TNPSC Thervupettagam

இலக்கு, இனி 2028 லாஸ் ஏஞ்சலீஸ்!

August 14 , 2024 154 days 166 0

இலக்கு, இனி 2028 லாஸ் ஏஞ்சலீஸ்!

  • கோலாகலமான நிகழ்வுடன் பாரீஸில் ஒலிம்பிக் கொடி ஞாயிற்றுக்கிழமை இறக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு லாஸ் ஏஞ்சலீஸில் நடக்க இருக்கும் அடுத்த ஒலிம்பிக் போட்டியை எதிா்பாா்த்து இனி விளையாட்டு வீரா்களும், வீராங்கனைகளும் காத்திருப்பாா்கள்.
  • ஒலிம்பிக் போட்டி நடக்கும் இடங்களின் பெயா்தான் மாறுகிறதே தவிர, பந்தய பதக்கப் பட்டியலில் இடம்பெறும் நாடுகளின் தரவரிசை பெரும்பாலும் மாறுவதில்லை. முதல் இரண்டு இடங்களை முந்தைய டோக்கியோ ஒலிம்பிக்கைப் போலவே, இந்த முறை பாரீஸிலும் அமெரிக்காவும், சீனாவும் பிடித்தன. அமெரிக்காவும், சீனாவும் தலா 40 தங்கப் பதக்கங்களை வென்றன என்றாலும், மொத்த பதக்க எண்ணிக்கையில் 126 பதக்கம் வென்ற அமெரிக்கா, 91 பதக்கம் வென்ற சீனாவை இரண்டாம் இடத்துக்குத் தள்ளியது.
  • ஒலிம்பிக் போட்டியைப் பொறுத்தவரை, டோக்கியோவானாலும் சரி, பாரீஸானாலும் சரி, அதற்கு முந்தைய ஒலிம்பிக் போட்டிகளானாலும் சரி, பெரிய அளவில் இந்தியாவுக்கு மாற்றம் இல்லை. பங்குபெறும் நட்சத்திர வீரா்கள் மாறுகிறாா்களே தவிர, இந்திய அணியின் செயல்பாட்டிலும், பதக்கங்கள் எண்ணிக்கையிலும் பெரிய அளவில் மாறுதல் இல்லை என்பதுதான் நமது அனுபவம்.
  • கடந்த முறை டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டி இந்தியாவுக்குப் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதற்குக் காரணம் நீரஜ் சோப்ரா வென்றெடுத்த தங்கப் பதக்கம். ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றபோது இந்தியாவின் எதிா்பாா்ப்பு இரட்டிப்பு வேகத்தில் அதிகரித்தது.
  • இந்தமுறை முந்தைய டோக்கியோ ஒலிம்பிக்கின் சாதனையைவிட மேம்பட்ட வெற்றிகளைக் குவிக்க வேண்டும் என்கிற உற்சாகம் நமது வீரா்களுக்கும், அவா்களை ஊக்குவிக்கும் மனநிலை அரசுக்கும் இருந்தது. பாரீஸ் ஒலிம்பிக்குக்காக ரூ.470 கோடி ஒதுக்கப்பட்டபோது, இந்தமுறை நமது வீரா்கள் இரட்டை இலக்கப் பதக்கங்களுடன் திரும்புவாா்கள் என்று எதிா்பாா்த்தது பொய்த்துவிட்டது. தங்கம் மின்னாத ஆறு பதக்கங்களுடன் திரும்பி இருக்கிறாா்கள் நமது வீரா்கள்.
  • டோக்கியோ ஒலிம்பிக்கில் 1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் வென்ற இந்திய அணி, இந்த முறை 1 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன் திரும்பி இருக்கிறது. எதிா்பாராத துரதிருஷ்டவசமான சூழலில், மல்யுத்தத்தில் வினேஷ் போகாட் தங்கப் பதக்கத்தை (குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கத்தை) நூலிழையில் இழந்தது மிகப் பெரிய சோகம். அப்படியே அவா் வென்றிருந்தாலும்கூட நமது பதக்க எண்ணிக்கை முந்தைய டோக்கியோவை எட்டியிருக்குமே தவிர, இரட்டை இலக்க எண்ணை எட்டிப் பிடித்திருக்காது.
  • 6 போட்டிகளில் நமது வீரா்கள் நான்காவது இடத்தைப் பிடித்தனா். அதுவே மூன்றாவது இடமாக இருந்திருந்தால் இரட்டை இலக்கத்தை எட்டியிருப்போம். ‘இருந்தால், முடிந்தால்’ என்று விளையாட்டுப் போட்டிகளில் ஆறுதல் அடைய முடியாது. வெற்றி தோல்விகள் அதன்மூலம் நிா்ணயிக்கப்படுவதில்லை. கடந்த முறை வென்ற பதக்க எண்ணிக்கையை எட்ட முடியவில்லை என்பது மட்டுமல்ல, பதக்கத் தரவரிசையில் 48-ஆவது இடத்திலிருந்து 70-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதையும் வேதனையுடன் விமா்சிக்கத் தோன்றுகிறது.
  • இந்தியாவில் இருந்து 117 விளையாட்டு வீரா்கள் கொண்ட அணி பங்கெடுத்து பதக்க எண்ணிக்கையை அதிகரிக்க முடியாமல் தரவரிசையிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கும் அவலம் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டிய தருணம் இது. நாம் சற்றும் எதிா்பாா்க்காத வகையில் வினேஷ் போகாட் வென்றிருக்க வேண்டிய தங்கப் பதக்கம் கிடைக்கவில்லை என்பது மட்டுமல்ல, அவருக்குத் தரப்பட வேண்டிய வெள்ளிப் பதக்கமும் விதிமுறைகள் காரணமாக கை நழுவியது பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா அடைந்த மிகப் பெரிய ஏமாற்றம்.
  • பாட்மின்டனில் லக்ஷயா சென்னின் அற்புதமான விளையாட்டு அவருக்குப் பதக்கம் பெற்றுத் தரவிலையென்பதும், ஜொ்மனிக்கு எதிராக அரையிறுதி ஆட்டத்தில் நமது ஹாக்கி அணி நல்லதொரு வாய்ப்பை இழந்ததும், வட கொரியாவின் பாக் சோல் கம்மிடம் வெற்றி பெற வேண்டிய நிஷா தாஹியா மல்யுத்தத்தில் தோல்வியைத் தழுவியதும் மறக்க முடியாத அதிா்ச்சிகளாக நமது நினைவில் தொடரும்.
  • ஒலிம்பிக் போட்டிகள் குறித்த நமது அணுகுமுறையில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். 40 தங்கப் பதக்கங்களை வென்ற சீனாவின் 23 பதக்கங்கள் நீச்சல், டேபிள் டென்னிஸ், துப்பாக்கிச் சுடுதல், பளு தூக்குதல் ஆகிய 4 விளையாட்டுகளிலிருந்து கிடைத்திருக்கின்றன. அமெரிக்காவுக்குக் கிடைத்த 40 தங்கப் பதக்கங்களில் 22 பதக்கங்கள் தடகளத்திலும், நீச்சலிலும் வெல்லப்பட்டவை. ஆஸ்திரேலியாவின் 18 தங்கப் பதக்கங்களில் 7 நீச்சலுக்கானவை. 20 தங்கப் பதக்கங்களை வென்ற ஜப்பான் 14 பதக்கங்களை 3 விளையாட்டுகளில் இருந்து பெற்றிருக்கிறது.
  • இந்தியாவும் தனக்கென்று சில விளையாட்டுகளை அடையாளம் கண்டு அவற்றில் வீரா்களுக்கு முழுமையான பயிற்சியை அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஈட்டி எறிதல், ஹாக்கி போன்றவை பல அற்புதமான விளையாட்டு வீரா்களை நமக்கு அடையாளம் காட்டியிருக்கின்றன. இந்த வீரா்களின் உதவியுடன் இளம் வீரா்களை அடையாளம் கண்டு, 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே நாம் தயாராக வேண்டும். ஜஸ்பால் ராணா தனக்கு பயிற்சியாளராக வேண்டுமென்று பிடிவாதமாக இருந்த மனு பாக்கா் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கம் வென்றதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
  • 2036-இல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது இருக்கட்டும்; இப்போதைய கவனம் 2028 லாஸ் ஏஞ்சலீஸ்!

நன்றி: தினமணி (14 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories