TNPSC Thervupettagam

இலங்கைத் தேர்தல் தமிழர்கள் உணர்த்தியிருப்பது என்ன?

November 25 , 2024 54 days 76 0
  • 2024 நவம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு (என்பிபி) கிடைத்த மகத்தான வெற்றி, அரசியல் அவதானிகளை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது, தமிழ்த் தேசியவாத அரசியலின் கோட்டையாக விளங்கிய யாழ்ப்பாண மாவட்டம் உள்பட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை முதல் தடவையாகக் கைப்பற்றியிருக்கிறது.
  • இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக வடக்கில் இருந்து தெற்கு வரையும், கிழக்கில் இருந்து மேற்கு வரையும் இன, மத வேறுபாடுகளைக் கடந்து வாக்காளர்களின் அமோக ஆதரவைத் தேசிய மக்கள் சக்தி பெற்றிருக்கிறது. இதை எப்படிப் பகுப்பாய்வது?

​வியப்பை ஏற்படுத்திய தேர்தல்:

  • தேசிய மக்கள் சக்திக்குக் கிடைத்த மகத்தான ஆதரவு தேசிய ஒருமைப்​பாட்டை நோக்கிய வழக்கத்தை மீறிய குறிப்​பிடத்தக்க நகர்வு என்றும், வரலாற்றுரீ​தியாக மத்திய ஆட்சிமுறை மீது வெறுப்புக் கொண்டிருந்த பிராந்தி​யங்​கள்கூட, அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் தலைமைத்து​வத்தில் நம்பிக்கையை வெளிப்​படுத்​தி​யிருக்​கின்றன என்றும் சில அரசியல் அவதானிகள் கூறியிருக்​கிறார்கள்.
  • “பாரம்​பரியமான பிளவு​களைக் கடந்து தேசிய நோக்கு ஒன்றை வளர்ப்​பதில் தேசிய மக்கள் சக்தி வெற்றி கண்டிருக்​கிறது; பிரதான அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்​சா​ரங்​களில் சிறுபான்மைச் சமூகங்களை அழுத்தும் முக்கியமான பிரச்​சினை​களுக்கு முக்கி​யத்துவம் கொடுக்​கப்​பட​வில்லை என்றபோ​தி​லும், வடக்கு, கிழக்​கிலும் நாட்டின் ஏனைய பாகங்​களிலும் தேர்தல் முடிவுகள் ஒரே மா​திரியாக அமைந்​திருப்பது தேசிய அரசியல் நீரோட்​டத்தில் இணைந்​து​கொள்​வதில் அந்த மக்கள் அக்கறை காட்டத் தொடங்கி​விட்​டார்கள் என்பதன் வெளிப்​பாடு” என்று அந்த அவதானிகள் கூறுகிறார்கள்.
  • அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) தலைவர்கள் குறிப்பாக, அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா போன்ற​வர்கள் சிறுபான்மைச் சமூகங்கள் இனவாத அரசியலை நிராகரித்​திருக்​கின்றன என்று கூறுகிறார்கள்.

என்ன காரணம்?

  • வழமைக்கு மாறான முறையில், இந்தத் தடவை அதிபர் தேர்தலிலும் நாடாளு​மன்றத் தேர்தலிலும் தென்னிலங்​கையில் தேசிய​வாதப் பிரச்​சா​ரங்​களுக்கு இடமிருக்க​வில்லை. ராஜபக்​சக்​களின் தலைமையில் சிங்கள பௌத்தத் தேசியவாத அரசியலை முன்னெடுத்த சக்திகள் படுமோச​மாகப் பலவீனமடைந்​திருந்​திருப்​பதும் பிரதான அரசியல் கட்சிகள் சிறுபான்மைச் சமூகங்​களின் வாக்கு​களைப் பெறுவதற்காக நேசக்கரம் நீட்டியதும் அதற்குப் பிரதான காரணங்​களாகும். இதுவரை வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களைப் பிரதி​நி​தித்து​வப்​படுத்​திவந்த தமிழ்த் தேசியவாத அரசியல் கட்சிகள் நாடாளு​மன்றத் தேர்தலில் மோசமான பின்னடைவைச் சந்தித்​திருக்​கின்றன.
  • கடந்த நாடாளு​மன்​றத்தில் கொண்டிருந்​ததை​யும்விட இந்தத் தடவை இரண்டு இடங்களைக் கூடுதலாகப் பெற்றிருப்பது குறித்து இலங்கை தமிழரசுக் கட்சி பெருமைப்​படு​வதற்கு எதுவுமில்லை. ஐந்து மாவட்​டங்​களில் தேசிய மக்கள் சக்தி அதிகமான இடங்களைக் கைப்பற்றியதன் பின்னணி​யிலேயே, தமிழ் மக்கள் மத்தியில் அந்தக் கட்சியின் தற்போதைய நிலையை நோக்க வேண்டும்.
  • தமிழ்க் கட்சிகளின் இத்தகைய பின்னடைவுக்கு மத்தி​யில், தென்னிலங்​கையில் சிங்கள பௌத்த கடும்​போக்குத் தேசிய​வா​திகள் என்று அடையாளம் காணப்பட்ட பல அரசியல்​வா​திகள் இந்தத் தடவை வெற்றி​பெற​வில்லை. இதையடுத்து, தெற்கில் சிங்கள பௌத்த தேசிய​வாதமும் வடக்கில் தமிழ்த் தேசிய​வாதமும் தோற்கடிக்​கப்​பட்டு​விட்​ட​தாகச் சில விமர்​சகர்கள் கூறுகிறார்கள்.

தமிழர்​களின் அதிருப்தி:

  • குறிப்​பிட்ட சில சிங்கள கடும்​போக்கு தேசிய​வா​தி​களின் தேர்தல் தோல்வியைச் சிங்கள பௌத்தத் தேசிய​வாதத்தின் தோல்வி என்று எவ்வாறு வியாக்​கி​யானம் செய்ய முடியாதோ, அதேபோன்றே தமிழ்த் தேசிய​வாதக் கட்சிகளுக்கு வடக்கு, கிழக்கில் ஏற்பட்ட கடுமையான பின்னடைவை வைத்து, தமிழ் மக்கள் தமிழ்த் தேசிய​வாதத்தை நிராகரித்​திருப்​ப​தாகச் சொல்லிவிட முடியாது.
  • தமிழ் மக்கள் தேசிய​வாதச் சிந்தனை​களின் அடிப்​படையிலான தங்களின் நியாயபூர்வ அரசியல் விருப்​பங்​களில் அக்கறை காட்டாமல், தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்​பாட்டை ஏற்றுக்​கொண்டு தேர்தலில் ஆதரவை வழங்கி​னார்கள் என்று கூற முடியாது. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான கடந்த 15 வருடங்​களாகத் தங்களைப் பிரதி​நி​தித்துவம் செய்துவந்த தமிழ்க் கட்சிகள் / அவற்றின் தலைவர்கள் மீதான வெறுப்பையே வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பின் மூலம் வெளிக்​காட்டியிருக்கிறார்கள்.
  • வெறுமனே கடந்த காலப் போராட்​டங்களை மட்டும் நினைவு​படுத்​திக்​கொண்டு உணர்ச்​சிவசமான தமிழ்த் தேசியவாத முழக்​கங்​களைப் பயன்படுத்தி எந்தப் பயனையும் தராத அரசியல் அணுகு​முறை​களைக் கடைப்​பிடித்துவந்த தமிழ் அரசியல் தலைவர்கள், இனிமேலும் தங்களுக்குச் சரியான பாதையைக் காட்டு​வார்கள் என்று தமிழ் மக்கள் நம்பவில்லை. அத்துடன் முன்னெப்​போதும் இல்லாத அளவுக்குத் தமிழ் அரசியல் சக்திகள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்டிய ஒரு காலக்​கட்​டத்தில் தமிழ் அரசியல் சமுதாயம் சிதறு​பட்டு நிற்ப​த​னால், தமிழ் மக்கள் சீற்றமடைந்​திருக்​கிறார்கள்.
  • தங்கள் மத்தியில் தமிழ்க் கட்சிகளுக்கு மாற்றாக நடைமுறைச் சாத்தி​ய​மானதும் விவேக​மானதுமான அரசியல் பாதையில் தங்களை வழிநடத்​தக்​கூடிய ஓர் அரசியல் சக்தி இல்லை என்பதனால் வேறு வழியின்றி தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்​பி​னார்கள். அதிபர் தேர்தலில் அநுர குமார திசாநாயக்காவைப் பெருமளவில் ஆதரிக்காத தமிழ் மக்கள், அவரின் வெற்றிக்குப் பிறகு தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்​பதில் நாட்டம் காட்டக்​கூடிய ஒரு சூழ்நிலை உருவானது.

புதிய அரசின் பொறுப்புகள்:

  • இது இவ்வாறிருக்க, இனவாத அரசியலும் மதத் தீவிர​வாதமும் மீண்டும் தலையெடுப்​ப​தற்கு ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்று புதிய நாடாளு​மன்​றத்தின் முதலாவது கூட்டத்தில் தனது அரசாங்​கத்தின் கொள்கை விளக்​க​வுரையை நிகழ்த்திய அதிபர் திசாநாயக்க கூறியிருப்பது கவனம் ஈர்க்​கிறது.
  • இன, மத வேறுபாடு​களைக் கடந்து மக்கள் தனது அரசாங்​கத்​துக்கு வழங்கி​யிருக்கும் மகத்தான ஆதரவு இனவாதம் மீண்டும் தலையெடுக்​காமல் இருக்​கக்​கூடிய சூழ்நிலையை உருவாக்க உதவும் என்று அதிபர் நம்பு​கிறார் என்றால், அதே இனவாதம் தோற்று​வித்த பிரச்​சினை​களுக்குக் காலம் தாழ்த்​தாமல் தீர்வு​களைக் காண்பதும் அவசியம். சிறுபான்மைச் சமூகங்களின் நியாயமான அரசியல் விருப்​பங்​களையும் மனக்குறை​களையும் மதிக்காத தென்னிலங்கை அரசியல் கலாசா​ரத்தை மாற்றியமைக்க வேண்டியது, அதிபர் தனது குறிக்கோளை அடைவதற்கான முதல் தேவை.
  • தேசிய இனப்பிரச்​சினைக்கு அரசியல் தீர்வைக் காண்ப​தற்கு இதுவரையில் முன்னெடுக்​கப்பட்ட சகல முயற்சி​களையும் எதிர்த்த கசப்பான கடந்த காலத்தில் இருந்து விடுபடுவதற்கான தெளிவான அறிகுறிகளை தேசிய மக்கள் சக்தி - குறிப்பாக ஜே.வி.பி. இதுவரையில் காண்பிக்க​வில்லை. அண்மைக்​காலத்தில் அரசமைப்புச் சட்டத்தின் 13ஆவது திருத்தம் தொடர்பில் தோன்றிய சர்ச்​சைகளின்போது தேசிய மக்கள் சக்தி வெளிப்​படுத்திய நிலைப்பாடுகள் இதற்குச் சான்றுகளாகும்.
  • முன்னைய அதிபர்​களில் எந்த ஒருவருக்குமே வழங்கி​யிராத பெரும்​பான்மையை திசாநாயக்​க​வுக்கு மக்கள் வழங்கி​யிருக்​கிறார்கள். சட்டத்தில் திருத்​தங்​களைச் செய்தோ அல்லது புதிய அரசமைப்பை அறிமுகம்​செய்தோ இனப்பிரச்சினை விவகாரத்தில் தீர்வு​களைக் காண்ப​தற்கு எந்தத் தடையும் அவருக்கும் அரசாங்​கத்​துக்கும் கிடையாது. அரசியல் துணிவாற்றல் மட்டும்தான் அதற்குத் தேவை.
  • அதிகாரப் பரவலாக்கல், சிறுபான்மைச் சமூகங்​களின் நியாயமான அரசியல் விருப்​பங்கள் போன்றவை சார்ந்து ஆழக்காலூன்றிய எதிர்​மறையான நிலைப்​பாடு​களைக் கொண்ட பெரும்​பான்​மை​யினரின் நம்பிக்கையை அதிபர் வென்றெடுத்​திருக்​கிறார். எனவே, இனப்பிரச்​சினைக்கு அரசியல் இணக்கத் தீர்வொன்றைக் காண்ப​தற்கான சாதகமான சூழ்நிலையைத் தென்னிலங்​கையில் உருவாக்கு​வதற்கு அதிபர் தன்னை அர்ப்​பணித்​துக்​கொள்ள வேண்டும். அதற்கான அரசியல் தகுதி அவருக்கு முழுமையாக இருக்​கிறது.
  • முன்னைய சிங்களத் தலைவர்​களைப் போன்று சிங்களக் கடும்​போக்கு தேசியவாத சக்தி​களின், மகாசங்​கத்தின் பிரிவு​களின் நிர்ப்பந்​தங்​களுக்கு அடிபணிந்தால் வரலாறு வழங்கிய அரிய வாய்ப்​புக்​களைத் தவற​விட்ட தலை​வர்​களின் பட்​டியலில் அ​திபர் ​தி​சா​நாயக்​கவும் சேர்ந்து கொள்​வார் என்பது நிச்​சயம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories