இலங்கை: என்ன செய்யப் போகிறார் புதிய அதிபர்?
- இலங்கையின் புதிய அதிபராகப் பொறுப்பேற்றிருக்கிறார் அநுர குமார திஸ்ஸநாயக.
- ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி - மக்கள் விடுதலை முன்னணி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு, இந்திய ஆதரவாளரான சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க போன்ற பெருந்தலைகளை உருள வைத்தவர் திஸ்ஸநாயக.
- இந்துப் பெருங்கடலில் அது இருக்கும் இடம் காரணமாகவே உலகம் முழுவதுமே உற்று நோக்கும் இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தின் தொடர்ச்சியாக என்னென்னவெல்லாம் நடைபெறப் போகின்றன என்பது எதுவும் யாராலும் கணிக்க முடியாதனவாக இருக்கின்றன. ஏனெனில், இலங்கையில் அதிபர் பொறுப்பேற்கும் முதல் இடதுசாரி அநுர குமார திஸ்ஸநாயக.
- இரு ஆண்டுகளுக்கு முன் பெரும் பொருளாதார வீழ்ச்சியைக் கண்டது இலங்கை. பெரும் உணவுப் பஞ்சங்களுடன் ஒட்டுமொத்த நாடும் திண்டாடித் தெருவில் நின்றது, எதிர்ப்புக் குரல் எழுப்பியபடி.
- அரசுக்கு எதிரான இந்தப் போராட்ட காலங்களில் அரசியலில் புதுமுகங்கள், அமைப்பு ரீதியிலான மாற்றங்கள் போன்றவையெல்லாம் இன்றைய அதிபரான அநுர குமார முன்வைத்த கோரிக்கைகள்; இளைஞர்களிடைய பெரும் ஆதரவைப் பெற்றன. இடையில் மாற்றுகள் வந்தாலும் தொடர்ந்து கனன்றுகொண்டிருந்த இந்த ஆதரவு அலைதான் வாய்ப்புக் கிடைத்ததும் மேலெழுந்து திஸ்ஸநாயகவை அதிபர் பதவியில் அமர வைத்திருக்கிறது.
- உழைக்கும் மக்கள், தொழிலாளர் ஆதரவு நிலைப்பாடு மற்றும் மேல்தட்டு அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் எதிரான போக்கு ஆகியவை எல்லாமும் மக்கள் மனப்போக்குடன் இணைந்துகொள்ள அநுர குமாரவின் வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.
- ஊழல்கள், அரசியலிலும் அதிகாரத்திலும் வாரிசு வழிமுறைகள், நாட்டின் அழிவுக்குக் காரணமான கொள்கைகள், அரச பதவியிலிருந்தவர்கள் அடித்த கொள்ளைகள் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்களை முன்வைத்ததுடன் உறுதியாக எடுத்த எதிர் நிலைப்பாடுகள் எல்லாமும் நாட்டின் இளைய தலைமுறையினரிடைய திஸ்ஸநாயக பெரும் வரவேற்பைப் பெறக் காரணமாக அமைந்துவிட்டன.
- இதுவரை இலங்கை அரசியலில் மிகக் குறைவான வாக்குகள் மட்டுமே வாங்கிவந்த – கடந்த தேர்தலில் வெறும் 3 சதவிகிதம் – ஜேவிபி கட்சியின் தலைவர் இப்போது தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளார் (போட்டியிட்ட வேட்பாளர்கள் யாருமே 50 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறவில்லை. வெற்றி பெற்ற திஸ்ஸநாயக பெற்றிருப்பது 42.31 சதவிகித வாக்குகள்).
- அநுர குமார திஸ்ஸநாயகவின், அவருடைய இயக்கப் பின்னணிதான் இன்னமும் இந்தியா உள்பட பல நாடுகளையும் ஊகிக்க முடியாத அளவுக்குத் திகைக்க வைத்துக்கொண்டிருக்கிறது.
- மார்க்சிய – லெனினியக் கொள்கையின்பாற்பட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி - மக்கள் விடுதலை முன்னணி), கடந்த காலத்தில் இரண்டு முறை 1971, 1987-ல் இலங்கையில் ஆயுதந்தாங்கிய சோசலிசப் புரட்சியின் மூலம் அரசைக் கைப்பற்ற முயன்று முறியடிக்கப்பட்டது. இந்த இரு புரட்சி நடவடிக்கைகளின்போதும் அரச ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு ஆயிரக்கணக்கான இயக்கத் தோழர்களைப் பறிகொடுத்திருக்கிறது.
- 1994-ல் ஆயுதங்களை ஒதுக்கிவைத்துவிட்டுத் தேர்தல் அரசியலுக்குள் நுழைந்த ஜேவிபி, சிலநேரங்களில் ஆளும் அரசுக்கு ஆதரவான நிலையினையும் எடுத்திருக்கிறது.
- 2000 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திஸ்ஸநாயக, அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் வேளாண் மற்றும் பாசனத் துறை அமைச்சராக இருந்திருக்கிறார்.
- 2019-ல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் போட்டியிட்டு கோத்தபய ராஜபட்சவிடம் தோற்றார். பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் கொந்தளித்த நிலையில், சில ஆண்டுகளுக்குப் பின் கோத்தபய பதவி விலக நேரிட்டது.
- ரணில் விக்ரமசிங்கவோ, பிரேமதாசவோ வென்றிருந்தால் இந்தியாவுக்கு ஒருவேளை கொஞ்சம் வசதியாக இருந்திருக்கலாம்; ஏற்கெனவே நன்கு அறிந்தவர்கள் என்பதனால்தான். ஆனால், இந்தத் தேர்தலில் நினைத்தும் பார்க்க முடியாத வகையில் - ஆயுதங்களால் சாதிக்க இயலாததை - தேர்தல் அரசியல் வழி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார் திஸ்ஸநாயக.
- ஜனதா விமுக்தி பெரமுன காலங்காலமாக இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டையே எடுத்து வந்திருக்கிறது. இதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன. 1971, 1987 புரட்சி நடவடிக்கைகளில் ஜேவிபி இறங்கியபோது, கலகத்தையும் இந்த இயக்கத்தையும் ஒடுக்கியதில் இந்தியாவுக்கும் கணிசமான பங்கிருந்திருக்கிறது. 1971 கலகத்தின்போது, ரத்மலானை விமான நிலைய பாதுகாப்பு போன்ற சில பணிகளில் இந்தியா ராணுவத்தினரே நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர். 1987-லும் வெளியே தெரியாவிட்டாலும் பல வகையிலும் இலங்கை ஆட்சியாளர்களுக்குத் தேவையான உதவிகளை இந்தியா செய்துவந்துள்ளது.
- எனினும், இலங்கையில் கனிந்துவரும் சூழ்நிலையை முன் உணர்ந்தோ என்னவோ, இந்த ஆண்டுத் தொடக்கத்தில் - பிப்ரவரி மாதத்தில் அநுர குமார திஸ்ஸநாயகவைத் தில்லிக்கு அழைத்து இந்தியா பேசியது. திஸ்ஸநாயகவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் சந்தித்தனர்.
- இந்தியாவுக்கு அச்சுறுத்தலான விதத்தில் இலங்கையின் கடல், நில, வான் பகுதிகளை யாரும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று அண்மையில் திஸ்ஸநாயக குறிப்பிட்டிருந்தாலும்கூட எதிர்காலத்தில் (கொள்கைவழி நெருக்கமான) சீனாவுடன் மேலும் நெருங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
- இந்தியாவைப் பொருத்தவரை இலங்கைத் தமிழர் பிரச்சினை, 1987 ஆம் ஆண்டின் 13-வது சட்டத் திருத்த அமல், தொடரும் சீனாவின் முதலீடுகள் - செல்வாக்கு, தமிழக மீனவர்கள் பிரச்சினை எனப் புதிய அரசுடன் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. 1987 ஆம் ஆண்டு இந்தியா – இலங்கை உடன்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள் இவர்கள்.
- இவையன்றி, இலங்கையில் இந்திய நிறுவனங்களுக்கு ஏராளமான முதலீடுகளும் வணிகங்களும் இருக்கின்றன. இலங்கையின் எரிசக்தி இறையாண்மைக்குப் பாதகமாக இருப்பதால் அதானி குழுமத்தின் காற்றாலைத் திட்டத்தைத் துடைத்தெறிவோம் என்று தெரிவித்தவர் திஸ்ஸநாயக.
- எனினும், சீனத்தின் உதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சில - ஹம்பன்தோட்டா துறைமுகம், கொழும்பு துறைமுக நகர் – பெருந்திட்டங்களில் ஊழல் மற்றும் வெளிப்படைத் தன்மையின்மை பற்றி இந்தியா வந்திருந்தபோது திஸ்ஸநாயக குறிப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.
- அநுர குமார திஸ்ஸநாயகவின் வெற்றியில் குறிப்பிடத் தக்க அம்சமாக இலங்கையிலே இப்போதுதான் முதல்முறையாக சிங்கள இனவெறியைத் தூண்டாத வகையில் போட்டியிட்டு ஒருவர் வெற்றி பெற்றிருக்கிறார் என்பவர்களும் இருக்கிறார்கள்.
- தொடக்க காலத்தில் ரோஹண விஜயவீர தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனவின் பொதுச் செயலராக இருந்த லயனல் போபகே, நேர்காணலொன்றில் தெரிவித்திருக்கும் சில விஷயங்கள் கவனிக்கத் தக்கன (ரோஹண விஜயவீரவுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக - சிறுபான்மை இனங்களின் (தமிழர்களின்) சுய நிர்ணய உரிமைக்கான அங்கீகார மறுப்பு, மீண்டும் வன்முறையை அரசியல் ஆயுதமாகக் கொண்டமை - 1983-ல் ஜேவிபியிலிருந்து வெளியேறியவர் போபகே).
லயனல் போபகே கூறுகிறார்:
- "2016 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தப் பிரச்சினைகள் தொடர்பான ஜேவிபியின் அணுகுமுறையில் படிப்படியான ஒரு மாற்றம் ஏற்பட்டு வருவதைக் கவனித்திருக்கிறேன். இப்பொழுது அந்த அணி 'சுய நிர்ணய உரிமை' என்ற வார்த்தையை நேரடியாகக் கூறாவிட்டாலும்கூட, தமிழ் மக்களையும் உள்ளிட்ட இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் அவற்றுக்கே உரிய தனித்துவமான பிரச்சினைகளைக் கொண்டிருக்கின்றன என்ற விடயத்தையும், அப்பிரச்சினைகள் ஒவ்வொன்றும் புறம்பான விதத்தில் கையாளப்பட வேண்டும் என்ற விடயத்தையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்திருக்கின்றது.
- "அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் வழிமுறைகளை அவர்கள் விரிவாக விளக்கிக் கூறாவிட்டாலும் கூட அதுவே ஒரு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மாற்றம் என நான் நினைக்கிறேன்" என்கிறார் போபகே.
- "1987 - 1989 கிளர்ச்சியின்போது ஜேவிபி ஒரு தீவிர சிங்கள தேசியவாத நிலைப்பாட்டை எடுத்திருந்தது. அந்தப் பின்னணியிலேயே வன்முறைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. "ஆனால், இன்றைய என்பிபியில் அந்தக் கருத்தியலுக்கு இடமில்லை” என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் போபகே.
- இதுவே தமிழர்கள் உள்பட மற்றவர்களுக்கும் நம்பிக்கையளிக்கிற விஷயம்.
- இலங்கை அதிபர் தேர்தலில் திஸ்ஸநாயக வெற்றி பெற்றவுடனேயே முதல் ஆளாகச் சென்று வாழ்த்துச் சொன்னவர் இந்தியத் தூதரான சந்தோஷ் ஜாதான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- (இலங்கையில் இன்னொரு விஷயமும் இருக்கிறது – இதுவரையிலும் ஏதோவொரு வகையில் ஆட்சியாளர்களின் கைப்பாவைகளைப் போலவே – சில காலகட்டங்களில் அவர்களையும்விட அதிகாரம் கொண்டவர்களாக – இலங்கை ராணுவம் செயல்பட்டு வந்திருக்கிறது. 1962 ஆம் ஆண்டில் ஒரு முறை தீவில் ஆட்சியைக் கைப்பற்றவும் ராணுவம் முயன்று முறியடிக்கப்பட்டது).
- அதிபராகப் பொறுப்பேற்றுள்ள அநுர குமார திஸ்ஸநாயக அடுத்தடுத்து என்ன செய்யப் போகிறார்? என்னென்ன முடிவுகள் எடுக்கப் போகிறார்? இலங்கை சம்பந்தப்பட்ட எல்லாருமே கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
நன்றி: தினமணி (23 – 09 – 2024)