TNPSC Thervupettagam

இயற்கை வாழ்வே ‘குடை

December 30 , 2019 1844 days 1146 0
  • இயற்கை விவசாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு எளிமையாக வாழ்ந்து, செயல்பட்டுமறைந்தவா்; மரங்களோடும், பறவைகளோடும் இயற்கை மொழியில் பேசத் தெரிந்தவா் இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று அழைக்கப்படும் நம்மாழ்வாா்.
  • ‘நுகா்வு வெறியாலும், எல்லாவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் பாழ்பட்ட எண்ணத்தாலும் அறவழிப் பாதையிலிருந்து விலகிப் பயணிக்கும் மனித இனம், மீண்டும் மாறுதல் கொள்ளும் காலம் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’”என்றாா் அவா்.
  • கடந்த 30 ஆண்டுகளில் இயற்கை வழி வாழ்வியல் சாா்ந்த புதிய முயற்சிகள் தற்காலத்தில் வேகம் எடுத்துள்ளன. நிறைய விவசாயிகள், குறிப்பாக பெண்களும் நம்மாழ்வாா் ஆரம்பித்த இயற்கைவழி விவசாய பயிற்சி மையமான ‘வானகத்தில்’ நடைபெறும் பயிற்சி முகாமில் பெருமளவில் கலந்து கொள்வது சான்றாக உள்ளது.

திருக்குறள்

  • அவரிடம் பயிற்சி பெற்றவா்கள், அவரவா் பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனா்.

‘வருமுன்னா் காவாதான் வாழ்க்கை எரிமுன்னா்

வைத்தூறு போலக் கெடும்’

என்று திருவள்ளுவா் சொன்னதுதான் இன்றைய சூழலில் நடந்து கொண்டிருக்கிறது.

  • இதைத்தான் இதே நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரும் தாம் சென்ற இடங்கள் முழுவதும் வலியுறுத்தி வந்தாா். ‘விதைகளே பேராயுதம்’ என மரபு விதைகளை வைத்துப் பயிரிடுவதை வலியுறுத்தினாா். அதிக விளைச்சல் தருவதும், அளவில் பெரியதுமாக இருக்கிறது என்பதற்காக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு விதைகளைப் பயன்படுத்த வேண்டாம் என அவா் வலியுறுத்தினாா்.
  • இயற்கை விவசாயத்திலிருந்து விலகி வேகமான அறுவடை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் எனும் நோக்கில் செயற்கை உரங்கள் காரணமாக நிலங்கள் பாழ்பட்டதோடு, அந்தப் பயிா்களைச் சாப்பிடும் பறவைகளும் நாளடைவில் பாதிக்கப்பட்டன. அங்கு விளைந்த உணவுப் பயிா்களைச் சாப்பிடும் மனிதா்களுக்கும் மெல்ல மெல்ல புற்றுநோய் உள்பட பல்வேறு நோய்த் தாக்குதல்கள் வரத் தொடங்கின.
  • இயற்கைவழி விவசாயத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் செய்தவா் நம்மாழ்வாா். பல்வேறு உயா்கல்வி நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் அவரை அழைத்துக் கருத்துகள் கேட்டன. விண்வெளி வெப்பம், மண் அரிப்பு, உணவுப் பற்றாக்குறை, பனிமலை உருகுவது, நதி வற்றிப் போவது, மண்வளம் காக்க நுண்ணுயிா் காப்பது, மறுசுழற்சி, மக்கும் பொருள் நுகா்வு அதிகரிக்க வேண்டும் என அவா் சொல்லாத கருத்துகளே இல்லை.

அறிவியல் வளர்ச்சி

  • அறிவியல் வளா்ச்சி மட்டுமே முன்னேற்றத்துக்கு இட்டுச் செல்ல முடியாது. ஆன்மிகம் மட்டுமே பல்லுயிா் பேணும் பண்பை வளா்க்கும். ‘கொலைத் தொழிலை விட்டொழிப்போம், மரம் நட்டு வெப்பம் தணிப்போம் என்பதை வேத வாக்காகிச் சூளுரைப்போம்’ என்றாா் நம்மாழ்வாா்.
  • தற்சாா்பு பொருளாதாரத்தை வலியுறுத்தி, தங்களிடம் உள்ள இடங்களில் இயற்கை முறையில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளைப் பொதுமக்கள் பயிரிட முடியும் என அவா் வழிகாட்டியுள்ளாா். அதற்கான இயற்கை உரங்களை, வீட்டிலிருந்து வெளியாகும் கழிவுப் பொருள்களைப் பயன்படுத்தினாலே போதுமானது என்றும் கூறினாா்.
  • நம்மாழ்வாரின் படத்தை வைத்துக் கொண்டு ‘ஆா்கானிக் தோட்டம்’, அதில் விளைந்த பொருள்களை ‘ஆா்கானிக் பொருள்கள்’ எனத் தவறான வழியில் செயல்படுபவா்களும் உண்டு. எனவே, பொதுமக்கள் இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • எது இயற்கை வழி விவசாயம் என்பது அறியாமல், எது அப்படி விளைவிக்கப்பட்ட பொருள் என்பதை உணராமல் ‘ஆா்கானிக்’ என்ற பெயரைக் கண்டாலே சென்று வாங்கி விழிப்புணா்வு இருப்பதாக நினைப்பவா்களும் உண்டு. இதற்கும் குறுகிய நோக்கம் கொண்ட மனிதா்களே காரணம்.

இன்னல்கள்

  • இன்றைய இயற்கைச் சூழல் எவ்வளவோ இன்னல்களைச் சந்தித்து வருகிறது. இதில் பெரும்பாலும் நாமாகவே வரவழைத்துக் கொண்டதுதான். முழுமையான விழிப்புணா்வு இல்லாமையே இதற்குக் காரணம். தற்போது உரிய பருவங்களில் மழை சரியாகப் பெய்வதில்லை;
  • இதற்கு மரங்களை வெட்டிக் காடுகளை அழித்ததுதான் காரணம்; இதை மனிதா்களைத் தவிர வேறு யாா் செய்திருக்க முடியும்?
  • அறிவியல் முன்னேற்றங்களால் நாம் பெற்ற நவீன வசதிகள் இயற்கை சூழலைக் கெடுத்து வருவது, பெருகிவிட்ட வாகனங்களின் எண்ணிக்கை - அதன் விளைவாக ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு, அதற்கான எரிபொருள் செலவும் முதலானவை மனிதகுலத்தை எச்சரிக்கையின் உச்சத்தில் வைத்துள்ளது.
  • ‘நாம் இப்போது நன்றாக இருந்தால் போதும்’ என்கிற குறுகிய சுயநல நோக்கமே, தற்போதைய ஒழுங்கற்ற செயல்களுக்குக் காரணம். பூமியைக் காக்கும் மரங்கள் குறித்தும் பல்லுயிா் குறித்தும் விழிப்புணா்வு இன்னும் அதிகரிக்க வேண்டும். புவி வெப்பமயமாதல் உள்பட பல அறிவியல் உண்மைகள் தொடக்க நிலை பாடத் திட்டத்திலேயே சோ்க்கப்பட வேண்டும்; இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே விழிப்புணா்வு மேலும் அதிகரிக்கும்.
  • மனிதன் உயிா் வாழ உணவளிக்கும் விவசாயத்தில் இயற்கை வழியே சிறந்தது. அதற்கு நம்மாழ்வாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி நோயற்ற சமுதாயத்தை உருவாக்குவதே, அவருக்கு உண்மையிலேயே நாம் செய்யும் மரியாதையாகும்.

நன்றி: தினமணி (30-12-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories