- இந்தத் தொடரின் கடைசிப் பதிவை எழுதுவதில் பெருமை கொள்கிறேன். இதுவரை மாற்றுப்பாலினத்தவரின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பற்றிக் கதை வடிவில் தெரிந்துகொண்டோம். வெளியிலிருந்து நீங்கள் எவ்வாறு இம்மக்களின் நல்வாழ்வுக்கு உதவ முடியும் என்பதைப் பார்க்கலாம்.
- உங்கள் தெருக்களில் மாற்றுப்பாலினத் தோரணை கொண்ட சிறுவனையோ சிறுமியையோ பார்த்தால் அவர்கள் மீது கரிசனம் கொள்ளுங்கள். அக்குழந்தையின் குடும்பத்தினர் அந்த மாற்றுப்பாலினக் குழந்தையைப் புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டால் நீங்கள் அவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்யுங்கள். இது இயற்கை என்பதை உணர்த்துங்கள். நமக்கு ஏன் வம்பு என்று மட்டும் கடந்து செல்லாதீர்கள்.
குழுவாக இணைவோம்
- ஒவ்வொரு மாவட்டத்திலும் திருநங்கையருக்கான அமைப்பு உண்டு. ஒதுக்கப்படும் அந்தக் குழந்தைக்கு அவர்கள் மூலமாகக்கூட நீதி பெற்றுக் கொடுங்கள். அந்தச் சிறுவனோ சிறுமியோ மாற்றுப்பாலினத்தவர் என்கிற ரீதியில் கல்வி கற்க முடியாமல் போனாலோ, தெருவில் உள்ளவர்களால் கேலி கிண்டலுக்கு ஆளாக்கப்பட்டாலோ அந்தத் தகவலைச் சமூகநலத் துறையில் உள்ள சமூகநல அலுவலரிடம் புகார் செய்யலாம்.
- காவல்துறையில் பணியாற்றும் பலரும் மாற்றுப்பாலினத்தவர் குறித்த புரிதலைக் கொண்டவர்களாக உள்ளனர். எனவே, அருகில் இருக்கும் காவல் நிலையங்களில்கூடத் தகவல் தெரிவித்து, அந்தச் சூழலைச் சரிசெய்யலாம். உங்கள் ஊரில் நடக்கும் விழாக்களில் மாற்றுப்பாலின மக்களும் பங்கேற்பதை உறுதிசெய்யுங்கள். அவர்களையும் மேடையில் பேச வையுங்கள், விளையாட்டுகளில் கலந்துகொள்ளச் செய்யுங்கள். இது மற்ற அனைவருக்கும் நல்ல முன்னுதாரணமாக அமையும்.
- உங்கள் ஊர்களில் பல சங்கங்கள், கமிட்டிகள் போன்றவை மூலம் சிறப்பான சேவைகளைப் மக்களுக்கு வழங்கிவருகிறீர்கள் என்றால், அந்த அமைப்புகளில் மாற்றுப் பாலினத்தவரையும் இணைத்துக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு சில திருநங்கையர் உங்களிடம் பணத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடி இருந்தால் அவரைக் காவல்துறையிடம் ஒப்படையுங்கள். ஆனால், விதிவிலக்கான அந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு அனைத்துத் திருநங்கையரும் கெட்டவர்கள் என்கிற எண்ணத்துக்கு வரவேண்டாம்.
அரசியல் பங்கேற்பு
- திருநங்கையர் வலிமை படைத்தவர்கள் என்பதை நாம் உணரவேண்டும். சில அனுபவங்களே நம்மைச் சிலையாகச் செதுக்குகின்றன என்றால் எட்டு வயதிலிருந்து உணர்வுக்கும் உடலுக்குமான போராட்டத்தைச் சந்திக்கும் இவர்களிடம் வாழ்க்கைக்கான பாடங்கள் நிறைய இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு பிரச்சினையாக இருந்தாலும் நீங்கள் அணுகுவதற்கும் இவர்கள் கையாள்வதற்கும் வித்தியாசம் உண்டு; அவற்றை இவர்களோடு நட்புகொண்டு அறிந்து கொள்ளுங்கள்.
- அரசியலில் மாற்றுப்பாலினத்தவர்கள் பங்கேற்பை அதிகப்படுத்துவது அவசியம். அரசியலும் அரசும் இன்று எங்களுக்குத் தூரமாக இருக்கலாம்; ஆனால், மன்னர்கள் காலத்தில் திருநங்கையர் பலர் ஆலோசகர்களாக இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. அதிகாரத்தில் இவர்களும் இருக்கும்போது மக்களிடையே மாற்றுப்பாலினத்தவர் என்பது சாதாரண விஷயமாகிவிடும்.
- உங்கள் அருகில் உள்ள திருநங்கையர் அமைப்புகளோடு இணைந்து தன்னார்வப் பணிகளை மேற்கொள்ளலாம். குறிப்பாகப் பணி ஓய்வு பெற்றவர்கள் இப்பணியைத் தேர்வுசெய்யலாம். சுயதொழில் புரியும் திருநங்கையருக்குத் தொழில்ரீதியாக உதவிசெய்து அவர்களின் தொழிலை ஊக்கப்படுத்தலாம். பெற்றோர் தங்களது குழந்தை திருநங்கை அல்லது திருநம்பி எனத் தெரியவந்தால், உடனே அதை அசிங்கம் என்றோ வேதனையாகவோ நினைத்தால் அதே சிந்தனைதான் உங்கள் உற்றார் உறவினர்களுக்கும் ஏற்படும். இதனால் எங்களுக்குப் பிரச்சினை இல்லை; எங்கள் குழந்தைகளில் ஒருவர் மாற்றுப்பாலினத்தவர் என்று தைரியமாகக் கூறினால் அந்தக் குழந்தை ஒரு சிறந்த திருநங்கையாகவோ திருநம்பியாகவோ வளரும். இப்படித்தான் இன்று சமூகத்தில் முன்னேறிய திருநங்கைகளுக்குக் குடும்ப உதவி கிடைத்துள்ளது.
- திரைத்துறையினர் திருநங்கை கதாபாத்திரத்துக்கு மட்டும் அவர்களைப் பயன்படுத்துவதைத் தாண்டி பெண் கதாபாத்திரங் களுக்கு இவர்களையும் பயன்படுத்தினால் நல்லது. தமிழ் நடிகர்கள் விஜய்சேதுபதி, சரத்குமார், மலையாள நடிகை சுகுமாரி ஆகியோர் திருநங்கையாக நடித்ததுபோல் திருநங்கைகளையும் பல கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கலாம்.
- பொதுச் சமூகம் அவர்கள் மேல் பரிதாபப்படுவதைத் திருநங்கையர் விரும்புவ தில்லை என இந்தத் தொடரில் கூறியிருந்தேன். சுயமரியாதையோடு வாழ விரும்பும் திருநங்கையர் ஏராளமாக உள்ளனர். தற்போது கல்வியறிவில் திருநங்கையர் உயர்ந்துவருவதால் உங்களது நிறுவனங்களில் அவர்களைப் பணியில் அமர்த்தலாம். தொழிலில் பங்குதாரராக இணையலாம். அவர்களது நிறுவனங்களிலும் நீங்கள் பணிபுரியலாம். இப்படி நம்மோடு ஒருவராகத் திருநங்கையரை நடத்துகிறபோது மாற்றுப்பாலினத்தவர் குறித்த புரிதல் மேம்படுவதோடு அவர்களையும் நம் சமூகத்தின் அங்கமாக நாம் ஏற்றுக்கொள்வோம். வாருங்கள், அனைவரும் இணைந்தே பயணம் செய்வோம்!
நன்றி: இந்து தமிழ் திசை (21 – 04 – 2024)