TNPSC Thervupettagam

இஸ்ரேல் - பாலஸ்தீனம் மோதல் வரலாறு

November 26 , 2023 236 days 315 0
  • நம் தாத்தா காலத்தில் ஆரம்பித்த இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினை, நம் பேரன்கள் காலத்திலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் மிக நீண்ட காலப் பிரச்சினையாகவும் மிகச் சிக்கலான பிரச்சினையாகவும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
  • இஸ்ரேல் உள்பட மேற்கு ஆசியப் பகுதிகளில் பொ.ஆ. (கி.பி.) 1517 முதல் 1917ஆம் ஆண்டு வரை ஆட்டமன் (Ottoman) ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. 19ஆம் நூற்றாண்டில் இன்றைய இஸ்ரேல், பாலஸ்தீனப் பகுதிகளில் 87 சதவீத இஸ்லாமியர்களும் 10 சதவீத கிறிஸ்தவர்களும் 3 சதவீத யூதர்களும் அமைதியாக வசித்துவந்தனர். ஜெருசலேமில் இஸ்லாமியர், கிறிஸ்துவர், யூதர் பிரச்சினையின்றி வாழ்ந்துவந்தனர்.
  • 19ஆம் நூற்றாண்டில் யூதப் பத்திரிகையாளர் தியடோர் ஹெர்ஷெல், பாலஸ்தீனம் யூதர்களின் தாயகம் என்கிற கருத்தாக்கத்தை வெளிப்படுத்தினார். இது ‘ஸியோனிசம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கருத்தாக்கம் ஐரோப்பாவில் வசித்த யூதர்கள் பாகுபாட்டை எதிர்கொள்ளவும் இன அழிப்பைச் சந்திக்கவும் வழிவகுத்தது.
  • முதல் உலகப் போரில் யூதர்களின் ஆதரவைப் பெறும் நோக்கில், ‘பாலஸ்தீனர் களுக்குத் தனித் தாயகம்’ என்கிற பால்ஃபோர் பிரகடனத்தை பிரிட்டன் அறிவித்தது. முதல் உலகப் போரின் முடிவில் ஆட்டமன் ஆட்சி வீழ்ந்தது. இன்றைய இஸ்ரேலிய, பாலஸ்தீனப் பகுதிகள் பிரிட்டனின் ஆட்சியின் கீழ் வந்தன. மிகப் பழமையான ஜெருசலேம் யூதர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் மிக முக்கியமான பகுதியாக இருந்தது.
  • ஹிட்லர் நடத்திய யூத இனஅழிப்பு வேட்டையின் காரணமாக, ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் குடியேற ஆரம்பித்தனர். 1920 முதல் 1940 ஆம் ஆண்டு வரை யூதர்களின் எண்ணிக்கை பாலஸ்தீனத்தில் அதிகரித்துக்கொண்டே வந்தது. ஐரோப்பிய யூதர்களால் அங்கு வசித்த யூதர்களைப் போல் மக்களிடம் இணக்கமாக இருக்க இயலவில்லை. ஒருகட்டத்தில் பாலஸ்தீன அரபிகள், யூதர்களை எதிர்க்க ஆரம்பித்தனர். அவர்களின் கோபம் ஆட்சி செய்துகொண்டிருந்த பிரிட்டனின் மீதும் திரும்பியது.
  • 1947ஆம் ஆண்டு பிரிட்டன் பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேற நினைத்தது. அப்போது பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியை யூதர்களுக்கும் இன்னொரு பகுதியை அரபிகளுக்கும் கொடுத்துவிட்டு, இருவரும் புனிதமாகக் கருதும் ஜெருசலேமை சர்வதேச நகரமாக மாற்ற ஐ.நா. ஆதரவு தெரிவித்தது. இந்த உடன்பாட்டை யூதர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், பாலஸ்தீன அரபிகள் ஏற்கவில்லை.
  • 1948ஆம் ஆண்டு பிரிட்டன் வெளியேறியது. ‘இஸ்ரேல்’ எனும் தனி நாடு உருவாக்கப்பட்டதாக, யூதத் தலைவர்கள் அறிவித்தனர். டேவிட் பென் குரியன் பிரதமராக அறிவிக்கப்பட்டார். இதை அமெரிக்காவும் ஆதரித்தது. உடனே இராக், சிரியா, லெபனான், ஜோர்டான், எகிப்து ஆகிய ஐந்து அரபு நாடுகள் இணைந்து இஸ்ரேலை எதிர்க்கத் தீர்மானித்தன. அரபு-இஸ்ரேல் போர் வெடித்தது. 1949இல் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, மேற்குக் கரை ஜோர்டானுக்கு வழங்கப்பட்டது, காசா எகிப்தின் ஒரு பகுதியாக மாறியது. போரில் வெற்றி பெற்ற இஸ்ரேல், ஐ.நா. திட்டத்தின் கீழ் இருக்கும் பகுதியைவிட அதிகமான பகுதிகளைக் கட்டுப்படுத்தியது. ஜெருசலேம் இரண்டாகப் பிரிந்து, மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலும் கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. இதன் விளைவாக சுமார் 7 லட்சம் பாலஸ்தீனர்கள் பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறினார்கள், வெளியேற்றப்பட்டார்கள். இது ‘அல் நக்பா’ (பேரழிவு) போர் என்று அழைக்கப்பட்டது.
  • 1964இல் ‘பாலஸ்தீன விடுதலை இயக்கம்’ (PLO) உருவானது. இது ஆயுதப் போராட்டத்தின் மூலம் பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடியது.
  • 1967ஆம் ஆண்டு 6 நாள்கள் நடைபெற்ற போரின் விளைவாக காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்குக் கரை, சிரியன் கோலன் குன்றுகள், எகிப்தின் சினாய் தீபகற்பத்தின் பெரும் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அண்டை நாடுகளில் வாழும் பாலஸ்தீன அகதிகள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கு இஸ்ரேல் அனுமதி மறுத்தது.
  • 1973ஆம் ஆண்டு சிரியாவும் எகிப்தும் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தின. இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஐ.நா. தீர்மானத்தின் மூலம் சண்டை நிறுத்தப்பட்டது.
  • 1982இல் லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேல், அங்கிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை வெளியேற்றியது. கிழக்கு ஜெருசலேம் உள்பட பாலஸ்தீனப் பிரதேச மாகக் கருதப்பட்ட பகுதிகளில் யூதர்களின் குடியிருப்புகளை உருவாக்கியது.
  • 1987இல் காசா, மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிராகப் பாலஸ்தீனர்களின் எழுச்சி ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப் பட்டனர், இது முதல் ‘பாலஸ்தீன இன்டிஃபாடா’ (நடுக்கம்) என்று அழைக்கப்படுகிறது. 1993 ஆஸ்லோ சமாதான உடன்படிக்கை உருவானது. 1995இல் இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ராபினுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • 1997இல் மேற்குக் கரையின் சில பகுதிகளிலிருந்து இஸ்ரேலிய ராணுவம் வெளியேறியது. உடன்படிக்கைகளால் அமைதியைக் கொண்டுவர ஏற்படுத்தி இயலவில்லை. 2000ஆம் ஆண்டு இஸ்ரேலிய அரசியல்வாதி ஒருவர் ஜெருசலேமில் உள்ள மசூதிக்குச் சென்றதால், இரண்டாவது பாலஸ்தீன இன்டிஃபாடா வெடித்தது. பல ஆண்டுகள் நடைபெற்ற போர் ஒரு முடிவுக்கு வந்தது. காசாவிலிருந்து அனைத்துத் துருப்புகளையும் யூதக் குடியேற்றங்களையும் திரும்பப் பெறத் திட்டமிட்டது இஸ்ரேல்.
  • 2006இல் நடைபெற்ற பாலஸ்தீனத் தேர்தலில் இஸ்லாமியப் போராளிக் குழுவான ஹமாஸ் வெற்றி பெற்றது. 2006இல் ஆரம்பித்த சண்டையின் முடிவில், 2007இல் விடுதலை இயக்கங்களில் ஒன்றான ஃபத்தாவைத் தோற்கடித்தது ஹமாஸ். 2008, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போர்களில் இஸ்ரேலுடன் சண்டையிட்டது. காசாவை ஹமாஸ் ஆட்சிசெய்தது. காசாவின் எல்லைகள் இஸ்ரேல், எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.
  • பாலஸ்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிப்பதை, ஒரு யூத நாடாக அச்சம் கொள்வதாக இஸ்ரேல் கூறுகிறது. ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகராக இஸ்ரேல் கோருகிறது. பாலஸ்தீனர்களோ கிழக்கு ஜெருசலேமை எதிர்கால பாலஸ்தீன அரசின் தலைநகராகக் கருதுகின்றனர்.
  • பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. ஐ.நா. தன்னுடைய உறுப்பு நாடுகளில் ஒன்றாகப் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளது. 1988இல் பாலஸ்தீன அரசை அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
  • ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஷேக் ஜாராவிலிருந்து 6 பாலஸ்தீனக் குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக, இஸ்ரேலிய உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு பாலஸ்தீனர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். 2021இல் வன்முறை வெடித்தது. அல் அக்ஸா மசூதியை இஸ்ரேலியக் காவல்துறை தாக்கியது. ஹமாஸ், பிற பாலஸ்தீனக் குழுக்கள் காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை ஏவின. இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தியது.
  • 2023, அக்டோபர் 7 அன்று காசாவிலிருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட்டுகளை ஏவியது. இதில் 1400 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பொதுமக்களைப் பணயக்கைதிகளாகவும் அழைத்துச் சென்றது ஹமாஸ். இஸ்ரேல் போரை அறிவித்தது. ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 10 லட்சம் பாலஸ்தீனர்கள் இடம்பெயர்ந்தனர். காசாவுக்கான உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் துண்டித்தது. வடக்கு காசாவில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்தது. அவர்களை அங்கேயே இருக்குமாறு ஹமாஸ் கேட்டுக்கொண்டது. போர் தொடர்கிறது. இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஐ.நா. எதிர்ப்பை வெளிப்படுத்திவருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 11 - 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories