TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் கையேடு

August 23 , 2023 506 days 346 0
  • சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அரசமைப்புச் சட்டம் அறிவித்தாலும், சட்டத் துறையில் பயன்பாட்டில் இருக்கும் சொற்கள் சில பாலினப் பாகுபாட்டையும் பாலினரீதியான அடையாளப் படுத்துதலையும் கொண்டிருக்கின்றன. அவற்றைக் களையும்விதமாக, பாலினரீதியான அடையாளப்படுத்துதல் அல்லது முத்திரை குத்துதலை எதிர்கொள்ளும் வகையிலான கையேட்டை உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது; இது சமூக மாற்றத்துக்கான முன்னெடுப்பும் கூட.
  • உச்ச நீதிமன்றம் போன்ற அதிகாரம் பொருந்திய அமைப்பு, ஒரு விஷயத்தைத் திட்டவட்டமாக வரையறுக்கிற போது, அது சமூகத்தில் ஆக்கபூர்வ மாற்றத்துக்கு வழிவகுக்கும். பொதுவாக நாடு, மொழி, சாதி, மதம், நிறம், பாலினம் சார்ந்து குறிப்பிட்ட பிரிவினரையோ, அந்தப் பிரிவைச் சார்ந்த தனி மனிதர்களையோ முத்திரை குத்தும் பிற்போக்குத்தனம் உலகம் முழுவதும் நிலவிவருகிறது.
  • கையேட்டில் இதைக் குறிப்பிட்டிருக்கும் உச்ச நீதிமன்றம், அப்படியான முத்திரை குத்தும் சொற்களை அல்லது பதத்தை அடையாளம் காண்பதுடன் அவற்றுக்கு மாற்றாக, பாகுபாடற்ற பொதுவான சொற்களைச் சட்டத் துறையினர் பயன்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது.
  • இந்திய மக்கள் அனைவரும் அறிவியலிலும் கணிதத்திலும் சிறந்தவர்கள் எனப் பெரும்பாலான வெளிநாட்டினர் நம்புவதை, இதற்கு உதாரணமாகக் குறிப்பிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். உண்மைக்கும் அடையாளப்படுத்துதலின் விளைவாக ஏற்படும் கற்பிதத்துக்கும் உள்ள பாகுபாட்டை இது துல்லியமாக விளக்குகிறது.
  • எவ்விதச் சார்பும் பயமும் இல்லாமல் நீதியைப் பரிபாலனம் செய்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் தான் பாகுபாடற்ற பொதுவான சொற்களைப் பயன்படுத்துவதும் முக்கியம் என்பதை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. பாகுபாடு நிறைந்த சொற்பிரயோகத்தால் பெண்களே பெரும்பாலும் அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதைக் கருத்தில்கொண்டு, தீர்ப்பு எழுதுகையில் எந்தெந்த சொற்களைத் தவிர்க்க வேண்டும், எவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பது கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்களின் நடத்தையை, உடையணியும் பாங்கை வைத்து அவர்கள் மீதான பிம்பத்தைக் கட்டமைப்பது தவறு எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
  • உதாரணத்துக்கு, கற்புக்கரசி என்பதற்குப் பதிலாகப் பெண் எனவும், தகாத உறவு என்பதற்குப் பதிலாகத் திருமணத்தைத் தாண்டிய உறவு எனவும் குறிப்பிடலாம் என உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. பாலியல் வன்முறை, பாலியல் தேர்வு, குழந்தைகள் மீதான வன்கொடுமை உள்ளிட்டவற்றுக்கும் மாற்றுச் சொற்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மீது காலங்காலமாகச் சுமத்தப்பட்டிருக்கும் இழிவான அடையாளப்படுத்துதலையும் கற்பிதத்தையும் களையும்விதமாகப் பல சொற்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
  • ஒரு தீர்ப்பில் நீதிபதிகள் உச்சரிக்கும் சொல் என்பது வெறுமனே சொல் மட்டுமல்ல. சட்டத்தின் உயிர்த்தன்மையைத் தாங்கி நிற்பதும் அந்தச் சொல்தான். “நீதிபதிகள் பயன்படுத்தும் சொற்கள், அவர்களது கருத்தாக மட்டும் இருப்பதில்லை, சமூகத்தின் கருத்தையும் அவை பிரதிபலிக்கின்றன.
  • பெண்களைப் பற்றிய பிற்போக்கான, பழமைவாதக் கருத்தையோ தவறான கருத்தையோ நீதித் துறை சொல்கிறபோது, பாலின பேதமின்றி அனைவருக்கும் சமமான உரிமையைப் பரிந்துரைக்கும் நம் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாக அது அமைந்துவிடுகிறது” என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் குறிப்பிட்டுள்ளது நீதித் துறைக்கு மட்டுமல்ல, எல்லா துறைகளுக்கும் பொருந்தும். அரசாங்கத்தின் ஒவ்வொரு அதிகாரக் கட்டமைப்பும் பாலின பேதத்தைக் களையும் முன்னெடுப்புகளைச் செயல்படுத்த வேண்டும். அரசு அதை உறுதிப்படுத்த வேண்டும்.

நன்றி : இந்து தமிழ் திசை (23  – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories