- ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்திருப்பது வருத்தத்துக்குரியது. காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலை ஒட்டி, மேற்காசியாவில் பதற்றச் சூழல் நிலவிவரும் நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- ஈரான்-அஸர்பெய்ஜான் எல்லைப் பகுதியில் ஓர் அணையைத் திறந்து வைத்துவிட்டு, ஹெலிகாப்டரில் தாய்நாடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்த விபத்தில் ரெய்சி உயிரிழந்திருக்கிறார்; ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், அதிகாரிகள் உள்பட மொத்தம் எட்டுப் பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
- ஈரானில் அதிகபட்ச அதிகாரம் கொண்ட தலைமை மதகுருவான அயத்துல்லா அலி கமேனியின் நம்பிக்கையைப் பெற்றவர் ரெய்சி. இவருக்கு முன்பு இரண்டு முறை அதிபராக இருந்த மிதவாதியான ஹஸன் ரூஹனி 2015இல் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தங்களை மேற்கொண்டார்.
- ஆனால், டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு 2018 இல் அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதோடு, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதனை மிதவாதிகளின் தோல்வியாக முன்னிறுத்திய மதகுருக்களும் பழமைவாதிகளும் ரெய்சி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் ஈரான் அரசு நிர்வாகத்தின் மீதான தமது பிடியை வலுவாக்கிக்கொண்டனர்.
- ரெய்சி அதிபரானவுடன் ஈரானில் சிவில் உரிமைகள் ஒடுக்கப்பட்டன. சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடனான ஈரானின் உறவுக்கு வலுவூட்டப்பட்டது. ஹமாஸ், ஹெஸ்பொல்லா போன்ற அரசுசாரா ஆயுதக் குழுக்களுக்கான நிதி உதவி கணிசமாக அதிகரிக்கப்பட்டது. ஈரானின் அணுசக்தித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.
- மூன்று ஆண்டுகளுக்குள் ஈரானின் வலிமையான தலைவராக உயர்ந்தார் ரெய்சி. கமேனிக்குப் பிறகு ரெய்சியே அடுத்த தலைமை மதகுருவாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
- அமெரிக்கா விதித்துள்ள தடைகள் உள்ளிட்ட காரணங்களால் ஈரானின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தின்மீது இஸ்ரேல் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஏப்ரலில் இஸ்ரேல் மீது ஈரான் முதல் முறையாகத் தாக்குதல் நடத்தியது.
- இதில் ரெய்சியின் ‘எதிர்ப்புத் தெரிவிக்கும்’ மனப்பான்மைக்கு முக்கியப் பங்கிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூளவில்லை என்றாலும், பதற்றச் சூழல் தொடர்கிறது. இந்த நேரத்தில் நிர்வாகத்தில் தேர்ச்சியும் நெருக்கடிகளைக் கையாள்வதில் அனுபவமும்மிக்க ரெய்சி போன்ற தலைவரை ஈரான் இழந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது.
- இந்த விபத்துக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல், அமெரிக்கா ஆகிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், விபத்துக்கான காரணத்தையும் பின்னணியையும் விரைவாக ஈரான் கண்டறிந்து அறிவிக்க வேண்டும். அதன் மூலமாகவே விபத்து தொடர்பான சதிக் கோட்பாடுகள், மேற்கு ஆசியாவில் பதற்றச் சூழலைத் தீவிரப்படுத்துவது தவிர்க்கப்படும்.
- இப்போது ஈரான் துணை அதிபர் முகமது மோக்பேர் பொறுப்பு அதிபராகப் பதவியேற்றுள்ளார். விரைவில், புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் சரியான முறையில் நடத்தப்பட்டு, எந்தச் சிக்கலும் இல்லாமல் அதிகார மாற்றம் நிகழ வேண்டும்.
- மேற்காசியாவில் நிலவிவரும் போர்ப் பதற்றத்தின் எதிர்மறைத் தாக்கத்திலிருந்தும் உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்தும் ஈரான் விடுபட, அந்நாட்டு மக்களின் உண்மையான ஆதரவையும் நம்பிக்கையும் பெற்றவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவது அவசியம்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 05 – 2024)