- மேற்கத்தியத் தத்துவவியல் வரலாற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் களுள் ஒருவர், பிரஷ்யா (Prussia-அன்றைய ஜெர்மனி) நாட்டைச் சேர்ந்த இம்மானுவேல் காண்ட். 18ஆம் நூற்றாண்டில் எழுதிவந்த காண்ட்டின் தத்துவக் கோட்பாடு, இன்றளவும் பெரிதாக விவாதிக்கப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் வருகிறது.
- இருவிதத் தத்துவ அணுகுமுறைகள்: தம் கடைசிக் காலக்கட்டத்தில் ஆற்றிய உரை ஒன்றில், நம் தத்துவ விசாரமானது இம்மூன்று கேள்விகளைச் சுற்றியே வருகிறது என்கிறார் காண்ட்: “என்னால் அறிய முடிவது என்ன?”, “நான் செய்ய வேண்டியவை யாவை?”, “நான் எதை எதிர்பார்க்கலாம்?”.
- இம்மூன்று கேள்விகளையும் முக்கியமான ஒரே கேள்விக்குள் அடக்கிவிடலாம் என்றும் அவர் சொல்கிறார்: “மனிதன் என்றால் என்ன?” - அதாவது, நம் தத்துவச் சிந்தனை முழுவதுமே மனிதத் தன்மையின் வெவ்வேறு கோணங்களை அறியும் நோக்கையே கொண்டுள்ளதாகச் சொல்கிறார் காண்ட்.
- மேற்கத்தியத் தத்துவ மரபில் பொதுவாக மனிதனைப் பற்றிய கேள்விக்கான பதிலை இருவகையாகப் பிரிக்கலாம்: ஒன்று, மனிதனை இயற்கையின் அல்லது சமூக-வரலாற்றின் விளைவாகக் கருதி, நம் எண்ணங்களையும், செயல்பாடுகளையும் வெளிப்புறச் சட்டங்களின் தீர்மானங்களுக்கு உட்பட்டதாகப் பார்க்கும் அணுகுமுறை; மற்றொரு பார்வை, மனிதனைச் சுதந்திரத்தின் ஒரு தொகுப்பாகக் கருதி, நம் எல்லையற்ற அறிவினாலும், கட்டுப்பாடற்ற விருப்ப உரிமையினாலும் நம்மையே நாம் கண்டடைந்துகொண்டிருக்கிறோம் என்பது. முரணாகத் தெரிகிற இவ்விரு பார்வைகளையும் ஒன்றுசேர்க்கிறது காண்ட்டியச் சிந்தனை.
- அதாவது, மனிதனை அறியும் இலக்குடன் தொடங்குகிற நம் தத்துவ விசாரணை இருவித இணைகோடுகளாகச் செல்கிறது: ஒன்று, மனிதனை மூன்றாமவர் கண்ணோட்டத்தில், புறவய விளக்கங்களுக்கும், கணிப்புகளுக்கும் அடங்கிய அறிபொருளாக அணுகும் பார்வை; இரண்டாவது, மனிதனை முதல்-நபர் கண்ணோட்டத்தில், வெளிப்புற விதிகளுக்கு அப்பாற்பட்ட சுதந்திரத்தின் கட்டுப்பாடுகளுடன் செயல்படுபவர்களாகக் கருதும் பார்வை. காண்ட்டைப் பொறுத்தவரை, இவ்விரு அணுகுமுறைகளும் முரணில்லா ஒத்திசைவு உடையவை.
- அதாவது, இயற்கை மற்றும் செயற்கைச் சட்டங்களுக்கு உள்பட்ட மனிதனை அறிவதன் மூலமாக, சுதந்திரத்தின் எல்லையை நன்கு உணர்ந்து வாழலாம்; மனிதனுடைய சுதந்திரத்தின் வரையறையை உணர்வதன் மூலமாக, வெளிப்புறக் காரணிகளின் இயக்கத்தை நன்கு அறிந்துகொள்ளலாம்.
- ஆக, இவ்விரு அணுகுமுறைகளும் மனித இயல்பை முழுமையாக அறிந்துணர்வதற்கு இன்றியமையாதவை. காண்ட் எழுதுகிறார்: “மனிதன் தேவனாக வேண்டும் என்ற லட்சியம் என்னிடம் இல்லை; என் பெருமையெல்லாம் ஒரு மனிதனாக உணர்வதில்தான் இருக்கிறது.”
- தோற்றப்பாட்டு அறிபொருளாக மனிதன்: மேலே முதலாவதாகக் குறிப்பிட்ட தத்துவ அணுகுமுறை கிட்டத்தட்ட ஒரு அறிவியல் பார்வையே. அதாவது, நமக்குத் தோற்றமளிக்கும் நம்மையே, மூன்றாமவர் கோணத்தில் நாம் ஆய்வு செய்கிறோம். இப்படி, இயற்கை-சமூக ஒழுங்குமுறைக்கு உள்பட்ட மனிதனைப் பற்றிய பொதுவான கூற்றுகளையும், கோட்பாடுகளையும் முன்வைக்கிறோம்.
- மனிதனின் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து முறைப்படுத்தப்பட்ட கோட்பாடுகளை அனுமானிக்கும் இந்தத் தத்துவப் பிரிவை ‘மானுடவியல்’ என்றழைக்கிறார் காண்ட். இப்படி மனிதனை இயற்கையின் ஒரு பகுதியாக அறிவதன் மூலமாக, சந்திர-சூரிய கிரகணங்களைக் கணிப்பதைப் போலவே, சட்டங்களுக்கு உள்பட்ட நம் செயல்பாடுகளையும் கிட்டத்தட்ட கணித்துவிடலாம் என்கிறார் காண்ட்.
- மீண்டும் மீண்டும் பொய் பேசும் ஒருவரை எடுத்துக்கொள்வோம்; அவர் பொய் சொல்லும் தருணங்களை அவதானித்து, அவரின் உள்நோக்கங்களை அனுமானித்து, பொய் சொல்வதற்கான சூழல் சார்ந்த காரணிகளை உய்த்துணர்ந்து, அவர் எப்போதெல்லாம் பொய் பேசுவார் என்பதைக் கணித்துவிடலாம்.
- இப்படித் தனிப்பட்ட நபரின் நடத்தையை மட்டுமல்லாமல், நம் ஒட்டுமொத்த மனிதச் சமூகம் பயணிக்கும் வழியைக்கூட இந்த ‘மானுடவியல்’ பிரிவால் கணிக்க முடியும் என்பது காண்ட்டின் நம்பிக்கை. இன்று கல்லூரிகளில் பாடத் துறைகளாக விளங்குகிற மாந்தர் இன உயிரியல், உளவியல், பண்பாட்டு மானுடவியல், வரலாற்றியல், சமூகவியல் போன்றவற்றுக்கு முன்னோடியாக இருப்பது காண்ட் முறையாக மேம்படுத்த நினைத்த ‘மானுடவியல்’ என்கிற தத்துவப் பிரிவுதான்.
- தோற்றப்பாட்டுக்கு அப்பாலான மனிதன்: காண்ட்டியத் தத்துவத்தின் தனித்துவம் என்பது ‘மானுடவியல்’ விதிகளுக்கு அப்பாலிருக்கும் மனிதனை அறிய-மதிப்பிட முற்படுவதில் இருக்கிறது. இந்த இரண்டாம் தத்துவ அணுகுமுறை, அறிவியல் விளக்கங்களுக்கும், விவரணைகளுக்கும் ஆளாகும் மனிதனை நெறிமுறையுடனும் மதிப்பிடலுடனும் அணுகுகிறது. இது, மனிதன் யார் என்பதைத் தாண்டி, மனிதன் யாராக இருக்க வேண்டும் என்பதைப் பற்றியது. “மனிதனின் மிகப்பெரிய சிக்கலே, ஒரு மனிதனாக இருக்க ஒருவர் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்வதுதான்” என காண்ட் எழுதுகிறார்.
- நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி நாம் செயல்படும் நடைமுறைத் தளத்தில் மட்டுமல்லாமல், நாம் சிந்திக்கும் அறிமுறைத் தளத்துக்கும் பொருந்தும். மனிதர்களை அறிபவர்களாகவும், செயல்படுபவர்களாகவும் கருதி, நம் அறிவை-செயல்களைச் சாத்தியமாக்கும் மூலக் கொள்கைகளை அறிந்து, பின் அக்கொள்கைகளைச் சரிவரப் பயன்படுத்தி, முறையாகச் சிந்திக்கவும் செயல்படவும் முனைவதே இந்தத் தத்துவ அணுகுமுறையின் நோக்கமாகும். காண்ட் இந்த தத்துவப் பிரிவை ‘திறனாய்வு மீஇயற்பியல்’ (Critical metaphysics) என்றழைக்கிறார்.
- இது முதலில் செல்லும் வழி, மனிதன் அறியும் திறன்களை நோக்கி இருக்கிறது. இதன்படி மனித அறிவு என்பது, நம் புலன்களின் ஊடாக உணரப்படும் மூலப்பொருள்களைச் சில அடித்தளக் கொள்கைகளுடன், நம் அறிதிறன்கள் ஒருங்கிணைப்பதால் உருவாகிறது. ஆக, நம் புலன்களின் ஊடாக வராமல் தானாக நம்முள் உருவாகும் கருத்தாக்கங்களை நிராகரிக்க வேண்டும் என்று எச்சரிக்கிறார் காண்ட்.
- கடவுளின் இருப்பு, விதிகளுக்கு அடங்காத ஆன்மிக ‘நான்’, மரணத்துக்குப் பிறகான வாழ்வு என்பது போன்ற கருத்துக்கள் இதில் அடங்கும். எனவே, நம் புலன்களை அடிப்படையாகக் கொண்டு அறியப்படும் அறிவியல் கருத்துகளை மட்டுமே ஏற்கக்கூடிய மனித அறிவாகிறது.
- எனவே, ‘திறனாய்வு மீஇயற்பியல்’ முதலில் மனிதனின் கட்டுப்பாடற்ற அறிவுச் சுதந்திரத்துக்கு முறையான வரம்புகளை விதிக்கிறது. இதன் அடுத்த இலக்கு, மனிதனின் செயல்திறன்களை ஆய்வுசெய்வது. அறிவுத் தளத்தில் நம் சுதந்திரத்துக்குக் கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்திய இந்தத் தத்துவப் பிரிவு, நடைமுறைத் தளத்தில் மனிதச் செயல்பாட்டுக்கான முழுச் சுதந்திரத்தை ஆதரிக்கிறது. இதன்படி செயல்பாடுகளில் மனிதச் சுதந்திரம் என்பது, நம் விருப்ப உரிமை காரணத் திறனின் முழு ஆதிக்கத்துடன் இயங்குவதில்தான் இருக்கிறது.
- அதாவது, உணர்வுகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நம் தேவைகளையும், இன்பத்தை நாடும் ஆசைகளையும் திருப்திப்படுத்தும் செயல்கள் அனைத்தும் சுதந்திரமற்றவை; மாறாக, அப்பழுக்கற்ற காரணத் திறனால் செயல்படும்போது மட்டுமே நாம் சுதந்திரமாகச் செயல்படுகிறோம் என்பது இக்கருத்து.
- இந்தச் சுதந்திரத்தால்தான், மனிதனின் அறநெறிக் கொள்கைகள், சமூக நீதி, சமத்துவ உரிமைகள் சாத்தியமாகின்றன. ஆக, மதிப்புமிக்க இந்தத் தனிமனிதச் சுதந்திரத்தை நிரூபிக்கின்ற இந்தத் தத்துவப் பிரிவு, காண்ட்டின் உன்னதமான பங்களிப்பாகப் பார்க்கப்படுகிறது.
- மனிதத்தைத் தூக்கிப்பிடிக்கும் காண்ட்டியம்: காண்ட்டியச் சிந்தனையின் அடிப்படைத் தேடல் மனிதத்தை நோக்கியே இருக்கிறது. காண்ட் எழுதுகிறார்: “என் மனம் ஒரு ஆராய்ச்சியாளனுடையது… ஆனால், அறிவை நோக்கிய என் விசாரணை மனிதத்தையும், மனித உரிமைகளையும் நிலைநாட்டும் விழுமி யங்களைப் புகட்டவில்லையென்றால், நான் என்னைப் பயனற்றவனாகவே உணர்வேன்.” மனிதனைச் சரிவர அறிந்துணர்வதன் மூலமாக மனிதர்களை மேம்படுத்தும் முயற்சியே காண்ட்டியத் தத்துவத்தின் சிறப்பு.
நன்றி: இந்து தமிழ் திசை (22 – 04 – 2024)