- நீண்ட காலமாகத் தொடரும் இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல், அக்டோபர் 7 அன்று ஹமாஸ் அமைப்பு மேற்கொண்ட கடும் தாக்குதலின் மூலம் உச்சமடைந்திருக்கிறது. முற்றிலும் எதிர்பாராத இந்தத் தாக்குதலில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் தொடுத்த பதில் தாக்குதலிலும் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
- பிரிட்டனின் காலனியாக பாலஸ்தீனம் இருந்ததிலிருந்து தொடங்கிய பிரச்சினை இது. பிரிட்டிஷ் அரசு பிரித்தாளும் சூழ்ச்சி, இதன் தொடக்கம் எனலாம். யூத, கிறிஸ்துவ, இஸ்லாம் மதங்களுடன் தொடர்புடைய ஜெருசலம் என்னும் புனித நகரை முன்வைத்து இந்தப் பிரச்சினை மையம் கொண்டது. பாலஸ்தீனப் பகுதிகளைச் சிறிது சிறிதாக ஆக்கிரமித்துக் கொண்ட இஸ்ரேலிய அரசு, மேற்குக் கரையில் தொடர்ந்து குடியிருப்புகளை ஏற்படுத்திவருகிறது.
- அந்தப் பகுதியில் ராணுவத்தையும் குவித்துள்ளது. பாலஸ்தீனர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. பாலஸ்தீனர்கள் பலர் இஸ்ரேலியப் படைகளால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். படுகொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. இதனால், இந்தப் பகுதி எப்போதும் பதற்றத்துக்கு உரிய பகுதியாக இருந்துவருகிறது.
- இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளால் ஹமாஸ் அமைப்பு கடும் அதிருப்தியில் இருந்தது. இதற்கிடையே, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு கொண்டுவந்த நீதித் துறைச் சீர்திருத்தத்துக்கு எதிராக, கடந்த பல மாதங்களாக இஸ்ரேல் மக்கள் போராடிவந்த நிலையில், உளவுப் பணிகளில் ஏற்பட்ட சுணக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு இந்தத் தாக்குதலை ஹமாஸ் அமைப்பு தொடுத்துள்ளது.
- காசா எல்லையில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அப்பாவி மக்கள் மீது ஹமாஸ் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கானோரைக் கொன்றதுடன் பலரைப் பிணைக்கைதிகளாகவும் பிடித்துவைத்துள்ளனர். இந்தத் தாக்குதல்கள் பாலஸ்தீன மக்களின் இலக்கை அடையப் பயன்படாது எனக் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. ஹமாஸ் அமைப்புக்கும், பெரும்பாலான சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தைப் பெற்ற அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசுக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகள் இருப்பதையும் கவனிக்க வேண்டும். அதேவேளையில், “இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு எனும் நிலையை பாலஸ்தீனம் அடையும் வரை இந்தத் தாக்குதலைக் கண்டிக்க முடியாது” என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பாலஸ்தீனத் தூதரகத்தின் துணைத் தலைவர் ஹசன் அல்பலாவி கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
- ஹமாஸ் அமைப்பு, தன் சொந்த மக்களின் நலன்களைப் பொருட்படுத்தாமல் மேற்கொண்ட இந்தத் தாக்குதல், பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரப்போவதில்லை. பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட உலக நாடுகளின் ஆதரவை இழக்கவும் இந்தத் தாக்குதல்கள் ஒரு காரணமாகலாம். அதேபோல் அப்பாவி பாலஸ்தீனர்களைப் பொருட்படுத்தாமல் இஸ்ரேல் நடத்தும் கடுமையான பதிலடித் தாக்குதலும், காசா பகுதிக்கான மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை முடக்கியிருக்கும் நடவடிக்கையும் கண்டிக்கத் தக்கவை.
- சமீபத்திய பதற்றம் தணிந்தாலும்கூட, மீண்டும் இம்மாதிரித் தாக்குதல்கள் தொடரும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கைகள் பலன் தராது. காலம் காலமாகத் தொடரும் பாலஸ்தீன மக்களின் பிரச்சினைகளைப் பேசாமல், இதற்கு ஒரு உறுதியான தீர்வு கிடைக்காது. உண்மையில் இரு நாடுகளும் தங்கள் பகுதியில் அமைதி நிலவ விரும்பினால், ராணுவ நடவடிக்கைகளைக் கைவிட்டு, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விழைய வேண்டும். அதுவே முழுமையான தீர்வாக இருக்கும்.
நன்றி: இந்து தமிழ் திசை (13 - 10 – 2023)