TNPSC Thervupettagam

உங்கள் கடன்களைத் தீர்மானிக்கும் சிபில்: அரசே, இந்நடைமுறை சரியா?

November 1 , 2019 1905 days 1526 0
  • பொருளாதார மந்தநிலை தொடர்பில் இன்று இந்தியா நிறையப் பேசிக்கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் என்பது பெருமளவில் அமைப்புசாராப் பொருளாதாரத்தின் வழி கட்டமைக்கப்பட்டதுதான். ஆனால், அமைப்புசாரா வியாபாரத் தளத்தில் இன்று என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்ள எவரும் ஆர்வம் காட்டுவதில்லை.
  • அரசு அறிவித்திருக்கும் பல்லாயிரம் கோடி பொதிகளும் பெருநிறுவனங்களுக்குத்தானே தவிர, சிறு வியாபாரிகளுக்கு எதுவும் இல்லை.
  • ஒரு சாமானிய வியாபாரி இந்தியாவில் வங்கி ஒன்றில் கடன் வாங்கும் அளவுக்குத் தன்னை வளர்த்துக்கொள்வதற்கே நிறைய மெனக்கெட வேண்டும். அப்படி ஒரு நிலைக்கு வளர்ந்துவிட்டவர்களுக்கும் தொடர் கடன் கிடைப்பதில் இன்றைக்குப் பெரிய பிரச்சினை ஒன்று உருவாகியிருக்கிறது.
  • அதுதான் ‘சிபில்’. இது வியாபாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை மட்டும் அல்ல; ஒவ்வொரு சாமானியரும் எதிர்கொள்ளும் பிரச்சினையும்கூட.

எல்லா விவரங்களும் விரல் நுனியில்

  • நண்பர் ஒருவர்தான் இதுபற்றிச் சொன்னார். வங்கிக் கடன் தாமதமாகிக்கொண்டேபோகிறது என்று சொன்னேன். “உன்னுடைய பான் எண், அதனுடன் இணைக்கப்பட்ட செல்பேசி எண் இரண்டும் கொடு” என்றார். இந்த எண்களைக் கொடுத்த மாத்திரத்தில், தன்னுடைய செல்பேசிவழி ஒரு இணையதளத்துக்குச் சென்றார்.
  • அந்தத் தளத்தில் இந்த எண்களைக் கொடுத்தார். அடுத்து, என்னுடைய செல்பேசிக்கு ஒரு ஓடிபி எண் வந்தது. அதை அந்தத் தளத்தில் கொடுத்தோம். நண்பர் உதட்டைப் பிதுக்கியபடி சொன்னார், “உனக்குக் கடன் கொடுக்க மாட்டார்கள்!”
  • நான் அதிர்ச்சியில் அவருடைய செல்பேசியை வாங்கிப் பார்த்தபோது, அந்த இணையதளத்தில் இதுவரை நான் வாங்கியிருக்கும் எல்லாக் கடன்கள், கடன் அட்டைகளின் விவரங்களும் இருந்தன.
  • என்னுடைய தனிப்பட்ட கடன்களைச் சரியான காலக்கெடுவில் நான் செலுத்தியிருந்தேன். வியாபாரக் கணக்கு இருந்த வங்கியில், கொஞ்சம் தேதி தள்ளித் தள்ளி செலுத்திய தொகைகள் எனக்குப் பாதகமாக இருப்பதை அறிந்தேன்.
  • “ஏதோ ஒரு தனியார் தளம் எப்படி என் எல்லா விவரங்களையும் பெற்றிருக்கிறார்கள்!” என்ற அதிர்ச்சி தீரும் முன்பே அடுத்த அதிர்ச்சி வந்தது. மறுநாள் முதலாக அந்த இணையதள நிறுவனத்திலிருந்து எனக்கு அழைப்பு வரலானது. “உங்கள் சிபில் மதிப்பெண்களைக் கூட்ட எங்களிடம் வழியுண்டு; கொஞ்சம் செலவாகும்” என்று. என் நண்பரிடம் இதைப் பகிர்ந்துகொண்டபோது அவர் சொன்னார், “நம்மை விற்கத் தொடங்கிவிட்டார்கள். நம் அரசேதான் நம்மை விற்கிறது என்று கருத வேண்டியிருக்கிறது!”

அதென்ன சிபில் மதிப்பெண்?

  • ‘கிரெடிட் இன்ஃபர்மேஷன் பீரோ இந்தியா லிமிடெட்’ (Credit Information Bureau India Limited) என்பதன் சுருக்கம்தான் ‘சிபில்’ (CIBIL). இது இந்தியாவில் கடன் வாங்குபவர்கள் மற்றும் கடன் அட்டை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட வங்கிப் பரிவர்த்தனை உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு.
  • வங்கிகள் அல்லது வங்கிசாரா நிதி நிறுவனங்களில் கடன் வாங்குபவர்களின் விவரங்களைக் கடன் வழங்கிய வங்கிகளோ நிதி நிறுவனங்களோ சிபில் அமைப்புக்குத் தெரிவிக்கும். அதை சிபில் அமைப்பு சேகரித்து வைத்திருக்கும்.
  • இந்த சிபில் அமைப்பு, கடன் வாங்குபவர்கள், வாங்கிய கடனை உரிய முறையில் திருப்பிச் செலுத்துவதை வைத்து, ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்ட மதிப்பெண்ணை வழங்குகிறது. இதுதான், சிபில் மதிப்பெண் என்று அழைக்கப்படுகிறது.
  • அதாவது, கடன் பெற்றவர் தான் வாங்கிய கடனை ஒவ்வொரு தவணைக் காலத்திலும், உரிய காலத்துக்குள் அதைச் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செலுத்தும்பட்சத்தில், அவருக்கு உயர்ந்த மதிப்பெண் வழங்கப்படுகிறது. இல்லையென்றால், அவரவரின் செயல்பாட்டுக்கு ஏற்ப மதிப்பெண் வழங்கப்படுகிறது.
  • கடன் மதிப்பெண் 300-900 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 300-579 வரை கடன் மதிப்பெண் இருந்தால், அது மோசமானதாகக் கருதப்படுகிறது. 580-669 வரை இருப்பவர்கள் பரவாயில்லை ரகம். இவர்களுக்கு வங்கி அதிகாரிகள் தங்கள் சொந்தப் பொறுப்பில் கடன் கொடுக்கலாம். 670-799 நல்ல மதிப்பெண் எனக் கணக்கிடப்படுகிறது. அதற்கும் மேல் இருந்தால் பிரமாதமான மதிப்பெண் என்கிறது.
  • இவர்களுக்கெல்லாம் கடன் வழங்க வங்கிகள் சந்தோஷமாக முன்வரும். உங்கள் செல்பேசிவழி நீங்கள் இணையத்தில் தேடினால் நிமிடத்தில் உங்கள் சிபில் மதிப்பெண்ணைக் காட்ட பல நிறுவனங்கள் இருக்கின்றன. அல்லது சிபில் வலைதளத்துக்குச் (www.cibil.com) சென்று தெரிந்துகொள்ளலாம்.

நியாயமான தண்டனையா?

  • சிக்கல் என்னவென்றால், நீங்கள் ஒரு நிறுவனத்தில் மாதச் சம்பளத்தில் இருப்பவரின் கொடுக்கல் வாங்கலையும், ஒரு சாமானிய வியாபாரியின் கொடுக்கல் வாங்கலையும் ஒப்பிடவே முடியாது. ஏனென்றால், மாதச் சம்பளக்காரர்களுக்குச் சரியான தேதியில் பணம் வந்தடையும். அவர் சொன்னபடி, சொன்ன தேதியில் பணத்தை ஒருவருக்குத் திரும்ப அளிக்க முடியும்.
  • இந்த இடத்தில் அவர் மீதான மதிப்பீடு என்பது பெருமளவில் அவர் சார்ந்ததாக மட்டுமே அமைகிறது. ஆனால், ஒரு சாமானிய வியாபாரியின் நிலை அதுவல்ல. ஒரு வியாபாரி சொன்ன தேதிக்கு வங்கியில் ஒரு தொகையைத் திரும்பச் செலுத்துதல் என்பது அவருடைய சரக்குக்குப் பணம் கொடுப்பவர் கடைப்பிடிக்கும் வார்த்தை நேர்மையோடும் சம்பந்தப்பட்டதாகிறது.
  • “சரக்குக்கு 20-ம் தேதி பணம் அனுப்புகிறேன்” என்று சொல்லும் ஒருவர் 30-ம் தேதி அன்று பணம் அனுப்புவது குற்றம் அல்ல; அது வியாபாரத்தில் இயல்பானது. அப்படி 30-ம் தேதியன்று தாமதமாகப் பணத்தைப் பெறும் ஒரு சாமானிய வியாபாரி, மறுநாளே வங்கியில் பணத்தைச் செலுத்தலாம்.
  • ஆனால், அந்த மறுநாளானது அடுத்த மாதத்தின் தொடக்க நாளாக இருப்பதற்கும், குறித்த கெடுவிலிருந்து தவறிப் பணம் செலுத்துவதற்கும்கூட இன்று பெரிய தண்டனையை இந்த ‘சிபில்’ வாயிலாக அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
  • ஆம். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு கடனுக்கான கெடுவையும் ‘சிபில்’ அமைப்பு கண்காணிக்கிறது. கடன் அட்டைக் கடன்கள், நகைக் கடன்கள், வீட்டுக் கடன்கள் எல்லாவற்றின் தவணைத் தேதிகளையும் அது கண்காணிக்கிறது. தேதிகள் தவறி செலுத்தப்படும் கடன்கள் எல்லாவற்றையும் கண்காணிக்கிறது.
  • சமூகத்தில் யாருக்கு வங்கிச் சேவை கிடைக்க வேண்டுமோ, அவர்களையெல்லாம் வெளியே தள்ள அதுவே ஒரு கங்காணியாகிறது.
  • இங்கே நாம் விவாதித்துக்கொண்டிருப்பது யாவும் கடனையே கட்டாமல் வங்கியை ஏமாற்றுபவர்கள் அல்லது நொடித்துப்போய்விடுபவர்களைப் பற்றியல்ல என்பது முக்கியமானது.

உதாரணம்

  • இதைப் புரிந்துகொள்ள இந்த உதாரணம் உங்களுக்கு உதவலாம். 10 லட்சம் ரூபாய் நகைகளை ஈடாக வைத்து, ஒருவர் எட்டு லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார்; மறு வருஷம் சரியாக அதே நாளில் அவர் அந்தக் கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்த வேண்டும். தவறுகிறார். இந்தக் கடனை ஒருவேளை செலுத்தாமலே போனாலும்கூட அதனால் வங்கிக்கு இழப்பு ஏதும் இல்லை; ஆனால், கொஞ்சம் தள்ளி அவர் செலுத்தும்போது, அதற்கும் சேர்த்து வட்டி செலுத்துகிறார்.
  • அப்படியிருக்கையில், கொஞ்சம் தாமதமாகத் திரும்பச் செலுத்துகிறார் என்பதற்காக மதிப்பெண்களைக் குறைத்து எப்படி அவரைத் தண்டிக்க முடியும்? முதலில், வணிகக் கடனையும் நகைக் கடனையும் ஒருவர் அணுகும் விதத்தை ஒரு வங்கி எப்படிச் சமமாக அணுக முடியும்? ஆக, ஏராளமான வியாபாரிகள் இன்று வங்கிகளிடமிருந்து மீண்டும் தனிநபர்களை நோக்கித் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
  • அமைப்புசாராமல் வெளியே இருப்பவர்களை அமைப்புக்குள் கொண்டுவருவதற்கேற்ப அமைப்பின் உள்ளடக்கத்தை மாற்றுவதுதான் ஒரு நல்ல அரசுக்கான அடையாளம். தட்டுத்தடுமாறி அமைப்புக்குள் வருபவர்களைக் கீழே தட்டிவிடும் அரசு எப்படி பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்?

நன்றி: இந்து தமிழ் திசை (01-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories