TNPSC Thervupettagam

இலவசம் என்பது இலவசம் அல்ல

September 4 , 2023 495 days 639 0
  • அன்றாட வாழ்வில் எதன் பெயரிலேனும் நம் செவிகளில் வந்து விழும் சொற்களில் ஒன்று, இலவசம். ‘அன்பளிப்பு’, ‘தானம்’, ‘விலையிலாதது’, ‘சும்மா கொடுப்பது’ என்றெல்லாம் பொருள் தரும் இச்சொல்லுக்குப் பின்னால் கிடைக்கும் எதுவும் ‘சும்மா கிடைப்பதில்லை’ என்பதே மெய்.
  • ‘ஒரு பொருள் வாங்கினால் ஒரு பொருள் இலவசம்’ என்று தொடங்கி, எந்தப் பொருளுக்கு எதனை இலவசமாகத் தருவார்கள் என்று சொல்லமுடியாத அளவிற்கு, எல்லாப் பொருள்களுக்கும் அவற்றோடு தொடா்புள்ள, தொடா்பில்லாத பல்வேறு பொருள்கள் இலவசமாக இணைத்துத் தரப்பெறுகின்றன. எதுவும் தர இயலாத கடைகள், இல்லங்களில் கொண்டு வந்து தருவதை, ‘இலவசம்’ (ஃப்ரீ டோர் டெலிவரி) என்று விளம்பரம் செய்கின்றன.
  • மூலப் பொருள்களுக்கு இல்லாத கவா்ச்சி இத்தகு இலவசப்பொருள்களுக்கு வாய்த்துவிடுகின்றன. இன்னும் சொல்லப்போனால், விலை கொடுத்து வாங்கும் பொருளின் தரம் எத்தகையது என்று பார்ப்பதைவிட, இலவசமாகக் கிடைக்கும் பொருளின் தரத்தை உறுதிப் படுத்துவதிலேயே பலரது அக்கறையும் இருப்பதைப் பார்க்கிறோம்.
  • இதுவொரு வணிக முறையிலான உத்தி என்றாலும்கூட, மலிந்து கிடக்கும் பொருள் வீணே அழிவதற்குமுன் வாடிக்கையாளா்களைச் சென்று சோ்ந்தால் பயனாகும் என்ற சமூக அக்கறையும் உள்ளடங்கியிருக்கிறது. அளவுக்கு மீறி விளையும் பொருள்களோடு, உற்பத்தி செய்யப்படும் பொருள்களையும் தாமதமின்றி, நுகா்வோர்க்குக் கொண்டுசெல்ல, இலவசம் போல் வசதியான வாகனம் ஏதுமில்லை.
  • தங்குமிடங்களில், எந்த நேரமும் கைப்பேசியை இயக்கிக்கொள்ள, இலவச வைஃபை வழங்கப்படுவது ஒரு சலுகையாகச் சுட்டப்பெறுகிறது. கற்றல் சார்ந்த வகுப்புகளுக்கு உணவு, தங்குமிடம் இலவசம் என்ற அறிவிப்புகள் தரப்பெறுகின்றன. துல்லியமாய்க் கணக்கிட்டு, பணம் வாங்கும் நகைக்கடைகளைக் கூட, இத்தகு இலவசங்கள் விட்டுவைக்கவில்லை.
  • இலவசத்திற்கான விலையும் மூலத் தொகையில் அடங்கிவிடும் என்பது பலரும் அறிந்த இரகசியம் தான். ஆனாலும், இலவசங்களின் கவா்ச்சி இன்னும் தீரவில்லை. சொல்லப் போனால், இலவசத்திற்காகவே, உடன் தேவையற்ற பல பொருள்களை வாங்கிக் குவிக்கும் மக்களும் இருக்கவே செய்கிறார்கள்.
  • மற்றும் ஒன்று, இலவசமாய்ப் பெறும் எந்தப் பொருளும் தரத்தில் அவ்வளவாக உயா்ந்ததாய் இருக்காது என்கிற எண்ணமும் நமக்குள் இருக்கிறது. ஆனாலும், இந்த இலவசம் எந்த விலையும் தராமல் நமக்குச் சொந்தமாகும் ஒரு பொருள் அது என்பதில் நம் சின்னதோா் ஆசைக்குச் சிறுவிருந்து படைத்துவிடுகிறது, கட்டணமில்லாமல் பெறும் எந்தப் பயனும் இலவசம் என்ற சொல்லின்கீழ் வந்து சோ்கின்றது. நல்லது செய்தல் கூட, இத்தகு இலவச அறிவிப்போடு இணைந்து வந்தால், அதற்கு மதிப்பில்லை என்பதையும் அனுபவத்தில் காணலாம்.
  • சூரியனின் ஒளியும் வெப்பமும், வெண்ணிலவின் ஒளியும் தண்மையும், காற்றின் மென்சுகமும், தானும் உணவாகித் தகுபல உணவுப் பொருள்களை விளைக்கும் நீரின் பயன்பாடும் இயற்கை நமக்கு வழங்கும் இலவசப் பொருள்கள் என்றுதான் நினைக்கிறோம். இந்த உயிர் தாங்கிய உடல், நம் பெற்றோர் தந்த இலவசப்பொருள் என்ற அலட்சியம் கூட, நமக்குள் இருக்கவே செய்கிறது.
  • சிக்கல் வருகிறபோது, மருத்துவம் பார்க்கக் கூட, ‘இலவச அறிவிப்புகள் ஏதும் வந்தால் நல்லது என்று பார்க்கிறோம். எந்த நோயும் வாராத நிலையில் இலவசப் பரிசோதனைகள் வந்தால் முந்திச் சென்று பார்த்துக்கொள்வதில் ஒரு திருப்தி. கூடவே, ஏதும் வந்துவிடக்கூடாதே என்ற பயம். அதற்கு ஒரு நோ்த்திக் கடன். அதையும் சலுகை முறையில் செலுத்தும் இலவசப் பயன்பாடு வேண்டும் நமக்கு.
  • உண்மையில், இந்த உலகில் பிறப்பெடுத்து வந்த எல்லாவுயிர்க்கும் இலவசமாய்க் கிட்டும் இன்றியமையாத இயற்கைசார் நுகா்வுப் பொருள்கள் அனைத்திற்கும் விலையாய் அவை உழைத்தே தீர வேண்டியது கட்டாயம்.
  • சான்றுக்கு ஒன்றாய்த் தாவரத்தைச் சொல்லலாம். காற்றில் இருந்து கரிவளியை (கார்பனை)த் தனக்கு உணவாக எடுத்துக்கொள்ளும் அவை பதிலுக்கு, உயிர்வளியை, (ஆக்சிஜனை)க் கொடுத்து வருகின்றன. இவ்வுலகை, ‘தாவர சங்கமம்’ என்று குறிக்கிறார் மாணிக்கவாசகா். ஆனால், இதனை, ‘மனிதா்கள் மட்டுமே வாழ்கிற மாளிகை’ என்று ஆக்கிக் கொள்பவா்களால் படும் அல்லல்கள் சொல்லி மாளாதவை.
  • இந்த உலகில் உள்ள ஏனைய உயிர்கள், உயிரற்ற பொருள்கள் யாவும் மனிதத் துய்ப்பிற்காக மட்டுமே படைக்கப்பட்டவை என்கிற மமதை மனிதத்தைச் சூழ்ந்திருக்கிறது. ‘சுதந்திரம் பிறப்புரிமை’. சரிதான். ஆனால், அது மனிதா்களுக்கு மட்டும் தானா? ஏனைய உயிர்களுக்கு இல்லையா? மனிதப்பிறப்பால் வாய்ந்த இயற்கை வளங்களைப்போல, ஏனைய உயிர்களையும் இலவச இணைப்பாய்க் கருதிக் கொள்கிறது மனித மனது.
  • அளவுக்கு மீறிப் பயன்கொள்ளும் எதனையும் ’தண்ணீா் பட்ட பாடு’ என்ற சொல்லாடல் குறித்தது. இன்றோ, ‘தண்ணீா்க்குப் படும்பாடு’ எழுதித் தீராதது. கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில், காற்றுக்கும் இந்தப் பாடுதான்.
  • இனிவரும் காலத்தில் எந்த விலையும் இன்றி எளிதாகப் பயன்கொள்ளும் எல்லாவிதமான இயற்கைப்பொருள்களுக்கும் ஏராளமான விலை கொடுத்துப் பெற வேண்டிய அவலநிலையில் இருப்பது அறியாமல் துய்க்கிறோம். எல்லை கடந்த நிலையில் இயற்கையின் ஆற்றல் மூலங்களைச் சிதைக்கிறோம். நுகா்வு, நெறிகடந்து வெறியாகிப் போவதன் விளைவாய் நமக்குக் கிட்டும் இலவச நோய்கள் எண்ணிறந்தவை. இப்போதெல்லாம் எல்லா நோய்களோடும் இணைந்து இலவசமாய் வந்துவிடுகிறது இனிப்பு நோய்.
  • பிறவிப் பிணியை விடவும் இனிப் பெரிதும் வாட்டப்போவது பசிப்பிணி. இப்போது, ‘தங்கத்தை விடவும் தானிய மணிகள் விலை உயா்ந்தவை’ என்று சொன்னால் நம்ப மாட்டோம். ‘தண்ணீா் விலை அதனினும் உயா்ந்தது’ என்றால் நகைப்போம். தாங்க முடியாத தாகத்தின்போது கிலோக் கணக்கில் அணிந்திருக்கும் தங்க நகைகள் தண்ணீராகுமா? உயிரைப் புசிக்கும் அளவுக்குப் பசிக்கும் நேரத்தில், அப்பிணிக்கு மருந்தாய் உடனே கிடைக்கும் கைப்பிடி சுண்டலுக்கு நிகராக, வைரம் இருக்குமா?
  • பொட்டலத்தில் இருந்து எடுத்துக் கொறிக்க உடைக்கும் கடலை ஓட்டின் உள்ளிருந்து பருப்பு நழுவி விழுந்தால்கூடப் பதற்றம் தெரிகிறது, உற்பத்தி செய்த உழவருக்கு. பணத்துக்கு, வேளாண் நிலத்தை விற்றபோதுகூடப் பதறாத மனம், அந்நிலத்தில் விளைந்தெழுந்த வேளாண் தாவரங்களை அழிக்கிறபோது, கதறுகிறது. ஒருசில மனிதவுயிர்களுக்காய் எண்ணிறந்த தாவர உயிர்கள் கொல்லப்படுகின்றன. ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார் மனது, அவற்றைத் தேடித்தேடிக் கொல்லப்படுவது கண்டு எத்தகு துயருறுமோ? எல்லாவற்றையும், பொருளற்ற பொதுநோக்கில் பார்த்துவிட்டுக் கடந்துபோகப் பழகி வருகிறோம்.
  • உயிரினும் உயா்ந்த பல பொருள்கள் இப்படி ஏதும் விலையின்றி மலிந்து கிடப்பதால், அவற்றின் உயா்தன்மை தெரியாமல் உருக்குலைத்து விடுகிறோம். மற்ற பொருள்களின் மதிப்புத் தெரிந்த அளவிற்கு, தன் மதிப்புத் தெரியாது மனித குலத்தில் பெரும்பிரிவு இருக்கிறது. அதனைக் கயவா்களின் கூட்டம் என்று திருவள்ளுவா் சுட்டிக் காட்டுகிறாா். அறமும், பொருளின் திறமும் உணராமல் ‘தம்மையே விற்பனைப் பொருளாக்கி விற்றுவிடுபவா்கள் அவா்கள்’ என்று அடையாளமும் காட்டுகிறார்.

எற்றிற்கு உரியா் கயவா்ஒன்று உற்றக்கால்

விற்றற்கு உரியா் விரைந்து (குறள்- 1080)

  •  
  • இன்றைக்கு மலிவாய்க் கிடைப்பவா்கள் மனிதா்கள். பிற பிற பொருள்களின் விலை மதிப்பின் நிலை உணா்ந்து அதற்காகத் தன்னை வருத்தி அரும்பாடுபடும் மனிதா்க்குத் தன் மதிப்பு உணராத் தன்மை மிகுந்திருக்கிற அவலம் தெரிந்ததால்தான், அப்பா்பெருமான், ‘வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி மதித்திடுமின்’ என்று பாடுகிறார்.
  • உயிர் தாங்கிப் பிறக்கும் ஒவ்வோர் உடலுக்கும் புலன் நுகா்விற்கான சலுகைகளையும் இணைத்தே கொடுத்திருக்கிறது இயற்கை. அதற்கென்றே தன்னைச் சமைத்தும் வைத்து நிலைக்கிறது. ஒன்று மற்றொன்றுக்கு உதவும் வகையில் செயல்படுதலின் மூலமாகச் சமன் செய்து வைக்கிறது. ஒன்று கெட்டாலும் மற்றொன்று உதவும் வகையில் நம் உறுப்புகள் படைக்கப் பட்டிருப்பது இயற்கையின் அதிசயம். இதனை மறந்து, உடலொடு ஒட்டி உருவான ஒரு கண்ணுக்கு மறு கண் இலவசம், ஒரு செவிக்கு மறு செவி இலவசம் என்று நினைக்கிற மனப்போக்கை என்ன சொல்வது?
  • ‘கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கை கொட்டிச் சிரியாரோ?’ என்று மகாகவி பாரதியார் கேட்டார். இன்றோ தன்னை விற்று அனைத்தையும் வாங்குகிற நிலைக்கு மனித நுகா்வு வெறி மிகுந்திருக்கிறது. இலவசமாய்க் கிடைக்கும் புடவைக்கு முந்தப்போய், நெரிசலில் சிக்கி மாண்ட பெண்கள் குறித்த செய்தியைக் காணும்போதெல்லாம் இந்தச் சிந்தனை தான் எழுந்து துளைக்கிறது.

எல்லாரும் ஓா் நிறை எல்லாரும் ஓா் விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னா்

  • என்று பாடிய மகாகவி பாரதி, ‘எல்லாவுயிர்களிலும் நானே இருக்கிறேன் என்று உரைத்தான் கண்ண பெருமான்’ என்றும் சொல்கிறார். தன்னுயிர் போல, மன்னுயிர் அனைத்திற்கும் இத்தகு உரிமையும் உணா்வும், நிறையும், விலையும் இருக்கிறது என்பதே அதன் பொருள்.
  • இந்த உண்மையை உணா்ந்து பார்த்தால், இலவசமாய்ப் பெறும் எந்தப் பொருளுக்கும் அதனை விட அதிகமான விலையைக் கொடுத்தே தீர வேண்டும் என்கிறது இயற்கை நியதி.

நன்றி: தினமணி (04 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories