இரவுப் பறவைகளும் பகல் பறவைகளும்
- வாழ்விடச் சூழ்நிலை, தகவமைத்துக்கொள்ளும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் சில பறவைகள் இரவில் வேட்டையாடுகின்றன. பல பறவைகள் பகலில் வேட்டையாடுகின்றன. பரிணாம வளர்ச்சியில் பகலில் கிடைக்கும் வளங்களைவிட, இரவில் கிடைக்கும் உணவு வகைகள், கூடுகட்டும் தகவமைப்பு, அமைதியான சூழ்நிலை போன்ற பல காரணங்களால் சில பறவைகள் இரவு பறவைகளாக மாறிவிட்டன. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த இரண்டு வகைப் பறவைகளின் தேவைகளும் இருக்கின்றன.
- ஒரு பறவையின் செயல்திறன் பகலில் எப்படி இருக்கிறது, இரவில் எப்படி இருக்கிறது என்பதை வைத்து அவை பகல் பறவைகள், இரவு பறவைகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. பகலில் பறத்தல், வேட்டையாடுதல், தன் இனத்தைக் கவருதல் போன்ற செயல்களைச் செய்யும் பறவைகளைப் ‘பகல் பறவைகள்’ என்றும் அதையே இரவில் செய்பவற்றை ‘இரவுப் பறவைகள்’ என்றும் வகைப்படுத்தலாம்.
- வண்ணமயமான இறக்கைகளைப் பகலில் உலவும் பறவைகளிடம் பார்க்கலாம். அவை தம் இணையைக் கவரவும், குறிப்பிட்ட பறவை இனத்தைத் தனித்துவமாகக் காட்டவும் இவற்றைப் பயன்படுத்துகின்றன. நேரடியாகச் சண்டை இடாமல் தனது இறக்கையைக் அச்சுறுத்துவதாகவும், கம்பீரமாகவும் காட்டுவதன் மூலமும் எதிரியை விரட்டுவதற்கும் இறக்கையைப் பயன்படுத்துகின்றன.
- பறந்து கொண்டிருக்கும் போது நான் பறந்து வருகிறேன் என்பதை இறக்கையின் வண்ணத்தின் மூலம் தெரியப்படுத்தும் சில பறவைகளும் இருக்கின்றன. சில பறவைகள் தாம் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப, இறக்கையின் வண்ணத்தைக் கொண்டிருக்கும். அதனால் அவை எங்கே ஒளிந்துகொண்டிருக்கின்றன என்பதை வேட்டையாடிகளால் கண்டறிய இயலாது.
- ஆனால், இரவு நேரப் பறவைகளுக்கு இவை அனைத்துமே தேவைப்படுவதில்லை. வண்ணமயமான இறக்கை இரவு பறவைகளைப் பகலில் எதிராளியிடம் காட்டிக் கொடுத்துவிடும். அதனால் சூழ்நிலைக்குத் தக்கவாறு மங்கலான நிற இறக்கைகளைத்தான் இரவு நேரப் பறவைகளில் பார்க்க இயலும். பகலில் சூரிய வெப்பம் அதிகம் என்பதால் வெப்பத்தைத் தாங்கக்கூடிய உடல் அமைப்பு உடையதாகப் பகல் நேரப் பறவைகள் இருக்கும்.
- அதே நேரத்தில் குளிர்ந்த அல்லது மிதமான வெப்ப நிலையில் தகவமைத்துக் கொண்டுள்ள பறவைகள் இரவு நேரப் பறவைகளாக இருக்கும். பகலில் வேட்டையாடும் பறவைகள் இரையைத் தேடுவதற்குக் கூர்மையான கண் அமைப்புப் போதுமானதாக இருக்கும். ஆனால் இரவு நேரப் பறவைகளில் இரவில் பார்க்கக்கூடிய திறன் இருப்பதோடு, கேட்கும் திறனும் சிறப்பாக இருக்கும். இரை எங்கே நகர்கிறது என்பதைப் பார்த்துக் கண்டறிவதுடன், அதன் ஒலியை வைத்துக் கேட்டும் கண்டறிகின்றன.
- அதனால் ஒலி எழுப்பாமல் பயணப்படும் தொழில்நுட்பத்தை இரவு நேரப் பறவைகள் பயன்படுத்துகின்றன. பகலைக் காட்டிலும் இரவில் காற்றின் நகர்வு குறைவாக இருக்கும் என்பதால் பறப்பதும் காற்றின் நகர்வை எதிர்த்துப் பயணப்படுவதும் சற்று எளிதாக இருக்கும். இணையைக் கவர்வதற்காகவும் மற்ற பிற தேவைகளுக்காகவும் தேனிசை, மெல்லிசை குரல்களைப் பகல் நேரப் பறவைகள் கொண்டிருக்கும்.
- தனது இனத்திற்குச் சமிக்ஞையை அனுப்பவும் பொழுதுபோக்காகவும் இதமான ஒலியை இவை எழுப்புகின்றன. ஒலி மட்டுமல்லாமல், காட்சிகள் மூலமும் செய்திகளைப் பகல் நேரப் பறவைகளால் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இறக்கை அமைப்பை மாற்றுதல், வண்ணத்தை மாற்றுதல், உடல் அசைவுகள் போன்றவற்றையும் தகவலை வெளிப்படுத்த அவற்றால் பகிரமுடியும்.
- மெல்லிய இசையை இரவு நேரப் பறவைகளிடம் பார்க்க இயலாது. அவை பெரும்பாலும் கூச்சல், அலறல், விசிலைப் பயன்படுத்தி செய்திகளைத் தெரிவிக்கின்றன. ஒலி மட்டும்தான் இந்தப் பறவைகளின் செய்தி தொடர்பாக இருக்கிறது. இரவு அமைதியாக இருக்கும் என்பதால் இந்தச் சத்தம் நெடுந்தூரத்துக்குக் கேட்கும். பகலில் அதே அளவு ஒலி உருவாக்கப்பட்டாலும், புறச்சூழல் இரைச்சலாக இருப்பதால் அதிகத் தொலைவுக்குக் கேட்க இயலாது.
- பூக்களின் மகரந்தச் சேர்க்கைக்கும், விதைகளை ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டுசெல்வதற்கும், பூச்சிகளைப் பிடித்துச் சாப்பிடுவதால் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைப்பதற்கும் பல பகல் நேரப் பறவைகள் மனிதனுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவு கின்றன.
- பறந்து செல்லும் பூச்சிகளையும், நீரில் நீந்தும் மீன்களையும் இவற்றால் எளிதாகப் பகலில் பிடித்து உணவாக உட்கொள்ள முடியும். இரவு நேரப் பறவைகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பங்காற்று கின்றன. மேலும் சுண்டெலி போன்ற கொறிவிலங்குகளை உணவாகக் கொண்டு அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்து கின்றன.
- மிதமான ஒளியில் வாழப் பழகிவிட்ட இரவு நேரப் பறவைகள் செயற்கையாக உருவாக்கப்படும் அதிநவீன மின்சார விளக்குகளால் மிகவும் பாதிக்கப்படுகின்றன. நகர்ப்புற வாழ்க்கையும், உயரமான கட்டிடங்களும், பிரகாசமான விளக்குகளும் இவற்றின் வாழ்வாதாரத்திற்குக் கேள்விக் குறியாக மாறி உள்ளன.
நன்றி: இந்து தமிழ் திசை (26 – 02 – 2025)