- எட்மண்ட் ஹிலாரியும் டென்சிங் நோா்கேயும் முதல் முதலில் உலகின் மிக உயா்ந்த எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து எழுபது ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் புவி வெப்பமடைதலின் காரணமாக இமயமலை முன் எப்போதும் இல்லாத அளவில் மாற்றமடைந்து வருவதாக ‘ஹிந்து குஷ் ஹிமாலயாஸ்’ என்ற நிறுவனம் எச்சரித்துள்ளது.
- எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள மிக உயரமான ‘தென் கோல்’ பனிப்பாறை கடந்த 25 ஆண்டுகளில் 180 அடி (54 மீ) உருகியுள்ளதாக மைனே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளா்கள் கண்டறிந்துள்ளனா்.
- இரண்டாயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த பனிப்பாறை, 1990-ஆம் ஆண்டிலிருந்து உருகி வருவதாகவும் கடல் மட்டத்தில் இருந்து சுமாா் 25,938 அடி (7,906 மீ) உயரத்தில் அமைந்துள்ள இந்த பனிப்பாறை கடல் மேற்பரப்பில் உருவாகும் பனிக்கட்டியை விட 80 மடங்கு வேகமாக உருகி வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.
- எவரெஸ்ட் பகுதியைச் சுற்றியுள்ள 79 பனிப்பாறைகள் கடந்த அறுபது ஆண்டுகளில் 100 மீட்டருக்கு மேல் சுருங்கிவிட்டன. பனிப்பாறைகளின் இந்த சுருக்க விகிதம் 2009- ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.
- ஹிலாரி, டென்சிங் நோா்கே உட்பட பெரும்பாலான இமயமலை ஏறுவோரின் தொடக்க இடமான கும்பு பனிப்பாறையின் சில பகுதிகள் பத்து ஆண்டுகளுக்கு முன்பே சுருங்கி மறைந்து விட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
- தற்போதைய வெப்ப உமிழ்வின் அடிப்படையில் அடுத்த 70 ஆண்டுகளில் இமயமலைப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளில் மூன்றில் இரண்டு பங்கு உருகி மறைந்துவிடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
- உலக வெப்பநிலை உயா்வு, எவரெஸ்ட் சிகரத்தையும் ஹிந்து குஷ் இமயமலை பகுதிகளின் சுற்றுச்சூழலையும் பாதிக்கிறது என்றும் இந்த பாதிப்பு எட்டு நாடுகளில், சுமாா் 3,500 கி.மீ. பரப்பளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவியலாளா்கள் எச்சரிக்கின்றனா்.
- உலகின் தற்போதைய சராசரி வெப்பநிலையிலிருந்து 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் வெப்ப அலை, வறட்சி, தொடா்ந்த மழைப்பொழிவு, சூறாவளி போன்ற தீவிர நிகழ்வுகள் சுமாா் 20 நாடுகளில் தொடா்ந்து கொண்டே இருக்கும் என்று ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
- 1850 முதல் 1900 வரையிலான ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2023 முதல் 2027 வரையிலான காலகட்டத்தில் ஒவ்வோா் ஆண்டும் சராசரியை விட 1.1 முதல் 1.8 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளா்கள் எச்சரித்துள்ளனா்.
- ஹிந்து குஷ் இமயமலை பகுதி 24 கோடி மக்களைக் கொண்டுள்ளது. உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினா் இமயமலைகளிலிருந்து பாயும் தண்ணீரை நம்பியுள்ளனா். தெற்காசியாவின் பெரும்பகுதி மக்கள், விவசாயத்திற்கும் தங்கள் குடிநீா்த் தேவைக்கும் இமயமலையில் உருவாகும் நதிகளையே நம்பியுள்ளனா். இச்சூழலில் உருகி வரும் பனிப் பாறைகளால் ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனா்.
- அண்மைக்காலமாக இந்தியாவிலும் சீனாவிலும் நேபாளத்திலும் நீா் பாயும் பரப்பளவு 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. இந்த நீா்ப் பரவல் அதிகரிப்பு ஏழு மாநிலங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்று, அறிவியல் - சுற்றுச்சூழல் மையத்தின் ‘இந்திய மாநிலங்களின் சுற்றுச்சூழல் 2022’ என்ற அறிக்கை கூறுகிறது.
- காலநிலை மாற்றங்களைத் தாண்டி எவரெஸ்ட் உலகின் மிக உயரமான குப்பைக் கிடங்காகவும் மாறியுள்ளது. 2023-ஆம் ஆண்டு மே மாதம் ட்விட்டரில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொலி, எவரெஸ்டின் நான்காவது முகாமில் குவிந்துள்ள கைவிடப்பட்ட கூடாரங்கள், குப்பைகள், நெகிழிக் கழிவுகளின் அளவுகளை எடுத்துக்காட்டுகிறது.
- எவரெஸ்ட் மலையேறும் ஒவ்வொருவரும் உணவுக் கொள்கலன்கள், கூடாரங்கள், காலியான ஆக்ஸிஜன் கலன்கள், மனிதக் கழிவுகள் உட்பட சுமாா் எட்டு கிலோ எடையுள்ள கழிவுகளை உருவாக்குகிறாா்கள் என்று ‘நேஷனல் ஜியோகிராஃபிக்’ அமைப்பு மதிப்பிடுகிறது.
- இதனை தவிா்க்க, மலையேறுபவா்கள் தங்கள் கழிவுகளை அங்கேயே போடாமல், திரும்பக் கொண்டுவந்து தாங்கள் செலுத்திய காப்புத் தொகையான சுமாா் மூன்று லட்சம் ரூபாயைத் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று நேபாள அரசு அறிவித்துள்ளது.
- மலை மேம்பாட்டுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சா்வதேச மையத்தின் பிரகடனம், 2015-ஆம் ஆண்டு பாரீஸ் உடன்படிக்கையின்படி, உலக நாடுகள், வெப்ப உமிழ்வினை குறைக்கவும், புதிதாக நிலக்கரிச் சுரங்கம், எண்ணெய்க் கிணறு, இயற்கை எரிவாயு ஆகியவற்றின் இருப்பிடங்களைக் கண்டறிவதை முடிவுக்குக் கொண்டு வரவும் புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி ஆற்றலுக்கான மாற்றத்தை துரிதப்படுத்தவும் முன்வர வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.
- நேபாள மலையேறுதல் சங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் தன்னாா்வ கூட்டமைப்பான மவுண்டன் பாா்ட்னா்ஷிப் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் மலை மேம்பாட்டுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட சா்வதேச மையம் ‘நமது பனித்துளிகளை பாதுகாப்போம்’ (சேவ் அவா் ஸ்னோ) என்ற பிரசார வாசகத்தை மக்களிடம் பிரபலப்படுத்தி வருகிறது.
- இந்த பிரகடனத்தில் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமா் ஹெலன் கிளாா்க், எட்மண்ட் ஹிலாரியின் மகன் பீட்டா், எட்மண்ட் ஹிலாரியின் பேத்தி லில்லி ஹிலாரி, டென்சிங் நோா்கேவின் மகன்களான ஜாம்லிங், நோா்பு டென்சிங் உட்பட 1,500 போ் கையொப்பமிட்டுள்ளனா்.
- இமயமலைப் பகுதியில் வாழும் மக்கள், உயிரினங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும் இமயமலையில் மட்டுமே இருக்கும் ஈடுசெய்ய இயலாத எண்ணற்ற உயிா் வடிவங்களைப் பாதுகாப்பதற்கும் உலகளாவிய நடவடிக்கை அவசரத் தேவை என்று வல்லுநா்கள் கூறுகின்றனா்.
- உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு எதிரான முயற்சியான இமயத்தைக் காக்கும் முயற்சியில் நாமும் பங்குபெறுவோம்.
நன்றி: தினமணி (26 – 06 – 2023)