TNPSC Thervupettagam

இஸ்ரோவின் புத்தாண்டுப் பரிசு

January 6 , 2024 371 days 260 0
  • இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வழங்கியிருக்கும் புத்தாண்டு பரிசு, அந்த நிறுவனத்தின் விண்கலத்தைப் போலவே இந்தியாவின் பெருமையை விண்ணளவு உயா்த்தியிருக்கிறது. கடந்த 2023-ஐத் தொடா்ந்து 2024-லிலும் இஸ்ரோவின் சாதனைகள் தொடரப் போகின்றன என்பதை உணா்த்துவதாக அமைந்திருக்கிறது புத்தாண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்டின் வெற்றிப் பயணம்.
  • அலைவரிசை, புவி கண்காணிப்பு மற்றும் வா்த்தக ரீதியிலான நடவடிக்கைகளுக்காக புவி தாழ்வட்டப் பாதையில் செயற்கோள்களை நிலைநிறுத்தும் திட்டங்களை இஸ்ரோ தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் சந்திரன், சூரியன், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளிலும் பல வெற்றிகளை அடைந்திருக்கிறது. அந்த வரிசையில் இணைகிறது விண்வெளி ஊடுகதிர் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருக்கும்எக்ஸ்போசாட்செயற்கைக்கோளுடனான பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட்.
  • விண்வெளியிலுள்ள கருந்துளையில் இருந்து வெளியேறும் ஊடுகதிர்களை (எக்ஸ்-ரே) ஆய்வு செய்வதற்காகஎக்ஸ்போசாட்’, அதாவது, ‘எக்ஸ்-ரே போலாரி மீட்டா் சாட்டிலைட்என்கிற செயற்கைக் கோளை இஸ்ரோ வடிவமைத்தது. அதை புத்தாண்டு பரிசாக விண்வெளியில் ஏவியிருக்கிறது.
  • எரிபொருள் நிரப்பும் பணிகள், இறுதிக்கட்ட நடவடிக்கைகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் அதை விண்ணில் செலுத்துவதற்கான 25 மணிநேர கவுன்ட் டவுன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. திட்டமிட்டபடி திங்கள்கிழமை காலை 9.10 மணிக்கு சதீஷ் தவன் ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
  • 22 நிமிடங்களில் பூமியிலிருந்து 650 கி.மீ. தூரம் பயணித்து நிர்ணயித்த புவிவட்டப் பாதையில்எக்ஸ்போசாட்நிலைநிறுத்தப்பட்டது. அடுத்தகட்டமாக ராக்கெட்டின் நான்காம் நிலையான பிஎஸ்-4 (போயம்) சாதனம் 350 கி.மீ. தொலைவு கீழே கொண்டுவரப்பட்டது. அதற்காக இரண்டு முறை ராக்கெட்டின் என்ஜின் விண்வெளியில் நிறுத்தப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டது. இதுவே மிகப் பெரிய சாதனை.
  • மொத்தம் 10 ஆய்வுக் கருவிகளைக் கொண்டபோயம்திட்டமிட்ட பாதைக்குச் சென்று தனது பணிகளைத் தொடங்கியிருக்கிறது. ஊடுகதிர்களை ஆய்வு செய்வதற்காக 469 கிலோ எடையில் உருவாக்கப்பட்டிருக்கும்எக்ஸ்போசாட்செயற்கைக்கோளில், ‘போலிக்ஸ்’ (எக்ஸ்-ரே போலாரி மீட்டா்) மற்றும்எக்ஸ்பெக்ட்’ (எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோ மீட்டா் அண்ட் டைமிங்) இருவேறு ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
  • அந்த இரண்டு ஆய்வுக் கருவிகளும் புவி தாழ்வட்டப் பாதையில் ஐந்து ஆண்டுகளுக்கு தொடா்ந்து இயங்கி ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றன. விண்வெளியில் உள்ள கருந்துளைகளிலிருந்து வெளியேறும் ஊடுகதிர்களின் (எக்ஸ்-ரே) துருவ முனைப்பு அளவு, நியூட்ரான் விண்மீன்களிலிருந்து வெளியாகும் கதிரியக்கம், ‘நெபுலாஎனப்படும் கருந்துளை வாயு திரள் ஆகியவற்றின் தன்மைகள் குறித்து அங்கிருந்தபடியே ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
  • நியூட்ரான் விண்மீன்கள் புவியின் நிழலைக் கடந்து செல்லும்போதும், சூரிய அல்லது சந்திர கிரகணங்கள் நிகழும்போதும் அந்த இரண்டு கருவிகளும் துல்லியமாக ஆய்வை மேற்கொள்ளும். பிஎஸ்எல்வி சி-58-இன் நான்காம் நிலையான பிஎஸ்-4 பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் 10 ஆய்வுக் கருவிகளும் பல்வேறு ஆய்வு நடவடிக்கைகளில் அடுத்த சில மாதங்களுக்கு மேற்கொள்ள உள்ளன.
  • எக்ஸ்போசாட்’, ‘எக்ஸ்பெக்ட்ஆகிய இரு கருவிகளையும் பெங்களூரில் உள்ள சா் சி.வி. ராமன் ஆராய்ச்சி நிறுவனமும், யூ.ஆா். ராவ் செயற்கைக்கோள் மையமும் உருவாக்கியுள்ளன. பிஎஸ்எல்வி சி-58 வெற்றிப் பயணத்துக்கு உதவியிருக்கும் பெரும்பாலான உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டவை என்பதை அடிக்கோடிட்டு குறிப்பிடத் தோன்றுகிறது.
  • இதுவரை விண்வெளியின் கதிரியக்கம், நிறமாலை (ஸ்பெக்ட்ரோஸ்கோபிக்) குறித்த தரவுகள் தொலைநோக்கி மூலம் மட்டுமே பெறப்பட்டு வந்தன. மின்காந்த அலைக்கற்றை மூலம் பெறப்படும் ரோடியோ அலைவரிசை வாயிலாகவும் கிடைக்கப்பெற்றன. அவை துல்லியமானவை அல்ல. ஊடுகதிர்களின் வாயிலாக விண்வெளித் தரவுகளை இனிமேல்எக்ஸ்போசாட்செயற்கைக்கோள் மூலம் துல்லியமாகப் பெற முடியும்.
  • உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ஊடுகதிர்களின் மூலம், பாதை ஆகியவற்றை அளவிட்டு அதன் வாயிலாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டிருக்கும் இரண்டாவது செயற்கைக்கோள் இந்தியாவின்எக்ஸ்போசாட்என்பது நமக்குப் பெருமை. 2021-இல் இத்தாலியுடன் இணைந்து அமெரிக்கா அனுப்பிய.எக்ஸ்.பி..’ செயற்கைக்கோள், 158 பில்லியன் டாலா் (சுமார் ரூ.1,500 கோடி) செலவில் வடிவமைக்கப்பட்டது என்றால், இப்போது இந்தியா நிலைநிறுத்தியிருக்கும்எக்ஸ்போசாட்செயற்கைக்கோளுக்கான செலவு சுமார் ரூ.250 கோடி மட்டுமே எனும்போது நமது இஸ்ரோ விஞ்ஞானிகளின் திறமைக்குத் தலைவணங்கத் தோன்றுகிறது.
  • குறைந்த செலவில் விண்வெளி சாதனை படைத்து இந்தியாவின் திறமையைப் பார்த்து உலகம் வியந்து போயிருக்கிறது. ஐந்து மாத இடைவெளியில் சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 ஆகியவற்றைத் தொடா்ந்து மூன்றாவது சாதனை படைத்து விண்ணைத் தொட்டிருக்கிறது இந்தியாவின் இஸ்ரோ. அடுத்த வரும் ஆண்டுகளில் இன்னும் பல விண்வெளி சாதனைகள் காத்திருக்கின்றன என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி: தினமணி (06 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories