TNPSC Thervupettagam

இன்னொருவகை தாக்குதல்!

May 26 , 2020 1699 days 824 0
  • இந்தியாவால் ஏறத்தாழ இரண்டு மாத கால பொது முடக்கத்தை எதிர்கொள்ள முடிந்திருக்கிறது என்றால் அதற்கு மிக முக்கியமான காரணம், நம்மிடம் தேவைக்கு அதிகமாகவே சேர்த்து வைக்கப்பட்டிருந்த உணவு தானியங்கள்.
  • இந்திய உணவுக் கழகக் கிடங்குகள் நிரம்பி வழிந்துகொண்டிருந்ததால், பட்டினிச் சாவுகளிலிருந்து அடித்தட்டு இந்தியர்களை நம்மால் காப்பாற்ற முடிந்திருக்கிறது.
  • நமது உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் கிளம்பியிருக்கிறது பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றுடன் ஒட்டுமொத்த விவசாயத்தையே பாதிக்கக்கூடிய பாலைவன வெட்டுக்கிளித் தாக்குதல்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
  • ஆப்பிரிக்கா, ஈரான், வடமேற்கு பாகிஸ்தான் ஆகிய பகுதிகளிலிருந்து உருவாகும் இந்த வெட்டுக்கிளிகள், ஆண்டுதோறும் பல நாடுகளில் பயிர்களை அழித்து பேரழிவுக்கு வழிகோலுகின்றன.
  • ராஜஸ்தானின் 33 மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளுடன் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தின் நிமார், மால்வார் பகுதிகள் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவிலான வெட்டுக்கிளிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.
  • இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானிலிருந்து வந்த வெட்டுக்கிளித் தாக்குதலை ராஜஸ்தானின் ஜைஸல்மேர் மாவட்டம் எதிர்கொண்டது. அப்போதே இந்தப் பிரச்னையை சர்வதேச அளவில் கையாள்வதற்கான செயல் திட்டத்தை மேற்கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் என்று பிரதமரை ராஜஸ்தான் அரசு வலியுறுத்தியது.
  • டிசம்பர் - பிப்ரவரி மாதங்களில் லட்சக்கணக்கில் படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகளை இந்தியா ஓரளவு வெற்றிகரமாகச் சமாளித்துவிட்டது.
  • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாநிலங்கள் "ஆர்கனோபாஸ்பேட்' பூச்சி மருந்தைத் தெளித்து வெட்டுக்கிளிகளை அழித்ததுடன் பயிர்களையும் காப்பாற்றிக் கொண்டன.
  • இப்போதைய இரண்டாவது தாக்குதலை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்கிற அச்சத்தில் பல விவசாயிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
  • பாலைவன வெட்டுக்கிளிகள் என்பவை 12 வெட்டுக்கிளி வகைகளில் ஒன்று. இவை ஒரே நாளில் பெருங்கூட்டமாக 130 கி.மீ. வரை கடக்கக் கூடியவை.
  • தங்களின் எடை அளவுக்கு நிகராக உணவு தானியங்களை உட்கொள்பவை. விளைந்த பயிர்கள் இருக்கும் நிலங்களில் தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்தப் பயிர்களையும் அழிப்பவை.
  • இந்த வெட்டுக்கிளி தாக்குதல் உணவுப் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று சர்வதேச உணவு நிறுவனம் பலமுறை எச்சரித்திருக்கிறது.
  • மேற்கு இந்திய மாநிலங்களில் வெட்டுக்கிளித் தாக்குதல் என்பது புதிதல்ல. சாதாரணமாக நவம்பர் மாதம் முதல் கூட்டம் கூட்டமாக வெட்டுக்கிளிகள் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் நுழைவது வழக்கம். வரும் வழியில் பாகிஸ்தானிலும் பெரும் பேரழிவை அவை ஏற்படுத்தும்.
  • இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வெட்டுக்கிளிகளின் தாக்குதல் தொடர்ந்தது. அதற்குப் பருவநிலை மாற்றம் மிக முக்கியமான காரணம். கடந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் மேற்கு இந்தியாவில் தொடங்க வேண்டிய பருவமழை ஆறு வாரம் முன்பாகவே தொடங்கிவிட்டது. நவம்பர் மாதம் வரை நீடித்தது.
  • அதன் விளைவாக, வெட்டுக்கிளிகளின் இனப் பெருக்கத்துக்கு உகந்த சூழலும், உண்பதற்கான பயிர்களும் கிடைத்தன. இப்போது மே மாதம் இப்படியொரு தாக்குதல் நடைபெறுவதற்கு இந்து மகா சமுத்திரத்தில் உருவான புயல்களும் காரணம் என்று கூறப்படுகிறது.

வெட்டுக்கிளிகளாலும் பிரச்னை

  • சரியான நேரத்தில் "ஆர்கனோபாஸ்பேட்' பூச்சிக்கொல்லி மருந்தை பயிர்களின் மீது தெளிப்பதன் மூலம் வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ள முடியும்.
  • பல சதுர கி.மீ. அளவில் பல லட்சம் வெட்டுக்கிளிகளை எதிர்கொள்வதற்குப் போதுமான அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கப்பட வேண்டும்.
  • கடந்த பருவத்தில் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்கள் வெட்டுக்கிளிகளால் 33% பயிரிழப்புகளை எதிர்கொண்டன. இந்த முறை வெட்டுக்கிளித் தாக்குதல் அதைவிட 20 மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால், எந்த அளவுக்குப் பாதிப்பு இருக்கும் என்பதைக் கணிக்க முடியவில்லை.
  • இதுவரை முறையான திட்டமிடல் இருந்ததால், ஓரளவுக்கு வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை இந்தியா எதிர்கொண்டது. தனிப்பட்ட முறையில் அந்தத் தாக்குதலை எதிர்கொள்ள விவசாயிகளால் முடியாது.
  • போதுமான அளவு பூச்சி மருந்தும், அதைத் தெளிப்பதற்கு தேவையான ஊழியர்களும், இயந்திரங்களும் இருப்பதை முன்னெச்சரிக்கையுடன் அரசு உறுதி செய்வதன் மூலம்தான் வெட்டுக்கிளித் தாக்குதலை எதிர்கொள்ள முடியும்.
  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எத்தனையோ பிரச்னைகள் நிலவினாலும், வெட்டுக்கிளிகளை எதிர்கொள்ளும் முயற்சியில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன என்பது மிகப் பெரிய ஆறுதல்.
  • கடந்த ஆண்டும் சரி, இப்போதும் சரி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து கலந்தாலோசனைகளும், கூட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
  • எதிர்கொள்ள இருக்கும் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை முறியடிக்க பாகிஸ்தானுடனும் ஈரானுடனும் இணைந்து முத்தரப்பு நடவடிக்கையை இந்திய அரசு முன்மொழிந்திருக்கிறது.
  • இந்தியாவும் சரி, ஏனைய நாடுகளும் சரி, இன்றைய நிலையில் உணவு தானிய உற்பத்தியில் இடர் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எல்லையில்தான் பிரச்னை என்றால், எல்லை கடந்து வரும் வெட்டுக்கிளிகளாலும் பிரச்னை!

நன்றி: தினமணி (26-05-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories