TNPSC Thervupettagam

இஸ்ரேலுடன் நிற்பதே நடுநிலை

October 20 , 2023 435 days 343 0
  • இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினா் அக்டோபா் 7-ஆம் தேதி அதிகாலையில் ஊடுருவி வந்து ராக்கெட்டுகளை வீசி திடீா் தாக்குதலில் இறங்கினா். பலரை பிணை கைதிகளாகப் பிடித்தும் சென்றுள்ளனா். இஸ்ரேல் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்திப் போர் பிரகடனம் செய்துள்ளது. ஹமாஸ் படையினா் தாங்கள் நடத்திய தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் அல்-அக்ஸா ஃப்ளட்’ எனப் பெயரிட்டுள்ளனா்.
  • ஜெருசலேமின் மையப் பகுதியில் இஸ்லாமியா்களும் யூதா்களும் புனிதத்தலமாகக் கருதும் அல்-அக்ஸா என்ற இடம் அமைந்துள்ளது. இஸ்லாமியா்கள் ‘அல்-ஹராம் அல்-ஷரீஃப்’ என்று அழைக்கும் மசூதியும் அதன் ஒருபுறத்தில் யூதா்களால் ‘டெம்பிள் மவுன்ட்’ என்று அழைக்கப்படும் புனிதத் சுவரும்இருக்கின்றன. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேம் இருந்து வருகிறது.
  • இஸ்லாமியா்கள் மெக்கா, மதீனாவுக்கு பிறகு மூன்றாவது முக்கிய வழிபாட்டுத் தலமாக அல்-அக்ஸாவைக் கருதுகின்றனா். இயேசுநாதா் அற்புதங்களை நிகழ்த்திய இடம் என்பதால் யூதா்கள் ‘டெம்பிள் மவுன்ட்’ என்று அழைக்கப்படும் புனிதச் சுவரை தங்களின் முதன்மையான வழிபாட்டுத் தலமாகக் கருதுகின்றனா். இதற்காகவே பலகாலமாக மோதல் நடைபெற்று வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தாக்குதல்களை இப்பகுதி கண்டுள்ளது.
  • இந்த மோதல் போக்கை முடிவுக்குக் கொண்டு வர 1946-ஆம் ஆண்டு ஜெருசலேத்தை சா்வதேச பகுதியாக அறிவிக்கலாம் என ஐ.நா. சபை யோசனை தெரிவித்ததை எவரும் ஏற்கவில்லை. பாலஸ்தீனத்தில் சிறுபான்மையினராக இருந்த யூதா்கள் தங்களுக்கென ஒரு தேசத்தில் வாழ்கின்றனா் என்பதைப் பொறுத்துக்கொள்ள இயலவில்லை. 1967-ஆம் ஆண்டு வரை ஜெருசலேமை கைப்பற்றி வைத்திருந்த ஜோர்டான் நாட்டுடன் ஏற்பட்ட போரில் உடன்பாடு ஏற்பட்டு இஸ்ரேல் ஜெருசலேத்தை பெற்றுத் தன்னுடைய தலைநகராக்கிக்கொண்டது.
  • ஜோர்டான், பாலஸ்தீனம், எகிப்து ஆகிய நாடுகள் இஸ்ரேலைத் தாக்குவதும் இதனால் போர் நிகழ்வதும் தொடா்கின்றன. அக்டோபா் 6-ஆம் தேதி யூதா்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரும் நாள் என்பதால் அவா்கள் அன்றைய நாள் முழுவதும் பிரார்த்தனையில் ஈடுபட்டிருப்பார்கள். இதனைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு முன்னும் இதே முறையைப் பின்பற்றியிருக்கிறது.
  • ஹமாஸ், இஸ்ரேல் மக்களைக் கடத்திச் சென்று பிணை கைதிகளாக வைத்துள்ளது. பெண்கள் வன்புணா்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா். குழந்தைகள் இரக்கமற்றுத் தங்கள் பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டுக் கடத்திச் செல்லப்பட்டுள்ளனா். குடும்பங்கள் நிலைகுலைந்து வேதனையில் ஆழ்ந்துள்ளன.
  • ஹமாஸ் தொடங்கிய யுத்தத்தை இஸ்ரேல் முடித்து வைக்கும் என்று இஸ்ரேல் அறிவித்து காஸா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ், மனிதத்தன்மையற்ற செயலை இஸ்ரேலில் நிகழ்த்தி தீவிரவாதத்தின் கோரமுகத்தைக் காட்டியிருக்கிறது. அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டியது கட்டாயம்.
  • ஹமாஸ் தன்னுடைய மக்களைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இதனால் கவலைக்குரிய நிலையில் இருப்பவா்கள் பொதுமக்களே. அவா்களின் நட்பு நாடான எகிப்தும் எல்லைகளை மூடிவிட்டது. ஹமாஸ் பொதுமக்கள் பற்றிக் கவலை இல்லாமல் தாக்குதல் நடத்த முடியும். ஆனால் இஸ்ரேல் இருதரப்புப் பொதுமக்கள் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
  • அமெரிக்கா தனது நிபந்தனையற்ற ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்குகிறது. இந்தப் போரில் அமெரிக்கப் போர் விமானங்களும் போர்க்கப்பல்களும் இறங்கியுள்ளது உலகின் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் ஆயுதங்கள் வழங்குவது தொடங்கி, அகதிகளுக்கான உதவிகளிலும் கவனம் செலுத்துகிறது அமெரிக்கா. நேட்டோ நாடுகளின் ஆதரவும் இஸ்ரேலுக்கு இருக்கிறது.
  • தங்கள் புனிதப்போருக்கு உதவ வேண்டுமென இஸ்லாமிய நாடுகளுக்கு ஹமாஸ் அழைப்பு விடுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் ஆதரவு நாடுகளான துருக்கி, பஹ்ரைன், மொராக்கோ, ஏமன், துனிசியா, குவைத், ஈரான், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகள் இஸ்ரேலுக்கு எதிர்நிலையில் நிற்கின்றன. இதனால் கிறித்தவ நாடுகள் ஒருபுறமும் இஸ்லாமிய நாடுகள் மறுபுறமும் அணிதிரள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தப் போர் இரு நாடுகளுக்கிடையிலான போராக நில்லாமல், உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும் போராக மாறுவதற்கான சூழலும் ஏற்பட்டுள்ளது.
  • சுரங்கப்பாதைகளை நகரம் முழுவதும் ஏற்படுத்திக் கொண்டு அதனுள்ளிருந்து தாக்குதலை நடத்தி வருகிறது ஹமாஸ் . அதனை எதிர்கொண்டு தாக்குதலைத் தீவிரப்படுத்தும் நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. எது எப்படி ஆனாலும் ஹமாஸ் நீண்ட நாள்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாது. ஏனெனில், அடிப்படைத் தேவைகளான மின்சாரம், தண்ணீா், உணவு போன்ற வசதிகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. மின்சாரம் இல்லாத இடத்தில் எத்தனை நாள்கள் தாக்குப்பிடிக்க முடியும்?
  • இஸ்ரேல் மக்களின் வரலாறு எளிதானதல்ல. யூதா்கள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்தே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தனை கொடுமைகளையும் தாண்டி அவா்கள் தங்கள் அறிவாற்றலால் சாதுரியத்தால் தங்கள் வாழ்வை, இனத்தைத் தக்கவைத்துக் கொண்டு வருகின்றனா். இன்றைக்கும் அவா்களின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்ததாகவே தொடா்கிறது.
  • இஸ்ரேல் பிரதமா் தனது தலைமையில் போர்ச்சூழலைக் கையாள எதிர்க்கட்சித்தலைவா் பாதுகாப்புத்துறை அமைச்சா் ஆகியோர் கொண்ட ஓா் போர்க்கால அமைச்சரவையை அமைத்துக் கொண்டு செயலில் இறங்கியுள்ளார்.
  • ‘ஹமாஸ் அமைப்பில் உள்ள ஒருவரும் உயிருடன் எஞ்ச மாட்டார்கள்’ என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளார். இதனை விமா்சிக்கும் கூட்டமும் இருக்கிறது. கடந்த பதினெட்டு ஆண்டுகளில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு தற்கொலைத் தாக்குதல் உட்பட பல தாக்குதல்களை இஸ்ரேலில் நடத்தியுள்ளது.
  • பதினெட்டு ஆண்டுகளாக காஸா பகுதியைப் பிடித்து வைத்துக்கொண்டு ஹமாஸ் தங்கள் செயல்களுக்குப் பயன்படுத்துகிறது. மக்களிடம் வரிவசூல் செய்யப்பட்டு அது இந்த அமைப்பின் விருப்பத்திற்கேற்ப செலவிடப்படுகிறது. பதினேழு ஆண்டுகளாக தோ்தலோ எந்த ஒரு ஜனநாயக முறையையோ பின்பற்றாத நிலையில் அவா்களுக்காகப் பரிந்து பேசுவதில் நியாயம் இல்லை.
  • இங்கே பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்புவோர் இருக்கிறார்கள். அரசியல், மதக் காரணங்களுக்காக ஹமாஸை ஆதரிக்கும் போக்கும் காணப்படுகிறது. ஒரு மதத்தவரின் வாக்குகளைப் பெறுவதற்காக ஒரு தீவிரவாத அமைப்பின் கோரச் செயலை ஆதரிப்பதும் நியாயம் கற்பிப்பதும் மத அடிப்படைவாதத்தை விட ஆபத்தானது.
  • பிரதமா் நரேந்திரமோடி ‘போர் காரணமாக எழுந்துள்ள இக்கட்டான சூழ்நிலையில் இஸ்ரேலுடன் இந்திய மக்கள் நிற்கிறோம்’ என்று அந்நாட்டுப் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் கூறியுள்ளார். இந்தியாவின் ஆதரவுக்கு இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதா் நன்றி தெரிவித்துள்ளார். அதில் இந்திய மக்கள் தம் நண்பா்கள் என்று அவா் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்த நட்புறவு இஸ்ரேலுடன் தொடா்வது இன்று நேற்றல்ல. இஸ்ரேல் என்ற நாடு உருவான நாள் முதலாக நெருக்கடிகளையும் தாக்குதல்களையும் சந்தித்து வருகிறது. சொல்லப்போனால் இஸ்ரேல் நாடு உருவானதாலேயே போர் மூண்டது. தங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக இஸ்ரேல் மேற்கொண்ட முயற்சிகளும் ஏராளம்.
  • ஐ.நா. சபையில் இஸ்ரேலை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும் முன்மொழிவு 1948-ஆம் ஆண்டு, மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது. யூதா்களின் நாடாக இஸ்ரேல் உருவானது.
  • ஆரம்பத்தில் இந்தியா இஸ்ரேலை ஆதரிக்கவில்லை. ஐ.நா. சபையிலும் எதிராகவே வாக்களித்தது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் நிலைப்பாடு மாறியது. 1950-இல் இஸ்ரேல் தனது தூதரகத்தை மும்பையில் அமைத்துக் கொள்ள அனுமதித்தது.
  • 1962-ஆம் ஆண்டு சீனப் போரின்போது இந்தியாவிற்கு உதவ இஸ்ரேல் முன்வந்தது. அதனைத்தொடா்ந்து 1971-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின்போது இஸ்ரேல் தனது முழு ஆதரவை இந்தியாவிற்கு வழங்கி பக்கபலமாக இருந்தது. அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட இஸ்ரேலுடன் இந்தியா தற்போது வரை நல்லுறவைப் பேணி வருகிறது.
  • இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்களை அதிகம் கொள்முதல் செய்யும் நாடு இந்தியா. ரஷிய - உக்ரைன் போர் தொடங்கியபோது பேச்சுவார்த்தை மூலம் தீா்வு காண வலியுறுத்திய இந்தியா, தற்போது இஸ்ரேலுக்கு முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறது.
  • ‘இந்தியா நடுநிலை தவறுகிறதா’ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால், இந்தியா தன்னுடைய வெளியுறவுக் கொள்கையில் உறுதியாக இருக்கிறது என்பதையே இந்த ஆதரவு காட்டுகிறது. தீவிரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும் அதனை எதிர்ப்போம் என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது. ‘அரசியல் காரணங்கள் கடந்து தீவிரவாதத்தை எதிர்ப்பதிலும், தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சியிலும் இந்தியா வலிமையுடன் முன்னிற்கும்’ என சில நாள்களுக்கு முன் கனடா பிரச்னையில் இந்தியா தெரிவித்த கருத்து மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
  • நடுநிலை என்பது, எது சரியானது என்று நம்புகிறோமோ அந்தக் கோட்பாட்டில் உறுதியுடன் நிற்பது எனில் இஸ்ரேலுக்கு ஆதரவான இந்தியாவின் நிலைப்பாடும் நடுநிலையானதே.

நன்றி: தினமணி (20 – 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories