TNPSC Thervupettagam

இலக்கை எட்டுவதால் மட்டும் என்ன பயன்

January 26 , 2024 214 days 177 0
  • நாட்டின் ஒட்டுமொத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் 27 சதவீதத்திலிருந்து  2030-ஆம் ஆண்டிற்குள் 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
  • இந்தியாவின் உயர்கல்வி அமைப்பு சீனா, அமெரிக்காவுக்கு அடுத்து மாணவர்களின் அடிப்படையில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகும். சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் உயர்கல்வித் துறை பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக அளவிலான நிறுவனங்கள், கல்லூரிகளின் எண்ணிக்கையில் மிகப்பெரிய அதிகரிப்பைக் கண்டுள்ளது.
  • 2014-15-ஆம் ஆண்டு 760-ஆக இருந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 2020-21-ல் 1,113-ஆக அதிகரித்துள்ளன. இந்திய உயர்கல்வி தொடர்பான புள்ளிவிவரங்களையும், தரவுகளையும் கண்டு பெருமைப்படும் வேளையில் இதர நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
  • டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன் போன்ற நாடுகளில் உயர்கல்விக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. உயர்கல்வியில் சிறந்து விளங்கும் இந்நாடுகளே உலக கல்வித் தரவரிசைப் பட்டியலிலும், உலகின் மகிழ்ச்சியான நாடுகளிலும் முதல் 10 இடங்களில் இடம்பெற்று வருகின்றன.
  • அண்மைக்காலமாக உயர்கல்வியில் சேர்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் நாட்டில் பள்ளிக்குச் செல்லும் 100 பேரில் 19 பேர் மட்டுமே கல்லூரிக்குச் செல்கின்றனர். இது தமிழகத்தில் 50-க்கும் மேல் உள்ளது.
  • உயர்கல்வியில் சேர்க்கை பெறுவோரில் மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில பாடப் பிரிவுகளில் மாணவிகள் அதிகளவில் சேர்க்கை பெறுகின்றனர். இதற்கு, கல்வி குறித்த விழிப்புணர்வு, அரசின் திட்டங்கள் ஆகியவற்றுடன் உயர்கல்வியில் மாணவர்களின் சேர்க்கை குறைவும் காரணமாகும்.
  • மாணவர்களைப் பொருத்தவரை பிளஸ் 2-க்குப் பின்னர் தொழில் சார்ந்த படிப்புக்காக தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுகின்றனர். அதன்மூலம் வேலைக்காக தனியார் நிறுவனங்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் செல்வதும் அதிகமாக உள்ளது.
  • உயர்கல்வியில் சேர்க்கை பெறும் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை எண்ணி பெருமை கொள்கிறோம். பாலின சமநிலை குறியீட்டின்படி உயர்கல்வித் துறையை அணுகுவதில் ஆண்களைவிட பெண்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளனர். 2018-19-இல் 1.00 ஆக இருந்த இந்தக் குறியீடு 2019-20-ல் 1.01-ஆக அதிகரித்துள்ளது.
  • ஆனால், மக்கள்தொகையில் பெண்களின் பங்கை ஒப்பிடும்போது அவர்கள் இன்னும் குறைந்த அளவிலேயே உள்ளனர்.
  • பொறியியல் அல்லது வேலை சார்ந்த படிப்புகளில் பெண்களின் எண்ணிக்கை குறைவாகும். ஒட்டுமொத்த அளவில் பெண் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், தொழிலாளர்களில் பெண்களின் பங்களிப்பு குறைவாகும்.
  • உயர்கல்வி பெறுவோர் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்திய பொருளாதாரத்தில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இளநிலை பட்டதாரிகளிடையே 2012-இல் 20 சதவீதமாக இருந்த வேலையின்மை விகிதம் 2021-இல் 34 சதவீதமாகவும், இதே காலகட்டத்தில் முதுநிலை பட்டதாரிகளிடையே 18 சதவீதத்திலிருந்து 37 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
  • வேலையின்மை அதிகரித்து வருவது ஒருபுறமிருக்க பெருந்தொற்று காலத்தின்போதும், அதன்பின்னரும் உயர்கல்வி பயில்வோரிடம் கற்றல் திறன் குறைந்து வருகிறது. பட்டப் படிப்பு முடிப்பவர்களில் 47 சதவீதம் பேர் மட்டுமே புதிய வேலைகளில் சேரும் தகுதியோடு உள்ளனர் என்றும், இதற்கு முக்கியக் காரணம் ஆசிரியர் பணியிடங்களில் காணப்படும் மிகப்பெரிய பற்றாக்குறைதான் என்றும் தேசிய அளவிலான ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
  • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரையில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளில் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்களே அதிகளவில் பங்கேற்பவர்களாக இருந்தனர். ஆனால், தற்போதைய தேர்வுகளில் மருத்துவம், பொறியியல், வேளாண்மை பட்தாரிகளின் பங்கேற்பு அதிகரித்து வருகிறது.
  • கடந்த 2017-ஆம் ஆண்டுமுதல் 2021 வரையில் நடத்தப்பட்ட குடிமைப் பணி முதன்மைத் தேர்வுகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் மொத்தமாக 4,371 பேர் (ஆண்கள் 3,265, பெண்கள் 1,106) பரிந்துரைக்கப்பட்டனர். முதன்மைத் தேர்வில் பங்கேற்றவர்களைப் பட்டப் படிப்பின் அடிப்படையில் பிரித்தால் மொத்தமாக பங்கேற்றவர்களில் 2783 பேர் (63 சதவீதம்) பொறியியல் பட்டதாரிகளாவர்.
  • 1033 பேர் கலை, வரலாறு, தத்துவம் உள்ளிட்ட பிரிவுகளைச் சேர்ந்த பட்டதாரிகள், 315 அறிவியல் பட்டதாரிகள், 240 பேர் மருத்துவப் பட்டதாரிகள் ஆவர். இந்த 5 ஆண்டுகளில் முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 4371 பேர்களில் 3337 பேர் இளநிலை, 1034 பேர் பட்ட மேற்படிப்பு பட்டதாரிகள் ஆவர்.
  • கலை, அறிவியல் பாடப் பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் போட்டித் தேர்வுகளில் அதிகளவில் பங்கேற்றாலும் தேர்ச்சி பெறுவது குறைவாகவே உள்ளது. இதற்கு அவர்களிடையே இருந்துவரும் கற்றல் திறன் குறைபாடே முக்கிய காரணமாகும்.
  • அதன் எதிரொலியாக நடப்பாண்டில் கணிதம், இயற்பியல் ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை இல்லாததாலும், குறைவாலும் 12 அரசு கல்லூரிகளில் இப்பாடப்பிரிவுகள் நீக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாடப்பிரிவுகள் நீக்கப்படும் அளவிற்கு நிலவும் கற்றல் குறைபாட்டை நிவர்த்தி செய்வது அவசியமாகும்.
  • மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களாலும், பிற காரணங்களாலும் இலக்கை எட்டிவிட முடியும். இந்திய கிராமங்களில் வசிக்கும் 78 சதவீத பெற்றோர்; தங்கள் மகள்களை பட்டப் படிப்பு அல்லது அதற்கு மேல் படிக்க வைக்க விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் பாதிக்கும் மேற்பட்ட கல்லூரிகள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளதால் மாணவ, மாணவிகள் அதிகளவில் சேர்க்கை பெறுகின்றனர்.
  • ஆனால், மாறிவரும் சூழ்நிலைக்கேற்ப கற்றல் திறனை அதிகரிக்காமலும், போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்காமலும் இலக்கை எட்டுவதால் மட்டும் எத்தகைய மாற்றமும் நிகழ்ந்துவிடாது.
  • குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை சூழ்நிலைக்கேற்ப பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்படும் போது எதிர்காலத்தில் வேலைவாய்ப்பை அளிக்கும் வகையிலான பாடப் பிரிவுகளைத் தொடங்க வேண்டும்.
  • அதிகரித்துவரும் பட்டதாரிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும். மாறாக புதிய வேலைவாய்ப்புகள் இல்லாது வேலையின்மை அதிகரிப்பது எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுப்பதாக அமையக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: தினமணி (26 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories