TNPSC Thervupettagam

இளையராஜா இசைக் கல்வி மையம்: ஒரு முக்கியமான முன்னெடுப்பு

May 22 , 2024 39 days 87 0
  • சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகமும் (சென்னை ஐஐடி) இளையராஜாவும் இணைந்து ‘இளையராஜா இசைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்’ என்னும் புதிய முன்னெடுப்பைச் செய்வதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதுவொரு முக்கியமான முன்னெடுப்பு.

முந்தைய திட்டங்கள்

  • முன்பு, 2023ஆம் ஆண்டு, சென்னை ஐஐடி ‘அனைவருக்கும் ஐஐடி மெட்ராஸ்’ என்னும் ஒரு திட்டத்தைக் கொண்டுவந்தது. அதன் நோக்கம், 1 லட்சம் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு மின்னணுவியல் மற்றும் செமி-கண்டக்டர் தொழில்நுட்பத்தை எடுத்துச் செல்வதாகும். அதன் ஒரு பகுதியாக, 2023ஆம் ஆண்டு அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் (மாணவர்கள்- 500, மாணவியர்- 500 பேர்) தேர்ந்தெடுக்கப்பட்டு அதில் பயிற்சி பெற்றனர்.
  • பத்தாம் வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த மாணவ, மாணவியர், 12 ஆம் வகுப்பு படிக்கும் வரையில், மாதம் 1000 ரூபாய் உதவித் தொகையை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. அவர்கள் கல்லூரிக் காலம் முழுவதும் வருடம் 12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • “இந்தியாவின் முதன்மையான தொழிற்கல்வி நிறுவனமான சென்னை ஐஐடி, தனது கல்விப் பணிகள் சாதாரண மக்களுக்கும் சென்று சேரும் வகையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து செயல்பட முன்வந்தது பாராட்டுக்குரியது. இது அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தவும், அந்த மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்க்கவும் உதவும். இது என் கனவான ‘நான் முதல்வன்’ என்னும் திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு வலுச் சேர்க்கும்” என இதைத் தொடக்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ந்து சொன்னார்.
  • “தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பயிற்சி முடிந்ததும், மாணவர்களுக்கு சென்னை ஐஐடி சான்றிதழ் வழங்கும். இந்தப் பயிற்சியில், 100 பரிசோதனைகளை நடத்த மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பரிசோதனைகளை நடத்த, காணொளிப் பாடங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மின்னணுத் துறையில் தமிழ்நாட்டை முதன்மை இடத்துக்குக் கொண்டுசெல்வதே நம் நோக்கம்” என சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி இந்த விழாவில் சொன்னார்.
  • இது தவிர சென்னை ஐஐடி, இளநிலை அறிவியல் டேட்டா சயின்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் ஆன்லைன் பட்டப்படிப்பை வழங்கத் தொடங்கியுள்ளது. சமூகத்தை நோக்கிச் செல்லும் ஐஐடி சென்னையின் முயற்சிகள் (outreach) இவை.

இந்த முன்னெடுப்பை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?

  • உலகின் மிக உன்னதக் கல்வி நிலையங்கள் அனைத்துமே கடந்த இரண்டு தசாப்தங்களாக, தங்களது பாடத் திட்டங்களை ஆன்லைனில் அனைவருக்கும் கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்தப் பாதையில் சென்னை ஐஐடியும் இணைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
  • இளையராஜா இசைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தை ஐஐடி சென்னை தொடங்கியிருப்பதை, இந்தப் பின்னணியில் வைத்துப் பார்த்தால், இது எவ்வளவு முக்கியமான முன்னெடுப்பு என்பதை நாம் அறிந்துகொள்ள முடியும்.
  • ஐஐடி தொழிற்கல்வி நிலையங்களில் இணைந்து கல்வி பயில, பல லட்சம் மாணவர்கள், உலகின் மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான ஐஐடி - ஜேஇஇ தேர்வை எழுதுகிறார்கள். அப்படித் தேர்வுகளில் வெற்றிபெற்று நுழையும் மாணவர்களுக்கு, மிகத் தரமான தொழிற்கல்வி வழங்கப்டுகிறது.  புத்திசாலியான மாணவர்களை அடையாளம் கண்டுகொள்ள இதுபோன்ற நுழைவுத் தேர்வுகள் ஒரு வழி. ஆனால், புத்திசாலித்தனமும் மேதமையும் இதைத் தாண்டிய தளங்களிலும் உண்டு என்பதே உண்மை.
  • அதை ஐஐடி சென்னை அங்கீகரித்திருப்பதன் அடையாளம்தான் இந்த இசை ஆராய்ச்சி மையம் எனச் சொல்லலாம். பள்ளிப் படிப்பையே முடிக்காத இளையராஜா என்னும் மனிதர், தன் சுய தேடலின், உழைப்பின் வழியே மேதையாக மாறுகிறார்.

இளையராஜாவும் இசையும்

  • சென்னை வந்த காலத்தில், மேற்கத்திய சங்கீதத்தை முறையாகக் கற்றுக்கொண்டார். வெற்றிகரமான இசையமைப்பாளராக மாறிய பின்னர் கர்நாடக சங்கீதத்தை முறையாகக் கற்றுக்கொண்டார். இந்த ஆராய்ச்சி மையத் தொடக்க விழாவிலும் “சென்னைக்கு இசையைக் கற்றுக்கொள்ள வந்தேன். இன்னும் முடிக்கவில்லை” எனச் சொல்லியிருக்கிறார் இளையராஜா.
  • மேதைகள் எப்போதுமே வெல்வதில்லை. தம் வாழ்நாளில் பெரிதாக அங்கீகரிக்கப்பட்ட மேதைகள் மிகக் குறைவே. ஆனால், இளையராஜாவின் வாழ்க்கையில், இவை இரண்டுமே நிகழ்ந்திருக்கின்றன.
  • இளையராஜாவை முன்வைத்துத் தொடங்கப்படும் இந்த மையத்தின் மூலம் சென்னை ஐஐடி, மேலும் சமூகத்துடனான தன் உறவைப் பலப்படுத்திக்கொள்கிறது. கல்வி நிலையங்கள் சமூகத்திடமிருந்து துண்டிக்கப்பட்டு, தனித்து இயங்கக் கூடாது. அவை சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்பது காந்தியின் கருத்து.
  • மண்டல் கமிஷன் பரிந்துரைகள் முன்னெடுக்கப்பட்ட காலத்தில், ‘இடஒதுக்கீட்டால் எப்படி இந்தியா நாசமாகப் போகும்’ என்னும் கருத்தை முன்வைத்து, அன்றைய ஐஐடியின் இயக்குநர் நூற்றுக் கணக்கான கட்டுரைகளை எழுதினார். நாங்கள் ஏன் ஒரு எலைட் சமூகமாக இருக்கிறோம் என்பதைச் சொன்ன கட்டுரைகள் அவை. ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் அதை மிகவும் சிரத்தையுடன் வெளியிட்டது.
  • ஆனால், இன்று சென்னை ஐஐடி தமிழ்ச் சமூகத்தை நோக்கித் தன் சாளரங்களைத் திறந்திருக்கிறது. இதனால், தமிழ்ச் சமூகம் பெரும்பயன் அடையும் என்பதில் எந்த ஐயமுமில்லை. இந்த முயற்சியை முன்னின்று செய்யும், சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி நம் வணக்கத்துக்குரியவர்.

நன்றி: அருஞ்சொல் (22 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories