- சங்கத் தமிழர்கள் ஆண்டை ஆறு பருவங்களாக வரையறுத்திருந்தனர். அவற்றில் இளவேனில் (சித்திரை, வைகாசி) என்பது மிதமான வெப்பமும் தாவரங்கள் செழித்து வளரும் பருவமுமாக, இயல்பாகவே மகிழ்ச்சிக்கான ஒன்றாக இருந்தது. ஆனால், இன்றைய இளவேனில் காலம் எப்படியிருக்கிறது? ஏப்ரல் 14 தொடங்கி ஜூன் 14 வரையிலான காலத்தை இளவேனில் என்று கூற முடிகிறதா?
- ‘இப்போதே வெயில் இப்படி அடிக்கிறதே... இன்னும் போகப் போக என்னவாகுமோ!" என்கிற பேச்சு எல்லா இடங்களிலும் கேட்கத் தொடங்கிவிட்டது. இத்தகைய சலிப்பான மனப்பான்மை ஆண்டின் இந்தப் பருவத்தைக் கடப்பதைக் கடினமாக்கி வீட்டிற்குள்ளேயே முடக்கிப் போட்டுவிடுகிறது. இதே காலகட்டத்தில் வசந்த காலத்தைக் காணும் குளிர்ப் பிரதேசங்களில் வெப்ப அதிகரிப்பு அங்குள்ளவர்களால் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகிறது. அங்குள்ள மரங்களின் இலைகள் நிறம் மாறி, எங்கும் அழகு மிகுந்து காட்சித் தருகின்றன. ஆனால், காலநிலை மாற்றத்தின் பின்னணியில் இதுவும் நீடிக்குமா என்பது கேள்விக்குறிதான்.
இயற்கையின் பேரழகு:
- நமது நாட்டிலும் சில மரங்களில் இலைகள் உதிர்ந்து, புதிய இளந்தளிர்கள் தோன்றி அழகுடன் காட்சியளிக்கின்றன. இந்த இளவேனில் காலத்தில் மிகப் பெரிய அரச மரம் ஒன்றில் பல காகங்கள் கூடுகளைக் கட்டிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு கட்டத்தில் அதிலிருந்த இலைகள் ஒட்டுமொத்தமாக உதிர்ந்து, வெறும் கிளைகளோடு மரம் நின்றுகொண்டிருந்தது.
- அதில் காகங்களின் கூடுகள் மட்டும் ஆங்காங்கே இருப்பது தெரிந்தது. ஆனால், அவை எந்தவித அச்ச உணர்வும் இன்றி, கூட்டைச் செம்மைப்படுத்துவதிலும் முழுமைப்படுத்துவதிலும் தொடர்ந்து ஈடுபட்டன. காகங்கள் அதிக எச்சரிக்கை உணர்வுமிக்கவை. கூட்டிற்கோ குஞ்சுகளுக்கோ தீங்கு வருமென நினைத்தால் உடனடியாக மாற்றுச் செயலில் ஈடுபடும்.
- தேவைப்பட்டால் கூட்டினைக் கலைத்து வேறு பாதுகாப்பான இடங்களில் மாற்றியமைத்துவிடும். ஆனால், இலைகளற்ற அம்மரத்தில் இன்னும் சில நாள்களில் தளிர்கள் துளிர்த்துவிடும் என்கிற அவற்றின் சரியான கணிப்பு பொய்த்துப் போகவில்லை. காகங்களின் கூடுகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் ஆசியக் குயில்களும் அவ்வப்போது அம்மரத்தின் அருகே சுற்றியலைந்து கொண்டிருந்தன.
- காகங்கள் கூடு கட்டி முடித்து, முட்டையிடுவதற்கு முன் பச்சைப்பசேலென இலைகளால் நிரம்பிவிட்ட அம்மரம், காகங்களின் கூடுகளுக்கு இயற்கை அரணாக மாறியிருந்தது. அவற்றின் குஞ்சுகள் பொரிக்கப்பட்டு உணவு தேவைப்படும் நிலையில், அம்மரம் கனிகளால் நிறைந்திருந்தது. அப்போது அம்மரத்தின் சுற்றுவட்டாரம் மைனாக்கள், தேன்சிட்டுகள், தையல்சிட்டுகள், கொண்டை உழவாரன், கிளிகள், குயிலினங்கள், கரிச்சான் குருவிகள் போன்ற பல்வேறு இனப்பறவைகளால் நிறைந்திருந்தது. ஆனால், இத்தகைய இயற்கையின் பேரழகை நாம் கண்டுகொள்வதே இல்லை.
தயாராகும் தாவரங்கள்:
- நமது பகுதியில் வெயிலின் தாக்கம் மார்ச் மாதத்திலிருந்து மெல்ல மெல்ல அதிகரித்து, மே மாதம் உச்சத்தை அடைந்து, கடும் கோடை என்றாகிவிடும். உலகெங்கும் இயற்கையின் வனப்பை அதிக உயிர்ப்புடன் வைப்பது இளவேனில் என்கிற இந்த வசந்த காலம்தான். இந்த இளவேனில் பருவம் இயற்கையைப் புத்தெழில் பெறச்செய்வதோடு உயிரினங்களின் பெருக்கத்திற்கும் காரணமாகின்றது. அதன் காரணமாகவே வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- பகல் பொழுதை அதிக அளவில் கொண்டுள்ள இப்பருவத்தில் அதிகாலை முதல், இயற்கையின் பேரமைதியில் செவிக்கினிய பறவைகளின் அழைப்புகளும் உயிரினங்களின் சுறுசுறுப்பான நடமாட்டங்களும் சுற்றுப்புறத்தை அதிகளவில் இயங்கக்கூடிய வெளியாக்குகின்றன.
- மழைக் காலத்தின் குளிர்ச்சியில் செழித்திருந்த தாவரங்கள் வெயிலின் தாக்கத்தால், அதிக அளவிலான நீராவிப் போக்கைக் கட்டுப்படுத்தித் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும், கடுங்கோடையில் தங்களுக்கான உணவைத் தயாரித்துக்கொள்வதற்கு ஏற்ற வலிமையான புதிய இலைகளை உற்பத்தி செய்துகொள்ளவும் பழைய இலைகளை உதிர்த்து விடுகின்றன.
- பின்னர் புதிய தளிர்களை வேகவேகமாகத் துளிர்க்கவைத்து, பூக்களையும் பிஞ்சுகளையும் தோற்றுவித்து, இனப்பெருக்கத்திற்குத் தாவரங்கள் தயாராகுகின்றன.
பறவைகளின் களிப்பு:
- ஆல், அரசு, மா, கொய்யா, வேம்பு...போன்ற அனைத்து வகையான மரங்களும் பூக்களாலும் கனிகளாலும் நிறைந்து காணப்படுவதைப் பார்க்கலாம். இந்தியாவில் பெரும்பாலான பறவைகளின் இனப்பெருக்கக் காலம் இந்தப் பருவத்தில்தான் நடைபெறுகிறது.
- இந்நிலையில் மரங்களை உறைவிடமாகக் கொண்டு வாழும் பறவைகள், எறும்புகள், வண்டினங்கள், பல்வேறு பூச்சிகள் போன்ற உயிரினங் களுக்கான உணவு தாராளமாகக் கிடைப்பதால், உணவிற்காக அவை செலவிடும் நேரம் குறைந்து அவற்றின் உடலும் மனமும் பூரிப்படை கின்றது. இதனால் நேரத்தைக் களிப்புடன் செலவிட்டுத் தங்களது இனத்தை விருத்தியடைய வைக்க அவை தூண்டப்படுகின்றன. அவை தங்களுக்கான இணைகளைத் தேர்வு செய்து கூடி மகிழ்கின்றன.
- நாம் என்ன செய்கிறோம்? - இதனிடையே முட்டையிடுவதற்குத் தேவையான அழகிய கூடுகளை அவற்றின் மரபிற்கு ஏற்பப் பறவைகள் கட்டுகின்றன. பொதுவாகப் பறவைகள் தங்களுக்கும் தங்களது குஞ்சுகளுக்கும் போதுமான உணவு, தாராளமாகக் கிடைக்கும் காலத்தையே இனப்பெருக்கத்திற்குத் தெரிவுசெய்யும் இயல்புடையவை.
- அத்தோடு அவை காலத்தை மிகச் சரியாகக் கணித்துச் செயல்படும் திறன் பெற்றவை. பொதுவாக இந்த இளவேனில் பருவத்தில் இலைகள் உதிரும் ஆரம்ப நாள்களில் கூட்டைக் கட்டத் தொடங்கும் பறவைகள், கோடைக் காலம் முடிவதற்குள் குஞ்சுகளைப் பறக்கப் பழக்கிவிடுகின்றன.கூடே கட்டத் தெரியாத குயிலினங்கள்கூட மற்ற பறவைகளின் கூடுகளில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யத் தவறுவதில்லை.
- அவையும் இந்த இளவேனில் காலத்தில் தங்களுக்கான முட்டைகளுக்கு ஏதாவது ஒரு பறவையின் கூடு கிடைக்கும் என்கிற ஆனந்தத்தில் கூவி இணைசேர்கின்றன. ஆனால், இயற்கையின் பாதுகாப்பில் பெரும் பங்காற்றவேண்டிய நாம், உயிரினங்கள் மகிழ்ச்சியோடு இயங்கும் இயற்கைக் கொண்டாட்டமான இந்த வசந்த காலத்தை ரசிக்கவும், உயிரினங்களைப் பற்றின சரியான புரிதலைப் பெறவும் கற்றுக்கொண்டால் ஆண்டின் எல்லாப் பருவமும் நமக்கும் இன்பம் மிகும் பருவமாகவே அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 05 – 2024)