TNPSC Thervupettagam

இயற்கை விவசாயத்தின் புதிய அத்தியாயம்!

January 20 , 2025 9 hrs 0 min 14 0

இயற்கை விவசாயத்தின் புதிய அத்தியாயம்!

  • சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை விவசாயத்துக்கு மாறியது, சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்தியானது. சத்தீஸ்கர் மாநிலமும் இயற்கை விவசாயத்தில் சாதனை படைக்கத் தொடங்கியிருக்கிறது. பஸ்தர் பிராந்தியத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றான தந்தேவாடா மாவட்டத்தில் - இயற்கை வேளாண்மையின் மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம் டிசம்பர் 6, 7 ஆகிய தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெரும் சுரங்கங்களால் ஏற்பட்ட இயற்கையின் பேர‌ழிவுகளையும், பல தசாப்தங்களாகத் தொடர்ந்த நக்சல் பிரச்சினைகளையும் கண்ட தந்தேவாடா இப்போது இயற்கை விவசாய மாவட்டமாக மிளிரத் தொடங்கியிருக்கிறது.

இயற்கையை நோக்கி...

  • சத்தீஸ்​கரின் தெற்குப் பகுதியில் அமைந்​துள்ள தந்தேவாடா மாவட்டம், இயற்கை வளங்கள், கலாச்​சாரம் மற்றும் மரபுகளின் வளமான தன்மையைக் கொண்டுள்ளது. முக்கியமாக, அதன் பழங்குடி வேர்களால் நிலைநிறுத்​தப்​பட்​டுள்ளது. ஏறத்தாழ 2.7 லட்சம் மக்கள்தொகை கொண்ட இம்மாவட்​டத்தில் 73% பேர் மடியா, முரியா, ஹல்பா போன்ற பழங்குடி சமூகங்​களைச் சேர்ந்​தவர்கள்.
  • தந்தே​வா​டாவின் கிராமப்புற நிலப்​பரப்பு வாழ்வா​தா​ரத்​துக்காக விவசாயம் - வன வளங்களைப் பெரிதும் நம்பி​யுள்ளது. 1.16 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலத்​தில், மாவட்ட விவசா​யிகள் முக்கியமாக நெல், சிறுதானி​யங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்ற பயிர்​களைப் பயிரிடு​கின்​றனர். பழங்குடிச் சமூகத்தின் கூட்டு முயற்சி​யால் பாரம்பரிய விவசாய நடைமுறை​களுக்கு மத்தி​யில், நிலையான விவசா​யத்தை நோக்கிக் குறிப்​பிடத்தக்க மாற்றம் வேரூன்றி வருகிறது.
  • இயற்கைச் சான்றிதழ் அளிக்​கப்பட்ட பகுதி, பரம்ப​ராகத் கிருஷி விகாஸ் யோஜனா (PKVY) போன்ற திட்டங்​களின்கீழ் வரும் இயற்கை விவசாயப் பண்ணைகள் குறித்துப் பேசப்​படு​கின்றன. ஆனால், அதே காலக்​கட்​டத்தில் இயல்பாகவே முன்பிருந்தே (default organic) இயற்கை விவசாயமாக இருந்த பகுதிகளை இந்தியா வேகமாக இழந்து​வரு​வதும் கவனிக்​கத்​தக்கது.
  • ஆம், சான்றளிக்​கப்பட்ட இயற்கை விவசாயம் என்று நாம் பார்க்கும் பகுதி​களைவிட இயல்பாக முன்பிருந்தே இயற்கைசார் பகுதிகள் மிகப் பெரிய அளவில் இருந்​திருக்க வேண்டும். காட்டுப் பகுதி​களுக்கும் செயற்​கையான, கடுமையான ரசாயனங்கள் கொண்டு​செல்​லப்​பட்​டதால் நிறைய சேதங்கள் ஏற்பட்டன.
  • இத்தகைய சூழலில், ஒரு மாவட்டம் தன்னிடம் இருப்​பதைப் பாதுகாப்​ப​தற்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் முக்கிய​மானது. இயற்கையைப் போற்றிப் பாதுகாத்து இயற்கை விவசாய​மாகத் தக்கவைக்க‌ வேண்டும் என்ற தீர்மானம் மிகப் பெரிய, அரிய‌ விஷயம். இந்தியாவில் பழங்குடிகளின் இடங்கள், மலைப்​பாதைகளில் உள்ள இந்த இயல்புநிலைப் பகுதிகளே சிறந்த பகுதி​களாகும்.
  • மனிதர்கள் இயற்கையோடு இணைந்த‌ நல்லுறவு, பேராசையைத் தவிர்க்கும் பண்பாடு, சமூகங்கள் கூட்டாகச் செயல்​படுவது, சமூக ஒழுங்​கு​ முறைகள் அழகாகச் செயல்​படுவது போன்றவை இதற்கு வழிசெய்​கின்றன. முன்னேற்றம் என்ற பெயரில் மனிதகுலம் தமக்கும் இயற்கைக்கும் பல பிரச்​சினைகளை உருவாக்​கிக்​கொள்ளும் இன்றைய சூழலில், இந்தப் பகுதிகள் தீர்வு​களுக்கு வழிகாட்டு​கின்றன.

காரணகர்த்​தாக்கள்:

  • தந்தேவாடா மாவட்ட ஆட்சி​ய‌​ராகப் பதவிவகித்த தேவசே​னாபதி ஐஏஎஸ் மூலம் 2011இல் இந்த மாற்றத்​துக்கான விதை போடப்​பட்டது. தந்தேவாடா மீதான அவப்பெயரை​யும், மோசமடைந்​திருந்த விவசாயச் சூழலையும் மாற்றும் நீண்ட தொலைநோக்குப் பார்வையையும் சேர்த்து அவர் தொடங்​கிய‌துதான் இன்று இந்தச் சாதனைக்கு வழிவகுத்திருக்கிறது. நம்மாழ்​வாரால் ஈர்க்​கப்பட்ட தேவ சே​னாபதி, தமிழ் ஊடகங்​களில் வெளியான கட்டுரைகளைப் படித்து​விட்டு, தமிழ்​நாட்டில் உள்ள சிலருடன் தொடர்​பு​கொண்டு தனது கனவைக் கவனமாகக் கட்டியெழுப்பினார்.
  • அப்போது சந்தை, உற்பத்தி முறைகள், சான்றிதழ் போன்ற பல்வேறு விஷயங்​களைப் பற்றி எங்களிடம் பேசுவார். மேலும், அவர் ‘ஆட்டூட்டம்’ அருணாசலத்தை அழைத்துப் பல பயிற்சிகளை அளித்​தார். அடுத்துவந்த மாவட்ட ஆட்சி​யர்​களும் அதே ஆர்வத்​தையும் உற்சாகத்​தையும் காட்டி​னார்கள். மேலும், இங்குள்ள விவசா​யிகள் நிலத்தில் ரசாயன உரங்கள், பூச்சிக்​கொல்​லிகள் தெளிப்பதை விரும்​புவ​தில்லை என்பதைத் தெரிந்​து​கொண்ட ஆட்சி​யாளர்கள் அதை அவர்கள் மீது திணிப்​பதில் ஆர்வம் காட்ட​வில்லை.
  • இதில், ஆகாஷ் படவே என்னும் இளைஞர் காட்டிய முனைப்பு முக்கிய​மானது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கின் ‘பிரதமர் ஊரக வளர்ச்சி உதவித்​தொகைத் திட்டம்’ மூலம் இளம், முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் ஐஏஎஸ் அதிகாரி​களுடன் இணைக்​கப்​பட்டுச் சமூகத் திட்டங்​களில் பங்கேற்க வைக்கப்​பட்​டனர். அந்த வகையில், முதுகலைப் பட்டதா​ரியாக அப்போதைய ஆட்சியர் தேவசே​னாப​தி​யிடம் ஆகாஷ் சேர்ந்​தார். அவரும் அவரது அரசு சாரா சமூக அமைப்புமான‌ பூம்காடியும் (Bhoomgaadi) கிராமம் கிராமமாக அயராமல் தொடர்ந்து உழைத்து, இயற்கை விவசாயம் தழைக்க வழிசெய்திருக்​கின்​றனர்.
  • ஹைதரா​பாத்தில் உள்ள அறிவியல் மற்றும் வேளாண்​மைக்கான மையத்தைச் சேர்ந்த டாக்டர் ராமுவின் கிருஷ்ணசுதா அகாடமியும் இணைந்து‍ பெரும்​பரப்புச் சான்றிதழ் பணிகள் முன்னெடுக்​கப்​பட்​டதும் இதற்குப் பெரும் ஊக்கம் அளித்தது.
  • தந்தே​வா​டாவில் நடந்த விழாவில் பல பழங்குடி​யினர் குழுக்கள் பல்வேறு பாரம்பரிய விதைகள், சமைத்த உணவுகள், இடுபொருள்கள் போன்ற​வற்றைக் காட்சிப்​படுத்​தினர். கொண்டாட்ட நிகழ்வு​களில் விவசாயத் துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனமான பூம்காடி ஆகியவற்றுடன் இணைந்து மாவட்ட நிர்வாகமும் முனைப்புடன் பங்களித்திருந்தன.

பரவலாகும் பணிகள்:

  • தந்தே​வா​டாவின் தற்போதைய ஆட்சியர் மயங்க் செளத்ரி ஆற்றல் மிக்கவர், மிகவும் திறந்த மனதுடன் செயல்​படு​பவர். தனது மாவட்​டத்தில் இயற்கை விவசாயம் தழைத்​தோங்க அவரும் மிகுந்த ஈடுபாடு காட்டு​கிறார். “இயற்கை விவசா​யத்தைப் பொறுத்தவரை சுயாதீனமாக, தற்சார்​புடன் இயங்க‌ விரும்​பு​கிறேன்.
  • அப்போதுதான் இது இன்னும் பல ஆண்டு​களுக்குத் தொடரும்” என்கிறார் தீர்க்​கமாக. இப்போது பூம்காடி அமைப்பும், ஆட்சியர் மயங்க் செளத்​ரியும் இதை இன்னும் விரிவுபடுத்தும் பணிகளில் இறங்கி​யிருக்​கின்​றனர். ஆம், பஸ்தர் பிராந்தியத்தில் உள்ள பஸ்தர், பீஜப்​பூர், நாராயண்பூர் உள்ளிட்ட பிற மாவட்​டங்​களிலும் இயற்கை வேளாண்​மையைப் பரப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று​வரு​கின்றன.
  • உண்மை​யில், ஓர் அரசு அமைப்பில் சரியான இடத்தில் இருக்கும் ஒரு நல்ல திறமையான, நேர்மையான நபர் எதையும் நிகழ்த்​திக்​காட்ட‌ முடியும் என்பதற்கு இது ஓர் உதாரணம். மாவட்ட ஆட்சி​யர்கள் தங்களுக்கு இருக்கும் வரம்பற்ற வாய்ப்பு​களைச் சரி​யாகப் பயன்​படுத்​திக்​கொண்​டால், இது​போன்ற ​மாற்​றங்கள் நாடு ​முழு​வதும் நிச்​சயம் ​சாத்​திய​மாகும்!

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories