TNPSC Thervupettagam

இவர்களுக்கும் வாழ்வுண்டு

September 3 , 2023 366 days 354 0
  • குற்றவாளிகளில் பலரும் திட்டமிட்டுக் குற்றமிழைப்பதில்லை. அந்த நேரத்து மனக் கொந்தளிப்பாலும் பதற்றத்தாலும் குற்றம் செய்துவிட்டுப் பிறகு வருந்துகிறவர்கள்தாம் அதிகம். சிறையில் அவர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்கப் பயிற்சிகளோடு, பொதுமக்களைச் சந்திக்கிற சூழல் அமைவது அவர்களிடம் மனரீதியான மாற்றத்தை ஏற்படுத்தும்” என்கிறார் சென்னைப் புழல் பெண்கள் சிறையின் காவல் கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன்.
  • சென்னைப் புழல் சிறைக்கு அருகில் அரசு சார்பில் நடத்தப்படும் பெட்ரோல் நிரப்பும் மையத்தில் பெண் குற்றவாளிகள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். எத்தனையோ மகளிர் சிறப்புத் திட்டங்களையும் பெண்கள் நிர்வகிக்கும் நிறுவனங்களையும் பார்த்த நமக்குப் பெண் கைதிகளால் நிர்வகிக்கப்படும் பெட்ரோல் பங்க் நம்பிக்கை அளிக்கிறது. பெண் கைதிகளால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் முதல் பங்க் என்கிற வகையில் இது வரலாற்று முக்கியத்துவமும் வாய்ந்தது.
  • சிறையில் இருக்கும் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்காகவும் மன மலர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்திவருகிறது. பெண் கைதிகள் சமையல் பணி, சுத்தப்படுத்துதல், தையல், தின்பண்டங்கள் தயாரிப்பு போன்றவற்றில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்கு இவர்களுக்கு சம்பளமும் தரப்படுகிறது. இவை தவிர விளையாட்டு, பாடல், நடனம் போன்றவற்றிலும் கைதிகள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கூண்டுக்குள் வானம்

  • நாள் முழுக்க நான்கு சுவர்களுக்குள்ளேயே அடைந்து கிடப்பவர்களுக்குச் சிறகுகளைத் தரும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு என்பதால் ‘கூண்டுக்குள் வானம்’ என்கிற திட்டத்தையும் தமிழ்நாடு அரசு தொடங்கியது. சிறைக்கைதிகளின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தவும் ஊக்குவிக்கவும் தொடங்கப்பட்ட திட்டம் இது. புத்தகக் காட்சிகள்தோறும் சிறைத்துறை சார்பில் வைக்கப்படும் அரங்கில் பொதுமக்களும் பொதுநல அமைப்பினரும் புத்தகங்களைத் தானமாக அளித்துவருகின்றனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இதன்மூலம் கிடைத்ததாகச் சிறைக் காவல் கண்காணிப்பாளர் நிகிலா கூறுகிறார்.
  • ஆயுள் தண்டனை, பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட தண்டனை அனுபவித்தவர்கள் விடுதலையாகிச் சிறையைவிட்டு வெளியே செல்லும்போது அவர்களால் தங்கள் குடும்பத்தினருடனும் பொது மக்களுடனும் எளிதாகப் பழக முடிவதில்லை. பலருக்கு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப மூன்று ஆண்டுகளுக்கு மேல்கூட ஆகிவிடுகிறது. பங்கில் வேலை செய்வதன் மூலம் தண்டனைக் கைதிகள் வெளியுலகைப் பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைப்பதோடு அவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான சூழலும் ஏற்படும் என்பது சிறைத்துறை டிஜிபியின் கருத்து” என்கிறார் நிகிலா.

நம்பிக்கையும் நிறைவும்

  • தமிழ்நாடு சிறைத்துறையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் இணைந்து ‘Freedom Filling Station’ என்கிற பெயரில் பங்க்குகளை நடத்திவருகின்றன. இவற்றில் மத்திய சிறைக் கைதிகள் பணியில் அமர்த்தப்படுகின்றனர். தமிழ்நாட்டில் முதல் கட்டமாகச் சென்னை, வேலூர், கோயம்புத்தூர், பாளையம்கோட்டை, புதுக்கோட்டை ஆகிய ஐந்து இடங்களில் கைதிகளால் நிர்வகிக்கப்படும் பங்க்குகள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்டமாகச் சென்னைப் புழலில் முதல் பணி நேரத்தில் (shift) பெண் கைதிகள் மட்டுமே பணிபுரியும் பங்க் ஆகஸ்ட் 10 முதல் செயல்பட்டுவருகிறது. பங்க் அமைப்பதிலிருந்து கைதிகளுக்குப் பயிற்சி அளிப்பது வரை அனைத்தையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது.
  • கைதிகள் மூலம் நடத்தப்படும் பங்குக்குப் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு. ஒன்று, இது அரசு நடத்துகிற பங்க் என்பதால் இதன் தரமும் அளவும் சரியாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் சொல்கிறார்கள். மற்றொன்று, கைதிகள் பணிபுரிகிற பங்க் என்பதால் இங்கே வந்து பெட்ரோல் போடுவதால் ஏதொவொரு வகையில் சமூகப் பங்களிப்பு செய்வதாக வாடிக்கையாளர்கள் உணர்கிறார்கள். தேசிய நெடுஞ்சாலை 16இல் (NH16) அமைந்திருக்கும் பங்க்குகளில் புழல் ஃப்ரீடம் ஃபில்லிங் ஸ்டேஷன், தமிழக அளவில் பெட்ரோல் விற்பனையில் முதலிடம் வகிக்கிறது என்பதே இதற்கான வரவேற்புக்குச் சான்று.

விடுதலைக்குப் பிறகு

  • புழல் பெண்கள் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளும் நெடுநாள் தண்டனைக் கைதிகளும் இந்தப் பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்றாண்டுக் கால நன்னடத்தைச் சரிபார்ப்புக்குப் பிறகு 26 பேர் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இவர்களில் கொலை, போக்சோ வழக்கு, போதைப்பொருள் வழக்கு போன்ற குற்றங்களுக்குத் தண்டனை அனுபவிப்போரும் உண்டு. பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டவர்களின் அதிகபட்ச வயது 45. இவர்களில் முதுகலைப் படித்தவர்கள் தொடங்கிப் படிக்காதவர்கள் வரை பலதரப்பினரும் அடக்கம். அவரவர் திறமைக்கும் பணிக்கும் ஏற்ப ஸ்கில்டு(Skilled), செமி-ஸ்கில்டு(Semi-Skilled), அன்ஸ்கில்டு (Unskilled) ஆகிய மூன்று பிரிவாக ஊதியம் வழங்கப்படுகிறது. தற்போது மாதம் 6,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதை 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனச் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பரிந்துரைத்துள்ளார்.
  • 26 பெண்களும் புழல் சிறையிலிருந்து காலையில் பணிக்கு வந்துவிடுகிறார்கள். இரவுப் பணிக்கு ஆண் காவலர்கள் அமர்த்தப்படுகிறார்கள். இவர்களின் பாதுகாப்புக்காக இரண்டு சிறைக் காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சிறைக்குள் என்னதான் புத்தாக்கப் பயிற்சிகளை வழங்கினாலும் வெளியுலகைக் காண்பதும் மனிதர்களோடு உரையாடுவதும் வேறு விதமான அனுபவத்தைத் தரும். அதை இந்தப் பெண்களின் முகங்களே பிரதிபலிக்கின்றன. “இந்தப் பெண்களில் பலரும் பல ஆண்டுகளாகச் சிறைக்குள் இருப்பதால் ரூபாய் நோட்டு மாறியதுகூடச் சிலருக்குத் தெரியவில்லை. முதல் நாள் பணியின்போது சின்ன தடுமாற்றமும் தயக்கமும் இவர்களிடம் இருந்தது. இப்போது எல்லாருமே சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள்” என்கிறார் சிறைக் காவல் கண்காணிப்பாளர் நிகிலா.
  • சிறைக்கைதிகள் சிறைக்குள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டாலும் பெட்ரோல் பங்க் போன்றவை வருவாயை அதிகரிப்பவை. இது ஒரு பக்கம் அரசுக்குச் சாதகமானது; மறுபக்கம் கைதிகள் வெளியுலகைப் பார்க்கவும் திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வழிவகுக்கிறது. கைதிகள் விடுதலைக்குப் பிறகு இந்தச் சமூகத்தை எதிர்கொள்ளும் வகையில் இதுபோன்ற திட்டங்களை அரசு விரிவுபடுத்தும் செயல் வரவேற்கத்தக்கது. அதேநேரம் சமூகக் குற்றங்களைக் குறைப்பதற்கான திட்டங்களை முன்னெடுப்பதோடு குற்றங்கள் நிகழாத அளவுக்குச் சமூகக் கட்டமைப்பில் மாற்றங்களை உருவாக்குவதும் அவசியமே.

நன்றி: தி இந்து (03 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories