TNPSC Thervupettagam

இமானுவேல் சேகரன் நூற்றாண்டு: முற்றுப்பெறட்டும் சாதிய வேறுபாடுகள்

October 9 , 2024 98 days 119 0
  • ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகி இமானுவேல் சேகரனின் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்தத் தருணம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இமானுவேல், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளே செல்லூரில் அக்டோபர் 9, 1924இல் பிறந்தவர்.
  • கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய இமானுவேல், தன் சொந்த நலனைவிடவும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் மீதுதான் அதிக அக்கறை கொண்டிருந்தார். காங்கிரஸ் இயக்கம் ஒருங்கிணைத்த ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் தனது பதின்ம வயதிலேயே இமானுவேல் பங்கேற்றது அதற்கான முதன்மைச் சான்று.
  • ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய அனுபவம் உள்ள இமானுவேல், ஆங்கிலம், இந்தி, ரஷ்ய மொழி, மலையாளம் உள்படப் பல மொழிகளைக் கற்றறிந்திருந்தார். மட்டுமல்லாது, ராணுவத்தில் வேறு பண்பாடுகளின் பரிச்சயமும் அவருக்கு ஏற்பட்டது. தனது சொந்த மண்ணில், சாதியின் பெயரால் மக்கள் ஒடுக்கப்படுவது குறித்துக் கவலை கொண்டார். அதற்கு எதிராகப் போராடத் தீர்மானித்தார்.
  • 1953இல் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை உருவாக்கி, அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தினரையும் உள்ளடக்கி சாதி விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார். ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாட்டில் சாதியப் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு, விதவை மறுமணத்தையும் தீர்மானமாக நிறைவேற்றினார்.
  • தீண்டாமைக் கொடுமை நிலவும் கிராமங்களுக்கெல்லாம் சென்று மக்களை ஒருங்கிணைத்துப் போராட்டங்களை நடத்தினார். குலக்கல்வி முறையைக் கடுமையாக எதிர்த்தார். இரட்டைக் குவளை முறை எதிர்ப்பு மாநாட்டை 1954இல் அருப்புக்கோட்டையில் நடத்தினார். 1956இல் அம்பேத்கரின் மறைவுக்காகப் பெரிய இரங்கல் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
  • ஒடுக்கப்பட்ட மக்களிடையே அன்றைக்கு அது பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுடுகாட்டுப் பாதை பிரச்சினை அன்றும் இருந்தது. அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, சுமுகத் தீர்வு பெற இமானுவேல் காரணமாக இருந்தார். 1957இல் நடந்த முதுகுளத்தூர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் மிக்கது. இந்தத் தேர்தலில் ஃபார்வார்டு பிளாக் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
  • ஒடுக்கப்பட்டோருக்கான எழுச்சி மிக்க தலைவராக உருவாகிவந்த இமானுவேல், தேர்தலில் முக்கியமான தலைவராகச் செயல்பட்டார். அவரது இந்த மக்கள் செல்வாக்கை காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக்கொள்ள விரும்பியது. கக்கன் மூலம் அது சாத்தியமானது. ஆதிக்கச் சாதிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக இமானுவேல் அதைக் கருதியிருக்கலாம்.
  • அந்தத் தேர்தலில் ஃபார்வார்டு பிளாக் கட்சி வெற்றிக்குப் பிறகு முதுகுளத்தூரில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தப் பிரச்சினையால் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் சி.வி.ஆர்.பணிக்கர் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுசெய்தார். பேச்சுவார்த்தையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக இமானுவேல் பங்கேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
  • ஆரம்பம் முதலே, ஆதிக்கச் சாதித் தரப்புக்கு இமானுவேல் சேகரனின் போர்க்குணம் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஊர் திரும்பிய இமானுவேல் படுகொலை செய்யப்பட்டார். தன் வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்காக உழைத்த அவர், அதன் மூலம் சாதிய அடக்குமுறைகளை எதிர்கொள்ள வழிகாட்டினார்.
  • அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த மக்களுக்கு, அவற்றைப் பெறுவதற்காகப் போராடும் துணிச்சலை ஊட்டினார். அவரது மரணம், ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான விதையாக மண்ணில் ஊன்றப்பட்டது. சாதி வேறுபாடுகளைத் தாண்டி, தமிழ்ச் சமூகம் கைகோத்து முன்னேறுவதை இமானுவேல் சேகரனின் நூற்றாண்டில் ஒரு லட்சிய இலக்காகக் கொள்வோம்!

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories