இன்ஸ்டகிராமில் படிக்கலாம்
- கரோனாவுக்குப் பிறகு திறன்பேசியிலும் மடிக் கணினியிலும் பாடம் படிப்பது மாணவர்களுக்கு வழக்கமாகிவிட்டது. எந்நேரமும் திறன்பேசியும் கையுமாக இருக்கும் அவர்களுக்குச் சமூக வலைதளம் வழியே நல்லதையும் சொல்லித்தர வேண்டிய கட்டாயமிருக்கிறது. அப்படி இளைய தலைமுறையின் விருப்பச் செயலிகளில் முதன்மை இடத்தில் இருக்கும் இன்ஸ்டகிராமிலிருந்து பயனுள்ள ஐந்து பக்கங்கள்:
இந்தியா இன் பிக்செல்ஸ் (india.in.pixels)
- வரைகலை வடிவமைப்புத் துறையின் அசுர வளர்ச்சியால் இணையத்தில் புரட்சி ஏற்பட்டிருக்கிறது. தகவல்களைச் சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது பெரும் சவாலாக உள்ளது. இதைத் திறம்படச் செய்கிறது ‘இந்தியா இன் பிக்செல்ஸ்’ குழு. அதாவது எந்தவொரு தகவலும் தரவும் ‘இன்ஃபோகிராஃபிக்ஸ்’ முறையில் இப்பக்கத்தில் பதிவிடப்படுகின்றன. உதாரணத்துக்கு, இந்தியத் தேர்தல் முடிவுகள் முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை வரை அனைத்துத் தகவல்களும் எண்-எழுத்து முறையில் ‘இன்ஃபோகிராஃபிக்ஸ்’ வடிவில் பதிவிடப்படுகின்றன. தகவல்கள், செய்திகளை எளிதாகப் புரிந்துகொள்ள முனைபவரும் ஆராய்ச்சி மாணவர்களும் இப்பக்கத்தைப் பின்தொடரலாம். ஏற்கெனவே ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பக்கத்தைப் பின்தொடர்கின்றனர்.
சோ இன்ஃபார்ம்டு (so.informed)
- உள்ளூர் முதல் உலக அரசியல் வரை கவனம்பெற்ற சமூகப் பிரச்சினைகளை அலசி, தகவல்களைப் பகிர்கிறது ‘சோ இன்ஃபார்ம்டு’ குழு. பத்திரிகைகளில் வெளியாகும் விரிவான விளக்கக் கட்டுரைகளின் இன்ஸ்டகிராம் வடிவமாக இதன் பதிவுகள் உள்ளன. ஆனால், கட்டுரையாக அல்லாமல் முக்கியமான தகவல்களை மட்டும் தேர்வு செய்து இன்ஸ்டகிராம் ‘ஸ்லைட்’இல் ஒவ்வொன்றாகப் பதிவு செய்கிறார்கள். இத்தகவல்களைப் படித்து நண்பர்களோடு பகிர்வதும் ‘புக்மார்க்’ செய்துகொள்வதும் எளிது. உலகைச் சுற்றி நடக்கும் முக்கியச் செய்திகளைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் உள்ளவர்கள் இப்பக்கத்தைப் பின்தொடரலாம்.
மேட் ஓவர் மார்க்கெட்டிங் (madovermarketing_mom)
- டிஜிட்டல் தளத்தில் ஒரு விளம்பரத்தை எப்படி எழுதலாம், எப்படி இயற்றலாம் என்பது போன்ற கேள்விகளுக்குத் தங்களது ‘டெமோ’ விளம்பரங்கள் வழியே பதில் சொல்கிறது ‘மேட் ஓவர் மார்க்கெட்டிங்’ குழு. சமூக வலைதளத்தில் வைரலாகும் ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து கவனிக்கும் இக்குழு, அதற்கேற்பத் தனது விளம்பர உத்தியை இன்ஸ்டகிராமில் பகிர்கிறது. அதோடு மட்டுமல்லாமல், மார்க்கெட்டிங் குறித்துத் தனது விளக்கங்களையும் பதிவுசெய்கிறது. பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடரும் இப்பக்கத்தை மார்க்கெட்டிங் தொடர்பாகப் பயிலும் மாணவர்கள் மட்டுமல்லாது, சமூக வலைதளத்தில் தனது இருப்பைப் பதிவுசெய்ய நினைப்பவர்கள், தொழில் முனைவோர் ஆகியோரும் பின்தொடரலாம்.
ஹவ் ஸ்டஃப் வொர்க்ஸ் (howstuffworks)
- ‘Did you know’, ‘Facts’ எனத் தொடங்கும் இப்பக்கத்தின் பதிவுகள் அறிவியல், வரலாறு எனப் பல துறைகளையும் உள்ளடக்கிய தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. உலகின் உயர்ந்த மனிதர் யார் என்பது முதல் கண்ணாடியைத் துடைப்பது எப்படி என்பது வரை பல கேள்விகளுக்கு அறிவியல் ரீதியான பதில்களைப் பதிவு செய்கிறது. எழுத்துகளாக அல்லாமல் ஒளிப்படங்கள், காணொளிகளுடன் கூடிய விளக்கப் பதிவுகள் என்பதால் பார்ப்பவருக்கும் படிப்பவருக்கும் சலிப்பு ஏற்படுவதில்லை. 2000க்கும் அதிகமான கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கும் இப்பக்கத்தை ஏராளமானோர் பின்தொடர்கின்றனர்.
இங்கிலிஷ் கிராமர் டிப்ஸ் (english.grammar.tips)
- வழக்கமாகப் பள்ளிப் புத்தகங்களிலும் பத்திரிகை களிலும் ஆங்கில இலக்கணம் குறித்த கட்டுரைகள் வெளியாகும். ஆனால், இன்ஸ்டகிராம் தளத்தில் பிடித்த நேரத்தில் தினம் ஒரு வகுப்பு என்கிற முறையில் ஆங்கில இலக்கணத்தைக் கற்க இப்பக்கத்தைப் பார்க்கலாம். தொடக்க நிலை இலக்கணப் படிப்பு முதல் போட்டித் தேர்வுக்கான இலக்கணம் வரை அனைத்தும் இப்பக்கத்தில் பதிவு செய்யப்படுகின்றன. நாள்தோறும் சில நிமிடங்கள் இப்பக்கத்தைப் புரட்டினாலே போதும், ஒன்றிரண்டு இலக்கணப் பாடங்களைப் படித்துவிடலாம். மாணவர்கள் முதல் பெரியோர் வரை சரளமாக ஆங்கிலத்தில் எழுத, பேச விரும்பும் அனைவருக்கும் இப்பக்கம் பயனுள்ளதாக அமையும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 – 10 – 2024)