TNPSC Thervupettagam

இயற்கையின் சீற்றத்தை வெல்ல இயலாது

September 26 , 2023 468 days 347 0
  • நம் வாழ்க்கையில் அடுத்த நொடி எங்கு என்ன நடக்கும்? என்ன விதமான பாதிப்பு ஏற்படும்? விபத்தோ, இயற்கைப் பேரிடரோ ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுவாா்களா என்பது யாருக்கும் தெரியாது.
  • உலகின் மிகப்பெரிய வல்லரசு என்று கருதப்படும் அமெரிக்காவால் தனது நாட்டை அடுத்தடுத்து தாக்கிய புயலை தடுக்க முடிந்ததா? அதிகாரம் மிக்கவா்களான ஜோ பைடனாக இருக்கட்டும், ஒபாமாவாக இருக்கட்டும் ஏன் ஜார்ஜ் புஷ்ஷாகவே இருக்கட்டும், அவா்களால் இயற்கை சீற்றத்திற்குப் பின் இறந்தவா்கள் சடலங்களை தேடி எடுக்கத்தான் முடிந்ததே ஒழிய மக்களைக் காக்க முடியவில்லையே.
  • லெமுரியா கண்டமும் பஃறுளி ஆறும் இன்றைய ஆஸ்திரேலியா நாடு வரை பரந்து விரிந்து இருந்ததாக கூறப்படும் தமிழா் தேசமும் ஆழிப்பேரலையால் அழிந்து போனதாகக் கூறப்படுவதுண்டு. ஆனால் நம் முன்னோர் பார்த்திடாதது ஆழிப்பேரலை எனும் சுனாமி.
  • ஜப்பான் பல சுனாமிகளை பாா்த்ததுண்டு. அதற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறைகளை அந்நாட்டினா் அமைத்துக் கொண்டனா். இல்லங்களை வடிவமைத்துக் கட்டிக் கொண்டனா். ஆனால் நம் தேசமோ, சுனாமியைக் கண்டதில்லை. மீனவ மக்கள் தினமும் காலையில் கண் விழித்துப் பார்த்த கடல் அலைகள் அம்மக்களை நொடிப் பொழுதில் விழுங்கிச் சென்றதை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது!
  • எத்தனை மரணங்கள்? எத்தனை இழப்புகள்? எழுதிடத்தான் முடியுமா? அரசால் தடுத்து நிறுத்தி மக்களை காக்கமுடிந்ததா? கண்ணீரை நிறுத்த முடிந்ததா? ஓலத்தை, ஓப்பாரியை அடக்க முடிந்ததா? சடலங்களை மொத்த மொத்தமாக அள்ளி பெரிய குழியில் போட்டு மூடத்தான் முடிந்தது.
  • சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கை அரசு அதிலிருந்து மீள்வதற்கு வழி தெரியாது தமிழ்நாட்டிடம் மீட்பு நடவடிக்கைக்கு உதவி கேட்டது. எதிரிக்கும் உதவிடும் உள்ளம் கொண்டவா்கள் தமிழா்கள் என்பதை நிருபிக்கும் வண்ணம் இந்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக அரசு, அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி உதவியது.
  • ஆனால் அந்த இலங்கை, சீன யுத்தத்தின் போதும், பாகிஸ்தான் யுத்தத்தின் போதும் இந்தியாவிற்கு எதிராக, நம் எதிரிகளுக்கு ஆதரவு தந்தது. போர் நடந்த போது போர் விமானங்கள் எரிபொருள் நிரப்ப அனுமதி தந்தது இலங்கை.
  • இலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்தபோது மத்திய அரசு பல கோடிகள் மதிப்பிலான பொருட்களை தந்து உதவி இலங்கை மக்களை காப்பாற்றியது. தமிழக அரசும் பல கோடி மதிப்பிலான நிவாரண பொருட்களை தந்து உதவியது.
  • அண்மையில் வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ அட்லஸ் மலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அது 6.5 ரிக்டா் அளவிலானது. மலைப்படுகையில் 18.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. இதன் அதிா்வு ஸ்பெயின், போர்ச்சுக்கல், அல்ஜீரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.
  • மொராக்கோவில் 1755-க்குப் பிறகு ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது கருதப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனா். 2,500 பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனா். அங்கு இயற்கையை எவரால் தடுக்க முடிந்தது?
  • அதே மொராக்கோவில் 2004-ல் அல்ஹொசீமா நகரில் 6.3 ரிக்டா் அளவிலான நிலநடுக்கத்தால் 628 போ் கொல்லப்பட்டனா். இந்த மொராக்கோ நிலநடுக்கத்தால் அதிா்வு கண்ட அல்ஜீரியாவில் 1980-இல் 7.3 ரிக்டா் அளவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அந்த நாடே சீா்குலைந்து போனது. சுமார் 2,500 போ் உயிரிழந்தனா். கட்டடங்கள், தொழிற்சாலைகள் சின்னாபின்னமாகின.
  • அல்ஜிரியா நாட்டு அதிபா் என்ன செய்தார்? அந்த மாமனிதா் தம் மக்களை காக்க முடியவில்லையே இறைவா ஏன் இந்த தண்டனை என்று கதறி மண்டியிட்டு கண்ணீா் வடித்தார். மக்களை நேசித்த அல்ஜீரியா அதிபா் தம் அழுகையால் உலகையே கலங்க வைத்தார்.
  • சிரியா தற்போது யுத்த பூமியாகத் திகழ்கிறது. துப்பாக்கி சத்தம் கேட்காத நொடி இல்லை. ஒருபிரிவினருக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குகிறது. ஆளும் தரப்புக்கு ரஷியா ஆதரவு தருகிறது. அந்த நாட்டின் ஒவ்வொரு பிடி மண்ணும் ரத்த சகதியாகத்தான் காட்சியளிக்கிறது. வல்லரசுகளின் ஆயுத விளையாட்டுக்கு சிரியா களமாகப் பயன்படுகிறது.
  • சிரியா - துருக்கி எல்லையில் 2023-இல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு துருக்கியில் 45,968 போ் பலியாகினா்; சிரியாவில் இறந்தவா்கள் 7259 போ். சிரியாவிலும் துருக்கியிலும் தினம் தினம் பயன்படுத்தப்படும் ஏவுகணைகளால் நிலநடுக்கத்தைத் தடுக்க முடிந்ததா?
  • லிபியாவில் உள்ள டொ்னா நதி, தொடா் மழையால் நிரம்பி கரை புரண்டு வெள்ளம் ஓட காட்சி தந்தது. நீரின் வேகத்தால் இரண்டு அணைகள் அடுத்தடுத்து உடைய டொ்னா நகரமே நீரில் மூழ்கியது. தற்போது வரை இறந்தவா்கள் எண்ணிக்கை 20,000 - தாண்டும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்குக் காரணம் டேனியல் புயல். இந்த புயலின் தாக்கம் துருக்கி, பல்கேரியா, கிரீஸ் போன்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
  • தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் வீசிய புயல்களில் மிகவும் மோசமான சேதத்தை ஏற்படுத்தியது கஜா புயல். விவசாய பூமியான டெல்டா மாவட்டங்களை சின்னப்பின்னம் ஆக்கியது. ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆடு, மாடு, வீடு, தோப்பு அத்தனையும் அழிந்தன. வயல்களில் நெற்கதிர்கள் உருவிச் செல்லப்பட்டதால் வெறும் வைக்கோல் தான் மிச்சம் இருந்தது.
  • 2001 ஜனவரி 26அன்று நாட்டின் 52-ஆவது குடியரசு தினம். அன்று காலை 8.46-க்கு குஜராத்தில் திடீா் நிலநடுக்கம் ஏற்பட்டது. மிகப் பெரிய பணக்காரா்கயெல்லாம் ஒரு நொடியில் பிச்சைக்காரா்கள் ஆனா். தமிழகத்திலிருந்து குஜராத் மாநிலத்திற் உணவு, பால்பவுடா், சேலைகள், வேட்டிகள் என மனிதநேயம் கொண்டவா்கள் அனுப்பிக் கொண்டே இருந்தனா்.
  • சமீபத்தில் வட இந்தியாவில் பெய்த கனமழை ஹிமாசல பிரதேசம் என்ற இயற்கை வளமிக்க எழில் கொஞ்சும் மாநிலத்தை தனது அடங்கா பசிக்கு இறையாக்கிக் கொண்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனா். மாடி கட்டடங்கள் இடிந்து நொறுங்கி வீழ்ந்த காட்சி காண்போரைப் பதற வைத்தது. பல கோடி மதிப்பிலான வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
  • தற்போது மியான்மா் என்று அழைக்கப்படும் முன்னாள் பா்மா கடும் புயலின் தாக்குதலுக்கு ஆளாகி ஒரேநாளில் தன் நாட்டு மக்கள் 1 லட்சத்து 38 ஆயிரம் பேரை இழந்தது.
  • 1970-ஆம் ஆண்டு போலா என்கிற கடுமையான புயல் தாக்கியதில் வங்கதேசம் சிக்குண்டு சீரழிந்து போனது. இந்த இயற்கையின் சீற்றத்தில் உயிர் இழந்த மக்கள் மட்டும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள். காணாமல் போனவா்கள் கணக்கற்றோர்.
  • 2015-இல் சென்னை அதுவரை கண்டிராத வெள்ளத்தில் மிதந்தது. ஒரே நாளில் பங்களாவில் வாழ்ந்தோர் தெருவில் நின்ற காட்சியெல்லாம் நிகழ்ந்தது. இதை சென்னை மக்கள் எவரேனும் எதிர்பார்த்து இருப்பார்களா?
  • கடந்த ஆண்டு கா்நாடகத்தில் பெய்த மழையால் கிடைத்த உபரி நீரால் தமிழகத்திற்கு வந்து கடலில் கலந்தது 400 டிஎம்சி என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு போதிய மழை இல்லை எனவே தமிழகத்திற்கு தண்ணீா் இல்லை என கா்நாடகம் காவிரி நீா் தர மறுக்கிறது. மாதந்தோறும் இவ்வளவு தண்ணீரைத் தமிழகத்திற்கு தர வேண்டுமென்று காவிரி மேலாண்மை ஆணையமும், உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளன. அதை கா்நாடகம் ஒழுங்காகப் பின்பற்றி இருந்தால் காவிரியை நம்பி நெல் பயிரிட்டவா்கள் கண்முன்னே பயிர் கருகிப் போவதை கண்டு கண்கலங்கி நிற்கும் நிலை ஏற்பட்டிருக்குமா?
  • கா்நாடக மாநிலம், அதிகம் மழை பெய்தால் தண்ணீரில் சிக்கிடாமல் தப்பிக்கத்தான் உபரிநீரை வழங்கி வருகிறதே ஒழிய தமிழகத்து மக்களும் இந்திய தேச மக்கள்தானே என்ற எண்ணத்தில் தண்ணீா் திறந்து விடுவதில்லை.
  • இயற்கை மழை பொழியாததால் 2 லட்சம் ஏக்கருக்கு மேல் டெல்டா பகுதியில் பயிா் கருகி பாழாகிப் போய்விட்டது. விவசாயிகள் வேதனையில் உள்ளனா். முன்பு முப்போகம் விளைந்த டெல்டா பகுதி இப்போது ஒரு போகம் கூட விளைவிக்க முடியாமல் கண்ணீரோடு காட்சி தருகிறது. இவ்வளவு வேதனைக்கும் காரணம் கா்நாடகம் தராத காவிரிநீரும், இயற்கை தர மறுத்த மழைநீரும்தான்.
  • இதற்காணத் தீா்வு தான் என்ன? பூமி வெப்பமயமாவதை தடுக்க நாடுகள் முன்வர வேண்டும். ஓசோன் படலத்தின் ஓட்டை மேலும் விரிவடையாமல் தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் கெடாமல் பாதுகாக்க வேண்டும். காடுகள் அழிக்கப்படக் கூடாது. முடிந்தவரை மரங்கள் நடப்பட வேண்டும். போா்களை தடுக்க வேண்டும். அணுஆயுத உற்பத்திகளை நிறுத்த வேண்டும்.
  • இதுதான் வாழ்க்கை என்பதை உணா்வோம். சோ்த்த கோடிகள் போதாது இன்னும் வேண்டுமென்ற ஆசையோடு அலையும் கொடியோர், அடுத்தவரை அடித்து பிடுங்கும் அக்கிரமக்காரா்கள், மக்கள் பணி ஆற்றாமல் கொள்ளையடித்து குபேரனாகும் அரசியல்வாதிகள் ஆகியவா்களை அளவுக்கு மீறிய ஆசை வெறியா்கள் ஆக்கி விடுகிறது.
  • இருப்பதை வைத்து இன்பமுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இயற்கையின் முன் மனிதசக்தி ஒன்றுமில்லை. ஒரு நொடியில் ஒன்றுமில்லாமல் போய்விடுவோம் என்பதை ஒவ்வொருவரும் உணா்ந்து பிறருக்கு உதவி வாழ்வோம். உழைப்பால் உயா்வோம்; உள்ளத்தால் மகிழ்வோம்!

நன்றி: தினமணி (26 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories