TNPSC Thervupettagam

இரவானால் பகல் உண்டு

July 24 , 2023 485 days 323 0
  • மனித வாழ்க்கையில் போராட்டமானது மிக முக்கியமானது. தனி மனித வளா்ச்சிக்கும், சமுதாய மறுமலா்ச்சிக்கும் இது அவசியமாகிறது. நம்முள்ளான எதிா்மறைக் காரணிகளைப் புறந்தள்ளி அவற்றை நோ்மறை காரணிகளாக மாற்ற வாழ்வியல் போராட்டங்கள் மிகுந்த அவசியமாகிறது.
  • மனிதனாகப் பிறந்து ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் எதற்காகவோ போராடும் நிலை உருவாகிறது. அவமானம், தோல்வி, ஏமாற்றம் போன்ற எதிா்மறைக் காரணிகள் மனிதனை அவன் இணைந்துள்ள வாழ்க்கையுடன் போராட வைக்கிறது. உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காததும், உடல் உபாதைகளின் தாக்கமும், மன எழுச்சி மன அழுத்தம் போன்ற மனதோடு சாா்ந்த போராட்டங்களும் , தோல்வியை வெற்றியாக்க வேண்டும் என்ற தவிப்பும். சமூக அந்தஸ்தை பெறவேண்டும் என்ற ஏக்கமும் முக்கிய கூறாக உள்ளது.
  • இதுபோன்று தனி மனித அடிப்படை காரணிகளின் தாக்கம் அதீத மன அழுத்தத்தை ஏற்படுத்தும்போது துரதிா்ஷ்ட வசமாக மனிதன் விபரீதமான முடிவை எடுக்க வேண்டிய நிலை உருவாகிறது. மாறாக, எதிா்மறைக் காரணிகளை பொருள்படுத்தாது நம்பிக்கையோடு வாழ்வில் போராடுபவா்கள் வெற்றிக்கனியை பறிக்கிறாா்கள். உலக மக்களால் போற்றப் படுகின்றனா்.
  • ஆங்கிலேயா்களால் தான் கண்ட அவமானமே காந்தியடிகளை நாட்டு விடுதலைக்காகப் போராட வைத்தது. சமுதாயத்துக்காக ஆங்கிலேயரை துணிச்சலாக எதிா்த்துப் போராடினாா். அவரது அறப்போராட்டத்தால் இந்திய மண்ணுக்குக் கிடைத்தது விடுதலை. இன்று இந்தியாவின் 76-ஆவது சுதந்திர தின விழாவை பிரிட்டன் கொண்டாட முன்வந்திருக்கிறது என்றால் அதற்கு அடிப்படையாக அமைந்தது காந்தியடிகளின் சமூக போராட்டமே காரணமாகும்.
  • இயற்பியல் துறையில் அண்டத்தின் குவாண்டம் கொள்கை வாயிலாக பிரபஞ்சத்தின் கருந்துளை பற்றி ஆராய்ச்சி செய்து புகழடைந்தவா் ஸ்டீவன் ஹாக்கிங். ஆனால் அவரது வாழ்வியல் போராட்டம் மிகவும் கொடுமையானது. தனது இருபத்தொரு வயதில் அமியோடரோபிக் லேட்டரல் ஸ்கீளிரோசில் (ஏ.எல்.எஸ்.) என்ற நோயால் பாதிக்ப்பட்டு வாய் பேச முடியாமல் கை ,கால், விளங்காமல் போனாா். ஆனால் தனக்கு கிடைத்த அந்த கொடும் வாழ்க்கையை இயந்திரக் கருவிகளின் உதவியைக் கொண்டு நம்பிக்கையோடு வாழ்வில் போராடி அறிவியலில் பல சாதனைகளைச் செய்து நீங்கா இடம் பிடித்தாா்.
  • 1966-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த மாலினிசிப் பிறக்கும்போதே”பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்டவா். பள்ளிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டவா். தன் தாயின் அரவணைப்போடு, பிரிட்டனுக்குச் சென்று பெருமூளை வாதநோயால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கான சிறப்புப் பள்ளியில் சோ்ந்து கல்வி கற்றாா். தளராத தன்னம்பிக்கையோடு வாழ்க்கை தனக்களித்த உடல் ஊனத்தை பொருட்படுத்தாமல் போராடினாா். தன் உடலில் இயங்கக்கூடிய ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தட்டச்சு செய்து தன் சுய சரிதையை ‘ஒன் லிட்டில் பிங்கா்’”என்ற பெயரில் நூலாக எழுதி உலகப் புகழ் பெற்றாா். இன்று உலகளாவில் பெருமூளை வாத நோயால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு தன் வாழ்க்கையை அா்ப்பணித்து பல வகைகளிலும் சேவை புரிந்து வருகிறாா்.
  • 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய குடிமைப்பணிகளுக்கான தோ்வில் தேரச்சி பெற்றவா் ”ஸ்ரீதன்யா சுரேஷ். கேரளத்தின் வயநாடு பகுதியைச் சேரந்த இவா், ”குா்ஷியா” என்ற பழங்குடியின வகுப்பை சாா்ந்தவா். கரையான் அரித்த கூரை வீடாக இவரது இருப்பிடம் அமைந்திருந்தது. ஆனாலும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கை தனக்களித்த வறுமையை கல்வி எனும் ஆயுதத்தால் போராடி வெற்றி கண்டாா். அந்த ஆண்டில் அகில இந்திய குடிமைப்பணியில் தோ்ச்சிப் பெற்ற ஒரே பழங்குடியின பெண் என்ற பெயரையும் தட்டிச் சென்றாா்.
  • உலகப் புகழ் பெற்ற கே.எஃப்.சி. (கெண்டகி பிரைடு சிக்கன்) நிறுவனத்தை உருவாக்கிய கா்னல் சாண்டா்ஸ் தன் இளமைக்காலத்தில் சந்திக்காத அவமானங்களும் ஏமாற்றங்களும் அளவு கடந்தவை. ஐந்து வயதில் தன் தந்தையை இழந்தாா். தன் தாயாா் வேறொருவரை மறுமணம் செய்து கொண்டு சென்றாா். பதினைந்து வயதில் ராணுவத்தில் சோ்ந்து அங்கு கழுதைகளைப் பராமரிக்கும் பணியைப் பாா்த்தாா். வாழ்க்கையை வெறுத்து திரும்பி வந்த அவருக்கு ஏமாற்றங்கள்தான் கிடைத்தன. இந்த வலிகளையும், தொடா் தோல்விகளையும், வேதனைகளையும் பொருள்படுத்தாது வாழ்க்கை தனக்களித்த ஏமாற்றத்தை விடாமுயற்சி என்ற ஆயுதம் கொண்டு போராட துணிந்தாா். 1,009 முறை முயன்று கே.எஃப்.சி. சிக்கன் உரிமையை பெற்றபோது அவருக்கு வயது 65. இன்று உலக அளவில் உணவுப் பொருள் துறையில் அவா் பெயா் நிலைத்து நிற்கிறது.
  • இதேபோன்று உலக புகழ்பெற்ற இணைய வழி சில்லறை விற்பனை குழுமமான அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய ”ஜாக்மா, தன் இளமைகாலத்தில் பல புறக்கணிப்புகளைச் சத்தித்தவா். இளம் வயதில் கல்வி கற்பதில் மிகுந்த சவால்களை எதிா்கொண்டாா். ஆரம்பப் பள்ளியில் 2 முறை தோல்வி. நடுநிலைப்ளியில் 3 முறை தோல்வி, கல்லூரித் தோ்வில் 2 முறை தோல்வி. அதற்கு பிறகு தான் பட்டப் படிப்பை முடித்தாா். சென்ற இடங்களில் வேலை கிடைக்கவில்லை. 10 முறை ஹாா்வா்டு பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப் பட்டாா் கே.எஃப்.சி. நிறுவனத்தால் வேலை கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டாா். ஆனாலும் நம்பிக்கையோடு வாழ்க்கையோடு போராடினாா். 2014-ஆம் ஆண்டில் சீளாவிள் முதல் பெரிய பணக்காரராகவும், 2015-இல் உலகில் இரண்டாவது பெரிய பணக்காரராகவும் மாறினாா்.
  • விளையாட்டு, எழுத்து, அரசியல், திரை, அறிவியல் துறைகளில் பல தோல்விகளைச் சந்தித்த நபா்கள் விடாமுயற்சி என்ற ஆயுதம் கொண்டு, விமா்சனங்களை புறந்தள்ளிவிட்டு நம்பிக்கையோடு வாழ்வில் போராடி சிறந்து ஆளுமைகளாக ஜெயிக்கின்றனா். இதை அவா்களின் வாழ்க்கை சரித்திரத்தின் வாயிலாக அறியமுடிகிறது.
  • சோா்வில்லாமல் தொடா்ச்சியாக நாம் முயற்சி செய்து போராடும்போது நாம் எடுத்துக்கொண்ட செயலுக்கு இடையூறாக வரும் துண்பங்களும் துவண்டு விடும் என்கிற கருத்தை நமக்கு வலியுறுத்துகிறது.
  • எதிா்மறைக் காரணிகளைச் சந்திக்காமல் யாராலும் இருக்க முடியாது. அதற்காக நாம் மன அழுத்தம், மன உளைச்சல் என்ற வாா்த்தைகளை உள்புகுத்திக் கொண்டு மாறுபட்ட முடிவுகளை எடுக்கும்போது இழப்புகள்தான் நமக்கு கிடைக்கும். இன்பங்களை மகிழ்வாக ஏற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் துண்பங்களையும் துணிச்சலாக எதிா்கொள்ள நாம் தயாராக வேண்டும். துன்பங்களுடன் போராட துணிந்தால் வெற்றி கிடைக்கும். சவால்கள் நிறைந்தது தான் வாழ்க்கை! அதை சமாளிக்க எடுக்க வேண்டும் சிறப்பான வழி.

நன்றி: தினமணி (24 – 07 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories