TNPSC Thervupettagam

இளைஞர்களின் எதிர்காலம்?

September 9 , 2024 130 days 156 0

இளைஞர்களின் எதிர்காலம்?

  • போட்டித் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, முறைகேடு போன்றவை அடிக்கடி நிகழ்வது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
  • கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள் தேசிய அளவில் பேசுபொருளாகி, வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதில் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, பிகாரின் ஒரு மையத்தில் வினாத்தாள் கசிந்தது, குஜராத் மற்றும் ராஜஸ்தானில் நிகழ்ந்த முறைகேடுகள், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் கொடுத்து பின்னர் ரத்து செய்தது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
  • அதன் பின்னர், பேராசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான தேசிய தகுதித் தேர்வு பேனாவால் எழுதும் முறையில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி நடத்தப்பட்டது. இதில் 9.08 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில், வினாத்தாள் கசிந்ததாகக் கூறி தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அடுத்த நாளே (ஜூன் 19) அறிவித்தது. விடைத்தாளில் பேனாவால் எழுதும் முறை கைவிடப்பட்டு கணினிவழியே தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.
  • இவற்றை விஞ்சும் வகையில், காவல் துறையில் உதவி ஆய்வாளர் (எஸ்ஐ) பணியிடங்களுக்கு ராஜஸ்தான் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2021-ஆம் ஆண்டு நடத்திய தேர்வில் தனது மகன், மகளுக்கு வினாத்தாளை முன்கூட்டியே கொடுத்தது தொடர்பாக தேர்வாணைய உறுப்பினர் ராமு ராம் ரைகா என்பவர் கடந்த சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். முறைகேட்டில் ஈடுபட்டதாக 38 பயிற்சி உதவி ஆய்வாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • 2019 முதல் இதுவரை 19 மாநிலங்களில் முக்கியமான 64 தேர்வுகளில் வினாத்தாள் கசிந்துள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 8 தேர்வுகளிலும், ராஜஸ்தான், மகாராஷ்டிரத்தில் 7 தேர்வுகளிலும் வினாத்தாள் கசிந்துள்ளது. பிகார், குஜராத், மத்திய பிரதேசம், ஹரியாணா, கர்நாடகம், ஒடிஸô, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
  • இவை அனைத்துக்கும் சிகரம் வைத்ததுபோல அமைந்தது மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த "வியாபம்' முறைகேடு. மத்திய பிரதேசத்தில் மருத்துவ மாணவர்கள், அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட "வியாபம்' தேர்வாணையத்தில் 1990-களில் தொடங்கிய முறைகேடு 2013-இல்தான் வெளிச்சத்துக்கு வந்தது.
  • "வியாபம்' முறைகேட்டில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், கல்லூரி முதல்வர்கள், இடைத்தரகர்கள், மாணவர்கள் கூட்டு சேர்ந்து பல ஆண்டுகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த ஊழலில் ஈடுபட்டவர்களில் 43 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தனர்.
  • மற்ற மாநிலங்களைப்போல முக்கியமான தேர்வுகளில் இல்லாவிட்டாலும் தமிழகத்திலும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த 2022 பிப்ரவரியில் நடைபெற்ற திருப்புதல் தேர்வின்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு தனியார் பள்ளிகளில் இருந்து 10-ஆம் வகுப்பு அறிவியல் வினாத்தாளும், பிளஸ் 2 வகுப்பு கணித வினாத்தாளும் வாட்ஸ்அப்பில் முதல்நாளே வெளியாயின.
  • கடந்த ஆக. 29-ஆம் தேதி நடைபெற்ற பி.எட். தேர்வின் வினாத்தாள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, புதிய வினாத்தாள் அனுப்பப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற 583 காவல் துறை பணிக்கான தேர்வில் 4.4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். அந்தத் தேர்வின்போது 11 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடந்த 2018-இல் உத்தர பிரதேசத்தில் காவல் துறையில் 5-ஆம் வகுப்புத் தேர்ச்சியைத் தகுதியாகக் கொண்ட அலுவலக உதவியாளர் பணிக்கு பிஹெச்.டி. பட்டம் பெற்ற 3,700 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
  • அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 1 லட்சம் இடங்களுக்கு இந்த ஆண்டு 24 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதி உள்ளனர். படிப்பு, வேலைவாய்ப்பு இரண்டிலும் கடுமையான போட்டி என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
  • உயர் படிப்புக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் கடும் போட்டி நிலவுவதால் நாடு முழுவதும் புற்றீசல் போல பயிற்சி மையங்கள் தோன்றி உள்ளன. இந்த மையங்கள் ஓராண்டுக்கு ரூ.58,000 கோடி வருவாய் ஈட்டுகின்றன. மாணவர்களை எப்படியாவது தேர்வில் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற போட்டாபோட்டியில்தான் பல்வேறு முறைகேடுகளும் நிகழ்கின்றன.
  • போட்டித் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் என நாடாளுமன்றத்தில் அண்மையில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால், இதுபோன்ற சட்டங்களுக்கு மோசடி கும்பல்கள் அஞ்சுவதில்லை என்பதையே கடந்தகால நிகழ்வுகள் காட்டுகின்றன.
  • தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதால் அல்லது ரத்து செய்யப்படுவதால் லட்சக்கணக்கான இளைஞர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். மோசடி செய்து படிப்பில் அல்லது பணியில் சேர்வதால் அதன் தரம் பாதிக்கப்படுவதுடன் தகுதியுள்ள நபர்களுக்கு வாய்ப்பும் மறுக்கப்படுகிறது.
  • தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்துள்ள இன்றைய சூழலில், இளைஞர்களின் எதிர்காலம் கருதி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தேர்வுகள் முறையாக நடப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

நன்றி: தினமணி (09 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories