- இந்தியாவில் நூற்றாண்டு காணும் மே நாளில், நவீனத் தமிழ் இலக்கியத்தில் தொழிலாளர்கள் பற்றி என்ன மாதிரியெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று ஒரு பருந்துப் பார்வை பார்த்தால் சில சுவையான குறிப்புகள் கிடைக்கின்றன.
காலத்தைத் தாண்டிய பார்வை:
- முதலில் நம் கவனத்தை ஈர்ப்பது பாரதி எழுதிய ‘ஆறிலொரு பங்கு’ என்னும் கதையே. இந்தச் சிறுகதையை பாரதியார் 1913இல் எழுதியிருக்கிறார். இக்கதைக்கான முகவுரையில், ‘... இந்த நூலை பாரத நாட்டில் உழவுத்தொழில் புரிந்து, நமக்கெல்லாம் உணவு கொடுத்து ரக்ஷிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத்தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன்’ என்று பாரதி எழுதினார்.
- பள்ளர், பறையர் சாதி மக்களை, பாரதி ‘வைசியர்’ என்று குறிப்பிடுவதை உற்றுநோக்க வேண்டும். நால் வருணங்களிலும் சேர்க்காமல், ‘பஞ்சமர்’ என இந்திய சமூகம் அவர்களை வைத்துக்கொண்டிருந்த காலத்தில், பாரதி அவர்களை ‘வைசியர்’ எனக் குறிப்பிடுவது காலத்தைத் தாண்டிய புரட்சிகரமான கருத்தே.
- பாரதியைத் தொடர்ந்து புதுமைப்பித்தன் தன்னுடைய ‘இது மிஷின் யுகம்’ கதையில், ஓட்டலில் வேலைபார்க்கும் சர்வர் ஒருவர், வாடிக்கையாளர்கள் அதிகாரத்தொனியில் இடும் கட்டளைகளுக்கெல்லாம் முகத்தில் எந்தப் பாவமுமின்றி, ‘இதோ கொண்டு வர்றேன் சார்’ என்னும் உணர்ச்சியற்ற வார்த்தைகளுடன் ஓடியோடி ஒரு இயந்திரமாகவே மாறிவிட்டிருப்பதைக் கூர்மையாக விவரித்திருப்பார். சார்லி சாப்ளின் நடித்து இயக்கிய ‘மாடர்ன் டைம்ஸ்’ படத்துக்கு இணையான ஓர் உணர்வை நம்முள் தூண்டும் கதை இது.
முக்கியமான பதிவு:
- பண்ணை அடிமைகளாகச் சாட்டையடியும் சாணிப்பாலும் தண்டனையாகப் பெற்ற கீழத்தஞ்சைத் தொழிலாளிகளின் வாழ்க்கை இலக்கியத்தில் இடம்பெற, 60கள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கம் சார்ந்த படைப்பாளிகளான கு.சின்னப்ப பாரதி, டி.செல்வராஜ், பொன்னீலன், சோலை சுந்தரபெருமாள் போன்றோர் வந்துதான் அது எழுதப்பட்டது. ஆனால், அதற்கு முன்பே 1940களின் மகத்தான படைப்பாளியான கு.ப.ராஜகோபாலன், ‘பண்ணைச்செங்கான்’ என்றொரு கதையை 1934இல் ‘மணிக்கொடி’யில் எழுதிவிட்டார்.
- உண்மையில், இது ஒரு மிக முக்கியமான காலப்பதிவு. 1930களில் சென்னைப் பட்டணத்தில் காலனிய அரசாங்கத்தில் உயர்பதவிகள் உருவான காலத்தில் அதைக் குறிவைத்து கும்பகோணம், மேலத்தஞ்சை வட்டார பிராமண நிலவுடைமையாளர்கள் தங்கள் நிலங்களை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த காரியக்காரர்களான பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்களின் பொறுப்பில் குத்தகைக்கு விட்டுச்சென்றனர்.
- இக்கதையில் வருவதுபோல வெகுசில பண்ணையார்கள் தங்களிடம் பண்ணையாளாக இருந்த பட்டியல் சாதி உழைப்பாளிகளின் பொறுப்பிலும் விட்டுச்சென்றனர். கும்பகோணம் பகுதியில் நிலவுடைமை பிராமணர்களிடமிருந்து பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்களிடம் கைமாறிய வரலாற்றின் தொடக்கப்புள்ளி இக்கதையின் காலமாகும்.
- பல வழக்குகள், பஞ்சாயத்துகளுக்குப் பின்னர்தான் நிலவுடைமை உறவுகள் நிலைநிறுத்தப்பட்டன. செங்கொடி இயக்கத்தின் தொடர் போராட்டங்களின் விளைவாகக் குத்தகை விவசாயிகளை நிலத்தைவிட்டு வெளியேற்ற முடியாதபடிக்கு, ‘குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம்’ பின்னர் (1952இல்) வந்தது தனிக்கதை.
சலனம் ஏற்படுத்திய படைப்புகள்:
- சி.சு.செல்லப்பாவின் கதைகளில் நிலவும் காலம் என்பது தமிழகத்தில் பெருநிலவுடைமையாளர்களாகப் பிராமணர்கள் இருந்த ஒரு காலம். இடைநிலைச் சாதிகள் நிலவுடைமையாளர்களாக இன்னும் எழுந்து வந்திராத நேரம்.
- ஆகவே, பெரும்பாலும் அவர் கதைகளில் பண்ணையார்களாக, மிராசுகளாக பிராமணர்களே இருப்பார்கள். சாதிகளைக் கடந்த மனித சாரத்தைத்தான் செல்லப்பா எழுதினார். ஆனால், அன்றைய காலத்து வாழ்க்கையை அதன் யதார்த்தம் பிசகாமல் எழுதியதில் காலத்தின் சாதியக் கட்டுமானம் குறித்த பதிவாகவும் அந்தக் கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
- 40களிலிருந்து 70கள் வரையிலுமே மே நாள் ஊர்வலங்களில் விவசாயிகளும் பஞ்சாலைத் தொழிலாளிகளும்தான் முன்னணியில் நிற்பார்கள். பஞ்சாலைத் தொழிலாளிகளின் வாழ்வும் போராட்டமும் பற்றி தொ.மு.சி.ரகுநாதன் ‘பஞ்சும் பசியும்’ நாவலில் எழுதினார். கு.சின்னப்ப பாரதியின் ‘தாகம்’, டி.செல்வராஜின் ‘மலரும் சருகும்’ போன்றவை அடுத்தடுத்து வெளியாகின. 1964இல் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தது.
- 1970இல் சிஐடியூவின் உதயத்துடன் ஒன்றுபட்ட செங்கொடி தொழிற்சங்கமும் இரண்டானது. 1974இல் இந்திய வரலாற்றின் மிகப் பிரம்மாண்ட வேலைநிறுத்தம் நிகழ்ந்தது. 17 லட்சம் ரயில்வே ஊழியர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக வேலைநிறுத்தம் செய்தனர்.
- 20 நாள்கள் நீடித்த அந்தப் போராட்டத்தின்போது ஜெயகாந்தன் ‘தினமணி கதி’ரில், ‘சக்கரங்கள் நிற்பதில்லை’ என்றொரு சிறுகதை எழுதினார். பின்னாளில் நெருக்கடிநிலையை (Emergency) ஆதரித்த ஜேகேயின் மனநிலை இந்தக் கதையிலிருந்தே ஆரம்பித்துவிட்டது எனலாம்.
- 70களின் பிற்பகுதியில் கணையாழியில், ‘குருபிரசாத்தின் கடைசி தினம்’ என்றொரு குறுநாவலை சுஜாதா எழுதியிருப்பார். தொழிற்சங்கம் என்பது ஒரு எதிர்மறை சக்தி / பொறுப்பற்ற அமைப்பு என்பதாக அக்குறுநாவல் அழுத்தமாகவும் கிண்டலாகவும் பேசும்.
- வர்க்க அரசியலைத் தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் நின்று பேசிய படைப்பாளி விந்தன். பேராசிரியர் கா.சிவத்தம்பி, தன்னுடைய ‘தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூலில், ‘40களில் திமுக எழுத்தாளர்கள் யாரைக் கதைமாந்தர்களாக ஆக்கினார்களோ, அவர்களேதான் விந்தனின் கதைமாந்தர்களாகவும் வந்தார்கள்.
- ஆனால், திமுக எழுத்தாளர்கள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் பார்ப்பனியம் என்று ஒற்றைத் தீர்வை முன்வைத்தபோது விந்தன், ‘பொருளுடைமையே பிரச்சினைகளின் அடிப்படை’ என்ற சித்தாந்தத்தை நம்பியவர் என்பதால், வர்க்க பேதத்தை முன்னிலைப்படுத்தி அதற்குள் சாதியையும் கொண்டுவந்தார்’ எனக் குறிப்பிடுகிறார்.
வர்க்கப் போரின் ஒரு பகுதி:
- ‘சின்ன விஷயங்களின் மனிதர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்பவர் வண்ணதாசன். தன் சிறுகதைகளின் மூலம் அவர் பேசும் அரசியல் என்ன என்கிற கேள்விக்கு ‘ஒரு’ விடையாக, ‘வருகை’ கதையை எடுத்துக்கொள்ளலாம்.
- பொதுச் சமூகத்தின் கவனம் பெறாத உதிரிப் பாட்டாளிகள், வீடுகளில் உழைக்கும் பெண்கள், உடலை விற்கும் பெண்கள், குழந்தை உழைப்பாளிகள், வேலை கிடைக்காதவர்கள் என விளிம்புநிலை மக்கள்மீதும் வாழ்நிலைமீதும் நம் கவனத்தைக் குவிக்கும் - பதற்றத்துடன் குற்ற உணர்வு கொள்ளவைக்கும் - நுட்பமான வரிகளை வண்ணதாசன் தன் சிறுகதைகளில் எழுதிக்கொண்டே இருக்கிறார்.
- உரிமை கேட்டுப் போராடிய விவசாயத் தொழிலாளிகளை 1968இல் வெண்மணித் தீயில் கொளுத்திய கொடுமையைப் பற்றி நான்கு நாவல்கள் வந்துள்ளன. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப்புனல்’, சோலை சுந்தரபெருமாளின் ‘செந்நெல்’, பாட்டாளியின் ‘கீழைத்தீ’, மீனா கந்தசாமியின் ‘குறத்தியம்மன்’ ஆகியவை.
- சீனிவாசன் நடராஜனின் ‘தாளடி’யும் வெண்மணியைப் பின்புலமாகக் கொண்டிருந்தாலும், அது குற்றவாளி கோபாலகிருஷ்ணனை விடுதலை செய்து, ‘குற்றமிழைத்தவர் அவர் இல்லை’ என்று புதுசாக ஒரு ‘கதை’ சொல்கிறது.
- சமகாலத்தில் தொழிற்சாலைத் தொழிலாளிகள் பற்றிக் கதை எழுதுபவர்களாக மூன்று பேரைக் குறிப்பிடலாம்: ‘ஆயிரம் கைகளும் ஒரே முகமும்’ என்கிற நாவலை எழுதிய புதிய ஜீவா, ‘ஸ்டிரைக்’ என்கிற நாவலை எழுதிய ராமச்சந்திர வைத்தியநாத் (ஜெயகாந்தன் ஏற்க மறுத்த 1974 ரயில்வே போராட்ட வரலாற்றைச் சொல்லும் நாவல்), ‘மில்’, ‘கடசல்’, ‘தாவா’ என அசலான பாட்டாளி வர்க்கப் போராட்ட நாவல்களை அடுத்தடுத்து எழுதிவரும் ம.காமுத்துரை.
- துப்புரவுப் பணியாளர்களின் வாழ்வை ‘தூப்புக்காரி’ நாவலில் எழுதிய மலர்வதியும், ‘தூய்மை’ என்கிற நாவலில் எழுதிய இல.அம்பலவாணனும், ‘சலவான்’ நாவலில் எழுதிய பாண்டியக்கண்ணனும் சவரத் தொழிலாளிகளைக் கவிதைகளில் பாடுபொருளாக்கிய இ.எம்.எஸ்.கலைவாணன், ப.நடராஜன் பாரதிதாஸ் போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
- செங்கொடி ஏந்திப் போர்க்குரல் எழுப்பும் பாட்டாளி வர்க்கம், தம்மைப் பற்றி யார் எப்படியெல்லாம் இலக்கியத்தில் எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்வதும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதிதான்.
நன்றி: தி இந்து (01 – 05 – 2023)