- மகத்தான எழுத்தாளர்களை வாசிப்பது விசேஷ அனுபவம் என்றால், மார்க்கேஸை வாசிப்பது பேரனுபவம். முன்பின் என்ற வரிசை சற்றே குலைந்து, தொடராக நீளும் கச்சிதமான சொற்கள் அமைந்த நீண்ட வாக்கியங்கள், மொழியிலும் பொருளிலுமான அவற்றின் அழகார்ந்த ஒழுங்கமைவு, இவையெல்லாம் சேர்ந்து சிந்தையில் நிகழ்த்தும் மாயம் என எளிதில் விவரித்துவிட முடியாத அனுபவம் அது.
- அவரது ‘லிவிங் டு டெல் த டேல்’ நூலை வாசிக்கையில் வரிகளுக்குள் ஆழ்ந்துபோவது, கூறலின் அழகை வியப்பது, பின்னே சென்று கடந்த வரியை மறுபடியும் வாசிப்பது, இப்படியே ஒரே பக்கத்தில் நீண்ட நேரம் லயித்துக் கிடப்பது என அந்த வாசிப்பு போனது. அது காப்ரியல் கார்சியா மார்க்கேஸ் என்ற எழுத்தாளர் வாசகன்மீது நிகழ்த்திய அற்புதம்.
- ஆனால், ஸ்பானிய மொழியில் நிகழ்ந்த அந்த அற்புதம் குன்றாமல் அப்படியே ஆங்கிலத்துக்கு வந்ததற்குப் பின்னிருப்பது அதற்கு இணையான இன்னொரு அற்புதம். அந்த அற்புதத்தின் பெயர் ஈடித் கிராஸ்மன் (Edith Grossman).
- எப்போதுமே மொழிபெயர்ப்பு சவால்மிக்கக் கடும் பணி. மொழிபெயர்ப்பாளரது அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் சேர்ந்த கடும் உழைப்பினாலேயே சிறந்த மொழிபெயர்ப்புகள் சாத்தியமாகின்றன. நானறிந்த வரை, மார்க்கேஸைப் போலத் திருகல் தன்மையுடைய நீண்ட சிக்கலான வாக்கியங்களில் மாந்திரீகம் போல வசீகரிக்கும் எழுத்தைப் படைக்கும் எழுத்தாளர்கள் ஆங்கிலத்தில் அபூர்வம்.
- எனவே, ஏறத்தாழ முன்னுதாரணமற்ற ஒரு மொழி வகைமையை மார்க்கேஸை மொழிபெயர்ப்பதன் வழியாக ஆங்கிலத்துக்கு அறிமுகம் செய்திருக்கிறார் கிராஸ்மன். அத்துடன், ஸ்பானியப் படைப்புகளை மூலத்தின் விகாசம் குறையாமல், அதே நடையில் ஆங்கிலத்தில் கொண்டுவரும் சவாலை எதிர்கொண்டு வென்றும் இருக்கிறார்.
மார்க்கேஸின் ஆங்கிலக் குரல்
- நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களான காப்ரியல் கார்சியா மார்க்கேஸ், மரியோ வர்காஸ் யோசா உள்ளிட்ட பல ஸ்பானிய மொழிப் படைப்பாளிகளை ஆங்கிலம் வழியாக மிகப் பரந்த ஒரு வாசக உலகின்முன் கொண்டுவைத்தவர் கிராஸ்மன். உலகின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவராக அறியப்பட்ட கிராஸ்மன், அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் பிறந்தவர்.
- பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஸ்பானிய மொழியில் இளங்கலையும், ஸ்பானிய இலக்கியத்தில் முதுகலையும் முடித்தார். பின்னாள்களில் நியூ யார்க் நகரில் குடியேறியவர், ஸ்பானிய இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ஒரு மொழிபெயர்ப்புக் கதைத் தொகுப்புக்கென இவர் மொழிபெயர்த்த அர்ஜென்டினிய எழுத்தாளர் மாசிடோனியோ ஃபெர்னாண்டஸின் (Macedonio Fernandez) சிறுகதையே இவரது முதல் மொழிபெயர்ப்பு ஆக்கம்.
- மார்க்கேஸின் முகவர் ஒருவர், கிராஸ்மனை ஒருநாள் தொலைபேசியில் அழைத்து ‘மார்க்கேஸை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியுமா’ என்று கேட்டபோது ‘என்ன விளையாடுகிறீர்களா?’ என்றுதான் அவரால் கேட்க முடிந்தது.
- மார்க்கேஸ் போன்ற ஓர் எழுத்தாளரை மொழிபெயர்க்கத் தன்னை அணுகுவார்கள் என கிராஸ்மன் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. ‘லவ் இன் த டைம் ஆஃப் காலரா’நாவலின் 20 பக்கங்களை மாதிரிக்காக மொழி பெயர்த்து அனுப்பினார். பிறகு நிகழ்ந்தவை உலகறிந்த வரலாறு. அந்த வரலாற்றின் உச்சத் தருணம் ‘நீங்கள்தான் ஆங்கிலத்தில் என்னுடைய குரல்’ என்று கிராஸ்மனை மார்க்கேஸ் அறிவித்தது.
மொழிபெயர்ப்பாளருக்கும் அங்கீகாரம்
- ஏற்கெனவே பல மொழிபெயர்ப்புகள் வந்திருந்தபோதும் புகழ்பெற்ற நவீன ஸ்பானியக் காவியமான ‘டான் க்விஹாத்தே’வை (Don Quixote) 2003இல் மீண்டும்கிராஸ்மன் மொழி பெயர்த்தார். இதுவரை வெளியான ‘டான் க்விஹாத்தே’ ஆங்கில மொழி பெயர்ப்புகளில் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு இதுஎன்றார் விமர்சகர் ஹரால்டு புளூம். மொழிபெயர்ப்பாளரது பெயர் நூல்களின் முன்னட்டையில் இடம்பெறக் கூடாது என்பது பல காலமாகப்பதிப்பகங்கள் பின்பற்றிவந்த எழுதப்படாத நெறிமுறை.
- அதனை எதிர்த்து, மொழிபெயர்ப்பாளரது பெயர் அட்டையில் இடம்பெற வேண்டும் எனக் குரலெழுப்பிய கிராஸ்மன், அந்த உரிமையை வென்றும் காட்டினார். ‘டான் க்விஹாத்தே’ ஆங்கில மொழிபெயர்ப்பு நூலின் அட்டையிலும் அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. பைபிளை மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்பாளர், தனது பெயரை அந்த மொழிபெயர்ப்பின் அட்டையில் போட்டுக்கொள்ளும் துணிவுக்கு நிகரானது அது.
- மகத்தான கவிஞர்கள், மகத்தான புனைகதை யாளர்கள், மகத்தான கட்டுரையாசிரியர்களைப் போல மகத்தான மொழிபெயர்ப்பாளர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள். ஒரு முன்னு தாரணமான மொழிபெயர்ப்பாளராக மட்டுமல்லா மல், பதிப்புலகில் மொழி பெயர்ப்பாளர்களுக்கு உரிய இடத்தை உறுதிசெய்வதிலும் ஈடித் கிராஸ்மன் முன்னின்று பணியாற்றி இருக்கிறார்.
- மூல ஆசிரியரின், கூர்ந்து பார்த்தாலொழிய கண்ணுக்குப் புலப்படாத, மங்கலான நிழலாக இல்லாமல், அவரது வண்ணம் குன்றாத பிரதி பிம்பமாக மொழிபெயர்ப்பாளர் இருக்கிறார் என்பதை உலகுக்குப் புரியவைத்தவர் ஈடித் கிராஸ்மன். இதற்காகவும், காலத்தை வென்று நிற்கவல்ல தனது மொழிபெயர்ப்புகளுக்காகவும் அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார்.
நன்றி: இந்து தமிழ் திசை (12 – 09 – 2023)