TNPSC Thervupettagam

இயற்கைச் சீற்றமா? மனிதத் தவறா?

August 3 , 2024 161 days 169 0
  • ஆர்ப்பரிக்கும் அருவிகள், இயற்கை எழில் கொஞ்சும் வனங்கள், பசுமையான மலைச்சாரல் என ரம்மியமாக காட்சி அளித்த கேரள மாநிலத்தின் வயநாடு இப்போது சேறு, சகதியில் இடிந்து புதைந்த வீடுகளுடன் நெஞ்சில் பீதியை எழுப்புவதாக காட்சி அளிக்கிறது. ஒரு வாரத்துக்கும் மேலாகப் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவும் பாறைகள் சரிவும் 300-க்கும் மேற்பட்டோரின் உயிரை மாய்த்துவிட்டன. முண்டக்கை, சூரல்மலை பகுதியில் தகர்ந்து புதைந்தது வீடுகள் மட்டுமல்ல, எண்ணற்றவர்களின் கனவுகளும் எதிர்காலமும்தான்.
  • வயநாடு மாவட்டத்தில் பெரும்பாலான மலைகளில் 60 அடி முதல் 70 அடி வரை செம்மண் அடுக்குகள் காணப்படுகின்றன. 300 மிமீ-க்கு அதிகமாக மழை பெய்யும்போது, இந்தப் பகுதிகளில் உள்ள இயற்கையான நீரோட்டத்தில் தடைகள் ஏற்பட்டால் மண்ணில் ஈரப்பதம் அதிகரித்து குழைவுத்தன்மை ஏற்பட்டு மலையே சரிந்து பேரழிவு ஏற்படும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
  • முண்டக்கை பகுதியில் 1984, 2020-ஆம் ஆண்டுகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வயநாடு மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டில் மட்டுமே சிறிய அளவில் 100-க்கும் அதிகமான நிலச்சரிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதையடுத்து, இதுபோன்று பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், 4,000 குடும்பங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 2020-ஆம் ஆண்டிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தது.
  • இன்றைய பேரழிவுக்கு ஓரளவுக்கு இயற்கையும், மனிதனின் பேராசையும்தான் காரணங்களாகும்.
  • சூழலியல் நிபுணர் மாதவ் காட்கில் தலைமையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் மனித நடவடிக்கைகளை முழுவதும் தடை செய்ய வேண்டும் என்று கடந்த 2011-ஆம் ஆண்டிலேயே பரிந்துரை செய்தது.
  • முழு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியையும் சூழலியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும்; அந்தப் பகுதியை மூன்றாகப் பிரித்து பிரிவு 1 மற்றும் 2-இல் புது அணைகள் கட்டுதல், ரயில்வே திட்டங்கள், சாலைப் பணிகள், மலைவாசஸ்தலங்கள் உருவாக்குதல், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்குதல் போன்றவற்றை செய்யக் கூடாது; சுரங்கப் பணிகள், பிளாஸ்டிக், ரசாயன உரங்கள் பயன்பாடு போன்றவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் முற்றிலுமாக நீக்குதல் உள்ளிட்ட பரிந்துரைகளை காட்கில் குழு அளித்திருந்தது.
  • சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதிகளில் சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்ற பெயரில் எந்த வரையறையும் இல்லாமல் தங்கும் விடுதிகள் கட்டுவது, மலைகளைக் குடைந்து சாலை அமைப்பது, சுரங்கம் அமைப்பது போன்றவை பேரழிவுக்கே வழிவகுக்கும் என்று மாதவ் காட்கில் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான வயநாட்டில் 58.52% பகுதிகள் நிலச்சரிவு அபாயமுள்ளவை என்று தில்லி ஐஐடி நடத்திய ஓர் ஆய்வும் தெரிவிக்கிறது.
  • ஆனால், சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு வளர்ச்சிப் பணிகள் தடை செய்யப்பட்டால் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள கர்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம், தமிழ்நாடு, கோவா, குஜராத் ஆகிய 6 மாநிலங்களுமே எதிர்ப்பு தெரிவித்தன.
  • இதையடுத்து, மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையில் 2013-இல் குழு அமைக்கப்பட்டது. மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியில் 37 சதவீதத்தை மட்டும் சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கலாம்; குடியிருப்புகள், தோட்டங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என்பன உள்ளிட்ட பரிந்துரைகளை இந்தக் குழு அளித்தது. குழுவின் பரிந்துரைகள் அடங்கிய 5 அறிவிக்கை வெளியிடப்பட்டு காலாவதியாகிவிட்டது. வயநாட்டில் தற்போதைய துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, 6-ஆவது வரைவறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
  • இத்தனை ஆய்வுகளும் அறிக்கைகளும் நடைமுறைப்படுத்த காத்திருக்கும் நேரத்தில், இப்போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் மிகப் பெரிய சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணி நிறைவுற்றால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஆற்றின் கரையோரத்தில் ரிசார்ட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவை எல்லாம் இப்போது அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
  • வயநாடுப் பேரழிவு செய்தி வரத் தொடங்கியதும் பேட்டியளித்த அவர், சுற்றுச்சூழல் குறித்து சிறிதும் அக்கறை இல்லாமல் பெரு முதலாளிகளும் அரசியல்வாதிகளும் கைகோத்துள்ளனர் என்றும் அவர் விளாசினார்.
  • இனியாவது தனது குழுவின் பரிந்துரைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தவில்லை என்றால், நிலச்சரிவு போன்ற பேரழிவுகள் மீண்டும் மீண்டும் நிகழும் என்று மாதவ் காட்கில் கடுமையாக எச்சரித்துள்ளார்.
  • கேரளத்தில் மட்டும்தான் இதுபோன்று நிலச்சரிவுகள் ஏற்படுகின்றன என்று கருத வேண்டாம். இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள "தேவபூமி'யான உத்தரகண்ட் மாநிலத்தில் அவ்வப்போது பெரும் மழை பெய்து நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பேரழிவாக 2013-ஆம் ஆண்டு ஜூனில் மேகவெடிப்பால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு 5,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கட்டுப்பாடற்ற கட்டுமானப் பணிகளால் ஜோஷிமட் என்ற நகரமே புதையக் கூடிய அபாயத்தை சந்தித்து வருகிறது.
  • தமிழகத்திலும் உதகை, குன்னூர், வால்பாறை, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்கள் கான்கிரீட் காடுகளாக மாறிவருகின்றன. இயற்கையை அளவுக்கு அதிகமாக சுரண்டினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதையே வயநாடு உணர்த்துகிறது.
  • மனிதனின் பேராசையே இயற்கைச் சீற்றத்துக்குத் தொடக்கப்புள்ளி. இறுதியில் இயற்கையின் சீற்றத்தின் விளைவை எதிர்கொள்வது மனிதன்தான்.

நன்றி: தினமணி (03 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories