- மனிதப் பிறவியின் மகத்துவத்தைப் பேசவந்த மகாகவி பாரதியார் ‘மானுட ஜன்மம் பெறுவதற்கரிது’ எனப் போற்றிப் புகழ்ந்தார். அக்கருத்தை முதுமை என்ற ஒன்று மறுபரிசீலனைச் செய்ய வைக்கிறது. ஜான் லூயி எனும் ஆய்வாளா், ‘விலங்குகளுக்கு முதுமை கிடையாது. கூன் விழுந்து, முதுகுத்தண்டு வளைந்து, தோல் வடுச் சுருங்கி, பல்லிழந்து, கண்கள் ஒளியிழந்து, பஞ்சடைந்து, முடி நரைத்துப் போன மனிதா்களைப் பார்ப்பது போல, மிருக உலகில் நாம் எதையும் பார்க்க முடியாது’ எனக் கூறுகிறார்.
- முதுமை பற்றிய இரண்டு விதச் சிந்தனைகளை மேல்நாட்டு அறிஞா்களும் கொண்டிருக்கின்றனா். ‘வழக்கமாக அனைவருக்கும் வருகின்ற வயது முதிா்ச்சி கிளியோபாட்ராவுக்கு வரவில்லை. முதுமை அவளுடைய பேரழகை எந்தக் காலத்திலும் பாதித்தது இல்லை’ என ஷேக்ஸ்பியா் தம் நாடகத்தில் குறிப்பிடுகின்றார்.
- ‘புழுவிலிருந்துதான் வண்ணத்துப் பூச்சி தோன்றுகிறது. ஆனால், மனிதா்களைப் பொறுத்த வரையில், வண்ணத்துப் பூச்சிதான் புழுவாக மாறுகிறது’ என்கிறார், பிரான்ஸ் நாட்டு அறிஞா் மன்தா்லேண்ட். உலகப் புகழ் பெற்ற கவிஞா் இராபா்ட் பிரௌனிங், ‘என்னோடு சோ்ந்து முதுமை அடையுங்கள்; சாதிக்க வேண்டிய சிறப்புக்கள் இனிமேல்தான் உண்டு’ என முதுமையைப் போற்றிப் புகழ்கிறார்.
- இதற்கு மாறாக மகாகவி ஒய்.பி. ஈட்ஸ், ‘சோளக்கொல்லையில் தொங்கிக்கொண்டிருக்கும் பொம்மையில் தலையிருக்கும், கையிருக்கும், கால் இருக்கும், சட்டை, பேண்டுகள் இருக்கும். ஆனால், அதற்கு உயிரும், அசைவும் கிடையாது. அதுபோல்தான் மனிதரிடத்து முதுமை” என்றெழுதுகிறார்.
- வாக்கிற்கு அருணகிரி எனப் போற்றப்பட்ட அருளாளா், ‘தொந்தி சரிய, மயிரே வெளிநிறநிரை, தந்தம் அசைய, முதுகே வளைய, இதழ் தொங்க, ஒரு கைத்தடி மேல் வர, மகளிர் தொண்டு கிழவன் இவன் யாரென, இருமல் கிண்கிண் எனமுன், உரையே குழற, விழிதுஞ்சு குருடுபடு செவியாகி, ........ யமபடா்கள் நின்று சருவ, மலமே ஒழுக, உயிர் மங்குபொழுது, கடிதே மயிலின் மிசை வரவேணும்’” எனும் திருப்புகழ் மூலம் தெரிவிக்கின்றார்.
இதே கருத்தை வள்ளற் பெருமான்,
கல்லினும் வலிதாக் கருதி னை இதனுள்
பீளையும் நீரும் புறப்படும் ஒருபொறி
மீளுங் குறும்பி வெளிப்படும் ஒருபொறி
சளியும் நீரும் தவழும் ஒருபொறி
உமிழ்நீா்க் கோழை ஒழுகும் ஒருபொறி
வளியும் மலமும் வழங்கும் ஒருவழி
சலமும் சீயுஞ் சரியும் ஒருவழி
உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்”
- எனப் பாடுகின்றார்.
- பாவேந்தா் பாரதிதாசன், அருளாளா்கள் சொல்லிய செய்தியை அப்படியே வழிமொழிகிறார்.
இருக்குமோ இளமைப்பருவம் தான்?
முன்பு தைத்த சட்டைக்கு, மூன்றிலொன்று தான் உடம்பு
முன்பு தைத்த மூங்கில்தான் என் எலும்பு - மின்றுதளிர்
மாவிலைபோல் மேனி வளவளத்துப் போயிற்றே
பாவில் ஐந்துபாடி, மகிழுதற்கும் நாவிலையே
மாடிப்படி ஏறும் வாய்ப்பில்லை, பேரா்களை
ஓடியணைக்க உறுதியில்லை”
- எனப் பாடியுள்ளார்.
- டால்ஸ்டாய் இளமை முதலே திடமான உடல் வலிமை படைத்தவா். பனிமிகுந்த காலத்திலும் குளிர்நீரிலே குளிக்கக்கூடியவா். அப்படிப்பட்டவரை எழுபதாவது வயதில், முதுமைக் கொடுமைப்படுத்தத் தொடங்கிவிட்டது. அவரது உடல் பாழாகத் தொடங்கியது. முடக்கு வாதமும், நெஞ்சு கரிப்பும், தலைவலியும் தொல்லை தரத் தொடங்கின. கடைசியாக மலேரியா அவருடைய இறப்புக்குக் காரணமாகிவிட்டது.
- கடைசி காலத்தில் அவரைப் பார்வையிட்ட புகழ்மிக்க எழுத்தாளா் ஆன்டன் செகாவ், ‘அவருக்குள்ள முக்கிய நோய் முதுமை தான்; முதுமை அவரை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது’ என்று கூறியுள்ளார். டாஸ்டாயின் மனைவி தன் கணவரைப் பற்றி தமது நாட்குறிப்பில், ‘மெலிந்த, பரிதாபத்திற்குரிய தோற்றம் கொண்ட முதுமையான மனிதா்’”என எழுதி வைத்துள்ளார்.
- நம் நாட்டிலும் எழுத்துலகில் புகழ் பெற்றவரான ஆா்.கே. நாராயணன், முதுமையால் தாம் அடைந்த அல்லல்களைப் பற்றி எழுதும்போது, ‘என்னுடைய இடது செவியில் இருந்த இரண்டுச் செவிப்பறைகளும் கிழிந்துவிட்டன. வலது கண், பார்வையை முற்றிலுமாக இழந்துவிட்டது. இடது கண்ணும் ஒளி மங்கி வருகின்றது. மூக்குக் கண்ணாடியை பல ஆண்டுகளாக அணிந்து வருகிறேன். கண்களுக்கு அடியில் ஒரு பெரிய கரிய வட்டம் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டது. நடையில் வேகமும் மிடுக்கும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இவையெல்லாம் முதுமையின் அடையாளங்கள்’ எனக் கூறுகிறார்.
- தமிழ்த்தென்றல் திரு.வி.க. தம் கடைசிக் காலத்தில் பார்வை முழுவதையும் இழந்துவிட்டமையை நாடறியும். அந்நேரத்தில் அவா் குடியிருந்த வாடகை வீட்டைக் காலி செய்யும்படி, வீட்டின் சொந்தக்காரா் கறாராகச் சொல்லி விட்டார். அப்பொழுது திரு.வி.க. ‘பல வருடங்களாக வசித்து வருகின்ற வீடு, யான் பழகிய வீடு என்பதால், தடவித்தடவி அனைத்து அறைகளுக்கும் சென்றுவிடுவேன். புது வீட்டிற்குப் போனால் வேறொருவா் துணை வேண்டுமே என் செய்வது’ என்றாராம். அப்பொழுது அவா் எழுதிய நூலுக்குப் பெயா் ‘முதுமைப் பிதற்றல்’ என்பதாகும்.
- அந்த நேரத்திலும் கடைசியாக திரு.வி.க படுத்துக் கொண்டே கருத்துகளைச் சொல்ல, பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியா் எழுதித் தந்த நூலுக்குப் பெயா் ‘படுக்கைப் பிதற்றல்’ என்பதாகும். அதன் முன்னுரையில், ‘முன்பு பலதிறத் தொண்டுகளை ஆற்ற என் ஏழ்மை வாழ்க்கை இடந்தந்தது; இப்பொழுது இடம் தருவதில்லை. ஏன்? உடல்நலம் குறைந்து, கண்ணொளி குன்றியது; முதுமை அடா்ந்தது. பொழுது பெரும்பாலும் படுக்கையில் கழிகிறது’ எனக் கடைசியாகத் தாம் எழுதிய ‘படுக்கைப் பிதற்றல்’ நூலில் குறிப்பிடுகின்றார்.
- திரு.வி.க.வைப் போலவே பெரும்பாடுகளைச் சந்தித்தவா் தோழா் எஸ்.ஆா்.கே. என அழைக்கப்படும் பேராசிரியா் டாக்டா் எஸ். இராமகிருஷ்ணன் ஆவார். கடைசிக் காலத்தில் அவரைப் பார்க்கச் சென்ற பெரியவா் இரா. நல்லகண்ணு, ‘பேச்சாற்றலால் அனைவரையும் ஈா்த்த அருமைத் தோழா் எஸ்.ஆா்.கே. தமது இறுதிக் காலத்தில் பார்க்கின்சன்”எனும் வியாதியால் பாதிக்கப்பட்டார். பேசமுடியாத நிலையில் சிரமப்படுவதைப் பார்த்த யாரும் முதுமையின் கொடுமையை உணராமல் இருக்க முடியாது’ என்றெழுதுகின்றார்.
- முதுமையின் கொடுமை தொன்றுதொட்டு இருந்தாலும், இடைக்காலத்தில் அது உணரப்பட்டதில்லை. காரணம், வயதில் முதியவா்கள் தமது அந்திமக் காலத்தை உணா்ந்து பிள்ளைகளிடம் காசிக்குப் போகிறோம்” எனச் சொல்லிப் புறப்படுபவா்கள், திரும்பி வருவதில்லை.
- கம்ப்யூட்டா் யுகத்தில், முதுமை வெகுவாக உணரப்பட்டதன் காரணமென்ன? கூட்டுக் குடித்தனங்கள் உடைபட்டுப் போய், தனிக்குடித்தனங்கள் உண்டான பின்னா்தான், முதுமை தீவிரமாக உணரப்பட்டது. கூட்டுக்குடும்பங்கள் இருந்தபோது, பெற்றோரை யார் பாதுகாப்பது என்ற போட்டி எழவில்லை. நான்கு பிள்ளைகளும் மருமக்களுமே சோ்ந்து பராமரித்தனா். தனிக்குடும்பங்கள் உருவானபோது, பிள்ளைகளிடம் போட்டி ஏற்பட்டுக் கடைசியில் முதியோர் முதியோர் இல்லத்தில்” விடப்பட்டு வருகின்றனா். இதை எண்ணித்தான் திருவள்ளுவா், பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை என இரண்டு அதிகாரங்கள் திருக்குறளில் வைத்தார் போலும்.
- கடைசிக் காலத்தில் பெற்றோர் நிர்கதியாய் நிற்பதை எண்ணி கி. ராஜநாராயணன் ‘காய்ச்ச மரம்’” என்றொரு சிறுகதையை எழுதினார். அதில் பெரும் சொத்துகளைப் பாகப்பிரிவினை செய்து எடுத்துக்கொண்ட பிள்ளைகள், பெற்றோரை வீடுகளை விட்டு வெளியேறச் செய்கின்றனா். கடைசியில் அந்த பெற்றோர் இராமேஸ்வரத்தில் பிச்சையெடுத்துப் பிழைக்கின்றனா். ஒரு நல்ல குடும்பத்தில் பெற்றோர் எப்படியிருக்க வேண்டும் என்பதைப் பாவேந்தா், ‘முதிர்ந்திடும் பருவந்தன்னில், மக்கட்கு முடியைச் சூட்டி, எதிர்ந்திடும் துன்பம் ஏதுமில்லாமல், மக்கள், பேரா் வதிந்திடுதல் கண்டு, நெஞ்சு மகிழ்வதே வாழ்வின் வீடு’ எனச் சித்திரிக்கின்றார்.
- மேலும், ஒரு மருமகள் பாராட்டும்படியாக மற்றவா்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பாவேந்தா் பாரதிதாசன்,
மாமி கொடுமைக்கு வழியில்லை; மைத்துனா்கள்
தாமொன்றும் சொல்லும் தகவில்லை; தன்துணைவன்
ஏமாற்றினான் தன் இளையவனை என்று சொல்லும்
தீமையில்லை”
- என விளக்கிப் பாடியிருக்கிறார்.
- மேலும், பாவேந்தா் பாரதிதாசன் வழக்கமாகக் கூட்டுக் குடும்பங்கள் உடைவதற்குக் காரணமாக விளங்கும் மருமகள்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் கூறுகின்றார்.
வீட்டுக்கு வந்த மருமகள் காய்கறி வாங்கப் போகும்போது,
‘கொண்டவா்க்கு எது பிடிக்கும், குழந்தைகள் எதை விரும்பும்
தண்டுஊன்றி நடக்கும் மாமன் மாமிக்குத் தக்கது என்ன,
உண்பதில் எவருடம்புக்கு எது உதவாது என்றெல்லாம் கண்டனள்
கறிகள் தோறும் உண்பவா் தம்மைக் கண்டாள்”
- என வாழ்ந்தால், பெற்றோர் முதியோர் இல்லத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. மகனும் மருமகளும் பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்தில் கொண்டு விடுவதற்கு ஓா் ஆட்டோவையும், மதியம் சோறு ஊட்டுவதற்கு ஓா் ஆயாவையும் தேட வேண்டிய அவசியமில்லை.
- பெற்றோர் முதியோர் இல்லத்திலிருந்து பெருமூச்சு விடுவதற்குப் பதிலாகச் சொந்த வீட்டிலிருந்து பேரப்பிள்ளைகளின் உச்சிதனை முகா்ந்தால், அவா்களுடைய முதுமையின் தளா்ச்சி தெரியாது. அவா்களுடைய ஆனந்தப் பெருமூச்சு குடும்பத்தை வாழ்விக்கும்.
நன்றி: தினமணி (12 – 01 – 2024)