TNPSC Thervupettagam

இளையபெருமாள்: காங்கிரஸ் அம்பேத்கரியர்

June 13 , 2023 524 days 335 0
  • காங்கிரஸ் கட்சி எப்போதுமே தன்னுடைய நீரோட்டத்தில் பல அலைகளைக் கொண்டிருக்கிறது. காங்கிரஸின் அம்பேத்கரிய அலையில் முன்னோடித் தலைவர்களில் ஒருவர் எல்.இளையபெருமாள் (1924-2005).

யார் இந்த இளையபெருமாள்?

  • கடலூர் மாவட்டம், சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காட்டுமன்னார்கோவிலில் 26.6.1924இல் பிறந்த இளையபெருமாள், தனது சிறுவயது முதலே சுயமரியாதையும், சமத்துவ உணர்வும் கொண்டவராகத் திகழ்ந்தார். 1952 முதல் 1967 வரை மூன்று முறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் 1980இல் (எழும்பூர் தொகுதியில்) சட்டமன்ற உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார். 1965இல் ஒன்றிய அரசால் அமைக்கப்பட்ட குழுவுக்குத் தலைவராக இருந்து, இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று விசாரித்து பட்டியல் சாதி மக்களின் கல்வி, பொருளாதார மேம்பாட்டுக்காக அவர் செய்த பரிந்தரைகள் இப்போதும் பொருத்தமுடையவையாகவே உள்ளன.
  • இளையபெருமாள் காங்கிரஸ்காரராகத் தனது அரசியல் வாழ்வைத் துவக்கியவரல்ல. 1946இல் ராணுவப் பணியிலிருந்து விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தபோது, இரண்டு நாள்கள் வேலைக்கு வரவில்லை என்பதால் ஒரு மிராசுதாரரால் அடித்துப் படுகாயப்படுத்தப்பட்ட ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் பிரச்சினையைக் கையிலெடுத்துப் போராடி, வெற்றிபெற்றதால் சிதம்பரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆதிதிராவிட மக்களிடையே ஒரு தலைவராக ஏற்கப்பட்டார்.  

காங்கிரஸில் நுழைவு

  • ஆரம்பக் காலங்களில் கூலி உயர்வு, இழிதொழில் ஒழிப்பு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு அவர் முன்னுரிமை கொடுத்துவந்தார். பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகப் போராடியதால் அவரை ஒரு கம்யூனிஸ்ட் என்றே பலரும் எண்ணினார்கள். சிதம்பரத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் பெரிதும் விவசாயக் கூலிகளாக இருந்த ஆதிதிராவிட மக்கள் சுவாமி சகஜானந்தா முன்னெடுத்த போராட்டங்களின் காரணமாக சிறிதளவு விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் இளையபெருமாள்.
  • இந்தியாவின் முதல் நாடாளுமன்றத் தேர்தல் 1952இல் அறிவிக்கப்பட்டபோது அப்போது நடைமுறையிலிருந்த இரட்டை உறுப்பினர் தொகுதியில் போட்டியிடுவதற்குப் பொருத்தமான தலித் வேட்பாளர்களைத் தேடிக்கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி சிதம்பரம் பகுதியில் பிரபலமாக இருந்த இளையபெருமாளை அணுகி அவரைத் தனது வேட்பாளராக நிறுத்தியது. அப்போதுதான் அவர் காங்கிரஸ்காரர் ஆனார். 

இளவயது எம்.பி.

  • தனது 28வது வயதிலேயே பாராளுமன்ற உறுப்பினரான இளையபெருமாள் அன்றைய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேருவின் நன்மதிப்பைப் பெற்றார். துணிச்சலும், அறிவாற்றலும் நிரம்பிய அவரது பேச்சு அவருக்கு நன்மதிப்பை உருவச்க்கியது.
  • 1965இல் இந்திய அளவில் தலித் மக்களின் கல்வி, பொருளாதார நிலை குறித்து ஆய்வுசெய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக இளையபெருமாள் நியமிக்கப்பட்டார். ‘இளையபெருமாள் குழு’ என அறியப்பட்ட அக்குழு தனது அறிக்கையை 30.1.1969இல் இந்திய அரசிடம் அளித்தது.
  • நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தே தலித் மக்களின் பிரச்சினை இரு விதமாக அணுகப்பட்டுவந்தது. காந்தியின் அணுகுமுறை ஒன்று; அம்பேத்கரின் பார்வை மற்றொன்று. இளையபெருமாள் தனது அறிக்கையில் அம்பேத்கரின் அணுகுமுறையைத்தான் பின்பற்றியிருந்தார். “தீண்டாமை என்பது இந்து சமூக அமைப்பின் அடிப்படையான, விசேஷமானதொரு கூறாகும்... தீண்டாமை என்பது தனியானதொரு அமைப்பு அல்ல; அது இந்து சாதி அமைப்பின் ஓர் அங்கமாகும்” என்றுதான் அந்த அறிக்கையை அவர் ஆரம்பித்திருந்தார்.
  • நிச்சயமாக இது காந்திய வகைப்பட்ட அணுகுமுறை அல்ல. இது அம்பேத்கரின் அணுகுமுறையே ஆகும். “என்னைத் தொடாதே” என்று சொல்கிற வகைப்பட்ட தீண்டாமைக்கும்; சமூகப் பாகுபாட்டில் வெளிப்படும் தீண்டாமை மனோபாவத்துக்கும் இடையே வேறுபாடு உள்ளது என அந்த அறிக்கை பேசும்போது வெளிப்படையாகவே அது தனது அம்பேத்கரிய பற்றைத் தெரிவித்துவிட்டது.
  • இளையபெருமாளைத் தலைவராகக் கொண்ட அந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.கே.கெய்க்வாட், சி.தாஸ் ஆகியோரும்; ஆர்.அச்சுதன், பி.எல்.மஜீம்தார், நாராயண்தின், வி.வி.வாஸ் ஆகியோருமாக மொத்தம் ஆறு உறுப்பினர்கள் இருந்தனர்.

குழு முன் இருந்த அம்சங்கள்

  • பின்வரும் மூன்று அம்சங்களை ஆராயும் நோக்கத்துடன் அந்தக் குழு அமைக்கப்பட்டது.
  • 1. தீண்டாமையின் பல்வேறு அம்சங்களை ஆராய்தல் குறிப்பாக, தீண்டாமை (குற்றங்கள்) சட்டம் 1955இன் செயல்பாடுகளை ஆய்வுசெய்தல், பட்டியல் சாதியினர் கோயில்கள் முதலான பொது இடங்களில் நுழைய இடர்பாடுகள் இருந்தால் அதுகுறித்தும் அவற்றைக் களைவதற்கான வழிகள் குறித்தும் பரிந்தரைத்தல்.
  • 2. பட்டியலின மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள்; இப்போதுள்ள திட்டங்களின் தாக்கங்கள் முதலியவற்றை ஆராய்ந்து தேவையான வழிமுறைகளைப் பரிந்துரைத்தல்.
  • 3. பட்டியல் சாதி மக்களின் கல்விப் பிரச்சினைகள், இதுவரையில் எட்டப்பட்டுள்ள முன்னேற்றம், தேவையான நடவடிக்கைகள் பற்றிப் பரிந்துரைத்தல்.
  • இந்த மூன்று அம்சங்கள் மட்டுமின்றி அரசுப் பணிகளில் பட்டியல் சமூகத்தவர் எந்த அளவு இடம்பெற்றுள்ளனர் என்பது குறித்தும் இளையபெருமாள் குழு ஆய்வு மேற்கொண்டது.

இன்றைய பொருத்தப்பாடு

  • கல்வி தொடர்பாக இளையபெருமாள் குழு சேகரித்த விவரங்களும் செய்துள்ள பரிந்துரைகளும் இப்போதும் பொருந்தக்கூடியவை ஆகும். 431 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையில் 71 பக்கங்கள் கல்வி தொடர்பாகப் பேசுகின்றன. இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் பட்டியல் சமூகத்தவர் கல்வி பெறுவதில் இருந்த தடைகளை விரிவாக அந்த அறிக்கை எடுத்துரைக்கிறது.
  • அரசு உதவிபெறும் பள்ளிகளில் பட்டியல் சமூக மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென 1931இல் அரசு உத்தரவு பிறப்பித்ததை ஒட்டி சாதி இந்துக்கள் தமது பிள்ளைகளைப் பள்ளிகளுக்குச் செல்லாமல் நிறுத்திக்கொண்டார்கள். அவர்களது எதிர்ப்பின் காரணமாகப் பல பள்ளிகள் மூடப்பட்டன. 1931 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பட்டியல் சாதியினர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட பிரிவினரின் மக்கள்தொகை 5 கோடியாக இருந்தது. அதில் 1.9% பேர்தான் கல்வி கற்றவர்களாக இருந்தனர். சென்னை மாகாணத்தில் அதைவிடவும் குறைவாக 1.5% பேர்தான் படித்திருந்தனர்.
  • நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு பட்டியல் சமூகத்தவர்களின் கல்வியை மேம்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்றபோதிலும் நிலைமை அவ்வளவாக மாறிவிடவில்லை. 1961இல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை 24% ஆக இருந்தது. ஆனால் பட்டியல் சமூகத்தவரில் படித்தவர்கள் 10.27% மட்டுமே. மிகவும் பின்தங்கிய மாநிலமாகக் கருதப்படும் பிஹாரில் 24.41% பட்டியல் சாதியினர் படித்தவர்களாக இருக்க சமூக நீதிக் கொள்கையின் பிறப்பிடமாக வர்ணிக்கப்படும் தமிழ்நாட்டிலோ அது 14.66% ஆகவே இருந்தது.
  • துவக்கப் பள்ளிகளில் இடைநிறுத்தத்தைக் குறைப்பதில் மதிய உணவு திட்டம் ஆற்றியுள்ள சாதகமான பங்களிப்பைத் தமிழ்நாட்டை உதாரணமாகக் கொண்டு விளக்கியுள்ள ‘இளையபெருமாள் குழு’ அறிக்கை அதைப் பிற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனச் சொன்னது மட்டுமின்றி, பட்டியல் சாதிப் பிள்ளைகளுக்குத் தருவதுபோல பிற சாதிகளைச் சேர்ந்த ஏழைக் குழந்தைகளுக்கும் பள்ளிகளில் மதிய உணவு வழங்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
  • சில மாநிலங்களில் ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கெல்லாம் பட்டியல் சாதிப் பிள்ளைகளின் கல்வி நிலையில் பெரிய மாற்றம் எதுவும் வந்துவிடவில்லை. அப்படிக் கட்டாயமாக்காத கேரளா போன்ற மாநிலங்களில் அந்தப் பிள்ளைகளின் கல்வித்தரம் நன்றாக உள்ளது. ஆகவே, ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்கிச் சட்டம் போட்டால் மட்டும் போதாது. பட்டியல் சாதிப் பிள்ளைகள் தமது படிப்பைத் தொடங்குவதற்கு ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மதிய உணவு, இலவச நோட்டுப் புத்தகங்கள் முதலியவற்றையும் வழங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அறிக்கையின் கேள்விகள்

  • தமிழ்நாட்டில் கிராமங்களை ஒட்டி போதுமான பள்ளிகள் இல்லாதது ஒரு பெரும் தடையாக உள்ளது என சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை மாநிலத்தில் எந்த ஒரு பள்ளியோ, கல்லூரியோ பட்டியல் சாதியினரால் நடத்தப்படவில்லை என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. 1952க்கும் 1967க்கும் இடைப்பட்ட பதினைந்து ஆண்டுகளில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த பலர் விண்ணப்பித்திருந்தும் அவர்கள் பள்ளியோ கல்லூரியோ துவக்க அனுமதி வழங்கப்படவில்லை. மற்ற சாதியினருக்கு அனுமதி கொடுக்கும் மாநில அரசு தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் அனுமதி தர மறுப்பது ஏன்? 
  • கல்வித் துறை கொடுத்த அனுமதியைக்கூட பொதுக் கல்விக்கான துறை தலையிட்டு ரத்து செய்திருப்பது ஏன்?
  • இப்படியெல்லாம் அந்த அறிக்கை கேள்வி எழுப்பியிருந்தது. இளையபெருமாள் குழு சுட்டிக்காட்டியுள்ள அந்த 15 ஆண்டுகளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நடந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • பட்டியல் சாதி மாணவர்கள் கலை, அறிவியல் பாடப் பிரிவுகளையே அதிகம் தேர்வு செய்கின்றனர் எனவும் மருத்துவம், சட்டம், பொறியியல் போன்ற பாடங்களைத் தேர்வுசெய்வோர் மிகவும் குறைவு என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது.
  • தமிழ்நாட்டில் 6.2% பேர்தான் மருத்துவக் கல்வியில் சேர்ந்துள்ளனர்; 5.3% பேர் பொறியியலிலும்; 2.9% பேர் சட்டப் படிப்பிலும் சேர்ந்துள்ளனர் என்று புள்ளிவிவரங்களை எடுத்துக்காட்டிய ‘இளையபெருமாள் குழு’ அனைத்திந்திய போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ள அந்த மாணவர்களைத் தயார்படுத்தக்கூடிய பயிற்சி மையங்களை நாட்டின் பல பகுதிகளிலும் துவக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது.
  • பட்டியல் சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் தொழில்நுட்பக் கல்லூரிகளில் அதிக அளவில் சேராததற்கான காரணங்களை ஆராய்ந்த அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்கான கவுன்சில் சில பரிந்துரைகளை அரசுக்கு செய்திருந்தது. அதை ஏற்றுக்கொண்டு மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. (சுற்றறிக்கை எண்.33&3/62 (1) நாள்: 28.9.1962) அதன்படி, அனைத்து தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் எஸ்.சி / எஸ்.டி மாணவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் (எஸ்சி - 15% எஸ்டி - 5%) சேர்க்கைக்கான தகுதி மதிப்பெண் விழுக்காட்டில் 5% அவர்களுக்குக் குறைப்பட வேண்டும். வயது வரம்பில் 3 ஆண்டுகள் தவிர்க்க வேண்டும்.
  • ஆனால், இந்தப் பரிந்துரைகளைப் பல மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தவில்லை. மகாராஷ்டிராவில் 15%, கேரளாவில் 5%, பிஹாரில் 8% என்பதாகவே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையைச் சுட்டிக்காட்டிய இளையபெருமாள் குழு, மத்திய அரசின் உத்தரவின்படி அனைத்து மாநிலங்களும் 20% ஒதுக்கீடு செய்ய வேண்டும் என ஆணையிட்டதோடு, அதிக மதிப்பெண் பெற்று பொதுப் பிரிவில் இடம்பிடிக்கும் மாணவர்களை இடஒதுக்கீட்டின் கீழ் வைத்து கணக்கிடக் கூடாது என்றும் வலியுறுத்தியது.

தத்தெடுக்கும் மோசடி

  • ராஜஸ்தான் மாநிலத்தில் ‘இளையபெருமாள் குழு’ பயணம் செய்தபோது அந்த மாநிலத்தில் ‘தத்து எடுத்தல்’ என்ற பெயரால் நடக்கும் மோசடி குறித்து அக்குழுவிடம் புகார்கள் அளிக்கப்பட்டன. எஸ்.சி / எஸ்.டி அல்லாத சாதிகளைச் சேர்ந்த ஒரு மாணவனை எஸ்.சி / எஸ்.டி பெற்றோர்கள் தத்து எடுத்துக்கொண்டதாக மாஜிஸ்திரேட்டிடம் ஒரு சான்றிதழ் பெற்று அதன் அடிப்படையில் எஸ்.சி / எஸ்.டி மாணவர்களுக்கென மருத்துவ, பொறியியல் கல்லூரிகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அந்த மாணவன் சேர்ந்துகொள்ளலாம் என்ற நடைமுறை ராஜஸ்தானில் இருந்தது.
  • இடஒதுக்கீட்டுக் கொள்கையையே கேலிக்கூத்தாக்கும் இந்த மோசடி குறித்து இளையபெருமாள் குழு விசாரித்தது. 1968-69ஆம் ஆண்டுக்கென மருத்துவக் கல்லூரிகளில் 28 இடங்கள் எஸ்.சி / எஸ்.டிக்கென ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், அதில் 16 இடங்களை மேற்சொன்ன ‘தத்தெடுக்கும்’ மோசடியின் அடிப்படையில் ஆதிக்க சாதி  மாணவர்கள் கைப்பற்றியிருந்தனர். இளையபெருமாள் குழு தலையிட்டதன் பேரிலேயே ராஜஸ்தானில் இந்த வழக்கம் முடிவுக்கு வந்தது.
  • பிரிட்டிஷ் ஆட்சியின்போது வசதி படைத்தவர்களுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட பள்ளிகள் அப்படியே தொடர்ந்து நீடிப்பதையும், அவற்றில் சாதாரண குடும்பத்துப் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை தொடர்வதையும் சுட்டிக்காட்டிய இளையபெருமாள் குழு இந்த நிலையை மாற்ற அரசு / தனியார் பள்ளிகள் அனைத்திலும் எஸ்.சி / எஸ்.டி பிள்ளைகளுக்கு 20% இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்தது.

பெண் கல்வி: இளையபெருமாள் கருத்து

  • பெண் கல்வி குறித்து அதிக அக்கறை காட்டிய ‘இளையபெருமாள் குழு’ பல்வேறு மாநிலங்களில் பெண் கல்விக்கென செய்யப்பட்டிருந்த சிறப்பு ஏற்பாடுகளை ஆய்வுசெய்தது. தமிழ்நாட்டில் 97 பெண்கள் விடுதிகள் இருந்தன. அவற்றில் 6,162 மாணவிகள் தங்கிப் படித்துவந்தனர் எனத் தெரிவித்த அந்தக் குழு பெண் கல்விக்காக மாநில அரசுகளோ மத்திய அரசோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. மத்திய அரசின் கல்வித் துறை 1959இல் பெண் கல்விக்கான ‘தேசிய கவுன்சில்’ ஒன்றை அமைத்தது. ஆனால், தாழ்த்தப்பட்ட சமூகத்துப் பெண்களின் கல்விக்காக எந்தச் சிறப்புக் கவனமும் காட்டப் படவில்லை.
  • 1961ஆம் ஆண்டின் குடிக்கணக்கெடுப்பின்படி மொத்தம் இருந்த 21.5 லட்சம் பட்டியல் சாதிப் பெண்களில் 3.6% மட்டுமே கல்வி பயின்றிருந்தனர். ஆனால், அதே காலத்தில் பிற சாதிகளைச் சேர்ந்த பெண்களில் 13% கல்வி பயின்றவர்களாயிருந்தனர். பெண் கல்விக்காக மாநில அரசுகள் சிறப்பு கவனம் எடுத்துக்கொண்டு அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இளைய பெருமாள் குழு வலியுறுத்தியுள்ளது.
  • பெண் கல்வி மீதான இளையபெருமாளின் அக்கறை அந்த அறிக்கையில் மட்டும் வெளிப் படவில்லை. அதற்கு முன்பே சி.சுப்பிரமணியம் தமிழ்நாட்டில் கல்வி அமைச்சராக இருந்த போது தமது சொந்த ஊரான காட்டுமன்னார்கோவிலில் பெண்கள் பள்ளி ஒன்றைத் துவக்க வேண்டும் என இளையபெருமாள் வலியுறுத்தினார்.
  • பள்ளிக்காக இடம் வேண்டும் என அரசு கேட்டபோது தமக்குச் சொந்தமாக இருந்த இரண்டு ஏக்கர் நிலத்தையும் இலவசமாக இளையபெருமாள் வழங்கினார். அந்த இடத்தில்தான் இப்போதும் அரசுப் பெண்கள் உயர்நிலை பள்ளி இயங்கிவருகிறது. பட்டியல் சாதிப் பெண்கள் மட்டுமல்லாது எல்லாச் சமூகத்துப் பெண்களும் கல்வி பயில வேண்டும் என்ற அவரது நோக்கம் நாம் முன்னுதாரணமாகக் கொள்ளத்தக்கதாகும்.

அம்பேத்கரின் கொள்கை

  • காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதும் அதைவிட்டு வெளியேறி இந்திய மனித உரிமைக் கட்சியை நடத்தியபோதும் அம்பேத்கரின் கொள்கைகளையே தனது கொள்கைகளாக ஏற்றுக் கொண்டிருந்தவர் இளையபெருமாள்.
  • 1996இல் ‘இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனி வாக்காளர் தொகுதி’ கோரிக்கையை மீண்டும் உயிர்ப்பிப்பதென நானும், நெய்வேலியில் என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றிய துரைக்கண்ணு, ஜவஹர், ஆசைத்தம்பி உள்ளிட்ட தோழர்களும் முடிவெடுத்து அதற்காக 24.9.1996இல் மாநாடு ஒன்றைக் கூட்டியபோது அதில் இளையபெருமாள் கலந்துகொண்டு அந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினார். 1997இல் இந்திய சுதந்திரப் பொன்விழாவைப் புறக்கணிப்பதென முடிவெடுத்து விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொண்ட போராட்டங்களையும் ஆதரித்தார்.
  • தனி வாக்காளர் தொகுதி கோரிக்கை மட்டுமின்றி அம்பேத்கர் வலியுறுத்திய தனி வாழிடம் (separate settlement) என்ற கோரிக்கையையும் ஆதரித்துப் பேசினார். இளையபெருமாள் குழு அறிக்கையிலும் அந்தக் கோரிக்கை இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
  • நாக்பூரில், 1942 ஜூலை 18, 19 தேதிகளில் கூடிய அனைத்திந்திய ஷெட்யூல்டு வகுப்பினர் மாநாட்டில் தனிவாழிடம் குறித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு 1946ஆம் ஆண்டு சிதம்பரத்துக்கு அருகில் உள்ள புளியங்குடியில் பட்டியல் சாதி மக்கள் மீது வன்முறை ஏவப்பட்டபோது அந்த ஊரில் இருந்த பட்டியல் சாதியினரின் வீடுகளைப் பிரித்து எடுத்துக்கொண்டுபோய் அருகாமையிலிருந்து பிள்ளையார்தாங்கல் என்னும் ஊரில் அவர்களைக் குடியமர்த்தினார் இளையபெருமாள். அந்த அனுபவமும் சேர்ந்துதான் ‘தனிவாழிடம்’ என்ற கோரிக்கையை அவர் மனதில் வேரூன்றச் செய்திருக்க வேண்டும்.
  • 1943இல் அம்பேத்கர் எழுதிய, ‘திருவாளர் காந்தியும் தீண்டாத மக்களின் விடுதலையும்’ என்ற நூலில் தனிவாழிடம் குறித்து விரிவாக ஆராயப்பட்டிருந்தது. அந்தக் கருத்துகளை உள்வாங்கி இளையபெருமாள் தனது அறிக்கையில் வெளிப்படுத்தி இருந்தார்.

தனிக் கட்சி

  • இந்திய கிராமங்களை அணுகுவதிலும்கூட காந்தியும், அம்பேத்கரும் முரண்பட்டே இருந்தனர். காந்தியால் புகழப்பட்ட கிராம அமைப்பை அம்பேத்கர் முற்றாக வெறுத்தார்.
  • தீண்டாமையை, சாதியை ஒழிக்க வேண்டும் எனில் கிராம அமைப்பைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதே அம்பேத்கரின் பார்வையாக இருந்தது. “இந்தியா என்பது கிராமங்களாலான ஒரு நாடு. தீண்டாதாரை எளிதில் அடையாளம் காண வழிவகுக்கும் கிராம அமைப்புத் தொடரும் வரை அவர்கள் தீண்டாமையிலிருந்து விடுபட முடியாது” என்ற அம்பேத்கர் (தொகுப்பு நூல் 9 (ஆங்கிலம்) பக்கம் 419) சமூகரீதியாகப் பிரித்து வைக்கப்பட்டுள்ள தீண்டாத மக்கள் தனியான கிராமங்களில் குடியேற்றப்பட்டால் அவர்கள் சாதி இந்துக்களை சார்ந்திருக்க வேண்டிய தேவை இருக்காது என்றார்.
  • இதை அப்படியே குறிப்பிட்டு வழிமொழிந்த இளையபெருமாள் அப்படி அமைக்கப்படும் கிராம மக்கள் பொருளாதாரத் தன்னிறைவு கொண்டவர்கள் இருக்கும்படிச் செய்ய வேண்டும். தனி வாழிடங்களை உருவாக்க நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தில் குறைந்தபட்சம் 20 கோடி ரூபாயாவது ஒதுக்கப்பட வேண்டும் எனவும் தனது அறிக்கையில் கூறியிருந்தார்.
  • காங்கிரஸோடு 2003இல் மீண்டும் இணைகிறவரை இந்திய மனித உரிமைக் கட்சி என்ற பெயரில் தனிக் கட்சி ஒன்றை அவர் நடத்திவந்தார். 1989 முதல் பல தேர்தல்களில் அது போட்டியிட்டது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 1991இல் போட்டியிட்டு இரண்டு சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றது (காட்டுமன்னார்கோவில், வானூர்). ஆனால், அந்த இரண்டு பேரும் அதிமுகவிலேயே சங்கமித்துவிட்டனர். 1990களின் பிற்பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வட தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியபோது இந்திய மனித உரிமைக் கட்சிக்காரர்களோடு சில முரண்பாடுகள் ஏற்பட்டதுண்டு.
  • ஆனால், அதனை இளையபெருமாள் பகைமுரண்பாடாக ஊதிப்பெருக்கியதில்லை. 1998 காலப் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் மீது பெருமளவில் அரச வன்முறை ஏவப்பட்டது. தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டங்களில் தலித் இளைஞர்கள் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். அந்த நேரத்தில்தான் தமிழ்நாடு அரசு இளையபெருமாளுக்கு அம்பேத்கர் விருதினை அளித்தது (11.12.1998). “இளைஞர்கள் கொடுக்கிற நெருக்கடியும் சேர்ந்துதான் எனக்கு இந்த நேரத்திலே இந்த விருதினைப் பெற்றுத் தந்துள்ளது” என அப்போது இளையபெருமாள் கருத்து தெரிவித்தார்.
  • விடுதலைச் சிறுத்தைகள் மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும். இளைஞர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பத்திரிகைகளுக்கு அறிக்கை வெளியிட்டார். தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு எந்த அளவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கும் ‘வெள்ளை அறிக்கை’யை அரசு வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.
  • தமிழ்நாடு அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் கலந்துகொண்டு அதே கோரிக்கைகளை வலியுறுத்தினார். “இன்றைக்கு நம் இளைஞர்கள் (விடுதலைச் சிறுத்தைகள்) எடுத்துள்ள முடிவு சரியானது. இவர்கள் வருவதற்கே ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இவர்களும் போய்விட்டால் இதுபோன்ற பிள்ளைகள் உருவாக இன்னும் நூறு ஆண்டுகள் பிடிக்கலாம்... அவர்களது முடிவிலும் இலக்கிலும் எனக்குப் பூரணமான சம்மதம் உண்டு” என்று தனது 75வது பிறந்த நாளின்போது குறிப்பிட்டார். “சீர்திருத்தவாதி ஒரு அரசியல்வாதியாக முடியாது. அது போலவே ஒரு அரசியல்வாதி சீர்திருத்தவாதியாக ஒருபோதும் இருக்கவே முடியாது” என்றார்.
  • அரசியலை சமூக சீர்திருத்தத்துக்கான கருவியாகப் பயன்படுத்துவதில் அவர் கண்ட வெற்றி, சமத்துவத்துக்கான போராட்டம் ஒவ்வொன்றிலும் அவரை நினைவுகூரச் செய்கிறது. இளையபெருமாளைப் பற்றி தமிழ்ப் பொதுச் சமூகம் அறிந்திருப்பது குறைவு. அவருடைய நூற்றாண்டு தருணத்தில், அவரைப் பற்றிய அறிதல்களைப் பொதுத் தளத்தில் கொண்டு செல்வது சமூகத்தின் கீழே உள்ள ஒவ்வொருவரும் மேலேறி வருவதற்கான உத்வேகத்தை அதிகரிக்க உதவும்!

நன்றி: அருஞ்சொல் (13 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories