TNPSC Thervupettagam

இருபதைத் தாண்டும் தமிழ் விக்கிப்பீடியா

October 4 , 2023 459 days 449 0
  • உலகின் பிரபலமான இணையதளங்களாக கூகுள், ஃபேஸ்புக், எக்ஸ் (டிவிட்டர்) தளங்களை அடுத்து விக்கிப்பீடியா உள்ளது. இணையத்தில் வேடிக்கை பார்ப்பவர் முதல் வேலை பார்ப்பவர் வரை தவிர்க்க முடியாத ஓர் இணையதளம் என்றால், அது விக்கிப்பீடியாதான். தற்போது இருபது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள விக்கிப்பீடியாவின் தமிழ்ப் பதிப்பு, தமிழ் வளர்ச்சிக்கு மட்டுமல்ல... அறிவுப் புரட்சிக்கும் வித்திட்டுள்ளது.
  • 2003 செப்டம்பர் 30 அன்று தமிழில் விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. உலக அளவில், கட்டுரை எண்ணிக்கையின் அடிப்படையில் (1.57 லட்சம்) 62ஆம் இடத்திலும், பயனர் எண்ணிக்கையின் அடிப்படையில் (2.2 லட்சம்) 41ஆம் இடத்திலும் தமிழ் விக்கிப்பீடியா உள்ளது. இந்திய அளவில் உருது (1.95 லட்சம்), இந்தி (1.59 லட்சம்), அதற்கடுத்து தமிழ் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • சிங்கள மொழியில் 20 ஆயிரம் கட்டுரைகளுக்குக் குறைவாகவும், கன்னட மொழியில் சுமார் 30 ஆயிரம் கட்டுரைகளும், மலையாளத்தில் சுமார் 85 ஆயிரமும், தெலுங்கில் 87 ஆயிரமும் கொண்டிருக்கும் வேளையில், தமிழ் மட்டுமே இந்த எண்ணிக்கையை அடைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
  • இதுவரை தமிழ்நாட்டிலிருந்து பலர் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வந்தாலும், குறிப்பிடத் தக்க பங்களிப்பை உலகம் முழுவதிலிருந்தும் பலர் கொடுத்துள்ளனர். இதைத் தொடக்கக் காலத்தில் வளர்த்தெடுத்தவர் இலங்கையைச் சேர்ந்த இ.மயூரநாதன் ஆவார். அவுஸ்திரேலியாவின் கனகரத்தினம் சிறீதரன், கனடாவின் நற்கீரன், பேராசிரியர் செல்வக்குமார், மலேசியாவின் மலாக்கா முத்துக்கிருஷ்ணன், இந்தோனேசியாவின் முஹம்மது பாஹிம், நார்வேயின் கலையரசி, இலங்கையின் பீ.எம்.புன்னியாமீன், அன்ரன், சஞ்சீவி சிவகுமார், சிவகோசரன் உள்ளிட்ட பலரின் பங்களிப்பு தமிழுக்கு வலுசேர்த்துள்ளது.
  • தமிழ் விக்கிப்பீடியா இன்றைய அளவில் மொத்தமாகச் சுமார் 4.7 கோடிச் சொற்களைக் கொண்ட கலைக்களஞ்சியமாக இருக்கிறது. சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் ஆகஸ்ட் மாதம் சுமார் 1.1 கோடி பக்கப் பார்வைகளிலிருந்து இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுமார் 2.3 கோடி பக்கப் பார்வைகளைப் பெற்றுள்ளது.
  • இதே காலக்கட்டத்தில் இந்தி விக்கிப்பீடியாவின் பக்கப் பார்வை என்பது 7.4 கோடியிலிருந்து 8.6 கோடியாக மட்டுமே உயர்ந்துள்ளது. இந்தியா, இலங்கைக்கு அடுத்ததாக அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, இந்தோனேசியா, ஜெர்மனி என்று தமிழ் வாசகர்கள் அதிகமாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வந்து படிக்கிறார்கள்.
  • விக்கிப்பீடியா நிறுவனம் வேங்கைத் திட்டம் உள்படப் பல்வேறு வகையில் இந்திய மொழிகளின் விக்கிப்பீடியா உள்ளடக்கத்தை அதிகரிக்க முனைந்துவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தன்னார்வலர்களின் முயற்சியாலும் ‘கணித்தமிழ்ப் பேரவை’ வழியாகவும் பல கல்வி நிலையங்களில் விக்கிப்பீடியப் பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.
  • கடந்த காலத்தில் இந்து சமய அறநிலையத் துறை, தேசியத் தகவலியல் மையம், தமிழ் இணையக் கல்விக் கழகம், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் போன்ற அரசு அமைப்புகளின் மூலம் அரசின் தரவுகள் பொதுவுரிமையில் விக்கிப்பீடியாவுக்குக் கொடையாகப் பெறப்பட்டு, பல மேம்பாடுகள் செய்யப்பட்டன.
  • பல அரசுத் தளங்களே தமிழில் இல்லாதபோது தன்னார்வலர்களால் வளர்க்கப்படும் தமிழ் விக்கிப்பீடியா, இணையத்தில் தமிழின் சொத்து. யாவருக்கும் உரிமையுள்ள கலைக்களஞ்சியத்தை அனைவரும் இணைந்து வளர்க்கக் கைகோக்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (04 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories