- ‘ஓர் ஆயிரம் மைல் பயணம் ஓர் அடியை எடுத்து வைப்பதில் இருந்துதான் தொடங்குகிறது’ என்கிறார் லாவோ ஸீன். சந்திரயான் 3, ஆதித்யா எல்1 ஆகியவற்றை ஒட்டி இஸ்ரோ குறித்து அதிகம் பேசப் படுகிறது. அந்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் முதல் அடி எங்கே ஆரம்பித்தது என்பது மிகவும் சுவாரசியமானது.
- புவி காந்த மையப் பகுதிதான் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கு ஏற்ற இடம். கேரளத்தின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நிலநடுக்கோட்டுக்கு அருகே அமைந்திருந்தது தும்பா. ஆனால், அது மீனவ மக்கள் அதிகம் வாழும் பகுதியாக இருந்தது. அங்கே ‘மகதலா மரியா’ என்கிற பேராலயமும் இருந்தது. அங்குள்ள மக்கள் மகதலா மரியா மீது மிகுந்த பக்தியும் அன்பும் வைத்திருந்தனர்.
- அன்றைய பிரதமர் நேரு, கேரள முதல்வர் ஆர். சங்கரிடம், தும்பாவின் முக்கியத்துவத்தையும் அது தேசத்தை எப்படி உயர்வான நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதையும் விளக்கினார். முதல்வரும் அந்த விளக்கத்தை ஏற்றுக்கொண்டார். உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறைக்குப் பொறுப்பாயிருந்த கே.ஜே. சாகோவை விஞ்ஞானிகள் சந்தித்து, தும்பாவின் தேவையை வலியுறுத்தினர். தேவைப்பட்டால் மக்களை வலுக்கட்டாயமாக வேறு இடத்துக்கு மாற்றக்கூடிய அதிகாரமும் அரசுக்கு இருந்தது
- ஆனால், மக்களின் நம்பிக்கைக்குரிய பேராலயம் இருக்கும் இடத்தில் அதிகாரத்தைச் செலுத்துவது சரியல்ல என்பதால், தேவாலயத்தில் பொறுப்பில் இருந்த பிஷப் பீட்டர் பெர்னார்ட் பெரைராவைச் சந்தித்து சாகோ உரையாடினார். தேசம் நம்மைத் தியாகம் செய்ய அழைக்கும்போது, நாம் அதை ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பின்னர் விக்ரம் சாராபாயும் அப்துல் கலாமும் பிஷப்பைச் சந்தித்துப் பேசினார்கள். அவர், ஞாயிறு அன்று நடக்கும் வழிபாட்டு நிகழ்வுக்கு இருவரையும் வரச்சொன்னார்.
- விக்ரம் சாராபாயும் அப்துல் கலாமும் ஞாயிறு அன்று நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டனர். இருவரையும் மக்களுக்கு அறிமுகப்படுத்தி, “அரசாங்க அறிவியல் திட்டத்துக்காகத் தேவாலயத்தையும் நீங்கள் குடியிருக்கும் குடியிருப்புகளையும் கேட்கிறார்கள். யேசு பொதுநலனுக்காகத் தமது உயிரைத் தியாகம் செய்தார். பொதுநலனுக்காக நாமும் நமது தேவாலயத்தையும் வீடுகளையும் ஏன் தியாகம் செய்யக் கூடாது? ஆன்மிகமும் அறிவியலும் தேச நலனுக்காக இருக்க வேண்டும்” என்றார் பிஷப்.
- இந்துவான சாராபாயும் இஸ்லாமியரான கலாமும் ஏன் நம் இடத்தைக் கேட்கிறார்கள் என்று அந்த மக்கள் கேட்கவில்லை. அதிர்ச்சி அடைந்தாலும் எதிர்ப்பு எதையும் காட்டாமல் ‘ஆமென்’ என்று தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தார்கள். தேவாலயம் இப்படித்தான் இஸ்ரோவின் முதல் ஆய்வகமாக மாறியது.
- தும்பாவில் வசித்த சுமார் 500 குடும்பங்கள் மீன்பிடித் தொழிலைத் தொடரும் வகையில் அருகில் உள்ள வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். அதுவும் தேவாலயத்துக்குச் சொந்தமான பகுதிதான். மக்கள் புதிய வீடுகளைக் கட்டுவதற்கு பிஷப் உதவியாக இருந்தார். ஆனால், மக்கள் வீட்டுமனைப் பத்திரம் பெறுவதற்குச் சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. அப்போதும் அந்த மக்கள் எந்த எதிர்ப்பையும் காட்டவில்லை.
- புதிய தேவாலயம் கட்டப்பட்டது. பழைய தேவாலயத்தைப் போல அது இல்லை என்கிற எண்ணம் மக்களுக்கு இருந்தாலும் அவர்கள் அதையும் வேறுவிதமாக வெளிக்காட்டவில்லை. பழைய தேவாலயத்திலிருந்த சிலைகள் கோணிப்பைகளில் கட்டப்பட்டு, புதிய தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன. இதைப் பார்த்தும் புனிதம் கெட்டுவிட்டது என்று மக்கள் யாரும் கோஷமிடவில்லை. அந்த மக்களில் சிலருக்கு இஸ்ரோ வேலை வாய்ப்பையும் வழங்கியது.
- அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் இருக்கிறது திக்பாய். இங்கே ஒருவர் நடந்து சென்றபோது, சிகரெட் துண்டைத் தூக்கி எறிந்தார். விழுந்த இடத்தில் தீ பற்றி எரிந்தது. அது ஏதோ மாயமந்திரம் என்று நினைக்காமல், அந்தப் பகுதியைத் தோண்டியதால்தான் கச்சா எண்ணெய்க் கிணறு இருப்பதைக் கண்டுபிடித்தனர். 1901ஆம் ஆண்டு அங்கே அசாம் எண்ணெய் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. அறிவியல் பார்வையோடு அணுகியதால்தான் எண்ணெய்க் கிணறு சாத்தியமானது.
- தும்பாவிலும் அசாமிலும் ஆன்மிகம், அறிவியலுக்கு இடையூறாக வரவில்லை. இப்படித்தான் மக்களுக்கு அறிவியலையும் ஆன்மிகத்தையும் அணுகும் எண்ணத்தை உருவாக்க வேண்டும். அதுதான் நாட்டையும் மக்களையும் உயர்த்தும். இப்போது நமக்குத் தேவை, அறிவியல் மனப்பான்மையை மக்களிடம் உருவாக்குவதுதான்.
நன்றி: இந்து தமிழ் திசை (28 – 09 – 2023)