TNPSC Thervupettagam

உக்ரைன் போரும் உலக அரசியலும்

February 23 , 2024 185 days 143 0
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் மீது அநியாயமாகப் போர் தொடுத்து, குடிமக்களைக் கொன்றுகுவித்து, இரண்டு ஆண்டுகள் நிறைவு பெறப்போகின்றன. போர் உடனடியாக முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டினுள் மெல்ல மெல்ல முன்னேறிவருகின்றன.
  • ரஷ்யா உக்ரைனை முழுவதுமாகக் கைப்பற்றிவிடும் சாத்தியமில்லை. ஏனெனில் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களைத் தருகின்றன, பொருளாதார உதவிகளைச் செய்கின்றன. பெருத்த சேதத்துக்கு ஆளாகாமல் ரஷ்யாவால் உக்ரைனை முழுவதும் கைப்பற்ற முடியாது என்பதால் அது சாத்தியமில்லை எனலாம்.
  • அப்படியானால், உக்ரைன் ரஷ்யாவைத் தோற்கடித்து குறைந்தபட்சம் ரஷ்யப் படைகளை நாட்டைவிட்டுத் துரத்திவிடுமா என்றால், அதுவும் சாத்தியப்படுமா எனத் தெரியவில்லை. ஏனெனில், ரஷ்யா மிகவும் பலம் வாய்ந்த நாடு. அது தோல்வியை ஏற்றுக்கொண்டு பின்வாங்கும் அளவுக்குப் பதிலடி கொடுக்கும் வலிமை உக்ரைன் ராணுவத்துக்குக் கிடையாது.
  • மேற்குலக நாடுகள் போரில் நேரடியாக ஈடுபட முடியாது. சரியாகச் சொன்னால், ரஷ்யாவின் மீது நேரடியாகத் தாக்குதல் நடத்துவது மேற்குலக நாடுகளுக்குச் சாத்தியமில்லை. ஏனெனில், ரஷ்யா அணு ஆயுதங்களையும், சக்தி வாய்ந்த ஏவுகணைகளையும் வைத்துள்ளது. தன்னுடைய இருப்புக்கு ஆபத்து வந்தால் அவற்றைப் பயன்படுத்தத் தயங்காது என்பதைப் புதின் தெளிவுபடுத்தியுள்ளார்.
  • சமரசப் பேச்சுவார்த்தைகள் மூலம் அமைதி திரும்புமா என்றால், அதுவும் எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. ரஷ்யாவுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்றே மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன. ரஷ்யாவோ மேற்கத்திய நாடுகளுக்குப் பாடம் புகட்ட விரும்புகிறது.

ரஷ்யாவும் உக்ரைனும்:

  • பொருளாதாரத்தில் ரஷ்யாவைவிடப் பன்மடங்கு சிறிய நாடு உக்ரைன் (பதினைந்தில் ஒரு பங்கு). உலகப் பொருளாதாரத்தில் ரஷ்யா 8ஆவது இடத்திலும் உக்ரைன் 58ஆவது இடத்திலும் உள்ளன. ரஷ்யாவின் மொத்த உற்பத்தி 2.24 டிரில்லியன் டாலர்கள்; உக்ரைனுடையதோ வெறும் 0.16 டிரில்லியன் டாலர்கள்தான். மக்கள்தொகையில் ரஷ்யாவில் (14.42 கோடி) மூன்றில் ஒரு பங்கு மக்கள் உக்ரைனில் (3.80 கோடி) உள்ளனர்.
  • உக்ரைன் தனித்த மொழியும் பண்பாடும் கொண்ட மக்கள் தொகுதியாக இருந்தாலும், அது ரஷ்ய வரலாற்றுடன் நெருக்கமான பிணைப்புக் கொண்டது. ஒன்றிணைந்த ரஷ்யாவின் பண்பாட்டுப் பன்மைத்துவத்துக்குச் சான்றாகவே உக்ரைன் பண்பாடு கருதப்பட்டது. நீண்ட வரலாற்றில் உக்ரைன் பகுதி பல்வேறு அரசியல் உருமாற்றங்களை அடைந்தாலும், பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஜார் மன்னர் ஆட்சிக்காலத்தில் ரஷ்யாவின் அங்கமாகவே இருந்துள்ளது.
  • உக்ரைன் மேட்டுக்குடியினர், படித்தவர்கள் ரஷ்ய மொழியிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தனர். உதாரணமாக, பத்தொன்பதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் கோகோல், உக்ரைனைச் சேர்ந்தவர்தான். ரஷ்யப் பேரரசின் ஆட்சியிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டு வாழ்க்கையிலும் முக்கியப் பங்கெடுத்தவர்கள் உக்ரைன் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
  • புரட்சிக்குப் பிறகும் சோவியத் ஒன்றியத்தின் முக்கிய அங்கமாக உக்ரைன் விளங்கியது. முக்கியமான ரஷ்ய அதிபர்கள் உக்ரைனில் பிறந்தவர்களாக, வாழ்ந்தவர்களாக, வம்சாவளித் தொடர்பு கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். குருஷ்சேவ், பிரஷ்னேவ், செர்னென்கோ, கோர்பச்சேவ் ஆகியோரை முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள்.

சோவியத் ஒன்றியத்தின் பிரிவுக்குப் பிறகு:

  • சோவியத் ஒன்றியம் 1991இல் தனித்த அரசுகளாக வடிவம் பெற்றபோது, உக்ரைன் தனி நாடானது. பெருமளவு சுமுகமாகவே இந்தப் பிரிவினை நடந்தது. உக்ரைனின் சுதந்திரத்தினுடைய அடிப்படையாக அந்தப் பகுதியில் நிறுவப்பட்டிருந்த அணு ஆயுதங்கள் அனைத்தையும் ரஷ்யா அகற்றி எடுத்துச் சென்றது.
  • அதன் பின் 20 ஆண்டுகள் ரஷ்யாவுடன் இணக்கமாகவே உக்ரைன் பயணித்ததாகக் கூறலாம். ஆனால், உக்ரைனை மேற்கத்திய நாடுகள் பெருமளவு ஈர்த்தன. உக்ரைனின் பெரு முதலாளிகள் இவர்களை ஒலிகார்க் (Oligarch) என்று அழைக்கிறார்கள். ரஷ்ய ஆதரவுடன் இயங்குவதா அல்லது ஐரோப்பியப் பொருளாதாரத்துடன் இணைவதா என்பதில் தங்களுக்குள் முரண்பட்டிருந்தனர்.
  • உக்ரைனைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ரஷ்யாவும், மேற்கு ஐரோப்பிய நாடுகள் - அமெரிக்கா அடங்கிய கூட்டணியும் போட்டியிட்டன. இது உக்ரைனின் உள்நாட்டு அரசியலை நிர்ணயிப்பதாக மாறியது. ரஷ்ய ஆதரவு ஆட்சியாளரை அகற்ற 2014ஆம் ஆண்டு பெரும் மக்கள் கிளர்ச்சி நடந்தது.
  • ஆனால், இந்தக் கிளர்ச்சியை வழிநடத்தியதில் அமெரிக்காவுக்குக் கணிசமான பங்கு இருந்தது. வர்த்தக ஒருங்கிணைப்பு மட்டுமன்றி, நேட்டோ என்கிற மேற்குலக ராணுவப் பாதுகாப்பு வளையத்தினுள்ளும் உக்ரைன் செல்லலாம் என்கிற சாத்தியம் ரஷ்யாவைப் பெரிதும் அச்சுறுத்துவதாகப் புதின் கூறிவந்துள்ளார். அதனால், உக்ரைனின் பகுதிகளை ரஷ்யா தாக்கி விடுவிக்கத் தொடங்கியது.
  • கிரிமியாவை 2014ஆம் ஆண்டு விடுவித்துத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இந்தப் போக்கின் தொடர்ச்சியாகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வெளிப்படையாக ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. ஆனால், மேற்குலக நாடுகள் உக்ரைனுக்குப் பெருமளவு ஆயுதங்களை வழங்கியதால் ஒட்டுமொத்தமாக அந்த நாட்டை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. அதனால், போர் உக்ரைனின் கிழக்குப் பகுதிகளில் உள்ள நிலப்பகுதியில் தொடர்ந்து நடந்துவருகிறது.

உலக அரசியல்:

  • 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 1920ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் என்கிற பொதுவுடைமை நாடாக ரஷ்யா மாறியதிலிருந்து, உலக நாடுகளிடையே சோவியத் ரஷ்யாவின் பொதுவுடைமைப் பாதையா, அமெரிக்காவின் தனியுடைமைப் பாதையா என்கிற கேள்வி தோன்றியது.
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இது பனிப்போர் காலம் என்கிற பெயரில் அமெரிக்க, சோவியத் வல்லரசுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியாகவும், அதே வேளை, சித்தாந்தப் போராகவும் மாறியது. இரண்டு நாடுகளுமே உலக நாடுகளின் உள்நாட்டு அரசியலைத் தங்கள் வசதிக்கேற்ப வடிவமைப்பதில் பல்வேறு உத்திகளைக் கையாண்டன. தேர்தல்களில் தலையிட்டன. ஊடகங்களைத் தன்வயப்படுத்தின.
  • ஆட்சிக் கவிழ்ப்புகளைச் செய்தன. அமெரிக்காவின் சிஐஏ-வும், சோவியத் ரஷ்யாவின் கேஜிபி-யும் எல்லா நாடுகளிலும் ஊடுருவின. ஆனால், சோவியத் ஒன்றியத்தால் பொதுவுடைமை அரசமைப்பையும், முதலீட்டிய உற்பத்தி முறையையும் ஒருங்கிணைக்க முடியவில்லை. அதனால் அது முதலீட்டியப் பாதைக்குத் திரும்பியது. அதன்பின் ஒட்டுமொத்த உலகமும் முதலீட்டிய சுதந்திரவாதப் பாதைக்கு வந்துவிட்டதாக அனைவரும் கருதினர். ஏனெனில், சீனாவும் முதலீட்டிய உற்பத்தி முறைக்கு மாறிவிட்டது.
  • உலகின் சக்தி வாய்ந்த பொருளாதாரமாகவும், ராணுவமாகவும் அமெரிக்க அரசு விளங்கியதால் அதன் தலைமையில் ஒற்றைத் துருவ உலகம் உருவாகிவிட்டதாகக் கருதப்பட்டது. ஜி-7 என்ற ஏழு மேற்கத்திய நாடுகள் கூட்டமைப்பு ரஷ்யாவையும் உள்ளடக்கி ஜி-8ஆக உருவானது (இப்போது ஜி-20 என்ற அமைப்பும் உள்ளது). ரஷ்யாவும் நேட்டோ பாதுகாப்புக் கூட்டணியில் இணைந்தால் என்ன என்று தான் ஒருமுறை கிளிண்டனிடம் கேட்டதாகப் புதின் சமீபத்தில் கூறியுள்ளார்.
  • ஆனால், இந்த அமெரிக்க மேலாதிக்கக் கற்பனை நீடிக்கவில்லை. சீனா ஒரு மாற்று வல்லரசு முனையாக விரைவாக வளர்ந்தது. அமெரிக்க முதலீட்டை ஈர்த்துப் பெரும் தொழில் வளர்ச்சியை எட்டிய சீனா, அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் தன் ஆதிக்கத்தை நிறுவியது. இன்று அமெரிக்காவுக்குச் சவால் விடும் பொருளாதார, ராணுவ ஆற்றலாகச் சீனா மாறியுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் போருக்குச் சீனாவின் ஆதரவு முழுமையாக இருக்கிறது.
  • சீனா, ரஷ்யா, வட கொரியா, ஈரான் ஆகிய நான்கு அணு ஆயுத ஆற்றல் பெற்ற நாடுகளின் கூட்டணி உருவாகியிருப்பதைப் பார்க்க முடிகிறது. யாருமே அணு ஆயுதத்தைப் பயன்படுத்தாவிட்டாலும், ஒரு அணு ஆயுத நாடு அணு ஆயுதமற்ற நாட்டைத் தாக்கினால் அதனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
  • தொலைநோக்கு வரலாற்றுப் பார்வையில் உலகப் பொருளாதாரக் கட்டமைப்பின் தலைமையை அமெரிக்காவிடமிருந்து, சீனா கைப்பற்றுவதற்கான வரலாற்று நகர்வின் ஓர் அத்தியாயம்தான் உக்ரைன் போர் என்று எண்ணுவதும் சாத்தியம்தான். எண்ணற்ற அப்பாவி உயிர்களின் அழிவில் நகரும் தேர்தானே உலக வரலாறு.

நன்றி: இந்து தமிழ் திசை (23 – 02 – 2024)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories