- உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசியின் சில்க்யாரா பகுதியில் சுரங்கப் பாதையில் சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் பெரும் போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சில்க்யாரா பகுதியில், ‘சார் தாம் நெடுஞ்சாலைத் திட்ட’த்தின் ஒரு பகுதியாக, தேசிய நெடுஞ்சாலை 134இல் 4.5 கிலோமீட்டர் நீளமுள்ள இருவழிச் சாலைக்காகச் சுரங்கம் தோண்டும் பணி நடந்துவந்தது. நவம்பர் 12, தீபாவளி நாளன்று அங்கு ஏற்பட்ட விபத்தில், 41 தொழிலாளர்கள் சுரங்கத்தினுள் சிக்கிக்கொண்டனர். விபத்து நடந்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அவர்கள் அனைவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டுவிட்டனர்.
- ஆனால் பிரச்சினை இத்துடன் முடிந்துவிடவில்லை. இமயமலைப் பகுதியில் நிலச்சரிவு, திடீர் வெள்ளம், நிலநடுக்கம் என இயற்கைச் சீற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரமடைந்து வருகின்றன. இமயமலையின் ஒருமுனைக்கும் மறுமுனைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் இயற்கைப் பேரிடர்கள் தொடர் நிகழ்வுகளாக மாறியுள்ளன. இமயமலைத் தொடரில் அமைந்துள்ள இந்திய மாநிலங்கள் அனைத்தும் இப்பேரிடர்களால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. இந்தப் பின்னணியில்தான் புனித யாத்திரை, சுற்றுலா, வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி - சமவெளிப் பகுதிகளுக்கு நிகராக - சாலை, சுரங்கம், அணை போன்ற கட்டுமானப் பணிகளை அரசு அங்கு மேற்கொண்டுவருகிறது.
- இந்தப் பணிகளின்போது மலைச்சரிவுகள் வெட்டப்படுதல், சுரங்கம் அமைத்தல், மலைப் பகுதி தோண்டப்படுதல், தோண்டி எடுக்கப்பட்ட மண் ஆங்காங்கே கொட்டப்படுதல் போன்ற செயல்பாடுகளால், இப்பகுதியின் இயல்புத்தன்மை பாதிக்கப்படுகிறது. இந்தக் காரணங்களால்தான், ‘சாா் தாம்’ (பத்ரிநாத், கேதாா்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி) எனப்படும் புனிதத் தலங்களை இணைப்பதற்கான நெடுஞ்சாலைத் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே பலத்த எதிா்ப்புகள் எழுந்தன. பயண நேரத்தில் ஒரு மணி நேரத்தைக் குறைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பணியின்போது நேர்ந்த விபத்து, பல நூறு மணி நேரங்களாக 41 உயிர்களைச் சுரங்கத்துக்குள் முடக்கியது கவனிக்கத்தக்கது.
- ஒருவேளை பணிகள் முடிந்து போக்குவரத்து தொடங்கிவிட்ட பிறகு இத்தகைய ஒரு விபத்து ஏற்பட்டிருந்தால், அதன் விளைவுகளை யோசித்துக்கூடப் பார்க்க முடியவில்லை. சிக்கிக்கொண்ட தொழிலாளர்கள், உடல்ரீதியான பாதிப்புகளுடன் உளவியல் நெருக்கடியையும் எதிர்கொண்டிருப்பார்கள். இந்நிலையில் அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டுவிட்டது அவர்களின் குடும்பத்தினரை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியர்களையும் நிம்மதியடையச் செய்துள்ளது. நடைமுறையில் உள்ள மிகப் பெரிய தடைகள், இயற்கைப் பேரிடர்கள், கட்டுமானச் செயல்பாடுகளால் விளையும் ஜோஷிமட் போன்ற செயற்கைப் பேரிடர்கள் என முந்தைய அனுபவங்களும் கண்கூடாக உள்ள நிலையில், அவற்றை மீறி இத்தகைய ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டுமா என்பதே சாமானியர்களின் கேள்வியாக உள்ளது.
- பல்வேறு தொழில்நுட்பங்கள்-கருவிகள் பயன்படுத்தப்பட்டும் தொழிலாளர்களை உடனடியாக மீட்பது கடினமாக இருந்தது; அப்பகுதி நிலத்தின் தன்மை, கருவிகளின் போதாமை போன்ற காரணங்களும் மீட்புப் பணியில் பின்னடைவை ஏற்படுத்தின. இயற்கைப் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள விரிவான திட்டம் இல்லாமல், வணிக நோக்கத்துக்காக மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்புகள் நிலப்பகுதியை நிலைகுலையச் செய்யும் என்பதை அரசும் மக்களும் உணர வேண்டும். இனியொரு முறை இத்தகைய விபத்து நேர்ந்துவிடாத வகையில் அனைத்துவிதமான முன்னேற்பாடுகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 11 – 2023)