TNPSC Thervupettagam

இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பு தனக்கான தார்மீகத்தைத் தேடட்டும்

October 15 , 2019 1922 days 996 0
  • முஸ்லிம் நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இஸ்லாமியக் கூட்டுறவு அமைப்பின் (ஓஐசி) ‘காஷ்மீர் தொடர்புக் குழு’, ‘காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்த நடவடிக்கையை இந்தியா திரும்பப் பெற வேண்டும்’ என்று விடுத்துள்ள கோரிக்கையும், அதை முன்னிட்டு அது முன்னெடுத்துவரும் செயல்பாடுகளும் பொருட்படுத்தத்தக்கதல்ல.

காஷ்மீர் விவகாரம்

  • “காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் எழுப்பி ஆதரவைத் திரட்டிவிட்டேன், உலகமே இந்தியாவைக் கண்டிக்கிறது” என்று பாகிஸ்தான் மக்களிடம் பிரதமர் இம்ரான் கான் பெருமைப்பட்டுக்கொள்வதற்கு உதவியாக இது இருக்குமே தவிர, எந்த வகையிலும் பொதுத் தளத்தில் அதற்கு மதிப்பு தரும் செயல்பாடாக இருக்காது.
  • 1990-களின் மத்திய காலத்தில் தொடங்கப்பட்ட ‘காஷ்மீர் தொடர்புக் குழு’ பாகிஸ்தானுக்கு சார்பாக, பாகிஸ்தான் விரும்புகிறபடி அறிக்கைகளை வெளியிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
  • 57 முஸ்லிம் நாடுகள் தன்னுடைய அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக ஓஐசி கூறிக்கொண்டாலும், அதன் செல்வாக்கு பெரிதல்ல.
  • இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பாக இருந்தாலும் இஸ்லாமிய நாடுகளுக்குள்ளே பூசல் வரும்போதும், அது மோதலாக வெடிக்கும்போதும் அவற்றைத் தீர்ப்பதில், சமரசம் காண்பதில் ஓஐசியின் பங்களிப்பு வெறும் பூஜ்யம்தான். காஷ்மீர் தொடர்புக் குழுவின் அறிக்கைக்கு எல்லா உறுப்பு நாடுகளும் ஆதரவு தெரிவிக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.

விருது

  • காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நடவடிக்கை எடுத்ததற்குப் பிறகுதான் ஐக்கிய அரபு அமீரக நாடு, தன்னுடைய நாட்டின் மிக உயர்ந்த ‘ஆர்டர் ஆஃப் சையீத்’ விருதை பிரதமர் மோடிக்கு வழங்கிக் கௌரவித்தது; ‘காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்விவகாரம்’ என்றும் அது கூறியது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
  • ஆயுதம் ஏந்திய பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுதங்களையும் பயிற்சியையும் அளிப்பதை இம்ரான் கானே ஒப்புக்கொள்ளும் சூழலில், அதுகுறித்து என்றைக்குமே இந்த அமைப்பு வலுவான குரலில் பேசியது இல்லை.
  • இன்றைக்கு காஷ்மீர் மக்கள் அடைந்துவரும் துன்பங்கள் அத்தனைக்குமான காரணங்களில் முக்கியமான பங்கு பாகிஸ்தானுக்கு உண்டு என்பது அது அறியாததா? ஆக, மோதல்களையும் பதற்றங்களையும் தவிர்க்க வேண்டும் என்று அது உண்மையிலேயே விரும்பினால், பயங்கரவாதத்தை எந்தக் காரணத்துக்காகவும் ஆதரிக்கக் கூடாது என்ற அறிவுரையை முதலில் பாகிஸ்தானுக்கு வழங்குவதன் வாயிலாகவே தனக்கான தார்மீகத்தை அது உருவாக்கிக்கொள்ள முடியும்.

கடமை

  • இந்தியாவுக்கு உண்மையாகவே வேறொரு கடமை இருக்கிறது. அது, இப்படியெல்லாம் வெளியிலிருந்து குரல்கள் வருவதற்கான சூழலை நாமே உருவாக்கிக்கொடுக்காமல் இருப்பதாகும். காஷ்மீரில் தற்போது செல்போன் இணைப்புகள் செயல்பட ஆரம்பித்துள்ளன.
  • தொடர்ந்து, அங்கு நிலவும் கெடுபிடிச் சூழலை எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமோ, அவ்வளவுக்கு அவ்வளவு வேகமாக அதைச் செய்ய வேண்டும்.
  • காஷ்மீரில் அமைதிச் சூழல் இயல்புநிலையாகும்போது, யாருடைய வாய்க்கும் நாம் பதிலளிக்க வேண்டியிருக்காது.

நன்றி: இந்து தமிழ் திசை (15-10-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories