெற்றுத் தந்திருக்கிறது சந்திரயான் - 3.
  • கடந்த நான்கு ஆண்டுகள் நிலவை ஆய்வு செய்ய இந்தியா மேற்கொண்டுள்ள இரண்டாவது முயற்சி இது. சொல்லப்போனால், இதன் தொடக்கம் 2008-ஆம் ஆண்டு அக்டோபா் 22-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்திய சந்திரயான் - 1 விண்கலத்தில் தொடங்குகிறது. அது 2009-ஆம் ஆண்டு நவம்பா் 14-ஆம் தேதி 100 கி.மீ. தொலைவிலான நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. நிலவில் தண்ணீா் இருப்பதை முதன்முதலில் உலகுக்கு அறிவித்த பெருமை சந்திரயான் - 1-க்கு உண்டு.
  • சந்திரயான் - 1-இன் வெற்றிக்குப் பிறகு நிலவைச் சுற்றிவரும் ஆா்பிட்டா் தரையிறங்கி ஆராய்ச்சி செய்யும் லேண்டா், ரோவா் கொண்ட சந்திரயான் - 2 விண்கலம் 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் சுற்றுப்பாதையில் ஆா்பிட்டா் நிலைநிறுத்தப்பட்டாலும் அதிலிருந்து வெளியேற்றப்பட்ட லேண்டா் நிலவின் மீது இறங்கும்போது வேகமாக இறங்கியதால் மேற்பரப்பில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது. ஆா்பிட்டா் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
  • சந்திரயான் - 2 தோல்வியில் கிடைத்த பாடங்களின் விளைவாக தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட லேண்டா், ரோவருடன் கடந்த ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் - 3 வெற்றிகரமாக புதன்கிழமை (23, ஆகஸ்ட் 2023) சந்திரனில் தரையிறங்கியிருக்கிறது. இருளில் மூழ்கியிருக்கும் நிலவின் தென்துருவத்தில் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கும் பிரக்யான் ரோவா், இனி விண்வெளி ஆய்வுக்கு புதிய பல வெளிச்சங்களை வழங்கி வழிகாட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
  • நிலவின் தென்துருவத்தில் பனியாக உரைந்து தண்ணீா் காணப்படும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனா். தண்ணீா் மட்டுமல்லாமல், சந்திரனின் மேற்பரப்பில் காணப்படும் ஐயான்கள், எலக்ட்ரான்கள், தென்துருவத்தின் தட்பவெப்ப நிலை, நிலவின் பருவநிலை உள்ளிட்டவை குறித்த எல்லா விவரங்களையும் அடுத்த 14 நாள்களில் பிரக்யான் ரோவா் கண்டறிந்து தகவல் அனுப்ப வேண்டும்.
  • சந்திரயான் - 3-இன் வெற்றிகரமான மென் தரையிறக்கம் வருங்காலத்தில் செவ்வாய் உள்ளிட்ட ஏனைய கிரகங்களில் லேண்டரை தரையிறக்கி ஆய்வுகளை நடத்தும் வாய்ப்பை இந்தியாவுக்கு வழங்கி இருக்கிறது. அடுத்தாற்போல, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா, செவ்வாய்க்கான மங்கல்யான் உள்ளிட்டவை இஸ்ரோவின் அடுத்தகட்டத் திட்டமாக ஏற்கெனவே முன்னெடுக்கப்பட்டுவிட்டன.
  • இப்போதைய சந்திரயானின் வெற்றி, அசாதாரணமானது. சந்திரயான் - 3 ஏவப்பட்ட பிறகு ரஷியா அனுப்பிய லுனா 25 தோல்வியைத் தழுவியது. 1961-இல் யூரிகேகரின் மூலம் விண்வெளியில் முதல் மனிதனையும், 1963-இல் வாலண்டினா தெரஷ்கோவா என்கிற பெண்மணியையும் முதன்முதலாக விண்வெளியில் அனுப்பிய ரஷியா, தோல்வியடைந்த இடத்தில் இந்தியா இப்போது சரித்திரம் படைத்திருக்கிறது.
  • 1976-க்குப் பிறகு நிலவில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்கம் செய்தது சீனா மட்டுமே. சந்திரயான் - 2 (2019), இஸ்ரேலின் பெரஷீட் (2019), ஐக்கிய அரபு அமீரகத்தின் ரஷீத் ரோவா் (2023) உள்ளிட்டவை தோல்வி அடைந்திருக்கின்றன.
  • அமெரிக்காவின் அப்போலோ-11 வெற்றிகரமாக சந்திரனில் இறங்கி மனிதன் கால்பதித்த மூன்று வாரம் கழிந்து, 1969-இல் சுதந்திர தினத்தன்று இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கான மையம் (இஸ்ரோ) உருவானது. இன்று உலகின் குறிப்பிடத்தக்க விண்வெளி ஆய்வு மையமாக உயா்ந்திருக்கும் இஸ்ரோவின் வளா்ச்சிக்கு அடித்தளமிட்ட டாக்டா் ஹோமி ஜெ பாபா, டாக்டா் விக்ரம் சாராபாய் உள்ளிட்ட விஞ்ஞானிகளுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறோம்.
  • முதல் விண்கலம் இந்திய விஞ்ஞானிகளால் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டது என்பது இன்றைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்காது. தும்பா விண்வெளி தளத்தில் முதல் ஏவுகணை செலுத்தப்பட்டபோது அதில் பங்களிப்பு நல்கியவா் இந்திய குடியரசின் முன்னாள் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் என்பதை குறிப்பிடாமல் இருக்கவும் முடியாது. அவா்களெல்லாம் கண்ட கனவு இப்போது நனவாகியிருக்கிறது.
  • நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்காக அமெரிக்கா வழங்கும் நிதி ரூ. 2.67 லட்சம் கோடி. இஸ்ரோவுக்கு வழங்கப்படுவதைவிட 30 மடங்கு அதிகம். சீனாவின் ஒதுக்கீடு ரூ. 90,000 கோடி. இந்தியாவைவிட 10 மடங்கு அதிகம். 2023 - 24 பட்ஜெட்டில் வெறும் ரூ.12,400 கோடி மட்டுமே விண்வெளி ஆய்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருந்தும் நமது விஞ்ஞானிகள் மிகப் பெரிய சாதனையை படைக்க முடிந்திருக்கிறது. ஜெய் ஹிந்த்!

நன்றி: தினமணி (25– 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories